பக்கங்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2020

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (1), (2)

- கி.வீரமணி

அண்மைக் காலத்தில் நான் ஆர்வத்துடன் எத்தனையோ நூல்களை - பசித்தவன் உணவருந்துவதைப் போல் - ஏராளம் வாசித்திருக்கிறேன்.

ஆனால் நண்பர் பழ. அதியமான் அவர்கள் எழுதியுள்ள "வைக்கம் போராட் டம்" என்ற சமூகப் புரட்சி வரலாற்று நூல் போல் எந்த ஒரு புத்தகத்தையும் படித்ததே யில்லை.

வியந்தேன்; மகிழ்ந்தேன்; 'மாந்தி, மாந்தி' அந்த அறிவுக்கு உணவான வரலாற்று ஆவ ணத்தை உண்டு களித்தேன். செரிமானம் செய்து கொண்டு, போராட்ட வீரர்களின் ரத்த ஓட்டத்தைச் சுத்திகரித்து, புது உணர்வோடும், மிடுக்கோடும் கண்கள் ஓட இந்நூல் ஒரு 'செயலூக்கி நூல்' என்றால் மிகையாகாது!

1924-25இல் அதுவும் திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தில் இன்றைக்கு 96 ஆண்டு களுக்கு முன் நடைபெற்ற - இந்திய வர லாற்றில் நடைபெற்ற முதல் மனித உரிமை களுக்கான அறப்போர் - சத்தியாகிரகம் - வைக்கம் சத்தியாகிரகம் என்ற நிலையில், அதுபற்றி புல்லர்களும், புரட்டர்களும் பொய்களைப் பரப்பி வைக்கத்திற்கும், பெரி யாருக்கும் என்ன சம்பந்தம்  என்று எகத்தாளமாக எழுதி வரும் நிலையில், அவற்றை, இந்த வரலாற்றுத் தரவுகளுடன் கொண்ட ஆய்வு நூல் உடைத்து நொறுக்கி, உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது!

நேற்று நடந்த செய்திகளையே கயிறு திரித்துக் கூறும் கயமை - அரசியலாகவும், பத்திரிகா தர்ம மாகவும் படமெடுத்தாடும் இந்த வெட்ககரமான வேதனைச் சூழலில் 95 ஆண்டு காலத்திற்கு முன் நடந்த போராட்ட வரலாற்று ஆவணங்களை  - தரவுகளை - சேகரிக்க 10, 11 ஆண்டுகள் தனி மனிதர் ஒருவர் தன்னந்தனியே பயணித்து வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

பொருளாதார ஆதரவோ, பெரும் அமைப்பு களின் பின்புலமோ இல்லையே என்று  சிறிதும் கவலைப்படாமல், அந்நாளைய திருவி தாங்கூர் ராஜ்ஜிய - இன்றைய கேரளப் பகுதி களுக்குச் சென்று - பலரையும் சந்தித்து, பேட்டி கண்டும்,  சில நூல்களைப் பெற, 'ஒற்றைக் கால்' தவம் செய்தும், மனந்தளராமல் - தான் கொண்ட முயற்சியில் முழு வெற்றியடைந்துள்ளது வியப்பினும் வியப்பு அல்லாமல் வேறு என்ன?

அவருக்கு ஆய்வறிஞர், சிந்தனையாளர், பேராசிரியர் முனைவர் ஆ.இரா. வேங்கடா சலபதி அவர்கள்தான் ஒரே ஒரு உற்சாக மூட்டி.

வைக்கம் பற்றி எங்கே எதில் குறிப்புகள் கிடைத்தாலும், அவற்றினைப் பற்றிக் கொண்டு- ஆழ் கிணறுக்குள் வீழ்ந்த குழந்தையை அரும்பெரும் முயற்சியோடு - லாவகமாகவும், பக்குவமாகவும் அதை மேலே உயிரோடு கொண்டு வந்து  பெரியாரின் பெரும் குடும்பத்தவரிடம் புத்தகக் குழந் தையை சேர்த்துள்ளார்.

அதனை உச்சிமோந்து, முத்த மாரி பொழிந்து வரவேற்றுப் பாராட்ட முன்வர வேண்டாமா? 'அப்படியென்ன பிரமாதம்?' கேள்வி எழுகிறதா?

எத்தனை எத்தனை கோணங்களில் இந்த வைக்கம் பற்றிய புதிய வெளிச்சங்கள் - இந்நூலில்!

என்னைப் பொறுத்தவரை அய்யாவின் உறுதிகளும், அன்னை நாகம்மையாரின் தியா கமும் - 95 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குள் அடைக்கப்பட்டு கிடந்த பெண்கள் வீதிக்கு வந்து போராட - அதுவும் வேறு ஒரு மாநிலத்தில் - அந்நாளைய மொழியில் வேறு ஒரு நாட்டில் - மலையாள தேசத்தில் - மொழி தெரியா பூமியில் - வழி அறியா மண்ணில் - "நெறி ஒன்றே போதும், நேர்மை வெல்லும்" என்று பொறி பறக்கப் போராடிய அந்த வீராங்கனைகளின் நினைவிடம் நோக்கி நாம் மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு மரியாதை செலுத்த வேண்டாமா?

அந்நூலின் சிறப்பு தொடர் வாழ்வியலாக வரும். நூலை வாங்கிப் படித்துப் பாதுகாருங்கள்! - பரப்புங்கள்!!

- விடுதலை நாளேடு 20 2 20

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (2)

 

மனித உரிமைப் போர் 1924-இல் தென்னாட்டில் திருவி தாங்கூர் சமஸ்தான ராஜ்ஜியத்தில் ஈழவ ஜாதியினரை, வைக்கத்தின் கோயில் மகாதேவர் - சிவன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக் களில் நடமாடக் கூட அனுமதிக் கவே கூடாது; காரணம் கீழ் ஜாதி யினர் நடந்தால் வைக்கத்தப்பன் தீட்டாகி விடுவார் என்று உயர் ஜாதியினராகிய நம்பூதிரிகளும், மற்றவர்களும் நம்பியதை ஏற்று ஹிந்து ராஜ்ஜியமாகவே மார்த் தாண்ட வர்மன் ராஜா காலத்தி லிருந்து நடந்து வந்த திருவி தாங்கூர் ராஜ்ஜியத்தின் ஆட்சி தடை ஆணை பிறப்பித்துக் காத்து வந்தகொடுமை, மனித உரிமை பறிப்பு அல்லவா?

தந்தை பெரியார் காந்தியாருக்கு எழுதிய கடிதத் தில், 1924-இல் காங்கிரஸ் தலைவராக தமிழ்நாட்டில் இருந்து, சத்தியாகிரகத்தைத் தொடர கேரளத்து மனிதநேயர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சென்ற போது குறிப்பிட்டார்.

"நாயும், கழுதையும், பன்றியும், தாராளமாக நடமாடும் தெருக்களில் பகுத்தறிவுள்ள மனிதர்கள் மட்டும் அவர்கள் "கீழ் ஜாதியினராக"ப் பிறந்து விட்டனர் என்ற ஒரே காரணம் காட்டி, நடக்கும் உரிமையை (கோயிலுக்குள் நுழைந்து வழிபடும் உரிமைகூட அல்ல) மறுப்பது எவ்வகையில் நியாயம்? பன்றியும், கழுதையும், நாயும் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமையைப் பெற்றனர்?  இல்லையே; பின் ஏன் மனித ஜீவன்களுக்கு மட்டும் இந்த இழிவான நிலை?

இஸ்லாத்திற்கோ, கிறித்துவத்திற்கோ மதம் மாறிய ஈழவர் - கீழ் ஜாதியினர் அதே தெருக்களில் நடமாடும்போது, அவர்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லையே. இவர்களுக்கு மட்டும் ஹிந்துக்கள் என்பதால்தானே இந்தத் தடை? நியாயமா" என்று பெரியார் கேட்ட கேள்விகள், அனைத்து மக்களையும் அங்கே சிந்திக்க வைத்து, போராட்டக் களத்திற்கு அழைத்து வந்து, 20 மாதங்கள் (604 நாள்கள்) தொடர்ந்து அறவழியில் ஓர் போராட்டம் - நடைபெற்று வெற்றி வாகை சூடியது என்பதற்கு இணையான ஒரு 'சத்தியாகிரகம்' அறப்போர் - இந்திய வரலாற்றில்- ஏன் உலக வரலாற்றில்கூட தேடித் தேடி அலைந்தாலும் காண்பது அரிதினும் அரிது!

"நாயக்கர் மட்டும் வக்கீலாகி கறுப்புக் கோட் போட்டிருந்தால்,  பல பிரபல வக்கீல்கள் எல்லாம் தொழி லின்றி திருவோடு எடுக்கவேண்டியே இருக்கும்" என்றார் 'கல்கி' கிருஷ்ண மூர்த்தி.

தந்தை பெரியார் அவர்களின் பங்களிப்பு இதில் மிக அதிகம் என்பதை, தக்க சான்றாவணங்களின் மூலம் நூலாசிரியரின் 10 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட கடும் உழைப்பு உலகுக்கு உணர்த்துகிறது!

அய்யா பெரியாரின் வாதத் திறமை, தருக்கமுறை, அவரது ஒவ்வொரு உரையும் ஒரு பாட நூல் பாடமாகவே அமைந்தது. அதில் ஒரு பகுதியைத் தருகிறார் நூலாசிரியர் பழ. அதியமான்.

அடாடா! என்னே வாதத் திறமையின் பல்கோணப் பரிமாணங்கள்!

"வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்துக்கு எதிரானதல்ல, மதச் சண்டை அல்ல, வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல், சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது. இந்தப் பணியில், நாம் நல்ல நிலையில் இருக்கும் எவரையும் நம்பி இருக்கக் கூடாது. வேகமாக மறைந்து வருகிற மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன, இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது - கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என் பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங் களில் சேரத் தூண்டுகிறது. இந்த நிலைமை நீடிக்கு மானால் இந்துக்கள் இல்லாமல் போய் விடுவர். ராஜ பக்திக்கு எதிராக இருப்பினும் மத பக்தி கடைப் பிடிக்கப்படவேண்டும்.

ஒரு இந்து மற்ற ஒருவரைத் தீண்டாதவர் எனக் கருதுகையில், முகமதியர்களும் கிறித்தவர்களும் அவர்களது மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், அவர்கள் அம்மதத்தில் பிறந்திருந்தாலும் மாறியவராக இருந்தாலும் சமமாக கருதுகின்றனர்.

அரசாங்கம், சமாதானத்துக்காக அளித்த பல்வேறு யோசனைகளும் ஒப்புக்கொள்ளத் தக்கவை அல்ல. அதில் ஒன்று சாலைகள் கோயில் சொத்து என்பது. மகாராஜாவுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? முழு இராஜ்யமே ஸ்ரீ பத்மனாபனுக்குச் சொந்தமானது என்பதால் இராஜ்யமே கோயில் சொத்துதான். இது அவரது தாத்தாவின் சொத்தல்ல. முகமதியர்களையும், கிறித்தவர்களையும் அச்சாலைகளில் நுழைய விடாமல் தடுத்துவிட்டால், உங்களுக்குத் திருப்தியா என்று கேட்கிறது? இது ஒரு அரசரின் கட்டளை போல உள்ளது. அரசர் ஒருமுறை, பொருளை அளக்கும் ......... என்று ஆணையிட்டார். கீழ்ப்பகுதி, நேராக அளக்கும்போது பிடிக்கும் அளவைவிட குறைவாகப் பிடிக்கிறது என்று மக்கள் புகார் சொன்னார்கள். நிலைமையைச் சமாதானம் செய்த அரசர், படியைப் பக்கவாட்டில் அளக்கும்படி ஆணையிட்டார். இதனால் கீழ்ப்பகுதியைக் கொண்டு அளக்கும் போது கிடைத்ததும் இழக்கப்பட்டது, வைக்கத்தில் அளிக்கப்படும் சமாதானத்தை இதற்கு ஒப்பிடமுடியும்.

நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல் கிறீர்கள் என்றால் மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. சாப்பிடும் மற்றவர் உணவைப் பறித்து விடுகிறோம் என்கிறது."

(நூலின் பக்கம் 380-381)

(தொடரும்)

- விடுதலை நாளேடு 25 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக