'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப'
என்ற தொல்காப்பிய வரிகளைச் சுட்டிக்காட்டி தமிழருக்குத் திருமணம் என்னும் ஏற்பாடு பின்னாலே பொய்ச் சொன்ன சமூகத்தில் ஏற்பட்ட ஒன்று என்று கூறி அடுக்கடுக்கான வாதங்களைக் கூறுவார் தந்தை பெரியார் அவர்கள்! (அதுபற்றி தனியே விரிவாகக்கூட எழுதுவோம் பின்னர்)
பொய் பேசுதல் என்பதற்குள்ள காலம் வெகு நீண்ட வரலாறு உடையது.
தொல்காப்பியர் காலத்திலும் சரி, வள்ளுவர் காலத்திலும் சரி, பொய்ப் பேசுதல் என்ற பழக்கம் அப்போதே இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது! "பொய்யுடை ஒருவன் சொல் மெய்போலும்மே!
மெய்போலும்மே!" - என்ற தமிழ் இலக்கியப் பாடல் ஒரு பொய்யையே திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால், எளிதில் எதையும் நம்பாதவர்களைக்கூட அது நம்ப வைக்கும் தன்மையுடையது!
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி நாட்டு நாஜிக் கட்சியில் 'கொயபெல்ஸ்' என்று ஒரு யுத்தப் பிரச்சார மந்திரி இருந்தான்! அவனது வேலையே - ஹிட்லர் ஆலோசனைப் படி பொய்யை திரும்பத் திரும்பக் கூறி - அதை முதலில் நம்ப மறுப்பவர்களைக்கூட பிறகு நம்ப வைக்கும் அளவுக்கு அந்தப் பிரச்சார அலை இழுத்துச் சென்றுவிடும்.
புராண காலங்கள் பொய்யில் தோன்றியவை தான்! புராணங்களை ஆங்கிலத்தில் Mythology என்று அழைப்பர்.
'Myth' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் "புரட்டு" என்றே பொருள்!
சிறுகதைகள் - தொடர் கதைகள் புனையும் போது எழுத்தாளர்கள் இருக்கும் ஊர்களையும், வரலாற்றுப் பெயர் பெற்ற இடங்களையும் இணைத்து கற்பனையாக எழுதினார்கள். பிற்காலத்தில் அதற்கு 'தெய்வீகம்' - புனிதம் என்ற மெழுகு - 'கில்ட்' பூசப்பட்டு உண்மையை விட அதிக வெளிச்சத்துடன் அது வீசிக் கொண்டே இருக்கும்!
உண்மையை நிரூபிப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் பொய் அழகான ஜோடனை, ஒப்பனை கொண்டதால் எளிதில் எவரையும் வசீகரிக்கச் செய்யும். நம்பச் செய்யும். இறுதியில் அது உடைந்து நொறுங்குவது உறுதி என்றாலும் - பரவிய வரை லாபம் என்பதே பொய்யைப் பரப்பும் புல்லர்களின் நோக்கம்!
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியது 1925-இல் - இன்று 94 ஆண்டுகள் ஆகின்றன! என்றாலும் இன்று வரை பெரியார் காங்கிரசிலிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு வெளியேறி விட்டார் என்ற ஈனப்பொய்ப் பிரச்சாரம் தொடர்கிறதா? இல்லையா? (அதற்குப் பதிலடி அப்பொழுதே கொடுத்தவர் தந்தை பெரியார்)
"பெரியார் பிள்ளையாரை உடைத்தாலும் பெரியார் வீட்டில் அவர் ரகசியமாகப் பிள்ளையார் பூஜை செய்து வந்தார்" என்ற பொய்ப் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டு, வரலாறு தெரியாத இளசுகளுக்கு ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்த சிலர் முயலுகிறார்களா இல்லையா?
"வீரமணி மனைவி கழுத்தில் தாலி கட்டியிருக்கிறார்" என்று ஒரு அற்ப பிரச்சாரத்தை இன்று பல கூமுட்டைகளும், அயோக்கிய சிகாமணிகளும் செய்கிறார்களா இல்லையா?
இதற்கெல்லாம் மறுப்பு மறுப்பு என்று தெரிவித்துக் கொண்டே இருந்தால், திட்டமிட்டு பொய் பேசும் இந்த ஈனப் பிறவிகள், "துரவு பதையின் மைந்தர்களுக்கு - இதைத் தவிர வேறு வேலை கிடையாது!
நமக்கோ பல முக்கிய பணிகள் - ஆக்கப் பணிகள் - அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டு விடுமே!
நம்மைத் தவிர நம்முடைய தனித்த தன்மையினால் பிறர் அஞ்சும் - நாம் அஞ்சாப் பெரும் பணியைச் செய்ய வேறு யாரும் இல்லை என்பதால் நாம் பதில் கூற வேண்டி, இதற்கு பதில் கூறினால் இன்னொரு பொய் மூட்டையை அவிழ்ப்பார்!
அதைக் கேட்டு நம்பும் பலவீனமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பரிதாபத்திற்குரிய வர்களே பொருட்படுத்தாதீர், அலட்சியப்படுத்தப் பழகுங்கள்.
புத்தரைப் பார்த்து ஒரு பெண் பல கொச்சை வார்த்தைகளால் வசை மாரி பொழிந்தாள். புத்தர் சிரித்து கொண்டே இருந்தார். சிறிது நேரம் கழித்து அப்பெண் கேட்டாள்! "ஏய்யா நான் இவ்வளவு பேச்சு பேசினேன், நீங்கள் ஒன்றும் கூறாமல் கோபப்படாமல் இருக்கிறீர்களே" என்று, அதற்குப் புத்தர் அளித்த பதில் என்ன தெரியுமா?
'சகோதரியே, நீ எனக்குப் பிச்சைப் போட வருகிறாய்; நான் அதை ஏற்காவிட்டால் அது யாரிடம் இருக்கும்? 'யாரைச் சேரும்?' அது போலத்தான் நீ என்மீது கொட்டிய பழியும், புளுகும், அபாண்டமும். நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை, பொருட்படுத்தவில்லை. அது யாரைச் சேரும், உன்னைத்தானே!" - அதுபோல இன்றைய அரசியல் புளுகர்களும்.
காரில் நாம் வேகமாகப் போகும்போது சில நாய்கள் வேகமாக நம்மீது பாய்வது போல் குரைத்துக் கொண்டே ஓடி வரும். பிறகுதானே சோர்ந்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இரைக்க இரைக்க அப்படியே நின்று சோர்ந்து வீழ்ந்து விடும்!
புளுகிணிகள், புரட்டுக்குப் பிறந்த குக்கல்களின் நிலையும் குவலயத்தில் அதேதான்!
நம் வேலையை நாம் பார்ப்போம். தன்மீது மலம் வீசியபோதுகூட அதனைத் துடைத்தெறி யாமல் சால்வைபோட்டு மூடிக் கொண்டே தனது இடியோசைப் பேச்சை இடையறாது தொடர்ந்த துணிவின், இமயத் தலைவர் பெரியாரின் வாரிசுகள் - தூசிகளுக்கும், குப்பைகளுக்கும் பதில் சொல்லி வீணே நேரத்தைப் பாழ்படுத்துவது - நிச்சயமாக இல்லை!
விடுதலை நாளேடு, 23.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக