பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2019

முதுமையும் - இனிமையும்



எல்லா மனிதர்களுக்கும் ஏன் பிராணி களுக்கும்கூட - முதுமை தவிர்க்கப்பட முடியாது.

கிரேக்கக் கதைகளில் ஒன்று, காதல் தெய்வமான 'வீனஸ்' தனது காதலன் 'ஈயாஸ்' (Eos)க்கு மரணமே நிகழாமல், என்றும் வாழ்பவனாகவே இருக்க வேண்டும் என்று கேட்ட வரம் கிடைத்தது.

Immortality - என்ற மரணமிலா வாழ்வு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, ஆட்டம் பாட்டத்தில் திளைத்திருந்தார் இந்தக் காதலி.

ஆனால் காலமோ வேகமாக நகர்ந்தது. சாவு அற்ற இந்த காதலனை முதுமை தாக்கத் தொடங்கியது; வாலவயதாகி நரை, திரை, மூப்பு அவரை ஆரத் தழுவத் தொடங்கியது. அப் போதுதான் புரிந்தது, அல்லற்படும் முதுமையின் விளைவுகளைவிட மரணமே மிக முக்கியம் என்ற வாழ்க்கைப் பாடம்! அண்மையில் வளரும் மருத்துவ விஞ்ஞானம் முதுமையைக்கூட விரட்டும் அளவிற்கு விந்தைகள் புரிய ஆயத்தகளத்தில் ஆர்ப்பரித்து நிற்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

நம்முடைய முதுமையை வெல்ல நமது திடசித்தமும், பழக்க வழக்கங்களும்,  உணவு முறைகளும், உரிய உடல் பயிற்சி - தக்க ஓய்வுடன் கூடிய இளைப்பாறுதல் - இவை நம்முன் உள்ள நல் வாய்ப்புகள் ஆகும்.

101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த நமது இயக்க லட்சிய வீரரும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளருமான மானமிகு அய்யா ஞான செபஸ்தியான் அவர்களது படத்திறப்பு விழா திருச்சியில்நடைபெற்றபோது, அவரது சிறந்த நண்பர்களில் ஒருவரான டாக்டர் கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் சிறப்பான சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதில் செபஸ்தியான் போன்ற முதியவர் - என்றும் இளமை முறுக்கோடும், புன்முறுவ லோடும் இருந்ததற்குரிய பல காரணங்களில் முக்கியமானது - அவர் நல்ல இனிய நண்பர் களைப் பெற்று அவர்களுடன் கலகலப்பாகப் பழகியதும் முக்கிய அம்சமாகும்.

வயது ஏற ஏற அவரவர் செய்யும் வழமை யான கடமைகளிலிருந்து சற்று மாறி, சில நண்பர்களுடன் செயல்படுதல், நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக சிலரை இனம் பிரித்து தேர்வு செய்து, இணை பிரியா நட்பாக ஆக்கிக் கொள்ளுதல் (Deviation and Discrimination) மற்றும் வேறு சில வழமையான பணிகளிலிருந்து மாறுபட்ட பணிகளை  - தொண்டறப் பணிகளைச் செய்தல் - பேரப் பிள்ளைகள்  - குடும்ப வரிசையினர் -  மிக நட்பு வட்டத்தவரிடமோ வேறு திசையில் சிலவற்றைச் செய்தல் (Digression) மூலம் சீரிளமைத் திறத்தைப் பாதுகாக்கலாம் அல்லது வளர்த்துக் கொள்ளலாம்!

- விடுதலை நாளேடு, 18.7.29

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக