எதிர்வினை எண்ணங்களை மனதிலிருந்து அப்புறப்படுத்தி, ஆக்கப் பூர்வ சிந்தனைகளே ஆளும் மனங்களாக, நமது மனங்களை மாற்றிக் கொள்ளப் பழகிவிட்டால் மகிழ்ச்சியும், மனநிறைவும் எப்போதும் ஊற்றாகப் பீறிட்டுக் கிளம்பும் - "ஆர்ட்டீஷியன் கிணறுகள்" போல!
அடுத்து, வாழ்க்கை நெறியில் வெற்றி விளைந்திடச் செய்ய ஓர் எளிய வழி என்ன தெரியுமா?
எது மிகவும் தேவையானது? (Essential)
எது வெகு அற்பமானது? (Trivial)
என்று பகுத்துணர்ந்து, அணைத்துப் பெருக்க வேண்டிய தேவைக்கு முன்னுரிமை தருவதும், அலட்சியப்படுத்தி அப்புறப்படுத்தப் பட வேண்டிய அற்பச் செயல்களை விலக்குவது என்றும் பகுத்துப் பார்த்து வாழ்வதுதான் முக்கியம்.
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்புதான் மனித வாழ்க்கை! எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் வாழ்வில் ஒரு சில தவறவும் கூடும். அது இயற்கை.
அதில் எது வெகுச் சாதாரணமோ - அற்பமோ - அதனை இழப்பதுபற்றியோ, அதை அடையவில்லையே என்றோ கவலைப்பட்டு, மகிழ்ச்சிக்குரியதைப்பற்றிக் கொண்டு, அதை அனுபவிக்க முடியாத நிலையில் சோகத்தோடு எப்போதும் உள்ளனர் பலர் - அவர்களே மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்.
சுயநலச் சிந்தனையும், வேட்கையும், தவறானவையும் அதனை அடையச் செய்ய குறுக்கு வழி, கோணல் புத்தியைக் கொடுத்து 'வெறி' கொள்ளச் செய்யும்.
'வெறி'த்தனமான நியாயமற்றவைகளை எப்படியும் அடைந்தே தீருவது என்ற சுயநல முடிவுகள் மீள முடியாத பள்ளத்தில் மனிதர் களைத் தள்ளி விடுவதை நாம் பலரது வாழ்க்கையை, அவதிகளைக் கண்டு பாடம் படிக்க கற்றுக் கொள்ள வேண்டாமா?
பல்லாயிரம் கோடிகளைக் குறுக்கு வழியில் - ஊழலை உரிமைப் பொருளாக்கிக் கொள்ளையடித்தவர்கள் ஆறடி மண்ணுக் குள்ளோ அல்லது நவீன உலக மின்மயானத்தில் சில மணித்துளிகளில் சாம்பல் துகள்களாகவோ மாறி விட்ட நிலையில், பரந்த பங்களாக்கள், திறந்த பாதுகாப்புப் பெட்டகம், விலை உயர்ந்த 'நகை நட்டுகள்', ஆடம்பரப் பொருள்கள் அவர்களை எவ்வளவு ஏளனத் தோடு பார்த்துத் தலை குனியாமலா இருக்கும்? சற்று ஆற அமர்ந்து சிந்தித்து விடை காணுங்கள்.
இறுதியில் அவர்களைச் சுமந்த 'பாடை'கூட அவர்களோடு புதைவதோ, எரிவதோ இல் லையே, அவைகளும்கூட அவர்களை இறுதி யில் கைவிட்டு வழியனுப்பி விட்டுப் பிரிந்தே செல்கின்றன - இல்லையா? பின் ஏன் இப்படி ஆலாய்ப் பறந்து - ஆலகால செல்வத்தை அமுதமாகக் கருதிச் சேர்த்துக் கடைசியில் "பாடம்" கற்றுக் கொள்ள வேண்டுமா? அதே செல்வத்தை அவர்கள் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்திட ஏற்பாடு செய்து விட்டால் கெட்ட பெயராவது குறைந்தபட்சம் நீங்கும்! அவலம் விலகும்! ஊருணியானால் ஊருக்குப் பயன்படுமே!
புத்தர் இப்படி இடித்துரைக்கிறார்: "பலரும் வேதங்களைப் படித்து - மனப்பாடம் செய்வது மட்டுமே இவர்கள் புத்தியைத் தீட்டி, மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்து விடாது!
பசு மாடுகளை மேய்ப்பவர்கள் தங்கள் மாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த வர்களின் மாடுகளையே பற்றி சர்வ காலமும் எண்ணிக் கொண்டே இருந்து தங்கள் வசம் காணாமற்போன மாடுகளைக் கணக்கெடுக்க மறந்து போனவர்களாகி விடுகிறார்களே" என்றார்.
எனவே, வேதங்கள் புனித நூல்களைப் படிப்பதனால்மட்டுமே புத்தியை (Wisdom) அவர்கள் பெற்றுவிட முடியாது! தங்களது சுயநலத்தைத் துறந்து, பொது நலத்தொண்டர் களாகி - தனக்கெனவாழ பிறர்க்குரியவர் களாகும்போது அனுபவம் - பெரிய புத்திக் கொள்முதலை எது நமக்குத் தரும் என்றால் நமது சுயநலத் துறப்புதான்! மறவாதீர்.
அடுத்து, "உங்கள் மனம் எப்போது சுறுசுறுப்புடனும், புத்திக் கூர்மையுடன் - எப்படி ஒரு பந்தயக் குதிரை மற்ற சோம்பல் உள்ள, சுறுசுறுப்பற்ற சோணகிரி குதிரைகளை என்றும் முந்திக் கொண்டு 'பறக்கிறதோ' அதுபோல பாய்ச்சலுக்குத் தயாராகும் பக்குவத்தோடு மனதை வைத்திருந்து வாழப் பழகிக் கொள் ளுங்கள் தோழர்களே!" என்று கூறுகிறார் புத்தர்.
மனிதனுக்குரிய முதல் எதிரி - வெளியிலிருந்து வருவதில்லை; அவனது சோம்பல் மூலமே அவனை அழிக்க, பின்னுக்குத் தள்ளி, "தண்டனை" பெற ஏற்பாடு - தானே ஒருபுறம் நடைபெற்றே வரும்.
எனவே, சோம்பேறியாக, செயல்களைத் தள்ளிப் போடுவது, எப்போதும் தூங்கி வழிவது, எதிலும் ஒரு தெளிவு, ஈடுபாடு, தன்னம்பிக்கை, பிடிப்பு இன்றி "ஏனோதானோ" வாழ்வு நடத்துவது நம்மை துன்ப நுகத்தடியில் கட்டி விட்டு, துயரத்தை அறுவடை விளைச்சலாகத் தரும் என்பது உறுதி.
(மீண்டும் விழித்திருப்போம் புத்தரைக் காண)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக