பக்கங்கள்

சனி, 4 ஏப்ரல், 2020

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (4)

மற்றொரு எடுத்துக்காட்டு:

தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமை யானாள்?'' என்ற மகளிர் உரிமைச் சாசனம் பெண்ணுரிமை ஆவணம் போன்ற நூல் அவரது சுயசிந்தனை - சுய அனுபவம் - ஆய்வுகள் - சமூகக் கவலையுடன் கூடிய பொறுப்புணர்ச்சி - இவற்றால் பிறந்த ஓர் ஒப்பற்ற சமூகப் புரட்சிப் போர்க் கருவி. பெண்களின் சிந்தனைப் புரட்சிக் குப் பிறகு செயலாக் கத்திற்கும் வழிவகுக்கும் புரட்சிக் கையேடு ஆகும்.

அதில் கற்பு பற்றிய ஒரு பகுதியில் தந்தை பெரியார் அவர்கள் கூறும் கருத்தும், சுட்டிக் காட்டும் உவமைகளும் அப்படியே மொழி பெயர்ப்புப் போலவே, நோபல் பரிசு பெற்ற உலக அறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் அவர்களது ‘Marriage and Morals' ‘திருமணங்களும், ஒழுக்கங்களும்' என்ற தலைப்பில் வெளியான ஆங்கில நூலில் இருப்பதை, அய்யாவிடம் பெரியார் திடலில் படித்துக் காட்டினேன்.

அய்யா மகிழ்ந்தார்; அவ்வாண்டு தயாரித்த ‘விடுதலை' பெரியார் மலரில் அதை வெளியிட்டுள்ளோம் - ஒரு பெட்டிச் செய்தியாக!

உங்களில் எத்தனைப் பேர் அறிவீர்களோ யாம் அறியோம்!

மேற்கோள்காட்டி அதனால்தான் அதைக் கூறுகிறேன் என்று கூட்டங்களில் தந்தை பெரியார் பேசமாட்டார். மாறாக தான் கூறும் இக்கருத்து குறிப்பிட்ட இலக்கியத்திலோ, நூலிலோ, பாட் டிலோ இருந்தது என்றே  கூறும் பழக்கமுடையவர்.

இதுவும் தந்தை பெரியாரின் தனித்துவ முறை களில் ஒன்றாகும்!

நாங்கள் 1958 ஆம் ஆண்டு சென்னை அரசினர் சட்டக் கல்லூரியில் (கழகப் பொருளாளர் தோழர் சாமிதுரை மற்ற நண்பர்களுடன் படித்து வந்தோம்) தமிழ் மன்றத்திற்குத் தந்தை பெரியார் அவர்களைப் பேச அழைத்து வர ஏற்பாடு செய்தோம். அப்போது எங்களுக்கு சட்டக்கல்வி மதிப்புறு இயக்குநராக (பல்கலைக் கழக வேந்தர் போன்றவர்) இருந்தவர் ஏ.எஸ்.பி.அய்யர் அய்.சி. எஸ்., அவர்கள். (ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் என்ற பாலகாட்டு அய்யர்; 1957 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (மலையப்பன் வழக்கில்) தந்தை பெரியாரையும், விடுதலை ஆசிரியர் - வெளியீட்டாளர் என்பதால், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரையும் விசாரித்துத் தண்டித்த தலைமை நீதிபதி டாக்டர் பி.வி.இராஜமன்னார் அவர்களுடன் மற்றொரு நீதிபதியாக அமர்வில் இருந்தவர் இந்த ஜஸ்டீஸ் ஏ.எஸ்.பி.அய்யர் அய்.சி.எஸ். அவர்கள்).

அவரிடம் அனுமதி வாங்க தமிழ் இலக்கிய மன்றப் பொறுப்பாளர்கள் சென்றபோது, அவர் அனுமதியளித்ததோடு, "அவர் ஒரு பெரிய தலைவர்; சிறந்த சிந்தனையாளர். அவர் நம் சட்டக் கல்லூரிக்குப் பேச வரும்போது, நான் தலைமையேற்று சிறப்பிப்பதுதான் சரியான முறை (Protocol). ஆகவே நானே வந்து தலைமை தாங்குகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கூட்டம் தொடங்கியவுடன் அவரது தலைமை உரையில் ஒரு அரிய கருத்தைக் கூறினார் ஜஸ்டீஸ் ஏ.எஸ்.பி.அய்யர்.

ஓர் அறிஞர் ஒரு நூலில் எழுதும்போது, ‘‘இந்தியாவில் பல பேச்சாளர்கள் தங்கள் மேடைப் பேச்சில் மேற்கோள் காட்டாமல் பேசும் பழக்க மில்லை; அவர் அந்த நூலில் எழுதினார் என்று கூறித்தான் பேசுவர்; சொந்தமாக சுய சிந்தனை யோடு கருத்துகளை எடுத்து வைத்துப் பேசமாட் டார்கள்; இதற்கு விதிவிலக்கு இரண்டு பேர்கள் தான். ஒருவர் பெர்ட்ரண்ட் ரசல்; மற்றவர் பெரியார். இரண்டு பேரும் பகுத்தறிவாளர்கள்'' என்று பலத்த கைதட்டலுக்கிடையே கூறினார்!

அது எவ்வளவு சரியானது.

‘‘எதையும் நம்பாதீர்கள்; கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ளாதீர்கள். ரிஷி சொன் னார், மகான் சொன்னார் என்றெல்லாம் நம்பாதீர் கள். உங்கள் அறிவு என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து உரைத்துப் பார்த்து, பிறகு சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றுதான் தந்தை பெரியார் கூறுவார்.

எந்த மகானோ, மகாத்மாவோ, கடவுளோ, வேதமோ, சாஸ்திரமோ இப்படி கூறுமா?

விஞ்ஞானிகளும், பகுத்தறிவாளர்களும், சுயமரியாதைக்காரர்களும் மட்டும்தான் இப்படி தனித்தன்மையுடன் கூறுவர்!

‘‘முன்னுரை - பீடிகை - உரைப்பாயிரம்'', மிகவும் நீண்டு விட்டதல்லவா, பின் எப்போது ‘முத்து' என்று கேட்கிறீர்களா?

முத்து எளிதில் கிடைத்துவிடுமா என்ன? ஆழ்கடலுக்குள் நீந்தி, நீந்தி, மூழ்கி, மூழ்கி மூச்சடக்கியெல்லாம் கண்டறிய முழு முயற்சி செய்தாக வேண்டுமல்லவா?

ஓய்வாக தனது கட்டிலில் அமர்ந்துள்ள போதும் தனியாக சிந்தித்துக்கொண்டே உட்கார்ந் திருப்பார். அல்லது தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், நிகண்டு மற்றும் இராமாயண, இதிகாச புராண சாஸ்திர புத்தகங்க ளைத் தனது பார்வை மங்கிய நிலையிலும் (காரணம் வயது 94, 95 அல்லவா?) பெரிய லென்சை வைத்துக்கொண்டு (லேபாரட்டரி) ஆராய்ச்சிக் கூடத்தில் கிருமிகளை ஆராயும் ஒரு விஞ்ஞானி போல எதையோ ‘‘தேடிக் கொண்டிருப்பார்!'' ஆம், அது அறிவுத் தேடலைத் தவிர வேறு என்ன?

தனியே எழுந்து நடமாட முடியாத காலத்தி லும்கூட, தன்னுடன், தனது உடலின் ஒரு புது அங்கமாகிவிட்ட ரப்பர் குழாயிலிருந்து  (சிறுநீரக இணைப்புக் குழாயில்) சிறுநீர் வடிந்து கொண்டே இருக்கும் நிலையிலும் (ஒரு சேகரிப்பு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில், அதைப் பாதுகாக்கும் ஒரு சிறு பிளாஸ்டிக் வாளி, அதனை சுமக்கும் அவரது கைகள் -  அல்லது சில நேரங்க ளில் அதைச் சுமக்க அவரால் அனுமதிக்கப்படும் அன்னையார், புலவர் கோ.இமயவரம்பன், மகாலிங்கம் அல்லது எப்போதாவது என்னைப் போன்ற அவரது பணித் தோழர்கள் இருப்போம்)அவர் சிந்தனையோ, மடை திறந்த வெள்ளமாக, கொட்டும் குற்றால நீர்வீழ்ச்சிபோல, ஊற்றெடுக் கும் ஆர்டீஷியன் கிணறுகளாக பேச்சாகவும், எழுத்தாகவும், கருத்தாகவும் வெளிவந்த வண் ணமே இருக்கும்!

வயதின் மூப்பு இதற்குத் தடையாக என்றும் அமைந்ததில்லை.

வலியின் தொல்லை - இடையிடையே வந்து வந்து போவதும் வாடிக்கை. சற்று ரப்பர் குழாய் நகர்ந்துவிட்டால், மேடையிலயே புரண்டு அசைந்து சரி செய்து, ‘‘அம்மா, அம்மா'' என்று பெருங்குரல் - நம் கண்களில் நீர் ஊற்று கொட்டும் போதுகூட, நிறுத்தாது - நெஞ்சுரம் கொண்டு தொடரும் ‘‘பிரசங்கப் பெருமழை!''

- இப்படி ஒரு தலைவரை இனி எளிதில் இவ் வையகம் காணுமோ என்று இன எதிரிகளும்கூட வியக்கின்றனர்!

இப்படி சிந்திப்பது மட்டுமா? ‘வேனில்' பயணம் போகும்போது திடீரென்று பக்கத்தில் உள்ள புலவர் முதல் எங்களையெல்லாம் நோக்கி, அவர் கேள்வி கேட்பார் - அவரும் அறிந்துகொள்ள அதுதான் அதன் சிறப்பு - தனித்தன்மை!

ஏ புலவர், ‘அ' என்னும் தமிழின் முதல் எழுத்தை நாம் எதிர்மறையாகவும் பயன்படுத்து கிறோம். அதே போல, ‘A' என்னும் ஆங்கில முதல் எழுத்தின் எதிர்மறையில் பயன்படுத்துகிறார். யோக்கியன் - அயோக்கியன்போல; Theist  நம் பிக்கை;  Atheist   - நாத்திகன். எதிர்மறை இப்படி இரண்டு மொழிகளிலும் எப்படி ஒரே மாதிரி புழங் குகிறது? விளக்க முடியுமா?

திருதிருவென விழிப்பதுதான் நம்மால் முடிந்த கைங்கரியம்!

ஏம்பா! வீரமணி Without any Reservation என்பதற்கு அதன் முழு உணர்வையும் இணைத்து வெளிப்படுத்த ஒரு சொல் உண்டா? உண்டாக் கலாமா? என்பார்!

‘‘எவ்வித மன ஒதுக்கீடும் இல்லாமல்'' என்று வழக்கமான ‘‘சவுத்துப்போன'' எங்கள் ‘லிட்ரல்' மொழி பெயர்ப்பு - அவரைத் திருப்திப்படுத்தாது!

‘எவ்வித கூச்ச நாசமும் இன்றி' என்று சொல்லலாமா அய்யா?

அய்யா, யோசித்துவிட்டு, பரவாயில்லை; இது ஓரளவுக்கு பக்கம்வருகிறது!

எதற்கும் Root -  ‘வேர்ச்' சொல் என்னவென்று கேட்பார்!

தந்தை பெரியார் எழுதியுள்ள டைரிக் குறிப்பு கள் என்ற ஆழ்கடலுக்குள் மூழ்கி மூழ்கி எழுந்து வருகிறேன் - கடந்த சில நாள்களாக!

கல்வெட்டு எழுத்து அறிஞர்கள் பணிபோல, அய்யாவின் கூட்டெழுத்து, புள்ளி போடாத, எழுத்து, மெல்லின - இடையினம்பற்றிக் கவலைப் படாத; அதிலும் ‘சமத்துவ சிந்தனையே' காணும் - கருத்துதான் முக்கியம் என்பதையே மய்யப்படுத்தி வாழ்நாள் முழுவதும், ஒப்பற்ற பத்திரிகையாளர், கட்டுரையாளர், தலையங்க எழுத்தாளர், நீண்ட பேருரையாளர் என்று எல்லா நிலையிலும் வரலாற்றில் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட உலகத் தலைவர். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சிந்தனையாளர் அய்யாவின் டைரி, அறிவுக்கு அரிய உணவு அல்லவா!

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

‘‘1929 ஆம் ஆண்டு டைரியில் அவரது கையெழுத்தில்,

‘‘தேங்க்யூ என்பதற்கு

தமிழ் - உங்களுக்கு கடமைப்பட்டவன் (or) கடமைப்படுகிறவன்'' என்று எழுதியுள்ளார்.

இதுவரை ‘நன்றி' என்ற ஒரு சிறு சொல்லைத் தான் சொல்லி வருகிறோம். அதன் ஆழ்ந்த நன்றித் தத்துவத்தை உள்ளடக்கியது எவ்வளவு அருமை பார்த்தீர்களா?

என்னே தனித்த வளமான சிந்தனை ஊற்று!

இதுபற்றி விரிவாக ஆராய்வோம்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 4.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக