மனஅழுத்தம், அச்ச உணர்வால்
தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்
புதிய ஆய்வில் தகவல்!
"லண்டன், ஜூன் 11 தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடை கிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.
13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடு படுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது? உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன்? புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்த அவர்கள் "தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது" என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.
இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது." ஒரு நாளேட்டின் செய்தி.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட செய்திப்படி தனிமை இனிமை தரும் என்பதைவிட தனிமை இனிமை தராது, கொடுமையான மரணத்தைத்தான் தரும் என்பது இந்த ஆய்வுகளால் நமக்கு உணர்த்தப்படுகிறது.
ஓய்வு பெற்ற முதுகுடி மக்கள், வயதான பெரியவர்கள் நல்ல நெருக்கமான நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி, அன்றாடம் சந்திப்பது, நடைபயிற்சிக்கு நண்பர்கள் குழுவுடன் செல்வது, அடிக்கடி கலகலப்பாக உரையாடுவது, நகைச்சுவை உணர்வுடன் கூடிய வாழ்வினில் தோய்ந்து வாய்விட்டுச் சிரிப்பது, படித்த நல்ல புத்தகங்கள், பெற்ற திடீர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் - இவைகளை தங்கள் முதுமையில், வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் முதியவர்கள்.
தற்கால நடப்புகளில் ஒன்றாக வாழும் பல குடும்பங்களில் உள்ள நம் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோகூட, நம்முடன் (வயதானவர் களுடன்) ஆர அமரப் பேசிட வாய்ப்பில்லை. காரணம், அவர்கள் பணிச்சுமை, களைப்பு, தங்களது வாழ்விணையர்களுக்குக் காட்டிட வேண்டிய அன்பு, கடமைகள் - இவைகளுக்கு அவர்களுக்கு போதிய நேரம் போதவில்லை என்ற நிலையும் யதார்த்தமே!
எனவே, நாமே நம் நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கி, வாழ்வை நல வாழ்வாக நீட்டிட முயல வேண்டும். சிறைச்சாலைகளில் கைதி களுக்குக் கடும் தண்டனை விதிக்க தனியே கூட்டாளி இன்றி தனிமைச் சிறையில் (Solitary Confinement) உள்ளே இருக்கும் தண்டனை ஏன் என்பது இப்போது புரிகிறதா?
பொதுவாக மனிதன் ஒரு சமூகக் கூட்டுப் பிராணி என்பதால்தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்று உணர்ந்தான்!
அதுவேறு; அதே நேரத்தில் நல்ல நண்பர்களை முதுமையில் பெறுதல் - கலந்துறவாடல், பெரும் வைப்பு நிதி வைத்தலைவிட, மா மருந்துகளால் ஏற்படும் சுகத்தை விட, பன்மடங்கு பயன் தருவது என்பதை உணர்ந்து, தனிமை தேடும் தனித்தவர்களே, - உங்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றி பாசம் உள்ள நட்புறவுடன் வாழ்ந்து மகிழ்ச்சியை அரவணைப்பீர்களாக!
"கூடி மகிழ்ந்திடு தாத்தா
குலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா!"
- விடுதலை நாளேடு, 12.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக