மனிதப் பண்புகளில் தலையாய பண்பு - நன்றி காட்டுதல்.
ஆறறிவு படைத்த மனிதனின் பகுத்தறிவின் வெளிப்பாடே நன்றி காட்டுதல் ஆகும். மிருகங் களுக்கு அவை கிடையாது. நன்றி சொல்லத் தெரியாதவர்கள், நன்றி சொல்லத் தயங்குகிற வர்கள், நன்றியை மறந்தவர்கள் - என மனிதர்களில் பல வகை உண்டு!
குழந்தைகளுக்கு - அவர்களது வளர்ப்புப் பிராயத்திலேயே நன்றி என்ற சொல்லையும், ’வருந்துகிறோம் - Sorry’ என்ற சொல்லையும், மன்னிக்கவும் என்று சொல்லும், மன்னிக்கணும் என்பதையும் சொல்லப் பழக்கி வளர்க்க வேண்டும்; சில பிள்ளைகளுக்கு ஏனோ தெரிய வில்லை - excuse கேட்பது, sorry என வருத்தம் தெரிவிப்பது என்பது மிகப்பெரிய அவமானத் திற்குரிய தோல்வி என்பது போன்ற ஒரு தவறான எண்ணம்; அதன் காரணமாக தேவையற்ற பிடிவாதம் - கெட்ட பெயர்.
கீழே விழுந்தவரைத் தூக்கி விடுதல் - மருந்திட்டு சிகிச்சையளித்தல் போன்ற இன்றிய மையாக் கடன் இந்த நன்றி சொல்லுதலும்! வருத்தம் தெரிவிப்பதும்! மன்னிப்புக் கேட்பதும்!
பல மனிதர்கள் காரியம் ஆக காலைப் பிடிப் பவர்கள் - நிழல்போல் தொடர்வார்கள்; ஏன் பெவிக்கால் போட்டு ஒட்டிவைத்தது போலப் பிரிய முடியாதபடி இணைந்து விட்டதாகக் காட்டிக் கொள்ளுவர்.
வேலை முடிந்து விட்டால் வேடந்தாங்கல் சீசன் முடிந்த பறவைகள் போல், பறந்து போய் விடுவர், பெற்ற உதவிகளையும் மறந்து விடுவர்.
இதுதான் உலகியல் - உலக வழமை; மாறாக நன்றி காட்டி, நினைவில் நிறுத்தி, மதித்து என்றும் போல் ஒரே மாதிரி இருந்தால் அவர்கள் மனித சமுகத்தின் விதி விலக்கான மனிதர்கள், நண்பர்கள்!
ஒன்று கேட்டு நாமும் முயற்சித்து அது அவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்ட போது, நம்மிடம் வந்து தாங்கள் செய்த முயற்சிக்கு மிக்க நன்றி என்பவர்கள் பலமடங்கு உயர்ந்த மாமனிதர்கள் ஆவர்.
மறுபடியும் நம் உதவி தேவைப்பட்டால் சற்றும் கூச்சமின்றி - வெட்கத்தை வெளியே நிறுத்தி விட்டு, குழைந்து குழைந்து நிற்பர்!
ஆம் இவர்கள் பல நேரங்களில் பல மனி தர்கள்! நாமும் பார்த்துப் பார்த்து, அனுபவித்து அனுபவித்து மறத்துப் போன மானிட ஜென்மங்கள்!
அப்போது கோபம், ஆத்திரம், எரிச்சல் - இவைகள் வரும்; அவற்றைத் தவிர்த்து உயர நாம் பழகிக் கொள்ள வேண்டும்! அது எளிதல்ல தான் - என்றாலும் முயற்சித்து முன்னேறி வெற்றியடைய வேண்டும்!
மன்னிப்போம் - மறப்போம்! (Forgive - Forget) என்ற இரண்டு பண்புகள் நம்மை வெறுப் பற்ற வாழ்விற்குக் கொண்டு சேர்க்கும்!
சிலர் மன்னிப்பார்கள் - மறக்கமாட்டார்கள், வேறு சிலர் மறப்பார்கள் - மன்னிக்கமாட்டார்கள், மற்றொரும் பாலரோ - மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள்!
மனிதர்களை இனம் பிரித்துப் பார்த்து - நன்றி காட்டுதலுடன் சேர்த்து இவ்விரண்டையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தால் அதை விட மாமனிதம் வேறு இல்லை அல்லவா!
எழுதுவதும், பேசுவதும் எளிது; அவற்றை நடைமுறைப் படுத்துதல் அரிது! அரிதினும் அரிது!!
என்றாலும் முயன்றால் முடியாதது உண்டா?
உலகில் எதுவுமில்லையே!
நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு; உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக் கூடாத ஒன்று; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்!
- தந்தை பெரியார்
1933 - குடிஅரசு தலையங்கத்தில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்த சொற்றொடருக்கு ஏற்ப வாழ்வு, நாம் பார்த்த முப்பெரும் பண்புகளைக் கொண்டு அமையும் நம்வாழ்வு. அப்படி ஒழுகி கடைப்பிடித்து வாழுபவர்களே வாழ்பவர்கள்.
மற்றையோர் செத்த மனிதர்கள்!
நீங்கள்.....?.......?
- விடுதலை நாளேடு, 24 .7. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக