பக்கங்கள்

வெள்ளி, 4 ஜனவரி, 2019

சிங்கப்பூர் அரசின் சிறந்த முன்னோடித் திட்டம்!



சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் நாட்டின் அரசு - மக்கள் நலம் பேணும் சிறப்புக்குரிய ஆட்சியைப் பெற்றுள்ள நாடாகும்.

"கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்" (Controlled Democracy) என்பதும்கூட வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!

பொதுவாக ஆட்சிகள் என்பவை 17,18ஆம் நூற் றாண்டுகளில் வெறும் (Police State) சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதுதான் முக்கிய வேலை என்பதாக இருந்தவை.

ஆனால் 19ஆம் நூற்றாண்டு இறுதி - 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தக் கருத்து, மாற்றத்திற் குள்ளாகியது;  மக்கள் நலம் பேணுவது (Welfare State) அரசின் கடமைகளாக மாறி விட்டன.

இப்போது கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் - இத்தகைய வாக்குறுதியின் தொகுப்புகளாக வெளி வருகின்றன.

லீக்வான்யூ (Leekuan yew) நவீன சிங்கப்பூரின் தந்தை. அவரது மக்கள் செயல் கட்சி (People's Action Party) தான் தொடர்ந்துவெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகின்றது. பலம் பொருந்திய எதிர்க்கட்சிகள் இல்லை - சில தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் இருந்த போதிலும்கூட!

மக்கள் தேவை - மனோபாவம் - அறிந்து தூய்மைக்கு முன்னுரிமை தந்து - கையூட்டு (லஞ்சம்), ஊழல் அற்ற ஆட்சியாக சிங்கப்பூர் அரசு தொடர்கிறது.

அமைச்சர்கள் அதிக சம்பளம் பெறும் அரசியல் விற்பன்னர்கள். வெளியில் "கை நீட்ட வேண்டிய அவசி யமில்லாத" வகையில் அதிக ஊதியம் அவர்களுக்கு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உபரி கண்ட தொகையிலிருந்து குடி மக்களுக்கு 28 ஆயிரம் டாலர் வரை ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 300 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்குள் ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 200 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்கும் மேல் ஆண்டு வருமானத்துடன் 2 அல்லது கூடுதலாக சொத்துள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 100 டாலரும் அளிக்கப்பட்டுள்ளது. வியப்பிலும் வியப்பு இது!

சுற்றுச்சூழல், புதுப்புது மக்கள் நலத் திட்டங்கள் குடியிருப்பு வசதிகள் குடி மக்களுக்கு, இத்தியாதி... இத்தியாதி...

மாணவ - மாணவிகள் எடையை அங்கே அவ்வப்போது பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்; பெற்றோர்களுக்குத் தகவல் (Optimum)  எவ்வளவு சீரான எடை என்பதை  அறிவித்து அதற்குரிய  ஏற்ற இறக்கம் உட்பட கண் காணிக்கப்பட்டு வரும் நல்ல முறை!

அண்மையில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட Fitness - Fitbiz  உடல் சீராய்வு பற்றி நாம் கையில் கட்டிக் கொண்டிருக்கும் கடிகாரம் நாம் ஒவ்வொரு நாளும் எத்தனை அடிகள் நடந்தோம்; நமது இதயத் துடிப்புப் பதிவுகள் இப்படி பல அம்சங்களை நமது செல் போன்களிலே, அய்.பேட் (I-Pad) இணைத்து அதுவே - நவீன மின்னணுவியல் கடிகாரம் நமது இரத்த அழுத்தம் குறைந்தாலோ, அதிகம் கூடினாலோ எச்சரிக்கை மணி அடிப்பதுபோல டாக்டருக்கு தகவல் போய்ச் சேரும் அளவுக்கு அதுவே செய்கிறது.

ஆப்பிள் கைகடிகாரம் ஈ.சி.ஜி. (ECG) படம் உட்பட எடுத்து டாக்டர்களுக்கு அனுப்பிவிடுகிறது. அவரது கவனத்திற்குச் சென்று விடும். இதுபோல வேறு சில கம்பெனிகளும் செய்துள்ளன.

ஆச்சரியமாக இல்லையா? மிச்சியோ காக்கு (Michio kaku) என்ற (அமெரிக்க - ஜப்பானியர்) அறிவியல் பேராசிரியர்  தான் எழுதிய ஒரு நூலில்  Chip-அய்த் தாங்கள் அணியும் 'டை'யிலோ, அல்லது காலில் உள்ள (Shoes) 'ஷூ'விலோ இணைத்து விட்டால் டாக்டருக்கு நபர்களின் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் குறைந்தால் கூட தெரிவித்துவிடும். அவரது டாக்டருக்கு அதை இணைத்து விட்டால் என்று கூறினார். அது நடைமுறை சாத்தியமாக கையில் கட்டும் கைக் கடிகாரத்திலேயே பொருத்தப்பட்டு தனி நபர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டு நடந்தால் - எல்லாம் பதிவாகி, உடல் நலம் பற்றிய முக்கியத் தகவல்களைப் பதிவு செய்து விடும். இப்போது சிங்கப்பூர் அரசு தனது குடிமக்கள்  "தொங்கு சதை", "அமர்வு நாற்காலி - உருளைக்கிழங்கு" போல இருக்கிறார்கள் பலர் என்பதால் - நடைபயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு வாழ ஒவ்வொரு பகுதியில் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம், எடை நிதானம் பற்றிய தகவல்களை பதிவு செய்ய கைகடிகாரம் இலவசமாக குடிமக்களுக்கு அனுப்பி  அவர்களை உற்சாகப் படுத்துகிறது.

சரியான உடல் எடை, நடை பேணுவோரில் சிறந்தவருக்கு இலவசப் பொருள்களை NTUC என்ற தொழிற்சங்கம் நடத்தும் பண்ட விற்பனைச் சாலையில் பெற்றுக் கொள்ள வவுச்சர்களை (Coupons) யும் தந்து ஊக்கப்படுத்துகிறது!

மருத்துவமனைகளில் நோயாளிகள் குறையவும், மக்கள் ஆயுள் நீளவும் நல்ல ஊக்கப்படுத்தும் அருமையான ஏற்பாடு அல்லவா இது!

இங்குள்ள அரசுகள் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தரக் கூட வேண்டாம்; 'HIV' இரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றிடாத அளவுக்குக் கவனமாக இருந்தாலேகூட போதும்; என்னே கொடுமை! எவ்வளவு அலட்சியம்! வேதனையோ வேதனை இது!

'சிங்கப்பூர் சிறிய நாடு' என்ற சமாதானம் எடுபடாது. ஆரோக்கிய வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மையை - ஏட்டளவில் பாராட்டி நாட்டளவில் செயல்படுத்து வோமாக.

நாட்டு மக்களின் விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் அடிப்படையானவை என்பதும் முக்கியம் தானே!

- விடுதலை நாளேடு, 4.1.19

செவ்வாய், 1 ஜனவரி, 2019

புதுமைக்கும் மறுபக்கம் உண்டே!



இன்று ஆங்கிலப் புத்தாண்டு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், ஓர் கால அளவையின் வெளிப்பாடு!

உலக முழுவதிலும் ஒருவருக் கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டு, வாழ்த்துகளை தெரிவிப்பது வழமை. இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு பலர் புதிய முடிவுகளை, உறுதிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திட முயல்வது; சிலர் பாதியிலேயே முடிவு களைக் கைவிட்டு 'பழைய கருப்ப னாகவே வழமை போல் மறுபடியும் தொடருவது.  இப்படி நடைபெறுவதும் நடைமுறையில் நாம் காணும் காட்சி தானே!

அதிவேக அறிவியல் வளர்ச்சி அதன் தவிர்க்க இயலாத பக்க விளைவுகள் எல்லாம் நமக்கு மகிழ்ச்சியையும் அதேபோல துன்பத் தையும், தொல்லையையும், துயரத்தையும் கூட தரத்தான் செய்கிறது!

எடுத்துக்காட்டாக, கைத்தொலைபேசி (Cell Phone) இருந்தால் பெரிய பாதுகாப்பு - பல ஆபத்துக்களிலிருந்து மீள, உடனே தகவல் கொடுக்க, அல்லது தகவல்களைத் தோண்டி உண்மைகளைக் கண்டறிந்து பல குற்றங்களைக்கூட துப்புத் துலக்க மிகவும் பயன்படுகிறது என்ப தெல்லாம் நன்மைகள் பக்கம்.

ஆனால் அதே கைத்தொலைபேசி நமது மனித உறவுகளின் மாண்பைக் குலைத்து பல நேரங்களில் குடும்பத்தவர்களைக்கூட தனித் தனியே பிரித்து ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு, பாசம், ஒன்றுபட்டு கலந்துரையாடல், கூடிக் குலவி பேசி மகிழ்ந்திடும் வாய்ப்பைக் காணாமற் போகும்படிச் செய்து விட்டதே!

'செல்ஃபி' (Selfie) எடுக்கிறோம் என்று தொல்லை நம்மை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது. அன்பு 'அம்பாகி' மாறி குத்தித் தொலைக்கிறது!

அந்த (செல்போன்) கைத்தொலைபேசி பெண்கள் பாதுகாப்புக்குரிய நல்லாயுதமாகப் பயன்படும் என்று கருதி, நடைப்பயிற்சிக்கு எடுத்துப் போகும் போது, அதனைப் பறிப்பதற் கென்றே இரு சக்கர வாகனங்களில் வருவது, பறித்துக் கொண்டு பறப்பது, பற்பல நேரங்களில் உயிரைக் காப்பதே பெரிய முயற்சியாக மாறி விடுவதும் நடைபெறுகிறதே!

தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதில், துப்பாக்கியால் சுடும்போது ஓசையே கேட்காமல் சுட்டுக் கொன்று விட்டு, கொலைகாரர்கள் தப்பிச் செல்ல அதிக வாய்ப்பு ஏற்படுகிறதே!

இந்திய மனிதச் சராசரி ஆயுள்  இரு நூற்றாண்டுக்கு முன் 10,12 ஆக இருந்தது. இப் பொழுது 70ஆக உயர்ந்துள்ளது!

மனிதனின் ஆயுளைப் பல மடங்கு பெருக்கி யிருக்கும். மருத்துவ வளர்ச்சி ஓர்புறம் என்றாலும், மரண அடையாளத்தை எளிதில் புலனாய்வுத் துறையினரே  கண்டுபிடிக்கப்பட முடியாத, மெல்லக் கொல்லும் நஞ்சு(Slow Poisoning drug) மருந்தினை ஊசி மூலம் செலுத்தினால் அது நம் உடல் உறுப்புக்களை கொஞ்சம் கொஞ்சமாகி அழித்து, மரணத்தை உடனே மற்ற விஷம் போல ஏற்படுத்தாது. 3 அல்லது 6 மாதங்களை கழித்து ஏற்படுத்துமாம்! ஈரல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் போன்றவைகளைப் பாழாக்கி, பணி செய்யாமல் ஆக்கி சாவை வரவழைக்குமாம்! கேட்கவே அச்சமாக இல்லையா?

எனவேதான் பகுத்தறிவுள்ள மனி தர்கள் - அறிவியலைக்கூட ஆக்கத் திற்கே செலவழிக்க முயல வேண்டும். மனித குல அழிவிற்கு அழைப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது என்றுதான் உழைக்க வேண்டும்.

மனித குலம் வளர   பயன்படவேண்டிய புதுமை, புத்தாக்கம் அழிவிற்கு அச்சார மாகி விடலாமா?

எதற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு அல்லவா?

எச்சரிக்கையுடன் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவோமாக!

எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) வராமல் - மனதில் அவைகட்கு இடம் தராமல் - அவற்றை விரட்டி அடித்து, ஆக்கபூர்வ, எதையும் நல் நம்பிக்கையுடன் எதிர் நோக்கி செயல்படும் ஆக்க பூர்வ சிந்தனைகளையே  (Positive Thoughts)  இவ்வாண்டு வளர்த்துக் கொள்ள முடிந்த அளவு முயலுவேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

நன்றி காட்டுதலை தலையாய பண்பாக, பழக்கமாக கொள்ளுங்கள். அந்த உறுதி ஆண்டு முழுவதும்கூட அல்ல வாழ்நாள் முழுதும்கூட

'பழி வாங்கும் உணர்வுக்கு' இடமே தராதீர்!

'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என்பதை எண்ணினால் அது நம் சிந்தனை - செயலாக்கத்தின் விளைவு என்பது ஆழ்ந்து சிந்தித்தால் எளிதில் புரியும்.

- விடுதலை நாளேடு, 1.1.19