பக்கங்கள்

சனி, 27 ஜூலை, 2019

நீங்கள் எவ்வகை மனிதர்.....?மனிதப் பண்புகளில் தலையாய பண்பு - நன்றி காட்டுதல்.

ஆறறிவு படைத்த மனிதனின் பகுத்தறிவின் வெளிப்பாடே நன்றி காட்டுதல் ஆகும். மிருகங் களுக்கு அவை கிடையாது. நன்றி சொல்லத் தெரியாதவர்கள், நன்றி சொல்லத் தயங்குகிற வர்கள், நன்றியை மறந்தவர்கள் - என மனிதர்களில் பல வகை உண்டு!

குழந்தைகளுக்கு - அவர்களது வளர்ப்புப் பிராயத்திலேயே நன்றி என்ற சொல்லையும், ’வருந்துகிறோம் - Sorry’ என்ற சொல்லையும், மன்னிக்கவும் என்று சொல்லும், மன்னிக்கணும் என்பதையும் சொல்லப் பழக்கி வளர்க்க வேண்டும்; சில பிள்ளைகளுக்கு ஏனோ தெரிய வில்லை - excuse கேட்பது, sorry என வருத்தம் தெரிவிப்பது என்பது மிகப்பெரிய அவமானத் திற்குரிய தோல்வி என்பது போன்ற ஒரு தவறான எண்ணம்; அதன் காரணமாக தேவையற்ற பிடிவாதம் - கெட்ட பெயர்.

கீழே விழுந்தவரைத் தூக்கி விடுதல் - மருந்திட்டு சிகிச்சையளித்தல் போன்ற இன்றிய மையாக் கடன் இந்த நன்றி சொல்லுதலும்!  வருத்தம் தெரிவிப்பதும்! மன்னிப்புக் கேட்பதும்!

பல மனிதர்கள் காரியம் ஆக காலைப் பிடிப் பவர்கள் - நிழல்போல் தொடர்வார்கள்; ஏன் பெவிக்கால் போட்டு ஒட்டிவைத்தது போலப் பிரிய முடியாதபடி இணைந்து விட்டதாகக் காட்டிக் கொள்ளுவர்.

வேலை முடிந்து விட்டால் வேடந்தாங்கல் சீசன் முடிந்த பறவைகள் போல், பறந்து போய் விடுவர், பெற்ற உதவிகளையும் மறந்து விடுவர்.

இதுதான் உலகியல் - உலக வழமை; மாறாக நன்றி காட்டி, நினைவில் நிறுத்தி,  மதித்து என்றும் போல் ஒரே மாதிரி இருந்தால்  அவர்கள் மனித சமுகத்தின் விதி விலக்கான மனிதர்கள், நண்பர்கள்!

ஒன்று கேட்டு நாமும் முயற்சித்து அது அவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்ட போது, நம்மிடம் வந்து தாங்கள் செய்த முயற்சிக்கு மிக்க நன்றி என்பவர்கள் பலமடங்கு உயர்ந்த மாமனிதர்கள் ஆவர்.

மறுபடியும் நம் உதவி தேவைப்பட்டால் சற்றும் கூச்சமின்றி - வெட்கத்தை வெளியே நிறுத்தி விட்டு, குழைந்து குழைந்து நிற்பர்!

ஆம் இவர்கள் பல நேரங்களில் பல மனி தர்கள்! நாமும் பார்த்துப் பார்த்து, அனுபவித்து அனுபவித்து மறத்துப் போன மானிட ஜென்மங்கள்!

அப்போது கோபம், ஆத்திரம், எரிச்சல் - இவைகள் வரும்; அவற்றைத் தவிர்த்து உயர நாம் பழகிக் கொள்ள வேண்டும்! அது எளிதல்ல தான் - என்றாலும் முயற்சித்து முன்னேறி வெற்றியடைய வேண்டும்!

மன்னிப்போம் - மறப்போம்! (Forgive - Forget) என்ற இரண்டு பண்புகள் நம்மை வெறுப் பற்ற வாழ்விற்குக் கொண்டு சேர்க்கும்!

சிலர் மன்னிப்பார்கள் - மறக்கமாட்டார்கள், வேறு சிலர் மறப்பார்கள் - மன்னிக்கமாட்டார்கள், மற்றொரும் பாலரோ - மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள்!

மனிதர்களை இனம் பிரித்துப் பார்த்து -  நன்றி காட்டுதலுடன் சேர்த்து இவ்விரண்டையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தால் அதை விட மாமனிதம் வேறு இல்லை அல்லவா!

எழுதுவதும், பேசுவதும் எளிது;  அவற்றை நடைமுறைப் படுத்துதல் அரிது! அரிதினும் அரிது!!

என்றாலும் முயன்றால் முடியாதது உண்டா?

உலகில் எதுவுமில்லையே!

நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு; உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக் கூடாத ஒன்று; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்!

- தந்தை பெரியார்

1933 - குடிஅரசு தலையங்கத்தில்

தீதும் நன்றும்  பிறர் தர வாரா என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்த சொற்றொடருக்கு ஏற்ப வாழ்வு, நாம் பார்த்த முப்பெரும் பண்புகளைக் கொண்டு அமையும் நம்வாழ்வு. அப்படி ஒழுகி கடைப்பிடித்து வாழுபவர்களே வாழ்பவர்கள்.

மற்றையோர் செத்த மனிதர்கள்!

நீங்கள்.....?.......?

- விடுதலை நாளேடு, 24 .7. 19

பொய் சொல்லி வாழும் பொறுப்பற்றவர்களுக்குப் பதிலா? நேரக் கேடு!'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

அய்யர் யாத்தனர் கரணம் என்ப'

என்ற தொல்காப்பிய வரிகளைச் சுட்டிக்காட்டி தமிழருக்குத் திருமணம் என்னும் ஏற்பாடு பின்னாலே பொய்ச் சொன்ன சமூகத்தில் ஏற்பட்ட ஒன்று என்று கூறி அடுக்கடுக்கான வாதங்களைக் கூறுவார் தந்தை பெரியார் அவர்கள்! (அதுபற்றி தனியே விரிவாகக்கூட எழுதுவோம் பின்னர்)

பொய் பேசுதல் என்பதற்குள்ள காலம் வெகு நீண்ட வரலாறு உடையது.

தொல்காப்பியர் காலத்திலும் சரி, வள்ளுவர் காலத்திலும் சரி, பொய்ப் பேசுதல் என்ற பழக்கம் அப்போதே இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது! "பொய்யுடை ஒருவன் சொல் மெய்போலும்மே!

மெய்போலும்மே!"  - என்ற தமிழ் இலக்கியப்  பாடல்  ஒரு பொய்யையே திரும்பத்

திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால், எளிதில் எதையும்  நம்பாதவர்களைக்கூட அது நம்ப வைக்கும் தன்மையுடையது!

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி நாட்டு நாஜிக் கட்சியில் 'கொயபெல்ஸ்' என்று ஒரு யுத்தப் பிரச்சார மந்திரி இருந்தான்! அவனது வேலையே - ஹிட்லர் ஆலோசனைப் படி பொய்யை திரும்பத் திரும்பக் கூறி - அதை முதலில் நம்ப மறுப்பவர்களைக்கூட பிறகு நம்ப வைக்கும் அளவுக்கு அந்தப் பிரச்சார அலை இழுத்துச் சென்றுவிடும்.

புராண காலங்கள் பொய்யில் தோன்றியவை தான்! புராணங்களை ஆங்கிலத்தில் Mythology என்று அழைப்பர்.

'Myth' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் "புரட்டு" என்றே பொருள்!

சிறுகதைகள் - தொடர் கதைகள் புனையும் போது எழுத்தாளர்கள் இருக்கும் ஊர்களையும், வரலாற்றுப் பெயர் பெற்ற இடங்களையும் இணைத்து கற்பனையாக எழுதினார்கள். பிற்காலத்தில் அதற்கு 'தெய்வீகம்' - புனிதம் என்ற மெழுகு - 'கில்ட்' பூசப்பட்டு உண்மையை விட அதிக வெளிச்சத்துடன் அது வீசிக் கொண்டே இருக்கும்!

உண்மையை நிரூபிப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் பொய் அழகான ஜோடனை, ஒப்பனை கொண்டதால் எளிதில் எவரையும் வசீகரிக்கச் செய்யும். நம்பச் செய்யும். இறுதியில் அது உடைந்து நொறுங்குவது உறுதி என்றாலும் - பரவிய வரை லாபம் என்பதே பொய்யைப் பரப்பும் புல்லர்களின் நோக்கம்!

தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியது 1925-இல் - இன்று 94 ஆண்டுகள் ஆகின்றன! என்றாலும் இன்று வரை பெரியார் காங்கிரசிலிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு வெளியேறி விட்டார் என்ற ஈனப்பொய்ப் பிரச்சாரம் தொடர்கிறதா? இல்லையா? (அதற்குப் பதிலடி அப்பொழுதே கொடுத்தவர் தந்தை பெரியார்)

"பெரியார் பிள்ளையாரை உடைத்தாலும் பெரியார் வீட்டில் அவர் ரகசியமாகப் பிள்ளையார் பூஜை செய்து வந்தார்" என்ற பொய்ப் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டு, வரலாறு தெரியாத இளசுகளுக்கு ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்த சிலர் முயலுகிறார்களா இல்லையா?

"வீரமணி மனைவி கழுத்தில் தாலி கட்டியிருக்கிறார்" என்று ஒரு அற்ப பிரச்சாரத்தை இன்று பல கூமுட்டைகளும், அயோக்கிய சிகாமணிகளும் செய்கிறார்களா இல்லையா?

இதற்கெல்லாம் மறுப்பு மறுப்பு என்று தெரிவித்துக் கொண்டே இருந்தால், திட்டமிட்டு பொய் பேசும் இந்த ஈனப் பிறவிகள், "துரவு பதையின் மைந்தர்களுக்கு - இதைத் தவிர வேறு வேலை கிடையாது!

நமக்கோ பல முக்கிய பணிகள் - ஆக்கப் பணிகள்  - அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டு விடுமே!

நம்மைத் தவிர நம்முடைய தனித்த தன்மையினால் பிறர் அஞ்சும் - நாம் அஞ்சாப் பெரும் பணியைச் செய்ய வேறு யாரும் இல்லை என்பதால் நாம் பதில் கூற வேண்டி, இதற்கு பதில் கூறினால் இன்னொரு பொய் மூட்டையை அவிழ்ப்பார்!

அதைக் கேட்டு நம்பும் பலவீனமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பரிதாபத்திற்குரிய வர்களே பொருட்படுத்தாதீர், அலட்சியப்படுத்தப் பழகுங்கள்.

புத்தரைப் பார்த்து ஒரு பெண் பல கொச்சை வார்த்தைகளால் வசை மாரி பொழிந்தாள். புத்தர் சிரித்து கொண்டே இருந்தார். சிறிது நேரம் கழித்து அப்பெண் கேட்டாள்! "ஏய்யா நான் இவ்வளவு பேச்சு பேசினேன், நீங்கள் ஒன்றும் கூறாமல் கோபப்படாமல் இருக்கிறீர்களே" என்று, அதற்குப் புத்தர் அளித்த பதில் என்ன தெரியுமா?

'சகோதரியே, நீ எனக்குப் பிச்சைப் போட வருகிறாய்;  நான் அதை ஏற்காவிட்டால் அது யாரிடம் இருக்கும்? 'யாரைச் சேரும்?' அது போலத்தான் நீ என்மீது கொட்டிய பழியும், புளுகும், அபாண்டமும். நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை, பொருட்படுத்தவில்லை. அது யாரைச் சேரும், உன்னைத்தானே!" - அதுபோல இன்றைய அரசியல் புளுகர்களும்.

காரில் நாம் வேகமாகப் போகும்போது சில நாய்கள் வேகமாக நம்மீது பாய்வது போல் குரைத்துக் கொண்டே ஓடி வரும். பிறகுதானே சோர்ந்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இரைக்க இரைக்க அப்படியே நின்று சோர்ந்து வீழ்ந்து விடும்!

புளுகிணிகள், புரட்டுக்குப் பிறந்த குக்கல்களின் நிலையும் குவலயத்தில் அதேதான்!

நம் வேலையை நாம் பார்ப்போம். தன்மீது மலம் வீசியபோதுகூட அதனைத் துடைத்தெறி யாமல் சால்வைபோட்டு மூடிக் கொண்டே தனது இடியோசைப் பேச்சை இடையறாது தொடர்ந்த துணிவின், இமயத் தலைவர் பெரியாரின் வாரிசுகள் - தூசிகளுக்கும், குப்பைகளுக்கும் பதில் சொல்லி வீணே நேரத்தைப் பாழ்படுத்துவது - நிச்சயமாக இல்லை!

விடுதலை நாளேடு, 23.7.19

புதன், 24 ஜூலை, 2019

முதுமையும் - இனிமையும்எல்லா மனிதர்களுக்கும் ஏன் பிராணி களுக்கும்கூட - முதுமை தவிர்க்கப்பட முடியாது.

கிரேக்கக் கதைகளில் ஒன்று, காதல் தெய்வமான 'வீனஸ்' தனது காதலன் 'ஈயாஸ்' (Eos)க்கு மரணமே நிகழாமல், என்றும் வாழ்பவனாகவே இருக்க வேண்டும் என்று கேட்ட வரம் கிடைத்தது.

Immortality - என்ற மரணமிலா வாழ்வு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, ஆட்டம் பாட்டத்தில் திளைத்திருந்தார் இந்தக் காதலி.

ஆனால் காலமோ வேகமாக நகர்ந்தது. சாவு அற்ற இந்த காதலனை முதுமை தாக்கத் தொடங்கியது; வாலவயதாகி நரை, திரை, மூப்பு அவரை ஆரத் தழுவத் தொடங்கியது. அப் போதுதான் புரிந்தது, அல்லற்படும் முதுமையின் விளைவுகளைவிட மரணமே மிக முக்கியம் என்ற வாழ்க்கைப் பாடம்! அண்மையில் வளரும் மருத்துவ விஞ்ஞானம் முதுமையைக்கூட விரட்டும் அளவிற்கு விந்தைகள் புரிய ஆயத்தகளத்தில் ஆர்ப்பரித்து நிற்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

நம்முடைய முதுமையை வெல்ல நமது திடசித்தமும், பழக்க வழக்கங்களும்,  உணவு முறைகளும், உரிய உடல் பயிற்சி - தக்க ஓய்வுடன் கூடிய இளைப்பாறுதல் - இவை நம்முன் உள்ள நல் வாய்ப்புகள் ஆகும்.

101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த நமது இயக்க லட்சிய வீரரும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளருமான மானமிகு அய்யா ஞான செபஸ்தியான் அவர்களது படத்திறப்பு விழா திருச்சியில்நடைபெற்றபோது, அவரது சிறந்த நண்பர்களில் ஒருவரான டாக்டர் கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் சிறப்பான சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதில் செபஸ்தியான் போன்ற முதியவர் - என்றும் இளமை முறுக்கோடும், புன்முறுவ லோடும் இருந்ததற்குரிய பல காரணங்களில் முக்கியமானது - அவர் நல்ல இனிய நண்பர் களைப் பெற்று அவர்களுடன் கலகலப்பாகப் பழகியதும் முக்கிய அம்சமாகும்.

வயது ஏற ஏற அவரவர் செய்யும் வழமை யான கடமைகளிலிருந்து சற்று மாறி, சில நண்பர்களுடன் செயல்படுதல், நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக சிலரை இனம் பிரித்து தேர்வு செய்து, இணை பிரியா நட்பாக ஆக்கிக் கொள்ளுதல் (Deviation and Discrimination) மற்றும் வேறு சில வழமையான பணிகளிலிருந்து மாறுபட்ட பணிகளை  - தொண்டறப் பணிகளைச் செய்தல் - பேரப் பிள்ளைகள்  - குடும்ப வரிசையினர் -  மிக நட்பு வட்டத்தவரிடமோ வேறு திசையில் சிலவற்றைச் செய்தல் (Digression) மூலம் சீரிளமைத் திறத்தைப் பாதுகாக்கலாம் அல்லது வளர்த்துக் கொள்ளலாம்!

- விடுதலை நாளேடு, 18.7.29

வெள்ளி, 5 ஜூலை, 2019

தொடர்ந்த தொலைக்காட்சியும் மாரடைப்பு ஆபத்தும்!அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்று கொலம்பியா பல்கலைக் கழகம்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டாக்டர் பட்டம் பெற்றதும் அவருடைய ஆராய்ச்சி அறிவுத் திறனுக்காக - அப்பல்கலைக் கழகத்தில்தான்!

அப்பல்கலைக் கழகத்தின் அரிய ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த மானுடம் பயன் பெற வேண்டிய மகத்தான செய்தி.

நீண்ட நேரம் - 'டி.வி.' - தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து, தொடர்ந்து பல மணிகள் சீரியல்கள் மாற்றி சீரியல்களாகவே அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே இடைவிடாமல் மணிக்கணக்கில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் கேடுகள் அநேகம்.

அத்தகைய 'டி.வி' போதையாளர்களுக்குப் பல மணி நேரம் அமர்ந்து 'டி.வி.' பார்ப்பதினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை கொலம்பியா பல்கலைக் கழகம் ஓர் ஆய்வு நடத்தி, கண்டு அறிந்துள்ளது.

8½ ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஆய்வினை - 3,592 பேர்களைத் தொடர்ந்து கண்காணித்து வரப்பட்ட பின் கண்டறிந்ததே மேற்சொன்ன மாரடைப்பு வாய்ப்பு.

பொதுவாக அமெரிக்க நாட்டில்  'தொட்டிலில் அமர்ந்துள்ள உருளைக்கிழங்குகள்' (Couch Potatoes) என்று அத்தகையவர்களைக் கேலியாக அழைப்பதுண்டு.

நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு இடையறாமல் 'டி.வி.' பார்க்கும் வழக்கமுடையோருக்கு எடை கூடி'மகாகனங்களாக' அவர்களில் பலர் ஆவது தவிர்க்க இயலாது என்பதும் பலரும் அறிந்த செய்தியேயாகும்!

இப்படி எழுதும் போது உங்களில் பலருக்கு - அமர்ந்து வேலை பார்ப்போருக்கும் இதே ஆபத்து உண்டா? என்று கேட்கத் தோன்றும்.

இந்தக் கேள்விக்கு அந்த ஆய்வாளர்கள் பதில் கூறுகிறார்கள்.

பணியாற்றும் போது பல மணி நேரம் அமர்ந்து பணியாற்றுவதனால் ஏற்படும் ஆபத்து - மாரடைப்பு வாய்ப்பு ஒப்பிட்டுக் கூற வேண்டுமானால் - குறைவே என்று கண்டறிந்துள்ளார்கள்!

அமெரிக்காவின் பிரபல இதயப் பாதுகாப்புச் சங்கமான (American Heart Association)  அமைப்பினர் இதுபற்றிக் கூறுகையில், "நீங்கள் உங்கள் வேலை நேரத்திற்கு வெளியே எப்படி உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். இந்த ஆய்வின் முக்கிய குறிக்கோள் இதய நோய் பற்றிய ஆய்வில் - பணி நேரம் போக, எஞ்சிய வெளி நேரத்தில் எப்படி நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதை வைத்துத் தான் இந்த கணிப்பு வந்துள்ளது" என்றும் கூறுகின்றனர்.

இதே அமெரிக்க இதய (பாதுகாப்பு) சங்கம் மற்றொன்றையும் முக்கிய அறிவுரையாக மக்களுக் குக் கூறியுள்ளது. இப்படி 'டி.வி.' பார்ப்பவர்கள், ஒவ்வொருவரும் சில உடற்பயிற்சிகளை ஓரள வுக்கோ, முழு அளவுக்கோ செய்து வந்தால், இந்த மாரடைப்பு அபாயம் வெகுவாகக் குறைக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகும் என்ற மாற்று வழியையும் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது!

பணிக்கூடங்களில், கல்வி நிறுவனங்களில் இடைவேளை என்று சில மணித்துளிகள் விட்டு காலாற நடந்து கழிப்பறை சென்று, நடந்து நீர் அருந்தி, மீண்டும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து மீண்டும் பணியைத் தொடருவது மூளைக்கும், உடல் நலப் பாதுகாப்புக்கும்கூட நல்லது.

வீட்டிலோ, நூலகங்களிலோ பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து, படிப்பது, எழுதுவது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபடுவோர்கள் - சிறு இடைவெளிகளில் எழுந்து சில மணித்துளிகள் நடந்து லேசான இளைப்பாறுதலுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மீண்டும் தொடரு வதும் பல வகையில் நல்ல பயனைத் தரும்.

மனதின் ஈர்ப்பு சக்தியும் வளரும், உடல் நலமும் பாதுகாக்கப்படும்.

நடைப்பயிற்சியை இடை இடையே செய்து உடல் நலத்தைப் பேணிக் காக்க! காக்க!!

- விடுதலை நாளேடு, 5.7.19

செவ்வாய், 2 ஜூலை, 2019

மருத்துவம் - தொழில் அல்ல; ஓர் அரிய தொண்டு!ஜூலை 1 - உலக டாக்டர்கள் - மருத்துவர்கள் நாள்!

டாக்டர்களின் பணி அறப் பணி- தொண்டூழியம். மனிதர்களின் நலவாழ்வு - உயிர்காப்பு போன்ற அரிய பணிகளைக் கடமையாகக் கொண்ட அரும் பணி!

மருத்துவமனைகள் அனைத்தும், அரசு மருத்துவமனைகளாக்கப்பட்டு, தனிப்பட்ட தொழில் முறை (Private Practice) இன்றி, அனைத்தும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மூலமே என்று நம்  நாட்டில் ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகாலம் ஆகும்!

கல்வியும் சுகாதாரமும் அரசுகளின் மிக முக்கிய இரண்டு முன்னுரிமைகளாக்கி, நேற்று முன்னாள் (29.6.2019) திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம்.

ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்கும் சுகாதார உரிமையை - நோய் தீர்த்து நல்ல உடல் நலத்துடன் வாழும் உரிமையை, மக்களின் அடிப்படை உரிமையாக்கும் அரசுகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

உடல் நலக் காப்பீடு திட்டத்தின் (Insurance) கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவ மனைகளில் கண்ணை மூடிக் கொண்டு பில்களை போடுவது சற்றும் நியாயப்படுத்த முடியாத பகற் கொள்ளைக்கு ஒப்பாகும்!

தக்க அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள், நிதித்துறை நிபுணர்கள், ஆயுள் காப்பீட்டுத் துறை வல்லு நர்களைக் கொண்ட முத்தரப்பு ஆலோசனைக் குழு போட்டு பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்தினால் வரிப் பணத்தை அரசுகள் நியாயமான அளவுக்கு ஒதுக்கியது சரியான பலனைத் தரும் வகையில் நோய் தீர்ப்புக்கு வழி கிட்டும்!

'கார்ப்பரேட் முதலாளிகளான' கனவான் களின் தயவில் நடைபெறும் ஆட்சிகளால் இது சாத்தியப்படாது.

மாறாக, சமதர்ம சிந்தனை கொள்கையுடன் கூடிய உண்மையான மக்கள் நலம் பேணும் அரசுகளால் மட்டுமே முடியும்!

அரசு டாக்டர்களுக்கு, அவர்களுக்கு போதிய அளவு சம்பளம் தந்து, தனிப்பட்ட தொழில் நடத்த அனுமதிக்கவே கூடாது!

சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் இனிய இரக்க சுபாவமே நோயாளிகளின் பாதி நோயைத் தீர்த்துவிடக் கூடிய - வலியைப் போக்கிவிடக் கூடிய மனநிலையை நோயாளி களுக்கு உண்டாக்கி விடக் கூடும். எனவே இன்சொல் - இதமான பொறுமை,  வருவாயைப் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை முன்னே நிறுத்தக் கூடியதாக டாக்டர்களின் நோய் தீர்க்கும் முறை அமைந்தால் சிறப்பு.

சிடுசிடு மூஞ்சி, கடுகடு முகம் கொண்ட டாக்டர்களை எந்த நோயாளியும் விரும்பார்; அத்தகையவர்களிடம் போவதற்கே தயங்குவர்; அஞ்சுவர் - தவிர்க்கவே முயல்வர்.

ஸ்டெதாஸ்கோப்பும், B.P. Apparatus-ம் எவ்வளவு  முக்கியமோ அதைவிட நோயாளி களை அரவணைத்து, நம்பிக்கையூட்டும் சிகிச்சையாளராக நோயாளிகளின் நெஞ்சில் பதிய வைப்பதே நோயின் வலியையும் வலிமையையும் பெரிதும் குறைத்து விடுமே! இல்லையா?

முன்பு அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிரபல டாக்டர் செந்தில்நாதன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஒருகதை சொன்னார்!

"இரவு நடுநசி 1 மணி அளவில் வெளியேயிருந்து வீட்டுக்கு வந்தபோது தெரு நாய் ஒன்று ஒருவரைப் பாய்ந்து கடித்து குதறிவிட்டது.

இரத்தம் சொட்டச் சொட்ட பக்கத்துத் தெரு டாக்டர் வீட்டில் 'காலிங் பெல்லை' அழுத்தி அடித்து, டாக்டரை எழுப்பி வெளியே வரச் சொன்னார். அவரும் எழுந்து வந்து என்னவென்று கேட்டார்.

உடனே ஊசி போடாமல், சிகிச்சையை துவக்காமல், கோபத்துடன் வெளியே  (Consulting hours) மருத்துவரை கலந்தா லோசிக்கும் நேரம் என்பது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று போட்டிருக்கும் போர்டைப் பார்த்தீர்களா?"

"பின் ஏன் இப்போது வந்து தொல்லை தருகிறீர்கள்?" என்று கடுகடுத்த முறையில் எரிந்து விழுந்தார் டாக்டர். 'நோயாளி சொல்லொணாத வலியால் துடித்த நிலையில்... நான் அந்த போர்டைப் படித்தேன். ஆனால் அதன்படி அந்த கடித்த நாய் அந்நேரத்திற்குள் கடிக்கவில்லையே டாக்டர்; அதற்கு நான் (நோயாளி) எப்படி பொறுப்பாவேன் டாக்டர்? என்று கேட்டாராம்!

பல டாக்டர்கள் மனம் இரங்கி நோயாளி களுக்கு இலவச மருந்து, வெகுக் குறைந்த கட்டணம், அதிக பரிசோதனைகள் செலவு Tests எழுதித் தராமல், கேள்விகள் மூலமே கேட்டுத் தெளிந்து நோயாளிகளை குணப் படுத்துவோரும் உண்டு!

அதைவிட மிகப் பெரிய ஆதங்கம் ஒன்று நமக்கு உண்டு.

கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய, மருத்துவர்களாகி "தொழிலில்" (தொண்டில் அல்ல) ஈடுபட்டுள்ள பல இளம் டாக்டர்கள்கூட கிராம மக்களுக்குச் சேவை செய்ய ஏனோ வரத் தயங்குகின்றனர்!

மிஷனரி டாக்டர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து, மொழி கற்று சிகிச்சை தருகிறார்களே, அதையெல்லாம் நமது இளம் டாக்டர்கள் சிந்திப்பதுண்டா?

பலரும் தொண்டறச் செம்மல்களாக மாற  வேண்டும். மனிதர்களில் பலவகை உண்டு. நல்லவர்கள் பொறுப்பு அதிகம் உள்ளதே நமக்கு நல்லது!

-  விடுதலை நாளேடு, 1.7.19