• Viduthalai
தமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கும், அதை இசை மேதைகள் அங்கீகரிப்பதற்குமே ஓர் நீண்ட, நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்த வரலாறு இன்றைய இளையர்களுக்குத் தெரியாத வரலாறு!
பிரபல பாடகர் வரிசையில் முன்னணியில் இருந்தும் இந்த உரிமைக்காகப் போராளியாக இசை மேடைகளில் நின்றவர் - வென்றவர் 'இசையரசு' எம்.எம். தண்டபாணி தேசிகர் அவர்கள் ஆவார்.
1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் பிறந்தவர் -ஓதுவார் குடும்பத்தில் நன்னிலம் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடியில் பிறந்தவர்.
பிறகு மதுரையை தமது இருப்பிடமாக ஆக் கியதோடு, முன்னொட்டில் எம்.எம். தண்டபாணி தேசிகர் என பெயரில் இடம் பிடித்தது!
சிறுவயதில் தமிழில் தேவாரம் பாடி பரவசம் அடைந்தவருக்கு 14 வயதில் திருமருகல் கோயிலில் அரங்கேற்றம் நடந்தது!
கணீர் கணீர் என்ற வெண்கல நாதக்குரல்; கனத்த, கருத்த சரீரம் மட்டுமல்ல; சாரீரமும் கனத்த குரல் - கம்பீரமாக ஒலிக்கும்
பக்திமிக்க இவரை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கல்வி வள்ளல் காமராசர் முதலிய பல தலைவர்களும், ஜெமினி எஸ்.எஸ்.வாசனும் மிகவும் நேசித்தனர் என்பது வியப்பானது அல்லவா?
திருவையாறில் ஆண்டுதோறும் நடைபெறும் "தியாகபிரம்ம உற்சவம்" என்ற தியாகய்யர் சமாதியில் பாட்டு பாடினால் தங்கள் தகுதி உயரும் என்று கருதி, பல பிரபல சங்கீத வித்துவான்கள், இசைப் புலமையாளர்கள் சென்று பாடுவார்கள் கூட்டம், கூட்டமாக. இது ஒரு சங்கீத சம்பிரதாய மேடை.
அங்கே, தமிழில் - தமிழ்நாட்டு திருவையாறு ஊரில் பாட முடியாத நிலை அப்போது (1945-46).
"இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் தமிழில் பாடி விட்டதால் மேடை தீட்டாகி விட்டது. நாங்கள் பாட மாட்டோம் அங்கே" என்று மகராஜபுரம் விசுவநாய்யர், முசிறி சுப்ரமணிய அய்யர், செம்மங்குடி சீனுவாச அய்யர் போன்ற வகையறாக்கள் போர்க்கொடி உயர்த்தி விட்டனர்; தமிழ்ப் பாட்டுப் பாடிய மேடையை சாணி தெளித்து, மெழுகிக் கழுவி சுத்தம் செய்த பிறகே இந்த 'மேற்படியார்கள்' பாட முன் வந்தது அக்காலத்து பரபரப்புச் செய்தி!
இத்தகவலை மய்யப்படுத்தி, 'குடிஅரசு' வார ஏட்டில் துணையாசிரியராக சேர்ந்த ஈரோட்டு குருகுல மாணவரான மு. கருணாநிதி; (அப்பொழுது அவர் 'கலைஞர்' பட்டப் பெயர் பெறாத நிலையிலும்) இதுபற்றி தந்தை பெரியார் ஒரு துணைத் தலையங்கம் கண்டித்து எழுத "கலைஞர்" இடம் கேட்டுக் கொண்டார்!
'தீட்டாயிடுத்து' என்று அன்று அவர் 'விமானி' என்ற புனை பெயரில் எழுதியதை தந்தை பெரியார் வெகுவாகப் பாராட்டினார்! அன்று எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மேடைப் பேச்சுக்கு நல்ல 'சரக்கை'ப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்தது!
தமிழ் பாட்டை 'துக்கடா' என்று அலட்சியமாய் பல இசைமேதாவிகள் அன்று குறிப்பிட்டே தாழ்த்துவார்கள்!
தண்டபாணி தேசிகர் புகழும் ஓர் தமிழிசைப் பேரொளியாக மிகவும் உயர்ந்தது!
ஆழ்ந்த பக்தியாளர்தான் அவர்; ஆனால் மொழி உணர்வு, இன உணர்வை அவர் துறந்ததே இல்லை - உரிமைப் போரைத் துவக்கி நடத்தி வெற்றி கண்டவர். பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை செய்தவர்!
புரட்சிக் கவிஞரின் 'துன்பம் நேர்கையில் 'யாழ்' எடுத்து' என்ற பாட்டை, தேசிகர் பாடி கேட்கும் போது நம்மையறியாமல் மெய் மறப்போம்! இன்பத்தில் திளைப்போம்!!
அதுபோலவே 'பாட்டுக்கொரு புலவன் பாரதியாடா?', 'நல்ல சமயமடா; இதை நழுவ விடுவோமோ' என்ற பாட்டு, இன்னும் பல திரையிசைப் பாடல்களும் - 'ஜெமினி நந்தனாரில் 'எந்தாயுமல்லவா என்னப் பனல்லவா' பாடல் உருக்கமிகுந்த பாடல் - நந்தனார் நடிப்பு அபாரம்; 'பட்டினத்தார்' படம் அக்காலத்தில் பல வாரங்கள் ஓடியது!
'தாமரைப் பூத்தத் தடாகமடா' என்று ஓங்கிய குரல் ஒலிக்கக் கேட்பதே இன்பம்!
தந்தை பெரியார் எம்.எம். தண்டபாணி தேசிகரைப் பாராட்டிய விழாக்களில் கலந்து பெருமைப்படுத்திப் பேசியுள்ளார்!
அண்ணாவும், புரட்சிக் கவிஞர், கலைஞரும் பல தரப்பட்டவரும் 'தமிழிசைப் போராளி' என்று பாராட்டிய மறையாத மகத்தான மனிதர் இவர்!
(பிறந்த நாள் நினைவுகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக