பக்கங்கள்

செவ்வாய், 2 ஜூலை, 2019

மருத்துவம் - தொழில் அல்ல; ஓர் அரிய தொண்டு!



ஜூலை 1 - உலக டாக்டர்கள் - மருத்துவர்கள் நாள்!

டாக்டர்களின் பணி அறப் பணி- தொண்டூழியம். மனிதர்களின் நலவாழ்வு - உயிர்காப்பு போன்ற அரிய பணிகளைக் கடமையாகக் கொண்ட அரும் பணி!

மருத்துவமனைகள் அனைத்தும், அரசு மருத்துவமனைகளாக்கப்பட்டு, தனிப்பட்ட தொழில் முறை (Private Practice) இன்றி, அனைத்தும் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மூலமே என்று நம்  நாட்டில் ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகாலம் ஆகும்!

கல்வியும் சுகாதாரமும் அரசுகளின் மிக முக்கிய இரண்டு முன்னுரிமைகளாக்கி, நேற்று முன்னாள் (29.6.2019) திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம்.

ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்கும் சுகாதார உரிமையை - நோய் தீர்த்து நல்ல உடல் நலத்துடன் வாழும் உரிமையை, மக்களின் அடிப்படை உரிமையாக்கும் அரசுகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

உடல் நலக் காப்பீடு திட்டத்தின் (Insurance) கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவ மனைகளில் கண்ணை மூடிக் கொண்டு பில்களை போடுவது சற்றும் நியாயப்படுத்த முடியாத பகற் கொள்ளைக்கு ஒப்பாகும்!

தக்க அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள், நிதித்துறை நிபுணர்கள், ஆயுள் காப்பீட்டுத் துறை வல்லு நர்களைக் கொண்ட முத்தரப்பு ஆலோசனைக் குழு போட்டு பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்தினால் வரிப் பணத்தை அரசுகள் நியாயமான அளவுக்கு ஒதுக்கியது சரியான பலனைத் தரும் வகையில் நோய் தீர்ப்புக்கு வழி கிட்டும்!

'கார்ப்பரேட் முதலாளிகளான' கனவான் களின் தயவில் நடைபெறும் ஆட்சிகளால் இது சாத்தியப்படாது.

மாறாக, சமதர்ம சிந்தனை கொள்கையுடன் கூடிய உண்மையான மக்கள் நலம் பேணும் அரசுகளால் மட்டுமே முடியும்!

அரசு டாக்டர்களுக்கு, அவர்களுக்கு போதிய அளவு சம்பளம் தந்து, தனிப்பட்ட தொழில் நடத்த அனுமதிக்கவே கூடாது!

சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் இனிய இரக்க சுபாவமே நோயாளிகளின் பாதி நோயைத் தீர்த்துவிடக் கூடிய - வலியைப் போக்கிவிடக் கூடிய மனநிலையை நோயாளி களுக்கு உண்டாக்கி விடக் கூடும். எனவே இன்சொல் - இதமான பொறுமை,  வருவாயைப் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை முன்னே நிறுத்தக் கூடியதாக டாக்டர்களின் நோய் தீர்க்கும் முறை அமைந்தால் சிறப்பு.

சிடுசிடு மூஞ்சி, கடுகடு முகம் கொண்ட டாக்டர்களை எந்த நோயாளியும் விரும்பார்; அத்தகையவர்களிடம் போவதற்கே தயங்குவர்; அஞ்சுவர் - தவிர்க்கவே முயல்வர்.

ஸ்டெதாஸ்கோப்பும், B.P. Apparatus-ம் எவ்வளவு  முக்கியமோ அதைவிட நோயாளி களை அரவணைத்து, நம்பிக்கையூட்டும் சிகிச்சையாளராக நோயாளிகளின் நெஞ்சில் பதிய வைப்பதே நோயின் வலியையும் வலிமையையும் பெரிதும் குறைத்து விடுமே! இல்லையா?

முன்பு அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிரபல டாக்டர் செந்தில்நாதன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஒருகதை சொன்னார்!

"இரவு நடுநசி 1 மணி அளவில் வெளியேயிருந்து வீட்டுக்கு வந்தபோது தெரு நாய் ஒன்று ஒருவரைப் பாய்ந்து கடித்து குதறிவிட்டது.

இரத்தம் சொட்டச் சொட்ட பக்கத்துத் தெரு டாக்டர் வீட்டில் 'காலிங் பெல்லை' அழுத்தி அடித்து, டாக்டரை எழுப்பி வெளியே வரச் சொன்னார். அவரும் எழுந்து வந்து என்னவென்று கேட்டார்.

உடனே ஊசி போடாமல், சிகிச்சையை துவக்காமல், கோபத்துடன் வெளியே  (Consulting hours) மருத்துவரை கலந்தா லோசிக்கும் நேரம் என்பது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று போட்டிருக்கும் போர்டைப் பார்த்தீர்களா?"

"பின் ஏன் இப்போது வந்து தொல்லை தருகிறீர்கள்?" என்று கடுகடுத்த முறையில் எரிந்து விழுந்தார் டாக்டர். 'நோயாளி சொல்லொணாத வலியால் துடித்த நிலையில்... நான் அந்த போர்டைப் படித்தேன். ஆனால் அதன்படி அந்த கடித்த நாய் அந்நேரத்திற்குள் கடிக்கவில்லையே டாக்டர்; அதற்கு நான் (நோயாளி) எப்படி பொறுப்பாவேன் டாக்டர்? என்று கேட்டாராம்!

பல டாக்டர்கள் மனம் இரங்கி நோயாளி களுக்கு இலவச மருந்து, வெகுக் குறைந்த கட்டணம், அதிக பரிசோதனைகள் செலவு Tests எழுதித் தராமல், கேள்விகள் மூலமே கேட்டுத் தெளிந்து நோயாளிகளை குணப் படுத்துவோரும் உண்டு!

அதைவிட மிகப் பெரிய ஆதங்கம் ஒன்று நமக்கு உண்டு.

கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய, மருத்துவர்களாகி "தொழிலில்" (தொண்டில் அல்ல) ஈடுபட்டுள்ள பல இளம் டாக்டர்கள்கூட கிராம மக்களுக்குச் சேவை செய்ய ஏனோ வரத் தயங்குகின்றனர்!

மிஷனரி டாக்டர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து, மொழி கற்று சிகிச்சை தருகிறார்களே, அதையெல்லாம் நமது இளம் டாக்டர்கள் சிந்திப்பதுண்டா?

பலரும் தொண்டறச் செம்மல்களாக மாற  வேண்டும். மனிதர்களில் பலவகை உண்டு. நல்லவர்கள் பொறுப்பு அதிகம் உள்ளதே நமக்கு நல்லது!

-  விடுதலை நாளேடு, 1.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக