பக்கங்கள்

புதன், 1 ஏப்ரல், 2020

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (1)&(2)

ஒரு திரைப்படத்தில் தமிழ்நாட்டின் ஈடு இணையற்ற குணச்சித்திர நடிகை, எம் திராவிட இனத்தின் ஈடு இணையற்ற தமிழச்சி,  ‘‘ஆச்சி'' என்று எல்லோருக்கும் அறிமுகமான தமிழ் நடிகை மனோரமா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடும் பாட்டுதான் அது!

எத்தனைமுறை கேட்டாலும் சலிப்போ, அலுப்போ வராத அவ்வளவு அருமையான மெட்டு. கருத்தாழம் மிக்க இன்னிசை இருக்கும்.

நான் அப்படிப்பட்ட திரைப்படப் பாடல்கள் சிலவற்றை எப்போது கேட்க வாய்ப்பு ஏற் பட்டாலும், கேட்டுச் சுவைத்து மகிழ்வேன்; அது ஒரு இளைப்பாறுதல் (Relaxation) தானே!

இப்போது வீட்டில் நம் குருதிக் குடும்ப உறுப்பினர்களோடு இருந்து தீரவேண்டிய - இதுவரை செலவழிக்காததற்குத் ‘தக்க தண்ட னையாக' தரப்பட்டுள்ள ஊரடங்கு, சுமை அல்ல - நல்ல வரவேற்கத்தக்க சுகமே!

இதுபோன்ற கிடைத்தற்கரிய காலம் - வேறு எப்போது கிட்டும்? எதையும் பயனுள்ளதாகவே ஆக்கி மகிழ்தல்தானே பகுத்தறிவுவாதியின் சீரிய நடைமுறை. இல்லையா?

1976 இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் - கொடுமையான அதிகாரிகளின் அநாகரிகமான நடத்தைகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு மாறிவிட்டன; அதன் பிறகு, மனிதாபிமான கடமையைத் தவறாது செய்த ஜெயிலர் திரு.மணி அவர்களும், ஜெயில் சூப்பிரெண்டெண்டு திரு.பகவதிமுருகன் அவர்களும், எல்லா கைதி களையும் போல, ஜெயிலில் உள்ள ‘மிசா' (அரசியல்) கைதிகளை எப்படி சட்டப்படி நடத்தவேண் டுமோ அப்படி நடத்தி, எங்களது மனதில் திட்ட மிட்டு புகுத்தப்பட்ட அச்சத்தைப் போக்கினர் - எத்தனை ஆண்டுகள் இங்கேயே (சிறையில்) இருக்கப் போகிறோம் என்றே தெரியாத நிலை தான்  ‘மிசா' என்ற சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்குள் இருப்ப வர்களுக்கு.

அதனால், நாங்கள் ஆயத்தமானோம் - அந்த வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோம்!

வீட்டில் படிக்காத, படித்து முடிக்காத அல்லது ஏடுகளில் மதிப்புரை வந்துள்ள புதிய வெளியீடு கள் (ஆங்கிலம், தமிழ்) இவற்றை வாங்கித் தருமாறு வீட்டில் உள்ளோரிடம் கூறி, அவற்றைப் பெற்று படிப்பது உள்பட பலவகை நூல்கள் என்ற ‘நல்ல நண்பர்கள்'  சிறையில் எங்கள் நல்ல தோழர்களானார்கள்!

எனது அறை தனித்தனி அறை - எழுத, படிக்க வசதியே! படிப்பது, குறிப்பெடுப்பது -அவற்றைப் பரப்ப - நினைவில் நிறுத்திக் கொள்ள - யுக்தியாகவும் - படிக்காத தோழர்க ளுக்கு, காதில் கேட்டலே நன்று என்பதை நடைமுறையில் கடைப்பிடிக்கும் நண்பர்களுக் கும் பயன்படுவது எமது அன்றாடப் பணியாக இருக்கும்.

‘விடுதலை' அலுவலகத்திலிருந்து எல்லா செய்தித்தாள்களும் விலைக்கு வாங்கி எனது பெயர் போட்டு காலையில் சென்னை மத்திய சிறை அலுவலகத்திற்கு வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள்.

அதனை ஜெயிலர், சூப்பிரெண்டெண்டு முதலிய மேலதிகாரிகள் பார்த்துப் படித்து - கருப்பு மை இட்டு மறைக்க வேண்டிய செய்தி களை மறைத்துவிட்டு, எங்களிடம் சுமார் 12 மணி யளவில் அந்த செய்தித்தாள்கள் வந்து சேரும்.

அவற்றைப் படித்து நான், அங்கே ஒரு வானொலிபோல் பரப்பொலிக் கூடமாகப் பயன் படுவேன்.

தோழர் க.சுப்பு அவர்களும் மற்றும் ஹரிபட், சிவாஜி (சி.பி.எம்.) தோழர்களும் எனது அறைக்கு வந்து படித்து, விவாதிப்பார்கள்.

சகோதரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் நகைச்சுவை உணர்வு குன்றாத கொள்கை உரம் கொண்ட தோழர்; திராவிடர் கழக மிசா கைதிகள் 10, 11 பேர்; மு.போ.வீரன், சைதை எஸ்.பி.தட்சணாமூர்த்தி, கோபக்கார அ.குண சீலன், பொறுமையும், பொறுப்பும் மிகுந்த பண்ருட்டி அய்யா நா.நடேசனார், புவனகிரி ம.சச்சிதானந்தம், துடிப்பு மிகுந்த கொள்கையாளர் நெய்வேலி இரா.கனகசபாபதி (‘விடுதலை' என்.எஸ்.சம்பந்தம் சில மாதங்களுக்குப் பிறகு விடுதலையானார்), அதுபோல மாணவர் சுந்தரம் சத்தியேந்திரன் (விடுதலை) இப்படி பலருக்கு, மதிய உணவு பரிமாறப்படும்போது கூட்டாக அமர்ந்து குதூகலத்துடன் சாப்பிடுகையில், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, ‘என்ன முக்கிய செய்தி இன்று என்று ஆசிரியரே சொல்லுங்கள்' என்பார்.

‘‘ஏன் சார் நீங்கள்தான் கொஞ்சம் நியூஸ் பேப்பர் படிக்கக்கூடாதா?'' என்று ஒரு குரல் இடையில் எழும்!

உடனே சிரித்துக்கொண்டே சகோதரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள், ‘‘ஏனய்யா, நமக் காக ஆசிரியர் படித்திருக்கிறார். எது முக்கியமோ அதை அவரே விளக்கி இங்கே தலைப்புச் செய்திகளிலிருந்து தலையங்கம் வரை புட்டுப் புட்டு வைக்கிறார். பிறகு நாம் ஏனய்யா, நம் நேரத்தை அதில் செலவிடவேண்டும்'' என்பார் - ஒரே சிரிப்பு. (அவர் சிறையில் செய்திடும் வேலை அனைவருக்கும் தெரியும்) மிகவும் கலகலப்பானவர்!

தோழர் க.சுப்பு, முரசொலி மாறன், தளபதி மு.க.ஸ்டாலின், ஆற்காடு நா.வீராசாமி, நீலநாராயணன் போன்றவர்கள் தி.மு.க. தோழர்களுக்குத் தைரிய மூட்டி அயர்வைப் போக்குவர்!

எனது அறையில் சதா படித்துக் கொண்டிருப் பதைப் பார்த்து எதிர் பிளாக் மாடியில் இருந்த சில வெளிநாட்டுக் கைதிகள் - கடத்தல் மற்றும் பல குற்றங்களில் வந்தவர்கள்  - என்னிடம் படிக்க புத்தகம் கேட்டு அனுப்புவார்கள் வார் டன்கள்மூலம். மனிதாபிமானத்தோடு அவர்க ளுக்கு வழங்கி, ‘‘படித்து முடித்தவுடன் புத்தகம் வந்து என்னிடம் சேரவேண்டும்'' என்று கூறு வேன். இப்படி நேரம் பயனுள்ளதாகச் சென்றது. எழுத்துப் பணியும் நடந்தது!

அதுபோல இப்பொழுதும் கூட!

(தொடரும்)

- விடுதலை நாளேடு 31 3 20

‘‘முத்துக்குளிக்க வாரீகளா?'' (2)

1976 - மிசா சிறைக் கைதியாக சென்னை மத்திய சிறைச்சாலையில் எங்களுடன் நடிக வேள் எம்.ஆர்.இராதா அவர்களும் இருந்தார்; அவரது ஆஸ்துமா பிரச்சினை கருதி, தொடக்கத்திலிருந்தே சிறையின் மருத்துவ மனையில்தான் அவருக்குப் பணி கொடுக்கப் பட்டு இருந்தது. (வரும் எல்லா மிசா கைதிகள் மற்றும் பிற கைதிகளுடன் ஜாலியாக - தமாஷா கப் பேசி, கவலையை மறக்க வைப்பார்!).

பல நாட்கள் அவர் எங்களுக்கு மதிய உணவு வாங்கி வைத்துவிட்டு, (‘விடுதலை' சம்பந்தமும் அவருடன் சிறை மருத்துவமனையில் இருந்தார்) வெங்காயம் உரித்து, கட்டித் தயிர் (உறைவிட்டது - மதிய சாப்பாட்டுடன் போட்டு சாப்பிடுவதற்கு) வாங்கி வைத்து உதவுவதோடு, பல கதைகள் கூறுவார். நான் ஓர் ஆங்கிலப் புத்தகம் படித்தேன். அப்போதுதான் வெளிவந்த நூல் - ஹிக்கின்பாதம்ஸ் புத்தகத் தலைமையிடத்தில் ‘ஆர்டர்' கொடுத்து வர வழைத்தேன். ஜனவரி 30ஆம் தேதி மதியம் வாங்கிக் கொண்டு திண்டி வனம் சென்றேன். அன்று திரும்பிய நிலையில் தான் பெரியார் திடலில் மிசாவில் கைது செய்யப்பட்டேன்.

நள்ளிரவில் எனது சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளும் அதுதான். அந்த நூலை சிறையில் இருந்த என் பெட்டியிலிருந்து பெற பல வாரங்கள் ஆயின.

பிறகு அதை வாங்கிப் படித்து வருவதை அறிந்த அவர் ஆவலுடன் கேட்டார்.

‘‘ஏம்பா வீரமணி, நீ படிக்கிறாயே அது என்ன சுதந்திரம் வந்தது பற்றியா? அவ்வப்போது முக்கியமான பகுதிகளைக் கொஞ்சம் சொல்லு... கேட்போம்'' என்றார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, நான் புராணப் பிரசங்கி மாதிரி ஆங்கிலத்தில் உள்ள முக்கியப் பகுதிகளை படித்து மொழி பெயர்த்து எளிய முறையில் சொல்வேன். மிக அருமையாக உள்வாங்கிக் கொள்வார். சில அரிய சந்தேகங்களை இடையிடையே கேட்பார்.

சுமார் 10 நாள்கள் இப்படி சொல்லி முடித்த வுடன், திடீரென்று ஒரு நாள் சொன்னார், ‘‘ரொம்ப நல்லாயிருக்கு இந்தக் கதை; இதை ‘நடு ராத்திரியில் வந்த சுதந்திரம்?' என்ற தலைப்பி லேயே வெளியே போனவுடன் ஒரு நாடகமாக போட்டால், நல்ல வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறேன்.

நீ இப்போ சொல்லுறபடியே பார்ட் பார்ட்டா எழுதிக் கொடுத்தா போதும்பா; மீதியை நான் பார்த்துக்கிறேன். வேறு யாரும் கதை வசனம் எழுதவேண்டாம். அதிலும் அந்த ஜின்னா பற்றிய சம்பவத்தை எல்லாம் மக்களும், அரசியல் வாதிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ராஜாக்கள் எல்லாம் எப்படி வாழ்ந்திருக்கானுங்க என்று மக்களுக்குச் சொல்லனும்பா'' என்றார்.

ஒரே கலகலப்பு, இப்படிப் பல!

அதேபோல, அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை'யில் அவர் குறிப்பிடும் பிரெஞ்சு பாதிரியார் ஆபே டூபே (Abbe Dubois) எழுதிய "Hindu Manners, Customs and Ceremonies " என்ற 350 பக்கங்கள் (பொடி எழுத்துகள்) உள்ள நூலை Oxford-At the Clarendon Press  வெளியீடு, புதிய பதிப்பு வாங்கி வரச் சொல்லி, வீட்டில் (பணக்கஷ்டம் இருந்தபோதிலும்) வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப் படித்து, பல தோழர்களுடன் ‘வகுப்பெடுப்பதுபோல்' விவாதம். குறிப்பாக தோழர் க.சுப்பு முதலிய சில புத்தகப் படிப்பாளிகளுடன்.

அதுபோலவே,  மிசா சிறை வாசம் என்பதில், நீந்திய போது, நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள ‘விடுதலை' பழைய வால்யூம்களை சிறை அதிகாரிகள் அனுமதியோடு வாங்கி, வகுப்புரிமை வரலாற்றை எழுதக் குறிப்புகள் தயாரித்தேன்.

நான் படித்து முடித்தவுடன், குறிப்பிட்ட ‘விடுதலை' நாளிதழ் (பழைய தொகுதி) கோப்பு களை சகோதரர் முரசொலி மாறன் வாங்கி, அவர் படித்து ‘நீதிக்கட்சி வரலாறு' எழுதக் குறிப்புகள் தயாரிப்பார்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அது எவ்வளவு காலமானாலும் வகுப்புரிமைபற்றி நானும், நீதிக்கட்சி வரலாறுபற்றி அவரும் எழுதுவது என்று  நாங்கள் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை உள்ளே போட்டுக்கொண்டு, அதன்படி சற்று காலந்தாழ்ந்து ‘திராவிடர் இயக்க வரலாறு' என்ற நூலை தக்க தரவுகளுடன் மிக அருமையாக எழுதினார்!

பெரிதாய் இருந்தால் இளையதலைமுறை படிக்காமல் விட்டுவிடுவார்களோ என்பதால் வகுப்புரிமைபற்றி சிறு நூல் ஒன்றை நான் எழுதி வெளியிட்டேன்.

‘சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்' என்ற நூல்கூட சிறைச்சாலையில் மிசா காலத்தில்தான் உருவானது. 25 ஆண்டு களுக்குப் பின்பே அது புத்தகமாக வெளிவந்தது.

இப்படி ஓய்வு நம்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்டதுபோல, முதலில் நமக்கு உணர்வு ஏற்பட்டாலும், கிடைத்தற்கரிய வாய்ப்பே இது என்று ஆக்கப்பூர்வ மகிழ்ச்சித் துள்ளலுடன் நாம் முடிக்கவேண்டிய புத்தகப் பணித் திட்டத் தின்கீழ் - தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்க்கை என்ற அரிய ஆழ்கடலில் அவரது டைரிக் குறிப்புகளிலிருந்து பலப் பல முத்தான செய்திகளைத் தெரிந்துகொண்டு, அவை நம் மைச் சத்தானவர்களாக மாற்றுவதை அனுப வித்து வருகிறேன் - கடந்த பத்து நாட்களாக!

தனிமை இனி மையாக செல்கிறது.

(தொடரும்)

விடுதலை நாளேடு 1 4 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக