பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2019

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)



புத்தருடைய வாழ்க்கை நெறியில் - முதுமை என்பதைவிட முதிர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது!  வயதாவது என்பது நாம் பிறந்த அன்றே துவங்கிய இயற்கை நிகழ்வு.

நம்மை முதுமை தாக்குவதற்கு முன்பே, நமது வாழ்வின் குறிக்கோள், நோக்கம் என்பதை நோக்கிய நம் பயணம் வெகு சீராக அமைதல் வேண்டும்.

முதுமையின் காரணமான செயலற்ற தன்மைதான் மரணம்! உற்சாகத்துடன், பயணம் செய்பவர் களுக்கு தூரம் தொலை தூரமாகத் தெரியாது; களைப்பு, சோர்வு, சலிப்பு, உற்சாகமின்மையோடு நடப்பவ ருக்கோ, ஓடுபவருக்கோ தான் சாலைகள் வெகு நீண்டதாகத் தெரியும் - இல்லையா?

எப்படி ஒரு விவசாயி தனது பயிர் களுக்குப் பாய்ச்ச வேண்டிய நீரை பாத்தி கட்டி, பகுத்துப் பிரித்து, அனைத்து நாற்றுக்களுக்கும் நீர் வசதி கிடைக்கப்படும் நிலையை உருவாக்குகிறாரோ, அதுபோலத் தான், நல்ல புத்திமான் தனது இலக்கில் சரியாக பயணிக்க வேண்டியவற்றைப் பகுத்து அறிந்து எண்ணவோட்டத்தை செலுத்திவெற்றியை அடைகிறார்!

நல்ல தச்சன் எப்படி மரங்களை சரியாக அறுத்து திட்டமிட்டு செதுக்கி, விரும்பும் பொருட்களை கலைநயத்தோடு செய்கிறாரோ, அதுபோல கூர்மையான புத்தியைச் செலுத்து வோர் தங்கள் மனதைச் சிந்தவிடாமல்  செயலாகச் செதுக்கி வெற்றி பெறுகிறார்கள்!

பக்குவமற்ற - சரியான முதிர்ச்சியற்ற மனிதன் என்பவன் இயல்பாகவே சுயநல வாதியாக அமைந்து விடுகின்றான்!

சுயநலம் - முதலில், பரிசு பெற்றவனைப் போல அவர் மகிழ்வு கொள்ளச் செய்து - இறுதியில் மன அமைதியை இழந்து, துன்பம், துயரம் எல்லாவற்றிற்கும் ஆன படுகுழியில் நம்மைத் தள்ளி விடுகிறது என்பதே மனித வாழ்வின் அனுபவம் ஆகும்!

சிறந்த புத்திசாலியும், பாராட்டத்தகுந்த, போற்றத்தக்க குணங்களைக் கொண்ட குணவான்களாகவும் வாழ்வில் எப்போதும் திகழ வேண்டும் என்று விரும்பும் ஒருவர் அதை அடைய வழி என்ன?

இதோ புத்தர் விடையளிக்கிறார்! அதோடு எளிய வழி முறையும்கூட கூறுகிறார்!

"எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள்! பயனற்ற வார்த்தைகளை ஒரு போதும் பேசாதீர்கள்!!"என்கிறார் புத்தர்.

நன்மை, தீமை, இன்பம், துன்பம் போன்ற ஒன்றுக்கொன்று எதிர்மறையான வாய்ப்பு களும், நிகழ்வுகளும் வாழ்க்கையில் ஏற்படும் போதெல்லாம் ஒரேவித மனநிலை - தந்தை பெரியார் கூற்றை நாம் முன்பே சுட்டிக் காட்டியுள்ளோம்! "வாழ்க" என்ற போதும் மகிழாதே! துள்ளாதே! ஒழிக என்ற போதும் கலங்காதே! - கண்ணீர் விடாதே! புன்னகை யோடு சம மனநிலையோடு அவைகளை ஏற்கப் பழகிக் கொள்ளுங்கள்!

அது அவ்வளவு எளிதல்ல. நீண்ட கால மனப்பயிற்சி, பக்குவம், முதிர்ச்சி காரண மாகவே சாத்தியப்படும்!

என்னைப் பொறுத்தவரை, அதிகமான மகிழ்ச்சி செய்தி வரும்போது, அதன் விளைவு கண்டு மகிழும் அதே நேரத்தில், அடுத்து வரவிருக்கும் துன்ப, துயர அதிர்ச்சி செய்திகளுக்கும் ஆயத்தமாகவே இருப்பேன்!

தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவ னாக விழுமிய பலன்களில் இதுவும் ஒன்று!

இமயமே பெயர்ந்துவிழப் போகிறது சற்று நேரத்தில் என்ற செய்தி வந்தால் - பதறுவதனால் அதை சரிப்படுத்தித் தடுத்திட முடியுமா?

விழுந்தபிறகு ஏற்படுத்திய சேதாரத்திற்கு மீள் நடவடிக்கையை எப்படி மேற்கொள் ளுவது? எதற்கு முன்னுரிமை? என்று பகுத் தறிவுக்கு முழு வேலை கொடுத்து, பட்டறிவினையும் துணை கொண்டு, ஒத்தறிவு மனப் பான்மையுடன் அணுகி, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, நம் சமுதாயத்தை, நாட்டை, சக மக்களை அதன் தீய விளைவிலிருந்து மீட்டெடுக்க நமது எளிய பங்கு எப்படி அமைய வேண்டும் என்பதுதானேசரியான அணுகு முறையாக இருக்க முடியும்.

அனுபவத்தில் வெற்றியையும் அது தந்தது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு - டெல்லி பாம் நொலியில் பழைய பெரியார் மய்யம் அநியாய மாக சட்ட விரோதமாக இடித்ததும்; அதை எதிர்கொண்டு மீண்டும் புதிய பெரியார் மய்யம் எழுந்ததும் தான்  இல்லையா  தோழர்களே!

- விடுதலை நாளேடு, 13.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக