பக்கங்கள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

அன்பிற்கும்கூட வேண்டும் அடைக்கும் கதவு!


‘அன்பிற்கும், உண்டோ அடைக் கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். வற்றாதது அன்பு என்பதை வலியுறுத் தவே அவ்வாறு ஆழமாகச் சொல்லி யிருக்கிறார் - வள்ளுவர் என்ற அரிய நம் சிந்தனையாளர். உண்மைதான்.
ஆனால், அந்த ‘அன்பே’கூட பற்பல நேரங்கள் வெளியில் கூற முடியாத - அன்பால் ஏற்படும் அவதி யாகக்கூட மாறி விடுகிறதே - நமது அன்றாட வாழ்க்கையில். இல்லையா?
நமது நண்பர்கள் - அன்பர்கள் பலர் நம்மீதுள்ள அன்பால் நம்மை சில சின்னச்சின்ன நெருக்கடிக்கும்கூட ஆளாக்கும்போது, ‘அய்யய்யோ இந்த அன்புக்கு சற்று நேரக் கதவடைப்பு செய்யக் கூடாதா?’ என்றுகூட தோன்றவே செய்கிறது!
வேகமாகச் சுழலும் அன்றாட வாழ்க்கையில், காலைப் பொழுதில் கடமையாற்றி நாம் அவசர அவசர மாக, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நமது நலம் விசாரிக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து, வந்தவர்கள் நிதானமாகப் பேசிக்  கொண்டிருக்கும்போது, நமது மனநிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இறுக்கத்தை அடைகிறது. அலுவலகப் பணிக்கு நேரமாகிக் கொண்டுள்ளது; வீட்டில் உள்ளோர் குடும்பக் கடமைகளில் அவசர அவசரமாக, பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புதல், மற்றவர்களுக்கு உணவுப் பரிமாற்றம் - இப்படி எத் தனையோ அவசரப் பணிகள்!
நலம் விசாரிக்க வந்தவர்களிடம் நாம் நம்முடைய அவசரத்தின் காரணமாக, நிதானமாகப் பேச முடியாதவாறு நிற்க வைத்தேகூட சில நேரங்களில் அவர் களிடம் பேசி, வேகமாக, அவர்களை அனுப்ப முயற்சித்தால், பற்பல நேரங்களில் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது!
நல்ல நட்புறவில்கூட ‘கீறல்’ விழுகிறது. நாம் வெளியே கிளம்பிக் கொண்டே இருப்போம்; அப்போது எங்கே போகி றோம் என்பதைக்கூட பகிரங்கப்படுத்த முடியாத நிலையும்கூட இருக்கும்; அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்ன நாம் அவரை வீடு தேடி ‘மெனக்கெட்டு’ போயிருக்கிறோம்; இந்த மனுஷன் நம்மை அலட்சியப்படுத்திவிட்டு இப்படி வெளியே கிளம்புகிறாரே என்று நம்மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்க முற்படுவார்களே தவிர, தவறு தங்கள்மீது உள்ளதே! நாம் என்ன அவரிடம் முன் கூட்டியே சொல்லியா வந்துள்ளோம்? தவறு நம்மீதுதானே என்று யோசிப்பதே கிடையாது!
ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான்!
எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களது வசதியை யும் அறிந்து சந்திப்பதே சாலச் சிறந்தது! இரண்டு சாராரையும் சங்கட நெருக்கடியி லிருந்து காப்பாற்றக் கூடியதும் ஆகும்!
அதுபோல உணவு பரிமாறிடும் போதுகூட அளவற்ற அதிக அன்பால் உணவு வகைகளைத் திணித்து அன்பால் கொல்ல முயற்சிக்கக் கூடாது.
சில பேருக்கு வெளியில் சொல்ல இயலாத உடல் உபாதைகளும் இருக்கலாம். அளவான உணவு எடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கு அறி வுரையும்கூட கூறியிருக்கலாம்; அதனால் அவர்கள் ‘மீதூண் விரும் பாத’வர்களாக இருப்பார்கள். அவர் களை நாம் அதிக உபசாரத்தினால் திணற அடிக்கிறோம் சிற்சில நேரங் களில்
அப்போதெல்லாம் நம் மனம் கூறுவது இதுதான்; அன்பிற்கும் வேண்டும் அடைக்கும் கதவு - பற்பல நேரங்களில்.
அது மனித உறவுகளை சீராக வைத்திருக்க சிறப்பான உதவியாக அமையக் கூடும் - சரிதானே?
- கி.வீரமணி
-விடுதலை,26.12.15

சனி, 13 பிப்ரவரி, 2016

எதற்கும் எல்லைக் கோடு தேவை!


எவ்வளவு நல்லவைகளானாலும், எத்துணை விரும்பத்தக்கவைகளானா லும், எவ்வளவு சிறப்புடன் கூடிய வைகள் என்ற பெருமைக்குரியவைகள் ஆனாலும் அளவுடன் - ஒரு குறிப் பிட்ட எல்லைக்குள் இருந்தால்தான் அவை முழுப் பயன் தருவதாக அமையும்.
சுதந்திரம் வேண்டுமென்று விரும்பு கிறோம். நியாயந்தான், தேவைதான். ஆனால் அச்சுதந்திரம் ஓர் எல்லை யுடன் இருந்தால்தானே, மக்களுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும்  சரி அது பயன்படும்?
வறட்சி பற்றி வருத்தப்பட்டோம் சில வாரங்களுக்குமுன்.
மழை வராதா என்று ஏங்கினோம்! இன்று தமிழ்நாட்டில் பல மாவட் டங்கள், சென்னை துவங்கி குமரி வரை, மழை பெய்து பயிர்களையும், உயிர் களையும் நாசப்படுத்தும் கொடுமை கண்டு குமுறாத நெஞ்சங்களே இல்லை. காரணம்  என்ன? பல மடங்கு அதிகமான மழை - அதன் காரணமாக வெள்ளக்காடு - அதனால் ஏற்பட்ட சொல்லொணா இழப்பும் துயரமும், துன்பமும் - விளைவுகள்!
அளவோடு பெய்திருந்தால் வளமோடு பயிர்கள் செழிக்குமே. இது, ஓர் உதாரணத் திற்காகத்தான்! சாலைகளில் கார் ஓட்டும் நாம், எவ்வளவுதான் சாலைவரி கட்டினாலும், கார் புதிய கார் என்றாலும், சாலை சிமெண்ட் சாலை என்றாலும், அதி வேகமாக எல்லா இடங்களிலும் கார் ஓட்டும் சுதந்திரத்தை, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாமல் பயன்படுத்த முடியுமா?
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிற்சில நேரங்களில் அவதிப்படுவோர், நோய் வந்தவுடன் அந்நோய் பற்றி அரைகுறை அறிவுடன் இனிமேல் நமக்கு வாழ்வே இல்லை என்று அச்சத்தின் உச்சிக்குச் சென்று, அதீதக் கற்பனையை, தம் இஷ்டம்போல் - எல்லையின்றி செலுத் தினால் அதுவே இறப்பில்கூட பல நோயாளிகளைக் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடுமே - இல்லையா?
அண்டை நாடுகளுக்கு இடையே போர் மேகம் குவிவதற்கு ஒருகாரணம் எல்லை தாண்டுவதுதானே!
எதற்கும் எல்லை வேண்டும் - கட்டுப்பாடுகள் தேவை.
காட்டாற்று வெள்ளத்தால் யாருக்கு, ஊருக்கு என்ன பயன்?
அதையே அணைக்கட்டித் தேக்கி, வெள்ளத்தடுப்பு காரணமாக (தடுப்பணை) பயனுறு வகையில் செய்தால் பொது நலம் - குடி மக்கள் வாழ்வு வசதிகள் பெருகுமே!
மனித வாழ்வில்கூட மனிதர்களுக்கு இயல்பாக உள்ள சுயநலம், ஓர் எல்லைக் குட்பட்டு இருந்தால் தனி மனிதர்கள்கூட நல்ல வகையில் ஒளி வீசும் பல நற்பணிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆக முடியும்!
ஆனால் 100-க்கு 90 பேர்கள் எல்லை யற்ற சுயநலத்துடன்தான் தங்கள் வாழ்வை மட்டுமே கணக்குப் போட்டு காய் நகர்த்தும் எப்போதும் எதையோ எதிர்பார்த்த வாழ்வாகவே ஆக்கிக் கொண்டு எல்லை தெரியாத தொல்லைக்கு ஆளாகித் திண்டாடுகிறார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் குடும்ப வாழ்வின் சங்கிலித் தொடர் விலங்கு களை நாமே எப்படி மாட்டிக் கொள் ளுகிறோம் என்பதை நன்கு விளக்குவார்.
முதலில் திருமணம் - பிறகு பிள்ளை குட்டிபெறல், அதை வளர்க் கக் கவலை - அதற்கு படிப்பு, வேலை கவலை, (சுயநலத்தின் வெளிப் பாடுகள்) அதன்பின் அவர்களுக்குத் திருமணம் - குழந்தைப் பேறு என்று எல்லையற்ற தீய வட்டம் சுழன்று கொண்டே உள்ளதால் மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையும், சுயமரியாதை யையும் இழந்து மாறி மாறி ஒரு சுழற்சி - சைக்கிள்போல நடப்பதால் அதில் சிக்கிச் சீரழிகிறார்கள்.
பறவைகளை ஒப்பிடுகையில் தாய்ப் பறவைகள் குஞ்சுகள் இறக்கை முளைக்கும் வரைதானே காப்பாற்று கின்றன. பிறகு அதற்காக சிபாரிசுக்காக  செல்லுகின்றனவா? ஆனால் மனிதர் கள்  அப்படியா? யோசியுங்கள்.
- கி.வீரமணி
-விடுதலை,14.12.15

அலை அலையாய் மனிதநேய உதவிகள் - ஒரு சிறு நிகழ்வு



அமெரிக்காவிலிருந்து திருமதி அருள் - பாலு அவர்கள் அனுப்பிய ஒரு நெகிழ்வான நிகழ்வு, இணையத் தில் கிடைத்தது! படித்ததைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மனிதநேயம் உலகெங்கும் பீறிட்டுக் கிளம்ப வேண்டிய நேரத்தில் தானே கிளம்பவே செய்கிறது! உதவிகள் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் - குளத்தில் வீசிய கற்களால் அலை அலைகள் வருவதுபோல!
கடும் மழை, தொடர் வெள்ளம் - தேக்கம் - அவதி  - காரணமாக இன்னமும் துயர் நீங்கும் படலத்தை எட்ட முடியாத நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவிகள் - பல வகையிலும் பலவிடங்களிலிருந்து குவியவே செய்கின்றன. அதுபோல அமெரிக்காவில் நிகழ்ந்த ஒன்று, கருணை பொங்கும் மனிதநேய மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு பெண்மணி ATM-க்குச் சென்று பணம் எடுக்க தனது கார்டை இயந்திரத்திற்குள் நுழைக்கும்போது, அங்கே 500 டாலர் நோட்டுகள் அப்படியே இருப்பதைக் கண்ணுற்று அதை எடுத்துக் கொண்டு அந்த வங்கிக்குச் சென்று பொறுப்பாளர் ஆகிய வங்கி மேலாளரிடம் கூறி, 500 டாலரைத் திருப்பிக் கொடுத்தார். இது யாருடைய பணம் என்பதைக் கண்டறியுங்கள்; நான் இதை எடுத்துக் கொள்ளாமல் உரியவர்களிடம் நீங்கள் சேர்ப்பதற்கு உதவிட வேண்டு கிறேன் என்று கூறினார்!
அந்த நிர்வாகி அவரது எண்ணையும், பெயரையும் குறித்துக் கொண்டு அனுப்பி விட்டார். திடீரென்று அந்த வங்கியிலி ருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது; மூன்று பேர்கள் பேசும் இணைப்பாக அது அமைந்தது!
அந்த 500 டாலருக்கு யார் உரிமையாளரோ அவரும் பேசினார். எடித் என்பது அவரது பெயர் என்றும், அவ ருக்கு 92 வயது என்றும், அந்த 500 டாலரை அவரது வீட்டு வாடகை தருவ தற்கு 480 டாலர் எடுத்துக் கொண்டு, எஞ்சியுள்ள 20 டாலரை, இதைத் திருப்பிக் கொடுத்த பெண்மணிக்கே ஒரு பரிசு போல தருவதாகவும் கூறினார் அந்த வயதான மூதாட்டி!
உடனே இவர் அதை மறுத்து, அவரது உணர்வுக்கு நன்றி தெரிவித்து விட்டார்; அதுபற்றியே நினைத்துக் கொண்டு வந்தவர் வங்கிமேலாளரிடம் கூறினார். அந்த 92 வயது மூதாட்டிக்கு அந்த மிச்சமுள்ள 20 டாலர்தான் எஞ்சிய மாத வீட்டுச் செலவுக்கு என்று அறிந்த நிலையில், தனது கணக்கிலிருந்து 200 டாலரைப் போட்டு அவருக்கு உதவிட எண்ணுவதாக அறிவித்தார்!!
இதைக் கேட்டு அந்த மேலாளர் அந்த மூதாட்டி கணக்கில் தானும் ஒரு 100 டால ரையும் போடுவதாகக் கூறி மகிழ்ந்தார்!
அதன் பின் அந்தவங்கி மேலாளரிட மிருந்து இவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு இந்த நன்கொடை 200 அளிக்கச் சொன்ன அம்மையாருக்கு வந்தது. அதை அங்கிருந்தவர்களிடம் கூறி மகிழ்ந்தாக குறிப்பிட்டார். அவர்கள் எல்லாம் தங்கள் பங் களிப்புக்காக மேலும் 300 டாலருக்குமேல் அளித்தனர்!!!
ஒருவர் செய்த உதவி அந்த 92 வயது மூதாட்டிக்கு தொடர் அலைமேல் அலையாக மிஞ்சிய 20 டாலரில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் (திண்டாடும்) நிலை மாறி, உண்மை யாக அவருக்கு இந்த மனிதநேய அலைஅலைபோல் பாய்ந்த காரணத் தால் கிறிஸ்துமஸ் Merry Christmas  மகிழ்ச்சி நிறைந்த விழாவாக ஆகி விட்டது என்று அந்த இணையச் செய்தி கூறியது!
வாடிய மனிதர்கள் - மகிழும் வண்ணம் உதவிட, நிச்சயம் தீவிர வாதம், கொலைகள் நடுவேயும், இதயத்தால் சிறந்து அன்பால், பண்பால் மனிதத்தை வெளிப்படுத்தும் உண்மை மனிதர்களுக்கு உலகத்தில் பஞ்சமே இல்லை என்பதும் உண்மை தானே!

நம் அக எதிரிகளிடம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!



நம்முடைய புற எதிரிகளைப் பற்றியே நம்மில் பலர் கண்காணிப் புடனும், கவலையுடனும் இருக்கி றோமே தவிர, நம்முள்ளிருந்து கிளம்பிப் போரிடும், நம்மைக் கெடுத் துப் பாழாக்கும் அக எதிரிகளைப் பற்றி எத்துணைப் பேர்  ஆழ்ந்து சிந்திக்கின்றோம், சீர்பெற முயலுகி றோம் என்பது கேள்விக்குறியாகும்.
திடீரென்று வெடித்துக் கிளம்ப ஆயத்தமாகும் ஓர் அகத்திலுள்ள மிகப் பெரிய எதிரி கோபம் - ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ ஆகும்!
கோபம் அதிகமாக வந்தால் அது உள்ளத்திற்கும், நமது புற வாழ்வுக்கான புகழுக்கும் மட்டுமா கெடுதி செய் கிறது?
நம் உடலையும் - உடல் நலத்தை யும் வெகுவாகப் பாதிக்கிறதல்லவா?
ரத்தக் கொதிப்பு, இதயத் துடிப்பு மிக வேகமாகி மாரடைப்பை நோக்கிப் பயண ஆயத்தம் போன்ற பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக அல்லவா இந்த பொல்லாத கோபம் அமைந்து விடுகிறது!
‘கோபம் இருக்கும் இடம் குணம் இருக்கும்’ என்பதெல்லாம் ஏதோ சமாதானமாக இருக்கலாமே தவிர, உண்மையில் நம் உடல் நலத்தையோ, உள்ள நலத்தையோ பாதுகாக்க அது ஒருபோதும் உதவவே உதவாது என்பது அனைவரும் நன்கறிந்த உண்மை!
அந்தக் கண நேரக் கோபம் பலரைக் கொலைகாரர்களாக்கிய கொடுமையை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
சிறையில் கைதிகளாக  உள்ள குறிப்பாக - தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனைக் கைதிகள் - இவர்களிடத்தில் சற்றுப் பேசிப் பாருங்கள். அவர் என்ன குற்றம் செய்ததற்காக சிறையில் இத் தண்டனையில் வதிகிறார் என்று அறிந்தால் மேலே கூறிய கூற்று சரியென விளங்கக் கூடும் உங்களுக்கு!
கோப ஆராய்ச்சியைவிட, கோபம் பீறிட்டுக் கிளம்பினால் அதைத் தடுத்து, நிறுத்தி, அதனிடம் நாம் தோற்றுப் போகாமல், அது நம்மிடம் தோற்றோடும் வழி வகை அறிந்து கொள்ள வேண்டாமா?
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை   (குறள் - 310)
அளவு கடந்த சினத்தைக் கொண்டவர், உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண் மையில் செத்துப் போனவரைப் போன்றே கருதப்படுவார் என்கிறார் வள்ளுவர்.
சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தார்க்கு ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர் -  என்பதே இதன் பொரு ளாகும்.
அளவு கடந்த சினங் கொண்டவரை வள்ளுவர் செத்தாருள் - வைத்துக் காட்டுகிறார்! மனித உருவில் நடமாடி னாலும் உண்மையில் பிணத்தை நாம் உடனே புதைக்க, எரிக்க முயலுகிறோமே தவிர, எவ்வளவு பெரிய மனிதராகிலும் அவர்கள் பிணமாகி விட்டால் அவர்கள் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டிய வர்தான் என்பதைத்தான் இப்படி  ‘இறந்தார் இறந்தார் அனையர்’ என்பதன் உண்மைப் பொருளாக ‘பளிச்’ சென்று நமக்கு மின்னுகிறது!
இதனைப் போக்க பற்பல நூல்கள், பலவித ‘சிகிச்சைகளை’  தடுப்பு முறை களை, தப்பும் விதங்களைக் கூறவே செய்கின்றன!
அண்மையில் படித்த ஒரு நூலில் உள்ள கருத்து. இதை நான் மட்டும் அறிந்தால் போதுமா? எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பதால் அக்கருத் துக்களை உங்களுடன் பரிமாறிக் கொள்ள எண்ணுகிறேன், வாழ்வியல் வாசக நேயர்களே!
கோபப்படுதல் என்பது யாருக்கும் எளிது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, அதற்கு பலியாகி விடாமல் அதிலிருந்து வெளியே வருதல் எப்படி என்பதை அறிந்தவர்களே மிகவும் சரியான வாழும் மனிதர்கள் ஆவார்கள்!
இதற்கு மூன்று கதவு அடைப்புகளைக் காட்டுகிறார் அந்நூலாசிரியர்!
கோபத்தைக் கட்டுப்படுத்த  பதில் சொல்லுமுன் - (எதிர்வினையாக) - ஒன்று, இரண்டு, மூன்று என்று மனதிற்குள் 100 எண்ணுங்கள் - அதன்பின் அது தானே குறையும் பதிலுக்குப் பதில் - அல்லது அதற்கு மேலாக நாம் இணைந்து சொல்ல வேண்டிய நிலையை அதுவே பெரிதும் தடுத்து விடும்.
மூன்று கதவுகளில் முதல் கதவு பதில் சொல்லுமுன் - கோபப்படுமுன் - மூன்று வகைக் கேள்விகளை உங்களுக்குள் ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்.
(1) இவை உண்மையானதுதானா?
(2) இவை தேவைதானா?
(3) இவை இதமான சொற்களா?
என்று மூன்று கதவுகள் திறப்பின் மூலம் விடை காண முயலுங்கள். எதிரி நம்மைக் கோபப்படுத்த முயன்றாலும் அதை நாம்  பொறுமை காட்டி, உடனே பதிலடி தர வேண்டும் என்று கருதாம லிருந்தால் நாம் வெற்றி பெற்று விட்டோம்; எதிரி தோற்று விட்டார் என்று பொருள் - இல்லையா?
(ராபின் சர்மா எழுதிய நூல்  ‘நீ இறந்தால் உனக்காக அழுவது யார்?’)
வாழ்வின் சம்பவம் ஒன்று, புத்தர் பற்றி கூறப்படுவதுண்டு.
பிச்சை கேட்டுச் செல்லும்போது பிற மதத்தவன் போட மறுத்ததுடன், அவரை பல வசைமாறிப் பொழிந்த நிலையில், புத்தர் அமைதி இழக்காமல் புன்னகை பூத்த வண்ணம் நிர்மலமான முகத்துடன் இருந்து விட்டு, அய்யனே, நீவிர் கொடுக்கும் பிச்சையை நான் ஏற்க மறுத்து விட்டுச் சென்றால் அது யாரிடம் இருக்கும்? யாரைச் சார்ந்த தாகும்? தங்களுடன்தானே; அது போலத்தான் தங்களது வசை மொழி களும் என்று கூறிவிட்டுச் சென்ற போதுதான், இதை எண்ணிப் பார்த்து வசைமாரி பொழிந்தவன் வெட்கப் பட்டானாம்!
இதைவிட நல்ல நிகழ்வு - அது தத்துவ ரீதியாக வேறு தேவையில்லை!
எனவே கோபத்தைத் தவிர்ப்பீர்! 1925இல் தந்தை பெரியார் ஆரம்பித்த பச்சை அட்டை குடிஅரசு தலையங்கத் தின் மேலே.
அனைத்துயிர் ஒன்று என்று எண்ணி என்று துவங்கும் கவிதை வரிகளில்,
‘சினத்தையும், தவிர்ப்பாகில் செய் தவம் வேறு உண்டா?’ என்று சுட்டிக் காட்டினார் வைக்கம் வீரர் பெரியார்!