பக்கங்கள்

சனி, 28 மார்ச், 2020

"21 நாள்கள்" - வீட்டுக்குள் - எப்படி? எப்படி?

21 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது - மிக வேகமாக உலகெங்கும் பரவிவரும் கரோனா வைரஸ் நம்மைத் தாக்குவதைத் தடுக்கவேயாகும். தனிமைப்படுதல், ஒதுங்கி வாழ்தல், சுயக்கட்டுப்பாடு மூலம் தொற்று பரவாமல் இருக்க முடியும்; இல்லை யெனில் அது மிகவும் வேகமாகப் பல மடங்குப் பெருகி நம் மக்களை அழித்து "அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் வடிக்கும்" அவலத்திற்கு ஆளாக்கி விடக் கூடும்!

முன்கூட்டியேகூட, ஒரு மாதம் முன்னால்கூட இதைச் செய்திருக்க வேண்டும் என்பது மருத்துவ அறிவியலாளர்களின் கருத்து. என்றாலும் "Better Late than Never" என்பதுபோல, இப்போது நாம் தடுக்காவிட்டால் - இந்த முறையில் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு  இருப்பதைத் தவிர விடியலுக்கு வழியே இல்லை.

இதனை மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களுக்காகச் செய்யவில்லை; நம் பாதுகாப்புக்கு, நமது நலத்திற்கு - மறந்து விட வேண்டாம்!

எத்தனையோ ஜோதிட சக்ரவர்த்திகள் இருந்தும் கரோனா வைரஸ் வரும் என்று எவராவது சொன்னார்களா?  எல்லாரும் இவ்வாண்டு சுபீட்சம் பொங்கும் - வழியும் ஆண்டு என்றுதான் அளந் தார்கள்! சமூக வலைத்தளங்கள் இதனை நன்கு ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார்கள். என்றாலும் நம்மாட்களுக்கு ஜோதிடப் பைத்தியம் எளிதில் தீராது; ராசி  பலன் போட்டு, காசு பலன் தேடும் ஏடுகளுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை!

"நாய் விற்ற காசு குரைக்காது!

கருவாடு விற்ற காசு நாறாது!"

என்பதுபோல - ஜோதிடம் வேண்டும்; இப்படி ஒரு பிரமை!

வானவியல் (Astronomy) என்பதும், ஜோதிடம் என்பதும் (Astrology)  வெவ்வேறு; நேர் எதிர்துருவங்கள்.

ஒன்று விஞ்ஞானம் - அறிவியல்; மற்றொன்று போலி விஞ்ஞானம் - போலி அறிவியல்.

21 நாட்கள் வீட்டுக்குள் இருப்பதை, குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும் நல் வாய்ப்பாகக் கருதுங்கள்.

எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழகுதல் இனிமை தரும்!

பலவீனத்தையே பலமாக்குவதும், எதையும் நம் பக்கம் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் தான் முழுப் பகுத்தறிவு.

தந்தைபெரியாருக்கு 'பல்செட்' கட்டினார்கள். சிறீரங்கம் (திராவிட) முத்து இன்னும் இருக்கிறார். கருப்புச் சட்டைக்காரரான அவரும், மற்ற பல் டாக்டர்களும் உயர்ந்த பல் செட்டைத் தயாரித்துத் தந்தை பெரியாருக்கு தந்தார்கள் - பொருத்தி பார்த்தனர்.

தந்தை பெரியாருக்குப் பிடிக்கவில்லை. தூக்கி வைத்து விட்டார்!

பல்லில்லாமலே பேசினார் - பல ஆண்டுகளாக வெண்கல நாதக் குரலில்!

'பல்லுபோனால் சொல்லுப்போச்சு'

பொய்யாகியது பெரியார் விஷயத்தில் - அது மட்டுமா?

ஆட்டுக்கறி - மிளகு அரைத்து பக்குவமான 'கருப்புக்கறி'  - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை என்ற செவிலித்தாயின் அன்றாடத் தயாரிப்பை சுவைத்து - மென்று சுவைத்துச் சாப்பிட்டார். அய்யா எப்படி தனது ஈறுகளை (Gums) யே பற்களாக்கிக் கொண்டார்!

"அதுபோல இந்த 21 நாள்களை நமது பல 'பாக்கிகளை' தீர்த்து வைக்கப் பயன்படுத்தி மகிழுங்கள். எதற்கும் மறுபயன்  - Recycling உண்டு. இதற்கும் கூடத்தான் - யோசியுங்கள்.

நான் எனது நீண்ட நாள் பாக்கியான முக்கியமாகச் சேர்த்த வீட்டு நூலகப் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி பேரப் பிள்ளைகளின் உதவியால் கணினிமயப்படுத்தி வரிசைப்படுத்தும் பணி பயனுள்ளதாக அமைந்தது!

அடுத்து "பெரியார்தம் டைரிக் குறிப்பு" என்ற ஆழ் கடலுள் மூழ்கி மூழ்கி முத்துக்களை எடுத்து சேகரித்து வருகின்றேன் - "உங்களுக்காக - வருங்கால வாசக சந்ததிக்காக!"

மறுபயன் - Recycling, 21 நாளும் தேவைதான் - ஓய்வு, இளைப்பாறுதல் என்பது வேறு பணிக்கு நம்மை மாற்றுவதே தவிர, தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது அல்ல. அதற்காக தூக்க நேரத்தையும் குறைக்க வேண்டாமே!

- விடுதலை நாளேடு, 26.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக