பக்கங்கள்

தலாய் லாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலாய் லாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 பிப்ரவரி, 2021

விலை மதிப்பற்ற புன்னகையுடன் கூடிய முகங்களைத் தேடுவோம்!


துன்பத்தைக்கூட வரவேற்கும் மனப்பக்குவம் நம் ஒவ்வொரு பகுத்தறிவாளருக்கும் வரவேண் டும். இன்பத்தை அனுபவிக்க சிறந்த வழி என்ன தெரியுமா? துன்பத்தைச் சுவைத்துப் பார்த்த அனுபவத்தின் மூலமே இன்பம் எவ்வளவு சுகமானது, தேவையானது என்பதை எவராலும் உணர முடியும். பசியிருந்தால்தானே உணவு மிகவும் சுவைக்கிறது. உணவின் தேவையும் அப் போது தானே தெரிகிறது! அதுபோல எதிர்ப்பு இருந்தால்தானே வெற்றியின் வீச்சும், விவே கத்தின் சிறப்பும் நமக்குக் கிட்டும் நேரத்தில் பொருளுடையதாகும்! - இல்லையா?

எனவேதான் நண்பர்களே, துன்பத்தைக் கண்டு துவளாதீர்கள்!

துயரத்தைக் கண்டு மனம் நொந்து போகா தீர்கள்!

தற்கொலைகள் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்காது என்பதை கோழை மனத்தவர்கட்கு குட்டிச் சொல்ல முயல வேண்டும்.

இன்றைய தோல்வி, நாளைய வெற்றி - அத்தோல்வியைக்கூட ஓர் அனுபவமாக மட்டுமே பாருங்கள்!

வாழும் மனிதர்கள் தங்கள் வயிற்றுக்குச் சோறிடும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி - மன நிறைவைவிட, பசி என்று வந்தவர்கட்குப் பகிர்ந் தளித்து அவரது பசி தீர்ந்தபோது நன்றி கூறி னாலும், கூறாவிட்டாலும் அவர் முகமலர்ச்சி யைக் கண்டு நமக்கு ஏற்படும் அகமலர்ச்சிக்கு அளவுதான் ஏது நண்பர்களே!

எதிரிகளைக் கண்டு வெறுப்பதைவிட, உள்ளத்தால், நம் நடத்தையால் அவர்களையும் வெல்லும் வகையில் நமது அன்பு, கருணை உள்ளம் அமைதல் வேண்டும்.

அது எளிதானதா? என்று தானே கேட்கத் தோன்றுகிறது!

இதோ பவுத்த அறிஞர் தலாய்லாமா கூறு கிறார்... “உங்கள் துன்பங்களை - இடர்களை - தொல்லைகளை - வலிகளை - இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள் முதலில்.

ஒன்று உள்ளத்தைப் பொறுத்தது (Mental) மற்றொன்று உடலைப் பொறுத்தது (Physical). இதில் உள்ளம்தான் அதிகமான அளவு நம்மைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும்!

 “நலமான உள்ளம் நலமான உடலில்” (A sound mind in a sound body) என்பது இலக் கானாலும் கூட உடலின் பங்கு இரண்டாவதே!

மனம் - உள்ளம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பதிவு செய்கிறது - அது எவ்வளவு சாதாரண மானதாக இருப்பினும் கூட! எனவே மன அமைதி - உள்ளத்தூய்மை என்பதற்கே நாம் முழுக்கவனம் செலுத்திட வேண்டும். உள்ளம் தூய்மையுடனும், அமைதியுடனும் இருந்தால் உடற் பிரச்சினைகள், வலிகள் யாவும் இருக்காது; ஒருவேளை இருந்தால் பொருட்படுத்தும் அள வுக்கு இருக்கவே இருக்காது!”

உள்ளத்தூய்மை, அமைதி என்பவற்றை எப்படிப் பெறுவது? அவ்வளவு எளிதா என்று தானே உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது?

எளிதுதான் - ஆகாயத்தில் பறப்பதைப் பிடிப்பதை விட நம்முள் உள்ள அன்பு, கருணை, இரக்கம் இவற்றை வளர்த்தலே உள்ளத் தூய் மைக்கு - மனத்துக்கண் மாசிலானாகும் அனைத்து அறனைத்தரும் ஊற்றாக அமைந்துவிடும்! அதற்கு என்ன தயக்கம்? அன்பு, கருணையை புன்னகைமூலமும், நட்புறவு மூலமே எளிதில் பரப்பிட முடியுமே!

நாளும் எதிரிகளைச் சம்பாதிப்பதை விடுத்து உண்மையான நண்பர்களைத் தேடிப்பிடித்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க முயலுங்கள். அன்பு நதியினில், கருணை வெள்ளமாக ஓடு வதில் நீராடி நீராடி மகிழுங்கள்!

நட்புறவுகளைவிட நாம் சேர்க்கும் சிறந்த செல்வம் - நமக்கு ஒடோடி வந்து உதவிட மட்டு மல்ல - கருத்துப் பரிமாறிட, இடித்துரைத்து நல் வழிப்படுத்த, நேரிய பாதையில் இருந்து நம்மை நழுவ விடாமல் பாதுகாக்கும் நல்ல நட்புறவு வட்டம் நமக்குப் பெரும் பாதுகாப்பு அரண் அல்லவா?

தனித்து இருப்பவர்கள்தான் தவறுக்கு ஆளா கிறவர்கள். நண்பர்களிடையே இருக்கும்போது பாதை தவறுவது பெரும்பாலும் நடப்பதில் லையே! (தவறான நண்பர்களுடன் கூடினால் தவறான வழியில் இழுப்பார்கள். எனவே நண் பர்களைத் தேர்வு செய்வதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்).

புன்னகையுடன் கூடிய புதுமுகங்களாக நம் முகங்கள் அமையட்டும்; பொன்னகையாளர் களைத் தேடி அலுக்காதீர்கள்; புன்னகைப் பொங்கும் முகங்களைத் தேடுவீர்! நலம் நாடுவீர்!

மகிழ்ச்சியில் திளைப்போம், வாரீர்! வாரீர்!!

எதிரிகள் என்பவர்கள் நமக்குப் பாடம் எடுப்பவர்கள்


தன்னை வென்றால் தரணியை - இந்த உலகத்தையே நாம் வென்று விட்டோம் என்று மனநிறைவை அடைய முடியும்.

அது எளிதானதா என்று மலைக்காதீர்கள்! ஒவ்வொரு தடையையும் நாம் வாழ்வின் துன்பங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, வாழ்வில் இயற்கை நமக்கு எடுக்கும் பாடங்கள் என்று கருதி அவற்றை அணுக வேண்டும். பாடங்க ளைப் படித்துத்தானே, தேர்வெழுதி வெற்றி பெற முயலுகின்றோம். அதுபோல எளிதானது என்றே எதையும் பற்றி முயன்றால் முடியாததல்ல என்ற முனைப்போடும், தன்னம்பிக்கையோடும் அணுகுங்கள். வெற்றி வாய்ப்பு நிச்சயம்தான்!

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா‘ என்று தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றன் எத்தனை நூற் றாண்டுகளுக்கு முன் எளிய வரிகளில் விளக் கினார்; படித்தோமே தவிர கற்கவில்லையே! அதன்படி நிற்க முயற்சிக்கவில்லையே!

மிகப்பெரிய துன்ப நிகழ்ச்சியை முன்பு சொன்னது போல், ஒரு வாய்ப்பாகக் கொண்டு நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நமது உள்ளத் தின் நெஞ்சுரத்தைப் பெருக்கிக் கொண்டால் மகிழ்ச்சி நம்மை விட்டு ஒருபோதும் விலகாது!

அந்த மகிழ்ச்சி பிறருக்கு உதவுவதில்தான் முதலிடம் பெறவேண்டும், முன்னுரிமைக்கு உரியதாக அமைய வேண்டும்.

விபத்தில் அடிபட்டு சிக்குண்டவரை விரைவாக மீட்பதும், உடனடியாக தேவையான சிகிச்சையைத் தந்து காப்பாற்றுவதும்தானே முக்கியம்? அதை விட்டு, விபத்து எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? யாரால், ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சை என்றால் அது பயனும் தராது; அறி வார்ந்த அணுகு முறை - செயல்முறையுமாகாது.

பிரச்சினைக்குத் தீர்வு காணுவது முதலாவ தாகும். பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வது அப்புறம் இருக்கட்டும் என்பதே சரியான நடைமுறையாக நம் வாழ்வில் அமைய வேண்டும்!

கருணைக்கே முதலிடம்; கேள்விக்கல்ல; மறவாதீர்! உடனடியாக மூச்சுக் காற்றுப்போல் முன்னோட்ட செயல்களைச் செய்துவிட்டு பிறகு நிதானமாக யோசிக்க வேண்டியவற்றிற்கு இடம் தாருங்கள்.

நம்முடைய எதிரிகளை நல்ல ஆசான்களைப் போல் கருத வேண்டும் என்கிறார் தலாய்லாமா! வியப்பாக இருக்கிறதல்லவா?

பாடங்களை யார் கற்றுக் கொடுப்பார்கள், ஆசிரியர்கள் தானே! அதுபோல நமக்கு நம் எதிரிகள் கொடுக்கும் தொல்லைகளும், துன்பங் களும் ‘பாடங்களாகி' விட்டால் அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோமே தவிர, ஆத்திரப்பட மாட்டோம்.

எடுத்துக்காட்டாக ‘மிசா‘ என்ற சிறைவாசம் - சிறையில் கொடூரமாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் நாங்கள் "அர்ச்சிக்கப்பட்டு", பலமான தாக்குதல்களுக்கு ஆளாகிய அனுபவ பாடம் - எவ்வளவு செலவழித்தாலும் எளிதில் கிடைக்க முடியாத வாழ்க்கைப் பாடங்கள் - எங்களைப் பொறுத்தவரை - எப்படி என்கிறீர்களா?

அந்தத் துன்பத்தினை அனுபவித்து மீண்டு வந்ததால் இனி அவற்றைவிட பெரிய துன்ப இயல் நடப்புகள் எவை வந்தாலும் எதிர்கொள் வது எளிதாகப்பட்டு விட்டதல்லவா?

நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க வில்லை. கொடுமை குணாளன் ஆகிய அச்சிறை யின் தலைமை அதிகாரி "நீங்கள் இனி எளிதில் வெளியே செல்ல முடியாது, எத்தனை ஆண்டு களோ எங்களுக்கே தெரியாது?" என்று அச்சுறுத் திய வார்த்தைகளை, அனாயாசமாக எங்களிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சக சிறைவாசிகளான நம் தோழர்களிடம் "நாளை என்ன நடக்கும்?‘ என்று கணிக்கப்பட முடியாததுதான் அரசியல்; கவலையை விட்டு, கிடைத்த சிறை வாழ்க் கையை சிறப்பாக கழிப்பது எப்படி என்பதை யோசியுங்கள்" என்று ஆறுதல் மொழியை நம்பிக்கையுடன் கூறியபோது, மிரண்டவர்கள், சுருண்டவர்கள் எல்லாம் எழுந்தவர்கள் ஆனதை இப்போது நான் நினைத்துப் பார்த்து மகிழவே செய்கிறேன்.

தலாய்லாமா கூறுவது உண்மைதானே?

(அடுத்தும் ஆய்வு செய்வோம்)

நாம் வெல்ல வேண்டியது - பிறரை அல்ல; நம்மையே!


வாழ்க்கையின் சிறப்பு அம்சம் பொருள் சேர்ப்பதல்ல. பெரும் புகழ் சம்பாதித்து கீர்த்தியும், பெருமையும் அடையும் இலக்கு அல்ல.

பிறருக்கு - குறிப்பாக நாம் வாழும் சமூகத் திற்கு, நம்மை வாழ வைக்கும் இந்த உலகத்த வர்க்கு நாம் பல நூறு பணிகளை - உதவிகளை - தொண்டறம் செய்து, அன்பும், கருணையும், சமத்துவமும் பேணி, அனைவரும் உறவினர் என்று உணர்ந்து செயல்படும் பரந்த விரிந்த மனப்பான்மையை நாம் நமது முக்கிய பண்பாய்க் கொள்ள வேண்டும்.

கருணை காட்டுவதற்கும், அன்பைப் பொழி வதற்கும் எதிரிகள் மூட்டும் கோபத்தையும் (ஆத்திரமும்), வெறுப்பையும் பொருட்படுத்தாது, பொறுமை கொள்ள வேண்டும். இந்த இரண் டையும் தாண்டினால் மட்டுமே உண்மையான கருணை ஊற்றெடுக்கும் - வற்றாத அன்பு பாய்ந்து நம்மை வளப்படுத்தும்.

நம்மில் பலரும் நம் எதிரிகளைப் பற்றியே எண்ணி அவர்களை எதிர்ப்பதுடன் அழிப்பது, ஒழிப்பது என்பது எப்படி என்று சாதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே அதே வழியில் செயல்பட்டு வருவர்.

ஆனால் நம் எதிரிகளை வெளியே தேடு வதைவிட, நமக்குள்ளே தேட முயலுங்கள். மேற் சொன்ன ஆத்திரம் (வன்மம்), வெறுப்பு என்ற இரு பெரும் எதிரிகள் நம்முள் நண்பர்களைப் போல் புகுந்து இடம் பெற்று நிலைத்து நாளும் நம்மை அலைக்கழித்து வருகின்றனர்.

அதனால்தான் மனிதர்களாகிய நம்மில் பலருக்கு எளிதில் மன்னிக்கும் மனப்பான் மையோ, தவறை உணர்ந்து அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டு திருத்திக் கொள்ளுவதோ எளிதானதாக இல்லாத நிலை!

பவுத்தப் பேரறிஞர் தலாய்லாமா எளிமையாக விளக்குகிறார் மேற்சொன்ன முறையால்!

திபெத்திய பழமொழி ஒன்றை நமக்குச் சுட்டிக் காட்டி அறிவுறுத்துகிறார்!

"எந்தத் துன்ப நிகழ்ச்சியானாலும் (Tragedy) அதை நாம் ஓர் அருமையான பலம் தரும் வாய்ப்பு என்று கருதி (Source of Strength) எதிர்கொண்டு வாழ்க்கையின் பாடங்களாகக் கருதி கற்றுக் கொண்டு ஒழுக வேண்டும். பிறகு நிச்சயம் வெற்றி பெறலாம்.

எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்கவே கூடாது. அந்நிலைமையால் ஏற்படும் இக்கட்டை விட, நம்பிக்கையின்மையால் - அச்சத்தால், ஏற்படுவது தான் உண்மையான பெருங்கேடு (Disaster)" என்று அறிவுறுத்துகிறார்.

லட்சியவாதிகள் பல்வேறு எதிர்ப்புகளையும்,  அடக்கு முறைகளையும், சோதனைகளையும் வென்றெடுப்பதில் வெற்றி கொள்ளுகிறார்களே, அதன் ரகசியம் இதுதான்!

எந்த சூழலிலும் நம்பிக்கையை தளர்த் தாதீர்கள்,

நம்பிக்கையை இழக்காதீர்கள்!

இரவுகள் இரவுகளாகவே தொடர்ந்தாலும், பகலும், வெளிச்சமும், விடியலும் தொடரச் செய்யும். அந்த நபிக்கைதான் நாம் விடும் மூச்சுக்காற்று, மறவாதீர்கள்!

தனிவாழ்வானாலும்,

குடும்ப வாழ்வானாலும்

பொது வாழ்வானாலும்

எந்த நிலையிலும் நம்பிக்கையோடு நின்று எதனையும் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

எடுத்துக்காட்டாக, கரோனா தொற்று சில மாதங்கள் முன்பு வரை பெரும் உயிர்ப் பலி களும், மரணங்களும், மறக்க முடியாத இழப்பு களும் ஏற்படுத்தியது என்றாலும், புயல் ஓயத் தானே வேண்டும்? நோய் மாயத்தானே வேண் டும்? முதன்முதலாக புத்தர் சொன்னது போன்று, "மாற்றம் என்பதே மாறாத ஒன்று!" - அதை நாம் நினைவூட்டிக் கொண்டும், நம்பிக்கை விளக்கை ஏந்தி, "இருட்டை" - சோதனைகளைக் கடந்து நமது வாழ்க்கையை லட்சியப் பாதையாக ஆக்கிக் கொண்டு, பக்குவத்தால் பகைமையை விரட்டும் பண்பாட்டை வளர்த்துக் கொண்டால் நம்மை நாமே வென்று விட்டோம் என்றே ஆகும்!

"தம்மை வென்ற மனிதர்களே தரணியில் தன்னேரில்லாத தகைமையாளர்கள்" என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அனுபவம் என்ற ஆசான் நமக்கு நன்கு பாடம் எடுப்பவராவார்.

"தன்னை வெல்வான், தரணியை வெல் வான்!" என்பது அறிஞர் அண்ணாவின் அனுபவ உரை யாகும்!

(நாளையும் சிந்திப்போம்)