அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்று கொலம்பியா பல்கலைக் கழகம்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டாக்டர் பட்டம் பெற்றதும் அவருடைய ஆராய்ச்சி அறிவுத் திறனுக்காக - அப்பல்கலைக் கழகத்தில்தான்!
அப்பல்கலைக் கழகத்தின் அரிய ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த மானுடம் பயன் பெற வேண்டிய மகத்தான செய்தி.
நீண்ட நேரம் - 'டி.வி.' - தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து, தொடர்ந்து பல மணிகள் சீரியல்கள் மாற்றி சீரியல்களாகவே அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே இடைவிடாமல் மணிக்கணக்கில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் கேடுகள் அநேகம்.
அத்தகைய 'டி.வி' போதையாளர்களுக்குப் பல மணி நேரம் அமர்ந்து 'டி.வி.' பார்ப்பதினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை கொலம்பியா பல்கலைக் கழகம் ஓர் ஆய்வு நடத்தி, கண்டு அறிந்துள்ளது.
8½ ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஆய்வினை - 3,592 பேர்களைத் தொடர்ந்து கண்காணித்து வரப்பட்ட பின் கண்டறிந்ததே மேற்சொன்ன மாரடைப்பு வாய்ப்பு.
பொதுவாக அமெரிக்க நாட்டில் 'தொட்டிலில் அமர்ந்துள்ள உருளைக்கிழங்குகள்' (Couch Potatoes) என்று அத்தகையவர்களைக் கேலியாக அழைப்பதுண்டு.
நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு இடையறாமல் 'டி.வி.' பார்க்கும் வழக்கமுடையோருக்கு எடை கூடி'மகாகனங்களாக' அவர்களில் பலர் ஆவது தவிர்க்க இயலாது என்பதும் பலரும் அறிந்த செய்தியேயாகும்!
இப்படி எழுதும் போது உங்களில் பலருக்கு - அமர்ந்து வேலை பார்ப்போருக்கும் இதே ஆபத்து உண்டா? என்று கேட்கத் தோன்றும்.
இந்தக் கேள்விக்கு அந்த ஆய்வாளர்கள் பதில் கூறுகிறார்கள்.
பணியாற்றும் போது பல மணி நேரம் அமர்ந்து பணியாற்றுவதனால் ஏற்படும் ஆபத்து - மாரடைப்பு வாய்ப்பு ஒப்பிட்டுக் கூற வேண்டுமானால் - குறைவே என்று கண்டறிந்துள்ளார்கள்!
அமெரிக்காவின் பிரபல இதயப் பாதுகாப்புச் சங்கமான (American Heart Association) அமைப்பினர் இதுபற்றிக் கூறுகையில், "நீங்கள் உங்கள் வேலை நேரத்திற்கு வெளியே எப்படி உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். இந்த ஆய்வின் முக்கிய குறிக்கோள் இதய நோய் பற்றிய ஆய்வில் - பணி நேரம் போக, எஞ்சிய வெளி நேரத்தில் எப்படி நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதை வைத்துத் தான் இந்த கணிப்பு வந்துள்ளது" என்றும் கூறுகின்றனர்.
இதே அமெரிக்க இதய (பாதுகாப்பு) சங்கம் மற்றொன்றையும் முக்கிய அறிவுரையாக மக்களுக் குக் கூறியுள்ளது. இப்படி 'டி.வி.' பார்ப்பவர்கள், ஒவ்வொருவரும் சில உடற்பயிற்சிகளை ஓரள வுக்கோ, முழு அளவுக்கோ செய்து வந்தால், இந்த மாரடைப்பு அபாயம் வெகுவாகக் குறைக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகும் என்ற மாற்று வழியையும் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது!
பணிக்கூடங்களில், கல்வி நிறுவனங்களில் இடைவேளை என்று சில மணித்துளிகள் விட்டு காலாற நடந்து கழிப்பறை சென்று, நடந்து நீர் அருந்தி, மீண்டும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து மீண்டும் பணியைத் தொடருவது மூளைக்கும், உடல் நலப் பாதுகாப்புக்கும்கூட நல்லது.
வீட்டிலோ, நூலகங்களிலோ பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து, படிப்பது, எழுதுவது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபடுவோர்கள் - சிறு இடைவெளிகளில் எழுந்து சில மணித்துளிகள் நடந்து லேசான இளைப்பாறுதலுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மீண்டும் தொடரு வதும் பல வகையில் நல்ல பயனைத் தரும்.
மனதின் ஈர்ப்பு சக்தியும் வளரும், உடல் நலமும் பாதுகாக்கப்படும்.
நடைப்பயிற்சியை இடை இடையே செய்து உடல் நலத்தைப் பேணிக் காக்க! காக்க!!
- விடுதலை நாளேடு, 5.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக