புத்தியைப் பயன்படுத்து பவன் எவனோ அவனே 'புத்தன்'என்று எளிமையாக விளக்கினார் தந்தை பெரியார் - பல ஆண்டுகளுக்கு முன் - அதுவும் எழும்பூர் மகா போதி சொசைட்டியின் சார்பில் கொண் டாடப்பட்ட புத்தர் 2500 ஆண்டு - விழாவின்போது!
இதை நான் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பவுத்தம் தழுவிய பூமியில் ('தீட்சா பூமி' - என்று அழைக்கின்றனர், அவர் பவுத்த மார்க்கத்தில் சேர்ந்த இடத்தை) மூன்று நாள் அறக்கட்டளை சொற்பொழிவு "University Endowment Lecture கொடுத்தபோது, பாலிமொழி துறைப் பேராசிரியர் (முனைவர் பட்டம் பெற்ற துறைத் தலைவர்) எழுந்து நின்று கைதட்டி அந்த விளக்கத்தைக் கேட்டு வியந்து பாராட்டினார்.
பாலி மொழி 'புத்தி' என்ற சொல் புத்தியைப் பயன்படுத்தி சிறப்பு நிலையை அடைந்ததன் அடையாளமே கவுதம சித்தார்த்தன் 'புத்தன்' ஆனது என்பதை வழிமொழிந்து உரையாற்று கையில் - தந்தை பெரியார் கூறிய விளக்கத் தினை ஏற்றுக் கொண்டு "இவ்வளவு நாள் பவுத்தம், பாலிமொழியில் போதிக்கும் எனக்கு - இதைக் கேட்ட பிறகே பொறி தட்டியது" என்று வியந்து வியந்து தந்தை பெரியாரைப் பாராட்டினார்.
Wise - Wisdom - என்பது - 'புத்தி' என்று நம்மால் இக்கட்டுரைத் தொடரில் புத்தி புத்தன் என்ற அடிப்படையில் பயன் படுத்தப்படுகிறது என்று வாசக நேயர்கள் அறிய வேண்டுகிறோம். அறிவு - Knowledge என்பதிலிருந்து - To Know என்பதிலிருந்து - அறிதல் என்பதிலிருந்து அய்ம்புலன்களால் அறிவது அய்ந்தறிவு. இவைகளை நம் மூளையில் பகுத்தறிவது பகுத்தறிவு, படிப்பறிவு, பட்டறிவு, பொது அறிவு, ஒத்தறிவு என்று அறிவுகள் பலப்பல.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை அறிவு. ஆனால் புத்தி என்பது பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த பின் அடையும் ஓர் உயர்நிலை Wise - Wisdom - புத்தி அது அறிதலோடு அடுத்து எப்படி நடந்தால் உறு பயன் விளையும்; ஆபத்திலிருந்தோ, தீமையிலிருந்தோ தப்பிப்பது எப்படி என்று எளிமையாகக் கூற வேண்டு மானால் அறிவின் விளைச்சல் - புத்தி என்று கூறலாம். எனது சிற்றறிவுக்குப் பட்ட விளக்கம். (ஏற்போர் ஏற்கலாம்; தள்ளுவோர் தள்ளலாம்).
புத்தரின் உள்ளத்தின் புத்தியை நாம் தூய்மைப்படுத்தப்பட்ட நீரினை மொண்டு குடிப்பதுபோல, ஆரோக்கியமான முறையில் சமைத்து வைக்கப்பட்ட அறிவுப் பசிக்கான சத்துணவினை மென்று அசை போட்டு விழுங்குவதுபோல இந்தக் கட்டுரைத் தொடரை, வாழ்வில் செல்வம் பெற வாய்ப்புக்குரிய படிக்கட்டு களாகப் பயன்படுத்தி புத்தனின் புத்திக் கூர்மையை அறிந்து, உணர்ந்து, உள் வாங்குங்கள்!
விளக்கவுரை நீண்டு விட்டதல்லவா?
செய்திக்கு வருவோம் -
புத்தர் காத்திருக்கிறார்! இதோ புத்தர் பேசுகிறார்:
"புத்திக் கூர்மையோடு நடந்து கொள்ளும் எவரையும் எந்தத் தொல்லை துன்பமும் எளிதில் நெருங்கி விடாது. எது போல தெரியுமா? எந்த வெள்ளமும் நெருங்க முடியாத தனித் தீவு போல!"
"புத்தறிவுடன் (புத்தி கூர்மை) உள்ள எவரையும் எந்த சோதனையும் கலங்க விடாது. எந்த விலங்குகள் மாட்டப்பட்டாலும் அந்தத் தீயில் அவைகள் தானே நொறுங்கி விடும். புத்தி தீயிக்கு அதனை நொறுக்கும் ஆற்றல் உண்டு. அந்த நிலைதான் நான் கூறும் முழுமை அடைந்த நிலை - 'நிர்வணா!' சிலர் கூறுவது போன்று தவறான விளக்கங்களைப் புறந் தள்ளி விடுங்கள்.
பல்வேறு துன்ப அனுபவங்களை அந்த புத்தியால் - சகிப்புத் தன்மையால் - உள்ள உறுதியால் தாண்டியவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? பல தடைகளைத் தாண்டி மலை உச்சிக்குச் சென்ற பிறகு கடந்து வந்த துன்ப சோதனைகளை - மகிழ்ச்சி பொங்க உற்று நோக்கி - அந்த ஆனந்தத்தை அனுபவிப்பவன் போன்றவன் ஆவான்!"
எதிலும் கட்டுப்பாடான வாழ்க்கைதான் வெற்றியின் பாதை. மறவாதீர்!
(புத்தர் மீண்டும் வருவார்)
- விடுதலை நாளேடு, 8. 6. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக