பக்கங்கள்

திங்கள், 24 ஜூன், 2019

மாவீரன் பகத்சிங்கும் - தந்தை பெரியாரும்!



80 ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை பெரியார் அவர்கள் 'குடிஅரசு' வார ஏடு துவக்கி 5 ஆண்டுகளுக்குள் இரண்டு புத்தக வெளியீட்டுப் பதிப்பகங்களையும் நடத்தி, ஏராளமான நூல்களை வெளியிட்டு, மக்களுக்கு அறிவு கொளுத்தினார்.

தமிழ்நாடு அறிந்திராதவைகளை, முற் போக்குக் கருத்துக்களை - எளிய தமிழாக்கம் மூலம் வெளிநாட்டு, வடநாட்டு அறிஞர்களின் நூல்களையெல்லாம்கூட சிறுசிறு வெளியீடு களாக வெளியிட்டார்!

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை (Communist Manifesto - Marx and Engels)  மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதியதை பச்சை அட்டைக் குடிஅரசில் வெளியிட்டார்!  (4.10.1931, 11.10.1931, 18.10.1931, 1.11.1931 ஆகிய 'குடிஅரசு' இதழ்களில் வெளியிடப்பட்டன)

அவர் சோவியத் ரஷ்யாவுக்கு 1932இல் செல்வதற்கு முன்பே வெளியிட்டார் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அதிசய உண்மை!

அதுபோல டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் லாகூர் ஜாட் -பட் - தோடக் மண்டல் ஆண்டு விழாவின் நிகழ்த்தப்படாத ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்து, 1934இல் 'ஜாதியை ஒழிக்கும் வழி"  (The Annihilation of Caste) எனும் நூலினை 4 அணா விலையில் வெளி யிட்டுப் பரப்பினார். தமிழ்நாட்டு வாசகர்கள் அதன் மூலமே அம்பேத்கர் பற்றி அறிமுகமாகும் நல்வாய்ப்பும் கிடைத்தது!

23லு வயது வரை வாழ்ந்து புரட்சிகர இளைஞனாக இந்த தேசத்திற்குத் தன்னைப் ஒப்படைத்துத் தூக்கு மேடையை முத்த மிட்டவன் இளைஞன் மாவீரன் பகத்சிங்!

அவர் சிறைச்சாலையில் எழுதிய ஒரு முக்கிய ஆங்கில நூல் - "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?"

பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, மிகவும் உணர்ச்சியும், அறிவும் பொங்கும் ஒரு அற்புதமான தலையங்கத்தை எழுதியவர் தந்தை பெரியார்! (29.3.1931 'குடிஅரசு')

காந்தியார்கூட பகத்சிங்கை ஆதரிக்காத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறி  சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் பகத்சிங்கைப் பாராட்டி எழுதியதோடு,

சிறையில் பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்ற நூலை ஆங்கில அரசு தடை செய்த நிலையில் - தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மூலம் தமிழில் மொழி பெயர்த்து, 'குடிஅரசு' வெளியீடாக வெளியிட்டு பரப்பினார்கள் 1934இல் -

அந்த நூலைத் தடை செய்ததோடு, பிரிட் டிஷ் அரசு குடிஅரசு ஏட்டின்மீது  ஆசிரியர் - பதிப்பாளர் என்ற முறையில்  ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள்மீதும், மொழிபெயர்ப் பாளர் என்ற முறையில் தோழர் ப. ஜீவானந்தம் மீதும்   வழக்குப் போட்டு கைது செய்தது.

பல்லாயிரக்கணக்கில் பரவியது அந்நூல்! இது பழைய செய்தி. ஆனால் இதுபற்றிய  ஒரு புதிய தகவல் இப்பொழுது  கிடைத்திருக்கிறது!

22.6.2019 அன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் நாடாளுமன்றக் குழு பொருளாளரும், மேனாள் மத்திய இணை நிதியமைச்சருமான தோழர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள் டில்லியிலிருந்து திரும்பி வரும் போது வாங்கிப் படித்த ஒரு நூலினை எனக்கும் வாங்கி அனுப்பி, தொலைப்பேசியில் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறினார்!

'The Bhagat Singh Reader' - Edited by Chaman Lal

- என்பது 2019இல் வெளியாகி உள்ளது. மாவீரன் பகத்சிங் எழுதிய கட்டுரைகள், நூல்கள் (பல மொழிகளில்) எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நூலாக வந்துள்ளது.

அதில்  நூலுக்கு அறிமுக உரை எழுதிய தொகுப்பாசிரியர் சமன்லால் அவர்கள்,

"It is not only in the recent times that Bhagat Singh has been described as a socialist or Marxist revolutionary; the papers in those days also described him as such! There is an interesting true story relating to 'Why I am an Atheist', which was first published in the 27 September 1931 issue in the 'People' weekly, edited by Lala Feroze Chand. Comrade P. Jeevanandam was asked to translate this essay in Tamil by E.V. Ramaswamy, popularly known as Periyar, as early as in 1934, which was published in his journal 'Kudiyarasu', with Periyar's own tribute to Bhagat Singh. During the 1947 Partition, issues of the 'People' could not reach India for many years; this essay was banned later by the British colonial government. During those times, someone retranslated this essay from Tamil to English, which still continues to be in circulation on many websites and from this, many further translations were done! Websites like Marxist-Leninist.org continue with the retranslated version; and in Pakistan some translations in Punjabi were done from the retranslated version. The original version of the 'People' is now preserved at the Nehru Memorial Museum and Library, and has been reproduced in a scanned format in my book 'Understanding Bhagat Singh', published in 2013."


"இந்த 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' என்று தந்தை பெரியார் மொழிபெயர்த்து வெளி யிட்டது -  அக்காலத்தில் 'பீப்பிள்' ('People') என்ற 1931 செப்டம்பர் 27ஆம் தேதி  (27.9.1931) வெளியான ஆங்கில வார ஏட்டில் லாலா பெரோஸ் சந்த் என்பவரால் வெளியிடப்பட்டதை தோழர் ப. ஜீவானந்தத்தை வைத்து தமிழில் மொழிபெயர்த்து பெரியார் ஈ.வெ. ராமசாமி வெளியிட்டார்! அதோடு 'குடிஅரசில்' பகத்சிங்கின் தியாகத்தை - கொள்கை உணர்வைப் பாராட் டியும் எழுதியிருந்தார். அக்கால பிரிட்டிஷ் அரசால் அது தடை செய்யப்பட்டதால், 1947இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காரண மாக ஏற்பட்ட பல சூழ்நிலையில்  'People' என்ற இந்த வார ஏட்டில் பகத்சிங் எழுதியதை  கண்டுபிடிக்க இயலாத நிலை.

தமிழில் தந்தை பெரியார் வெளியிட்ட 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' நூலிலிருந்து ஆங்கிலத்திற்கு மீண்டும் மொழி பெயர்த்து, அதையே சுற்றுக்கு அனுப்பி, வெளியிட்ட நிலையும் ஏற்பட்டது!

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வெளியிட்ட இந்நூல் கிடைத்ததால், மீண்டும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு வாய்ப்பு ஏற்படாது என்றும், அந்த ஆங்கில மொழிபெயர்ப்புதான் இன்றும் இணையதளங்களிலும் பயன்படுத்தப் படுகின்றன" என்றும் முற்பகுதியில் சமன்லால் குறிப்பிட்டுள்ளார்.

"இப்போது 'மூலம்' (Original)  கிடைத்து நேரு நினைவு மியூசிய - நூலகத்தில் உள்ளது. அதை மறுபடியும் ஸ்கேன் செய்தே, 'UnderStanding Bhagat Singh' என்று 2013 இல் எனது நூல் வெளி வந்துள்ளது" என்று குறிப்பிடுகிறார்!

தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பது இதிலிருந்தும்கூட விளங்குகிறது அல்லவா?

அருமை நண்பர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - அவர் எனக்கு ஓர் அருமையான புத்தக நண்பரும்கூட - அவர்களுக்கு மிக்க நன்றி!

- விடுதலை நாளேடு, 24.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக