பக்கங்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2020

பாதுகாப்பான முகக்கவசமும் - கரோனா தடுப்பும்!

முதுபெரும் மருத்துவ வல்லுநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் எம்.எஸ்.ராமச்சந்திரன் (MSR)  அவர்கள் அனுப்பியுள்ள கரோனாவைத் தடுத்துக்கொள்ள முகக்கவசம் (Mask) அணிந்து கொள்வது பற்றிய சில அரிய தகவல்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வதில் மன நிறைவு அடைவதால், ஆங்கிலத்தில் அனுப்பியதை அப்படியே தமிழில் தருகிறேன் - பயன் பெறுக - பகிர்ந்து கொள்வதோடு, பரப்பவும்கூடச் செய்து, நம்மாலான எளிய மிகச் சிறிய இந்தத் தகவல்மூலம் பிறருக்கு உதவலாம்.

கேள்வி 1: நாம் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியமா?

பதில்: ஆம்! மிக அவசியம்தான். காரணம், கரோனா வைரஸ் (கோவிட் 19) என்ற தொற்று நோய்த் தடுப்புக்கு இந்த முகக் கவசம் 5 மடங்கு பாதுகாப்பைத் (வெறும் நிலையிலிருந்து) தருகிறது. இருமும்போதும், தும்மும்போதும், பேசும்போதும் மூக்கில், வாயிலிருந்து வெளிவரும் துகள்களி லிருந்து நம்மை முகக்கவசம் பாதுகாக்கிறது. அதனால்தான், மத்திய அரசு, குடிமக்கள் இதனை வெளியே செல்லும்போது கட்டாயம் முகத்தில் அணிந்துகொள்ளுவது மிக அவசியம் என்று கூறியுள்ளது.

கேள்வி 2: நான் முகக்கவசம் N-95 என்பதை அணியவேண்டுமா?

பதில்: தேவையில்லை. N-95 என்ற முகக்கவசம் அதிகமாகக் கிடைப்பதில்லை. தேவைகள் அதிகம் - அது மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அறுவைச் சிகிச்சையின்போது முகத்தில் அணிய வேண்டிய தேவையாக - மருத்துவமனைகளில்கூட குறைந்தபட்ச ரிஸ்க் இருக்கும் கேசுகளில், மற்ற முகக் கவசங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள், N-95 என்பதை அல்ல. N-95 முகக்கவசம் மிகவும் இறுக்கமானதும்கூட - 24 மணிநேரமும் அதை அணிந்துகொண்டே இருப்பது - மூச்சை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமில்லை. சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் இது இன்றியமையாத தேவையாகும். (எல்லோரும் அதைத் தேடி, நாடிப் போய் பயன்படுத்த எண்ணாதீர்).

கேள்வி 3: முகக்கவசம் SS99என்பதனால் ஏற்படும் நற்பலன்கள் என்ன?

பதில்: முகக்கவசம்  SS99 என்பது முகக்கவசம் N-95 என்பது போலவே நமக்கு கரோனா தொற் றிலிருந்து பாதுகாப்புத் தருவதுதான். ஆனால், இது சுவாசிப்பதற்கு லகுவாகவும், எளிதாகவும் இருக்க உதவும் ஒன்று. காரணம், இது ஆர்கானிக் பருத்தி யினால் மிகவும் மென்மையான நூலில் தயாரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் அணிந்துகொண்டே இருந்து பயன்பெற இது பெரிதும் வசதியாக இருக்கும். இது கிருமிகள் நுழையாதவாறு 99 விழுக்காடு தடுப்பு வடிகட்டலைச் செய்துவிடக் கூடியதாகும். Bacterial Filtration Efficiency (BFE).

(Viral bravulz) இது Sitra என்பதால், நற்சான்று அளிக்கப்பட்ட ஒன்றாகும். இது நீர்த்தி வலைகள் உள்ளே நுழையாதவாறு, நுழைந்தாலும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையதும்கூட.

கேள்வி 4: மறுபயன் (Reusable) முகக்கவசம் ஏன் தேர்வு செய்யப்படுகிறது?

பதில்: இத்தகைய மறுபயன் - மீண்டும் பயன்படுத்தும் வசதியுள்ள முகக்கவசம் (பரிந்து ரைக்க) என்பது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் அதனுடன் ஒத்துப்போகும் ஒன்று. (Environmental Friendly) விலையும் மலிவு - மற்ற முகக் கவசங்களை ஒப்பிடும்போது!

SS99  முகக்கவசங்களை 25 தடவை பயன் படுத்தலாம் - பாதுகாப்பாக என்று SITRA (பஞ்சு மில்கள் நூல் ஆய்வமைப்பு) நற்சான்று வழங்கி யுள்ளதால், நீங்கள் வெளியே செல்லும்போது அணிவதற்கு இதுவே வசதியான ஒன்று அல்லவா? (தூக்கி எறியும் முகக்கவசம் ஒரே ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும்).

சிங்கப்பூர் அரசு அதன் குடிமக்களுக்கு இந்த SS99 முகக் கவசத்தைத்தான் (மூன்று முகக் கவசங்கள்) தருகிறது.

கேள்வி 5: இதன் (முகக்கவசம் SS99 என்பதன்) விலை எவ்வளவு?

பதில்: SS99  என்பது நம் நாட்டில் 30 ரூபாய் விலையில் உள்ளது. சமூகப் பொறுப்பான விலை தான் இது; இதை 25 முறை பயன்படுத்தலாம் என்று சொல்லும்பொழுது, கணக்குப் போட்டுப் பார்த்தால்,  ஒரு தடவை பயனுக்கு SS99  முகக் கவசத்திற்கு நாம் செலவழிக்கும் தொகை 1.2 ரூபாய்தானே!

உயர்ந்த பருத்திப் பஞ்சால் சிறந்த தொழில் நுட்பத்துடன் வரும் அதை அனைவரும் பயன் படுத்தலாமே!

சரியானதைத் தேர்வு செய்தால் முறையான பலன் கிடைக்கும் - இல்லையா?

- விடுதலை நாளேடு, 13.4.20

சனி, 4 ஏப்ரல், 2020

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (4)

மற்றொரு எடுத்துக்காட்டு:

தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமை யானாள்?'' என்ற மகளிர் உரிமைச் சாசனம் பெண்ணுரிமை ஆவணம் போன்ற நூல் அவரது சுயசிந்தனை - சுய அனுபவம் - ஆய்வுகள் - சமூகக் கவலையுடன் கூடிய பொறுப்புணர்ச்சி - இவற்றால் பிறந்த ஓர் ஒப்பற்ற சமூகப் புரட்சிப் போர்க் கருவி. பெண்களின் சிந்தனைப் புரட்சிக் குப் பிறகு செயலாக் கத்திற்கும் வழிவகுக்கும் புரட்சிக் கையேடு ஆகும்.

அதில் கற்பு பற்றிய ஒரு பகுதியில் தந்தை பெரியார் அவர்கள் கூறும் கருத்தும், சுட்டிக் காட்டும் உவமைகளும் அப்படியே மொழி பெயர்ப்புப் போலவே, நோபல் பரிசு பெற்ற உலக அறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் அவர்களது ‘Marriage and Morals' ‘திருமணங்களும், ஒழுக்கங்களும்' என்ற தலைப்பில் வெளியான ஆங்கில நூலில் இருப்பதை, அய்யாவிடம் பெரியார் திடலில் படித்துக் காட்டினேன்.

அய்யா மகிழ்ந்தார்; அவ்வாண்டு தயாரித்த ‘விடுதலை' பெரியார் மலரில் அதை வெளியிட்டுள்ளோம் - ஒரு பெட்டிச் செய்தியாக!

உங்களில் எத்தனைப் பேர் அறிவீர்களோ யாம் அறியோம்!

மேற்கோள்காட்டி அதனால்தான் அதைக் கூறுகிறேன் என்று கூட்டங்களில் தந்தை பெரியார் பேசமாட்டார். மாறாக தான் கூறும் இக்கருத்து குறிப்பிட்ட இலக்கியத்திலோ, நூலிலோ, பாட் டிலோ இருந்தது என்றே  கூறும் பழக்கமுடையவர்.

இதுவும் தந்தை பெரியாரின் தனித்துவ முறை களில் ஒன்றாகும்!

நாங்கள் 1958 ஆம் ஆண்டு சென்னை அரசினர் சட்டக் கல்லூரியில் (கழகப் பொருளாளர் தோழர் சாமிதுரை மற்ற நண்பர்களுடன் படித்து வந்தோம்) தமிழ் மன்றத்திற்குத் தந்தை பெரியார் அவர்களைப் பேச அழைத்து வர ஏற்பாடு செய்தோம். அப்போது எங்களுக்கு சட்டக்கல்வி மதிப்புறு இயக்குநராக (பல்கலைக் கழக வேந்தர் போன்றவர்) இருந்தவர் ஏ.எஸ்.பி.அய்யர் அய்.சி. எஸ்., அவர்கள். (ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் என்ற பாலகாட்டு அய்யர்; 1957 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (மலையப்பன் வழக்கில்) தந்தை பெரியாரையும், விடுதலை ஆசிரியர் - வெளியீட்டாளர் என்பதால், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரையும் விசாரித்துத் தண்டித்த தலைமை நீதிபதி டாக்டர் பி.வி.இராஜமன்னார் அவர்களுடன் மற்றொரு நீதிபதியாக அமர்வில் இருந்தவர் இந்த ஜஸ்டீஸ் ஏ.எஸ்.பி.அய்யர் அய்.சி.எஸ். அவர்கள்).

அவரிடம் அனுமதி வாங்க தமிழ் இலக்கிய மன்றப் பொறுப்பாளர்கள் சென்றபோது, அவர் அனுமதியளித்ததோடு, "அவர் ஒரு பெரிய தலைவர்; சிறந்த சிந்தனையாளர். அவர் நம் சட்டக் கல்லூரிக்குப் பேச வரும்போது, நான் தலைமையேற்று சிறப்பிப்பதுதான் சரியான முறை (Protocol). ஆகவே நானே வந்து தலைமை தாங்குகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கூட்டம் தொடங்கியவுடன் அவரது தலைமை உரையில் ஒரு அரிய கருத்தைக் கூறினார் ஜஸ்டீஸ் ஏ.எஸ்.பி.அய்யர்.

ஓர் அறிஞர் ஒரு நூலில் எழுதும்போது, ‘‘இந்தியாவில் பல பேச்சாளர்கள் தங்கள் மேடைப் பேச்சில் மேற்கோள் காட்டாமல் பேசும் பழக்க மில்லை; அவர் அந்த நூலில் எழுதினார் என்று கூறித்தான் பேசுவர்; சொந்தமாக சுய சிந்தனை யோடு கருத்துகளை எடுத்து வைத்துப் பேசமாட் டார்கள்; இதற்கு விதிவிலக்கு இரண்டு பேர்கள் தான். ஒருவர் பெர்ட்ரண்ட் ரசல்; மற்றவர் பெரியார். இரண்டு பேரும் பகுத்தறிவாளர்கள்'' என்று பலத்த கைதட்டலுக்கிடையே கூறினார்!

அது எவ்வளவு சரியானது.

‘‘எதையும் நம்பாதீர்கள்; கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ளாதீர்கள். ரிஷி சொன் னார், மகான் சொன்னார் என்றெல்லாம் நம்பாதீர் கள். உங்கள் அறிவு என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து உரைத்துப் பார்த்து, பிறகு சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றுதான் தந்தை பெரியார் கூறுவார்.

எந்த மகானோ, மகாத்மாவோ, கடவுளோ, வேதமோ, சாஸ்திரமோ இப்படி கூறுமா?

விஞ்ஞானிகளும், பகுத்தறிவாளர்களும், சுயமரியாதைக்காரர்களும் மட்டும்தான் இப்படி தனித்தன்மையுடன் கூறுவர்!

‘‘முன்னுரை - பீடிகை - உரைப்பாயிரம்'', மிகவும் நீண்டு விட்டதல்லவா, பின் எப்போது ‘முத்து' என்று கேட்கிறீர்களா?

முத்து எளிதில் கிடைத்துவிடுமா என்ன? ஆழ்கடலுக்குள் நீந்தி, நீந்தி, மூழ்கி, மூழ்கி மூச்சடக்கியெல்லாம் கண்டறிய முழு முயற்சி செய்தாக வேண்டுமல்லவா?

ஓய்வாக தனது கட்டிலில் அமர்ந்துள்ள போதும் தனியாக சிந்தித்துக்கொண்டே உட்கார்ந் திருப்பார். அல்லது தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், நிகண்டு மற்றும் இராமாயண, இதிகாச புராண சாஸ்திர புத்தகங்க ளைத் தனது பார்வை மங்கிய நிலையிலும் (காரணம் வயது 94, 95 அல்லவா?) பெரிய லென்சை வைத்துக்கொண்டு (லேபாரட்டரி) ஆராய்ச்சிக் கூடத்தில் கிருமிகளை ஆராயும் ஒரு விஞ்ஞானி போல எதையோ ‘‘தேடிக் கொண்டிருப்பார்!'' ஆம், அது அறிவுத் தேடலைத் தவிர வேறு என்ன?

தனியே எழுந்து நடமாட முடியாத காலத்தி லும்கூட, தன்னுடன், தனது உடலின் ஒரு புது அங்கமாகிவிட்ட ரப்பர் குழாயிலிருந்து  (சிறுநீரக இணைப்புக் குழாயில்) சிறுநீர் வடிந்து கொண்டே இருக்கும் நிலையிலும் (ஒரு சேகரிப்பு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில், அதைப் பாதுகாக்கும் ஒரு சிறு பிளாஸ்டிக் வாளி, அதனை சுமக்கும் அவரது கைகள் -  அல்லது சில நேரங்க ளில் அதைச் சுமக்க அவரால் அனுமதிக்கப்படும் அன்னையார், புலவர் கோ.இமயவரம்பன், மகாலிங்கம் அல்லது எப்போதாவது என்னைப் போன்ற அவரது பணித் தோழர்கள் இருப்போம்)அவர் சிந்தனையோ, மடை திறந்த வெள்ளமாக, கொட்டும் குற்றால நீர்வீழ்ச்சிபோல, ஊற்றெடுக் கும் ஆர்டீஷியன் கிணறுகளாக பேச்சாகவும், எழுத்தாகவும், கருத்தாகவும் வெளிவந்த வண் ணமே இருக்கும்!

வயதின் மூப்பு இதற்குத் தடையாக என்றும் அமைந்ததில்லை.

வலியின் தொல்லை - இடையிடையே வந்து வந்து போவதும் வாடிக்கை. சற்று ரப்பர் குழாய் நகர்ந்துவிட்டால், மேடையிலயே புரண்டு அசைந்து சரி செய்து, ‘‘அம்மா, அம்மா'' என்று பெருங்குரல் - நம் கண்களில் நீர் ஊற்று கொட்டும் போதுகூட, நிறுத்தாது - நெஞ்சுரம் கொண்டு தொடரும் ‘‘பிரசங்கப் பெருமழை!''

- இப்படி ஒரு தலைவரை இனி எளிதில் இவ் வையகம் காணுமோ என்று இன எதிரிகளும்கூட வியக்கின்றனர்!

இப்படி சிந்திப்பது மட்டுமா? ‘வேனில்' பயணம் போகும்போது திடீரென்று பக்கத்தில் உள்ள புலவர் முதல் எங்களையெல்லாம் நோக்கி, அவர் கேள்வி கேட்பார் - அவரும் அறிந்துகொள்ள அதுதான் அதன் சிறப்பு - தனித்தன்மை!

ஏ புலவர், ‘அ' என்னும் தமிழின் முதல் எழுத்தை நாம் எதிர்மறையாகவும் பயன்படுத்து கிறோம். அதே போல, ‘A' என்னும் ஆங்கில முதல் எழுத்தின் எதிர்மறையில் பயன்படுத்துகிறார். யோக்கியன் - அயோக்கியன்போல; Theist  நம் பிக்கை;  Atheist   - நாத்திகன். எதிர்மறை இப்படி இரண்டு மொழிகளிலும் எப்படி ஒரே மாதிரி புழங் குகிறது? விளக்க முடியுமா?

திருதிருவென விழிப்பதுதான் நம்மால் முடிந்த கைங்கரியம்!

ஏம்பா! வீரமணி Without any Reservation என்பதற்கு அதன் முழு உணர்வையும் இணைத்து வெளிப்படுத்த ஒரு சொல் உண்டா? உண்டாக் கலாமா? என்பார்!

‘‘எவ்வித மன ஒதுக்கீடும் இல்லாமல்'' என்று வழக்கமான ‘‘சவுத்துப்போன'' எங்கள் ‘லிட்ரல்' மொழி பெயர்ப்பு - அவரைத் திருப்திப்படுத்தாது!

‘எவ்வித கூச்ச நாசமும் இன்றி' என்று சொல்லலாமா அய்யா?

அய்யா, யோசித்துவிட்டு, பரவாயில்லை; இது ஓரளவுக்கு பக்கம்வருகிறது!

எதற்கும் Root -  ‘வேர்ச்' சொல் என்னவென்று கேட்பார்!

தந்தை பெரியார் எழுதியுள்ள டைரிக் குறிப்பு கள் என்ற ஆழ்கடலுக்குள் மூழ்கி மூழ்கி எழுந்து வருகிறேன் - கடந்த சில நாள்களாக!

கல்வெட்டு எழுத்து அறிஞர்கள் பணிபோல, அய்யாவின் கூட்டெழுத்து, புள்ளி போடாத, எழுத்து, மெல்லின - இடையினம்பற்றிக் கவலைப் படாத; அதிலும் ‘சமத்துவ சிந்தனையே' காணும் - கருத்துதான் முக்கியம் என்பதையே மய்யப்படுத்தி வாழ்நாள் முழுவதும், ஒப்பற்ற பத்திரிகையாளர், கட்டுரையாளர், தலையங்க எழுத்தாளர், நீண்ட பேருரையாளர் என்று எல்லா நிலையிலும் வரலாற்றில் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட உலகத் தலைவர். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சிந்தனையாளர் அய்யாவின் டைரி, அறிவுக்கு அரிய உணவு அல்லவா!

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

‘‘1929 ஆம் ஆண்டு டைரியில் அவரது கையெழுத்தில்,

‘‘தேங்க்யூ என்பதற்கு

தமிழ் - உங்களுக்கு கடமைப்பட்டவன் (or) கடமைப்படுகிறவன்'' என்று எழுதியுள்ளார்.

இதுவரை ‘நன்றி' என்ற ஒரு சிறு சொல்லைத் தான் சொல்லி வருகிறோம். அதன் ஆழ்ந்த நன்றித் தத்துவத்தை உள்ளடக்கியது எவ்வளவு அருமை பார்த்தீர்களா?

என்னே தனித்த வளமான சிந்தனை ஊற்று!

இதுபற்றி விரிவாக ஆராய்வோம்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 4.4.20

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (3)

தந்தை பெரியார் என்ற ஒப்புயர்வற்ற சுய சிந்தனையாளரை வரலாற்றில் நாம் மிகமிக அபூர் வமாகவே காணுகிறோம்.

அறிவின் எல்லைக் கோடு எது என்றே ஒன்று இல்லாத அளவுக்கு ஒவ்வொன்றையும் தனது தனித்த பார்வையோடு பார்க்கக் கூடியவர்.

அதுபோலவே கிரேக்கத்தின் சாக்ரடீஸ், அவரது சுய சிந்தனை அத்துடன் கூடிய செயலாக்கம்

(Activism) இணைந்ததால் பெரு வெற்றி பெற்றார்.

அன்றைய கிரேக்கச் சமுதாய பிற்போக்கு வாதிகள் அல்லது இருப்பதை எப்போதும் மாற்றவே கூடாது என்ற பிடிவாதக்காரர்கள் (Status Quoists) சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள்; அவரது உடலைக் கொன்று அவரை சரித்திரத்தின் சாகாத மாமனிதராக ஆக்கினர் - அவர்கள் அறியாமலேயே!

அவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பியிருந்தால், ‘இளைஞர்களை நான் இனி மேல் ‘கெடுக்கமாட்டேன்'''  (‘Corrupting the Youth') என்று உறுதிமொழியை நீதிமன்றத்தில் கூறியிருந் தால், அவருக்கு ‘ஹெம்லாக்' என்ற ஒரு தனி ரக நஞ்சைக் கொடுக்காமல் அவர் மேலும் சில ஆண்டு காலம் வாழ்ந்திருக்க முடியும் - ஆம் சில ஆண்டு காலம்தான் வாழ்ந்து பேசப்படாத மனிதராகவே இருந்திருப்பார்.

எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் கடந்தா லும், அவர் இன்றுபோல் என்றும் வரலாற்றில் வாழ்ப வராக மாறியிருக்க முடியாது.

அதுபோலவே தான் கொண்ட கொள்கை லட்சி யத்திற்காக 23 வயதில் தூக்குக் கயிற்றை மகிழ்ச்சி யோடு முத்தமிட்டதோடு, என்னை ஏன் தூக்கிலிடு கிறீர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவது நல்லது என்று நெஞ்சுரத்துடன் முழங்கிய நாத்திகன் பகத்சிங் என்ற அந்த வரலாற்று நாயகன்!

‘தேசப்பிதா' என்று அனைவராலும் அழைக்கப் பட்ட ‘மகாத்மா' காந்தியார்கூட இதுகுறித்து மவுனம் சாதித்து, பிரிட்டிஷ் அரசையோ, தூக்குத் தண்ட னையைப்பற்றியோ எழுதாது தவிர்த்த நிலையில்,

தென்னாட்டுச் சிங்கமாம் தந்தை பெரியாரின் பேனா முனை ‘குடிஅரசு' ஏட்டில் கண்டனத் தலை யங்கம் தீட்டி கர்ஜித்தது! (இன்றைய இளைஞர்களும், இனிவரும் தலைமுறையினரும் அறிந்து பாடம் கற்கவேண்டிய நிகழ்வு அது).

தனது சுய சிந்தனையில் பட்டதை மறைத்துப் பழக்கப்பட்டவர் அல்லர் தந்தை பெரியார்! அறிவு நாணயத்தின் அப்பட்டமான முழு வடிவம். உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத உண்மையின் உருவகம் அவர்!

அதனால்தான் அவருக்கு அரசியல் வெறுக்கப் பட்டதாக விலக்கி வைக்கப்பட்டதாயிற்று;

எதிர்ப்புக்கஞ்சிடும் அச்சமும், கோழைத்தனமும் அவரிடத்தில் துளியும் இடம்பெறாத காரணத்தால், நெஞ்சில் பட்டதை நேருக்கு நேர் உரைத்தார். அது ‘நீசமன்று; மறக்குலமாட்சியாம்' என்பார் புரட்சிக் கவிஞர்!

லாபம் - சுயநலம் கருதினால் வளைந்து, குனிந்து, நெளிந்து, மலிந்து மற்றவர்களின் பாராட்டு - பதவி, பரிசு பெற முயற்சிக்கும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே அவர் தனது சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

புகழுக்கு அடிமையாகாத மனிதர்கள் புவியில் உண்டோ! பெரியார் அதற்கும் விதிவிலக்கு - அதிலும் வெளிச்சம் போட்டு உயர்ந்து நிற்கும் இமயம்! தான் மட்டும் அப்படி இல்லை; தனது தொண்டர்கள்கூடத்தான்.

‘‘‘நல்ல பெயர்' எடுக்க விரும்பும் எவரும் என் பின்னால் வரவேண்டாம்; ‘கெட்ட பெயர்' எடுக்கத் துணிவுள்ள தோழனே வா என் பின்னால்'' என்று பொது வாழ்க்கைக்கும், சுயமரியாதை இலட்சியப் போருக்கும் உள்ள தனித்தன்மையை நிலை நிறுத்தினார்! (நல்ல பெயர், கெட்ட பெயர் என்று அவர் கூறுவது முட்டாள்களால் வழங்கப்படுவது).

தன்னையே நம்பி இப்பெரும் பணியேற்ற தகத்தகாய ஒளிமிக்க தனித்துவ தன்னம்பிக்கையின் தலைதாழாச் சிங்கம் அவர்!

தான் விரும்பி ஏற்று செய்துவந்த பணிக்கு நன் றியை எதிர்பார்த்தார் இல்லை. மனித சமுதாயத்தின் ‘சுபாவத்தை' (இயல்பை) தனது 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் நடைமுறையில் அளந்திட்ட, அறிந்திட்ட அனுபவக் களஞ்சியம் அவர்; அதனால் ‘நன்றி' என்பதை எதிர்பார்க்காத பணியாக (ஜிலீணீஸீளீறீமீss யிஷீதீ) தனது பொது வாழ்க்கை யையும், அதன் தொண்டறத்தையும் தூய்மையாக அமைத்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் இடைச்செருகல் போல் வாசகர் கட்குத் தோன்றினாலும், பதிவாக வேண்டிய ஓர் அதிர்ச்சித் தரக்கூடிய தரவு (Proof) - சான்று ஒன்று - நாங்கள் பல காலம் வியந்து மகிழ்ந்த ஒன்று தந்தை பெரியாரைப்பற்றி!

எவராவது தான் வைத்த நம்பிக்கைக்கு மாறாக அல்லது துரோகம் இழைக்கும் தன்மையில் நடந்து கொண்டதை அவர் அறிந்து வேதனைப்படும் போதுகூட முழு விரக்தியின் எல்லைக்குச் சென்று விட்டதில்லை.

பொதுவாக தன்னுடைய பணித் தோழர்களோ அல்லது இயக்கத்தவரோ தனக்கு எதிரான ‘கீழறுப்பு' வேலைகளை நாசூக்காக செய்தபோதும்கூட, உடனே உணர்ச்சிவசப்பட்டு, ‘ஆஹா, ஓஹா' என்று கூச்சலிட்டு, நம்மில் பலரைப் போல ‘அமர்க்களம்' செய்யமாட்டார்; அதை உள்ளே போட்டு வைப்பார்; பக்கத்திலிருந்து யாராவது அதைச் சுட்டிக்காட்டினால் அவர்  மிகப் பொறுமையாக ‘உம், பார்ப்போம், இனியும் என்ன செய்கிறார் என்று; மீறுகிறாரா என்று கொஞ்சம் நீண்ட கால அவகாசமும் (Long Margin) கொடுத்துப் பார்ப்போம்' என்பார். இது 90 சதவிகித சம்பவங்களில் அவரைப் பொறுத்தவரை பலித் துள்ளது. அத்தகைய நபர்கள் விஷயத்தில் அலட்சிய மாகவும் இருக்க மாட்டார். கவனிக்காததுபோல கவனித்தே வருவார்! இதை அந்த நபர்கள் அறியார் கள்; பொறுமை ஒரு நாள் புலியாக மாறிச் சீறிப் பாயும்  நிலையில் அவரை வெளியே அனுப்புவார்.

அப்படி அனுப்பிய பிறகுகூட, அவர் கூறும் ஒரு வாக்கிய சமாதானம் என்ன தெரியுமா? ‘‘அது அவரது சுபாவம். விட்டுத் தள்ளுங்கள்'' என்பதே!

இந்த ‘சுபாவம்' என்பதை அய்யாவிடம் அதிகம் கேட்டுப் பழகிய எனக்கு - எங்களுக்கு - உலகின் ஆதிகால நாத்திகர்களான சார்வாகர்கள் (இனி மையாகப் பேசுபவர்கள் என்பதே அச்சொல்லின் பொருள் என்றும் கூறப்படுகிறது) பலப்பல நூற்றாண் டுகளுக்குமுன் கூறியுள்ளனர் என்பது வியப்பானது.

தந்தை பெரியார் சார்வாகர்களைப்பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு இந்த ‘சுபாவம்' என்ற சொல்லாக் கத்தைப் பயன்படுத்தவில்லை என்பது நமக்கு நன் றாகத் தெரியும்!

புத்தருக்கும் முந்தைய நாத்திக சிந்தனையாளர் களும் கடும் ஆரியப் பார்ப்பன எதிர்ப்பாளர்களுமான சார்வாகர்கள் பஞ்ச பூதங்கள் அய்ந்து எனப்படும் 1. நிலம் 2. நீர் 3. நெருப்பு 4. காற்று 5.வான்வெளி என்பதில் வான்வெளி ஆகாயம் என்பதை ஏற்காத வர்கள். மற்ற நான்கை மட்டுமே ஒப்புக் கொள்கிற வர்கள். அவரவர் சுபாவப்படிதான் செயல்கள் அமைகின்றன - சுபாவத்தை எளிதில் மாற்ற முடியாது என்பதில் அந்த சாருவாகர்கள் ஆழ்ந்த உறுதியான நம்பிக்கை உடையவர்கள்.

இரண்டையும் படித்தபோதும், அய்யாவிடம் அடிக்கடி நேரில் கேட்டபோதும் மிகுந்த வியப்பு அடைந்தேன் என்றாலும்,

சிறந்த உயரிய சிந்தனையாளர்களான பெரு மக்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள். அது ஒருவரை ஒருவர் பார்த்து ‘காப்பியடித்ததோ', ‘கற்றுக்கொண்டதோ' கிடையாது!

(தொடரும்)

 விடுதலை நாளேடு 3 4 20

புதன், 1 ஏப்ரல், 2020

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (1)&(2)

ஒரு திரைப்படத்தில் தமிழ்நாட்டின் ஈடு இணையற்ற குணச்சித்திர நடிகை, எம் திராவிட இனத்தின் ஈடு இணையற்ற தமிழச்சி,  ‘‘ஆச்சி'' என்று எல்லோருக்கும் அறிமுகமான தமிழ் நடிகை மனோரமா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடும் பாட்டுதான் அது!

எத்தனைமுறை கேட்டாலும் சலிப்போ, அலுப்போ வராத அவ்வளவு அருமையான மெட்டு. கருத்தாழம் மிக்க இன்னிசை இருக்கும்.

நான் அப்படிப்பட்ட திரைப்படப் பாடல்கள் சிலவற்றை எப்போது கேட்க வாய்ப்பு ஏற் பட்டாலும், கேட்டுச் சுவைத்து மகிழ்வேன்; அது ஒரு இளைப்பாறுதல் (Relaxation) தானே!

இப்போது வீட்டில் நம் குருதிக் குடும்ப உறுப்பினர்களோடு இருந்து தீரவேண்டிய - இதுவரை செலவழிக்காததற்குத் ‘தக்க தண்ட னையாக' தரப்பட்டுள்ள ஊரடங்கு, சுமை அல்ல - நல்ல வரவேற்கத்தக்க சுகமே!

இதுபோன்ற கிடைத்தற்கரிய காலம் - வேறு எப்போது கிட்டும்? எதையும் பயனுள்ளதாகவே ஆக்கி மகிழ்தல்தானே பகுத்தறிவுவாதியின் சீரிய நடைமுறை. இல்லையா?

1976 இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் - கொடுமையான அதிகாரிகளின் அநாகரிகமான நடத்தைகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு மாறிவிட்டன; அதன் பிறகு, மனிதாபிமான கடமையைத் தவறாது செய்த ஜெயிலர் திரு.மணி அவர்களும், ஜெயில் சூப்பிரெண்டெண்டு திரு.பகவதிமுருகன் அவர்களும், எல்லா கைதி களையும் போல, ஜெயிலில் உள்ள ‘மிசா' (அரசியல்) கைதிகளை எப்படி சட்டப்படி நடத்தவேண் டுமோ அப்படி நடத்தி, எங்களது மனதில் திட்ட மிட்டு புகுத்தப்பட்ட அச்சத்தைப் போக்கினர் - எத்தனை ஆண்டுகள் இங்கேயே (சிறையில்) இருக்கப் போகிறோம் என்றே தெரியாத நிலை தான்  ‘மிசா' என்ற சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்குள் இருப்ப வர்களுக்கு.

அதனால், நாங்கள் ஆயத்தமானோம் - அந்த வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோம்!

வீட்டில் படிக்காத, படித்து முடிக்காத அல்லது ஏடுகளில் மதிப்புரை வந்துள்ள புதிய வெளியீடு கள் (ஆங்கிலம், தமிழ்) இவற்றை வாங்கித் தருமாறு வீட்டில் உள்ளோரிடம் கூறி, அவற்றைப் பெற்று படிப்பது உள்பட பலவகை நூல்கள் என்ற ‘நல்ல நண்பர்கள்'  சிறையில் எங்கள் நல்ல தோழர்களானார்கள்!

எனது அறை தனித்தனி அறை - எழுத, படிக்க வசதியே! படிப்பது, குறிப்பெடுப்பது -அவற்றைப் பரப்ப - நினைவில் நிறுத்திக் கொள்ள - யுக்தியாகவும் - படிக்காத தோழர்க ளுக்கு, காதில் கேட்டலே நன்று என்பதை நடைமுறையில் கடைப்பிடிக்கும் நண்பர்களுக் கும் பயன்படுவது எமது அன்றாடப் பணியாக இருக்கும்.

‘விடுதலை' அலுவலகத்திலிருந்து எல்லா செய்தித்தாள்களும் விலைக்கு வாங்கி எனது பெயர் போட்டு காலையில் சென்னை மத்திய சிறை அலுவலகத்திற்கு வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள்.

அதனை ஜெயிலர், சூப்பிரெண்டெண்டு முதலிய மேலதிகாரிகள் பார்த்துப் படித்து - கருப்பு மை இட்டு மறைக்க வேண்டிய செய்தி களை மறைத்துவிட்டு, எங்களிடம் சுமார் 12 மணி யளவில் அந்த செய்தித்தாள்கள் வந்து சேரும்.

அவற்றைப் படித்து நான், அங்கே ஒரு வானொலிபோல் பரப்பொலிக் கூடமாகப் பயன் படுவேன்.

தோழர் க.சுப்பு அவர்களும் மற்றும் ஹரிபட், சிவாஜி (சி.பி.எம்.) தோழர்களும் எனது அறைக்கு வந்து படித்து, விவாதிப்பார்கள்.

சகோதரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் நகைச்சுவை உணர்வு குன்றாத கொள்கை உரம் கொண்ட தோழர்; திராவிடர் கழக மிசா கைதிகள் 10, 11 பேர்; மு.போ.வீரன், சைதை எஸ்.பி.தட்சணாமூர்த்தி, கோபக்கார அ.குண சீலன், பொறுமையும், பொறுப்பும் மிகுந்த பண்ருட்டி அய்யா நா.நடேசனார், புவனகிரி ம.சச்சிதானந்தம், துடிப்பு மிகுந்த கொள்கையாளர் நெய்வேலி இரா.கனகசபாபதி (‘விடுதலை' என்.எஸ்.சம்பந்தம் சில மாதங்களுக்குப் பிறகு விடுதலையானார்), அதுபோல மாணவர் சுந்தரம் சத்தியேந்திரன் (விடுதலை) இப்படி பலருக்கு, மதிய உணவு பரிமாறப்படும்போது கூட்டாக அமர்ந்து குதூகலத்துடன் சாப்பிடுகையில், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, ‘என்ன முக்கிய செய்தி இன்று என்று ஆசிரியரே சொல்லுங்கள்' என்பார்.

‘‘ஏன் சார் நீங்கள்தான் கொஞ்சம் நியூஸ் பேப்பர் படிக்கக்கூடாதா?'' என்று ஒரு குரல் இடையில் எழும்!

உடனே சிரித்துக்கொண்டே சகோதரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள், ‘‘ஏனய்யா, நமக் காக ஆசிரியர் படித்திருக்கிறார். எது முக்கியமோ அதை அவரே விளக்கி இங்கே தலைப்புச் செய்திகளிலிருந்து தலையங்கம் வரை புட்டுப் புட்டு வைக்கிறார். பிறகு நாம் ஏனய்யா, நம் நேரத்தை அதில் செலவிடவேண்டும்'' என்பார் - ஒரே சிரிப்பு. (அவர் சிறையில் செய்திடும் வேலை அனைவருக்கும் தெரியும்) மிகவும் கலகலப்பானவர்!

தோழர் க.சுப்பு, முரசொலி மாறன், தளபதி மு.க.ஸ்டாலின், ஆற்காடு நா.வீராசாமி, நீலநாராயணன் போன்றவர்கள் தி.மு.க. தோழர்களுக்குத் தைரிய மூட்டி அயர்வைப் போக்குவர்!

எனது அறையில் சதா படித்துக் கொண்டிருப் பதைப் பார்த்து எதிர் பிளாக் மாடியில் இருந்த சில வெளிநாட்டுக் கைதிகள் - கடத்தல் மற்றும் பல குற்றங்களில் வந்தவர்கள்  - என்னிடம் படிக்க புத்தகம் கேட்டு அனுப்புவார்கள் வார் டன்கள்மூலம். மனிதாபிமானத்தோடு அவர்க ளுக்கு வழங்கி, ‘‘படித்து முடித்தவுடன் புத்தகம் வந்து என்னிடம் சேரவேண்டும்'' என்று கூறு வேன். இப்படி நேரம் பயனுள்ளதாகச் சென்றது. எழுத்துப் பணியும் நடந்தது!

அதுபோல இப்பொழுதும் கூட!

(தொடரும்)

- விடுதலை நாளேடு 31 3 20

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (2)

1976 - மிசா சிறைக் கைதியாக சென்னை மத்திய சிறைச்சாலையில் எங்களுடன் நடிக வேள் எம்.ஆர்.இராதா அவர்களும் இருந்தார்; அவரது ஆஸ்துமா பிரச்சினை கருதி, தொடக்கத்திலிருந்தே சிறையின் மருத்துவ மனையில்தான் அவருக்குப் பணி கொடுக்கப் பட்டு இருந்தது. (வரும் எல்லா மிசா கைதிகள் மற்றும் பிற கைதிகளுடன் ஜாலியாக - தமாஷா கப் பேசி, கவலையை மறக்க வைப்பார்!).

பல நாட்கள் அவர் எங்களுக்கு மதிய உணவு வாங்கி வைத்துவிட்டு, (‘விடுதலை' சம்பந்தமும் அவருடன் சிறை மருத்துவமனையில் இருந்தார்) வெங்காயம் உரித்து, கட்டித் தயிர் (உறைவிட்டது - மதிய சாப்பாட்டுடன் போட்டு சாப்பிடுவதற்கு) வாங்கி வைத்து உதவுவதோடு, பல கதைகள் கூறுவார். நான் ஓர் ஆங்கிலப் புத்தகம் படித்தேன். அப்போதுதான் வெளிவந்த நூல் - ஹிக்கின்பாதம்ஸ் புத்தகத் தலைமையிடத்தில் ‘ஆர்டர்' கொடுத்து வர வழைத்தேன். ஜனவரி 30ஆம் தேதி மதியம் வாங்கிக் கொண்டு திண்டி வனம் சென்றேன். அன்று திரும்பிய நிலையில் தான் பெரியார் திடலில் மிசாவில் கைது செய்யப்பட்டேன்.

நள்ளிரவில் எனது சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளும் அதுதான். அந்த நூலை சிறையில் இருந்த என் பெட்டியிலிருந்து பெற பல வாரங்கள் ஆயின.

பிறகு அதை வாங்கிப் படித்து வருவதை அறிந்த அவர் ஆவலுடன் கேட்டார்.

‘‘ஏம்பா வீரமணி, நீ படிக்கிறாயே அது என்ன சுதந்திரம் வந்தது பற்றியா? அவ்வப்போது முக்கியமான பகுதிகளைக் கொஞ்சம் சொல்லு... கேட்போம்'' என்றார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, நான் புராணப் பிரசங்கி மாதிரி ஆங்கிலத்தில் உள்ள முக்கியப் பகுதிகளை படித்து மொழி பெயர்த்து எளிய முறையில் சொல்வேன். மிக அருமையாக உள்வாங்கிக் கொள்வார். சில அரிய சந்தேகங்களை இடையிடையே கேட்பார்.

சுமார் 10 நாள்கள் இப்படி சொல்லி முடித்த வுடன், திடீரென்று ஒரு நாள் சொன்னார், ‘‘ரொம்ப நல்லாயிருக்கு இந்தக் கதை; இதை ‘நடு ராத்திரியில் வந்த சுதந்திரம்?' என்ற தலைப்பி லேயே வெளியே போனவுடன் ஒரு நாடகமாக போட்டால், நல்ல வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறேன்.

நீ இப்போ சொல்லுறபடியே பார்ட் பார்ட்டா எழுதிக் கொடுத்தா போதும்பா; மீதியை நான் பார்த்துக்கிறேன். வேறு யாரும் கதை வசனம் எழுதவேண்டாம். அதிலும் அந்த ஜின்னா பற்றிய சம்பவத்தை எல்லாம் மக்களும், அரசியல் வாதிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ராஜாக்கள் எல்லாம் எப்படி வாழ்ந்திருக்கானுங்க என்று மக்களுக்குச் சொல்லனும்பா'' என்றார்.

ஒரே கலகலப்பு, இப்படிப் பல!

அதேபோல, அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை'யில் அவர் குறிப்பிடும் பிரெஞ்சு பாதிரியார் ஆபே டூபே (Abbe Dubois) எழுதிய "Hindu Manners, Customs and Ceremonies " என்ற 350 பக்கங்கள் (பொடி எழுத்துகள்) உள்ள நூலை Oxford-At the Clarendon Press  வெளியீடு, புதிய பதிப்பு வாங்கி வரச் சொல்லி, வீட்டில் (பணக்கஷ்டம் இருந்தபோதிலும்) வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப் படித்து, பல தோழர்களுடன் ‘வகுப்பெடுப்பதுபோல்' விவாதம். குறிப்பாக தோழர் க.சுப்பு முதலிய சில புத்தகப் படிப்பாளிகளுடன்.

அதுபோலவே,  மிசா சிறை வாசம் என்பதில், நீந்திய போது, நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள ‘விடுதலை' பழைய வால்யூம்களை சிறை அதிகாரிகள் அனுமதியோடு வாங்கி, வகுப்புரிமை வரலாற்றை எழுதக் குறிப்புகள் தயாரித்தேன்.

நான் படித்து முடித்தவுடன், குறிப்பிட்ட ‘விடுதலை' நாளிதழ் (பழைய தொகுதி) கோப்பு களை சகோதரர் முரசொலி மாறன் வாங்கி, அவர் படித்து ‘நீதிக்கட்சி வரலாறு' எழுதக் குறிப்புகள் தயாரிப்பார்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அது எவ்வளவு காலமானாலும் வகுப்புரிமைபற்றி நானும், நீதிக்கட்சி வரலாறுபற்றி அவரும் எழுதுவது என்று  நாங்கள் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை உள்ளே போட்டுக்கொண்டு, அதன்படி சற்று காலந்தாழ்ந்து ‘திராவிடர் இயக்க வரலாறு' என்ற நூலை தக்க தரவுகளுடன் மிக அருமையாக எழுதினார்!

பெரிதாய் இருந்தால் இளையதலைமுறை படிக்காமல் விட்டுவிடுவார்களோ என்பதால் வகுப்புரிமைபற்றி சிறு நூல் ஒன்றை நான் எழுதி வெளியிட்டேன்.

‘சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்' என்ற நூல்கூட சிறைச்சாலையில் மிசா காலத்தில்தான் உருவானது. 25 ஆண்டு களுக்குப் பின்பே அது புத்தகமாக வெளிவந்தது.

இப்படி ஓய்வு நம்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்டதுபோல, முதலில் நமக்கு உணர்வு ஏற்பட்டாலும், கிடைத்தற்கரிய வாய்ப்பே இது என்று ஆக்கப்பூர்வ மகிழ்ச்சித் துள்ளலுடன் நாம் முடிக்கவேண்டிய புத்தகப் பணித் திட்டத் தின்கீழ் - தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்க்கை என்ற அரிய ஆழ்கடலில் அவரது டைரிக் குறிப்புகளிலிருந்து பலப் பல முத்தான செய்திகளைத் தெரிந்துகொண்டு, அவை நம் மைச் சத்தானவர்களாக மாற்றுவதை அனுப வித்து வருகிறேன் - கடந்த பத்து நாட்களாக!

தனிமை இனி மையாக செல்கிறது.

(தொடரும்)

விடுதலை நாளேடு 1 4 20