பக்கங்கள்

புதன், 30 மே, 2018

கேரளத்தில் ஒரு "பிளாரன்ஸ் நைட்டிங்கேல்!"



நவீன உலகத்தில் நவீன நோய்கள் - கிருமிகள் - தொத்து - இவைகளுக்குப் பஞ்சமே இல்லை.

மலேசிய நாட்டில் ஒரு நகரம் நிபா என்பது. அவ்வூரி லிருந்து ஒரு வகைக் கிருமிகள் பரவி, தலைவலி, காய்ச்சல், உயிர்ப்பலி என்று மக்களை வாட்டும் வைரஸ் நோய் கேரளத்தில் கொடுமையாக பரவி பலர் - தீவிர சிகிச்சையும் பலனிக்காது இறந்துள்ள வேதனையான செய்தி வந்து கொண்டே  உள்ளது!

கேரள மாநிலம் - கோழிக்கோடு மாவட்டம், பெரம்பரா மருத்துவமனையிலும் வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் சிலர் சேர்க்கப்பட்டிருந்தனர்! அவர்களுடைய சிகிச்சைக்கு லினி என்ற 31 வயதே ஆகியுள்ள செவிலியரும் (நர்ஸ்)  உதவி செய்து வந்தார். சிகிச்சையில் உதவிய இந்த நர்சையையும் அந்த நோய் விடவில்லை. இவரையும் தாக்கி அவரது உயிரைப் பறித்து விட்டது என்பது வேதனையான சோகச் செய்தி! கடந்த 20.5.2018இல்  அதே நிபா வைரஸ் நோயால் மரணமடையும்  நர்ஸ் 'லினி' தான் பெற்ற குழந்தைகளை, கணவன், குடும்பத்தினரைப் பார்க்காமல் உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்து மறைந்துள்ளார்!

அக்கடிதம் எல்லோரின் இதயத்தைக் கனமாக்கியதோடு, பிழியவும் செய்திருக்கிறது.

மற்றவர்களுக்கும் நோய் தொற்று அபாயம் இருப்பதால் லினியின் உடலைக்கூட அவரது குடும்பத் தினரிடம் கொடுக்கவில்லை; கேரள சுகாதாரத் துறையினரே தகனம் செய்து விட்டனர்! அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கண்ணீருடன் பங்கேற்றனர்.

லினியின் தாய் மாமன், 'லினி' தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து கொண்டும் அவர் உதவிடு வதிலிருந்து பின் வாங்காமல் "தன்னையே தியாகம் செய்கிறேன்" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

நர்ஸ் லினிக்கு சித்தார்த் (5), ரிதுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் பக்ரைனில் பணியாற்றுகிறார்.

லினி கவலைக்கிடமாக உள்ளதை அறிந்து 2 நாள் முன்பு அவர் வந்துள்ளார்.

குழந்தைகளையோ, கணவரையோகூட கண்டு வாழ்க்கையின் இறுதிப் பயணத்தில் பிரியா விடை பெற லினிக்கு வாய்ப்பில்லை. இதை ஏற்றுக் கொண்டு, தைரியத்துடன் அவர் தனது வாழ்விணையருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

"எனது முடிவை நான் நெருங்கிக் கொண்டி ருக்கிறேன். உங்களைப் பார்க்க முடியும் என்ற நம் பிக்கை எனக்கு இல்லை. நமது குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை உங்களுடனே வளைகுடா நாட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியே இருக்க வேண்டாம்!"

அன்புடன்

லினி

சாவின் அழைப்பிலும் தனி துணிச்சல் - தெளிவான உணர்வுகள்!

இத்தகைய சமூக தொண்டற வீராங்கனைகளை அரசுகள், சமூகம் பாராட்ட வேண்டும்!

சிங்கப்பூர் நாட்டில் முன்பு பரவி, பலரை உயிர்ப் பலி கொண்ட பறவைக் காய்ச்சலின் போது, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பாதுகாப்பு சிகிச்சை கொடுத்து, அந்நோய் தொற்று காரணமாக 2 செவிலியர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்!

அந்நாட்டு அமைச்சர்கள், அரசு அவ்விருவருக்கும் பெரிய அரசு மரியாதை செய்து பெருமைப்படுத்தினர்.

அதேபோல மத்திய, மாநில அரசுகளும், சமூக அமைப்புகளும் லினிக்கு மரியாதை, நினைவேந்தல் - செய்தல் அவசியம்.

அத்தகைய கடமை வீரர்கள், வீராங்கனைகள் வரலாற்றின் வைரங்களாக என்றும் ஜொலிப்பர் என்பது உறுதி!

அந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உழைப்பு - தொண்டறம் என்றும் மறக்க முடியாத சரித்திரத்தில் நிலை பெற்ற பெயர் அல்லவா!
- கி.வீரமணி
- விடுதலை நாளேடு, 23.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக