பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2019

புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (4)



புத்தரது அறவுரைக் கருத்துக்களைக் கொண்ட தொகுப்பான 'தம்மபதம்' என்ற நூலில் இப்படிக் கூறுகிறார்:

"புத்திமான் ஆன ஒருவன், தனது எண் ணங்களை எங்கே அது  செல்ல வேண்டுமோ அங்கே செலுத்தத் தயங்க மாட்டான்.

பயிற்சியால் பண்படுத்தப்பட்ட (கட்டுப்பாட் டால் பதப்பட்ட) அவனது சிந்தனை - எண்ண வோட்டம் அவனுக்கு நல்ல உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது உறுதி.

யாருடைய மனம் அமைதியற்று, நிலையற்று கண்ட இடங்களில் எல்லாம் தாவுகிறதோ, எந்தக் குறிக்கோளுமின்றி அலைபாய்ந்து அல்லாடு கிறதோ அவர்கள் ஒருபோதும் புத்திமானாக  (Wise Person) இருக்க முடியாது!

புத்திமான் மனிதனின் மனம் - உள்ளம் எப்போதும் அமைதியாகவும், ஒரே நிலையில் உறுதியாகவும் நிற்கும் - எந்த சூழ்நிலையிலும்!

அத்தகைய மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் நல்ல அல்லது கெட்ட நிகழ்வுகள், இன்ப - துன்பங்களில்கூட மனதை ஒரே சீரானதாகவும், பதற்றமற்றதாயும் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்களாகவே இருப்பார்கள்!

இக்கட்டான நேரங்களில்கூட அத்தகைய புத்திமான்கள் (wise) பயத்திலிருந்து விடுபட்ட வர்களாகவும், எதையும் சந்திக்கத் தயாரான மனநிலை உள்ளவர்களாகவே திகழுவார்கள்.

இன்பம் - துன்பம், ஒரு செயலில் வெற்றி - தோல்வி - மகிழ்ச்சி - துயரம் - எது வந்தாலும் இதனை சம நிலையிலேயே வைத்துப் பார்த்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவார்கள்!" என்கிறார் புத்தர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பல முறை பேசியுள்ளார்.

"நீங்கள் வாழ்க, வாழ்க என்று என்னை வாழ்த்தும் போது, நான் ஒருபோதும் மகிழ்ந்த தில்லை. காரணம் - இந்த வாழ்த்துக்களைவிட என்னை 'ஒழிக' 'ஒழிக' என்று கூறி வைபவர்கள் - அதிகம். அதற்காக நான் பெரிதும் வருத் தப்பட்டு மூலையில் முடங்கிவிட வேண்டிய நிலை அல்லவா வரும்!

எனவேதான் நான் வாழ்க என்பதிலும் மகிழ்வும் கிடையாது; ஒழிக என்று சொல்லும் போதும் வருத்தப்பட்டதுமில்லை; இரண்டும் எனக்கு ஒன்றுதான்!" இதுதான் புத்தர் கூறிய சமனியப் பார்வை! இது புத்திமான்களின் பக்குவம் மிகுந்த வாழ்க்கை முறையாகி விட்டால் அவர்களை யாரும் எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாதல்லவா?

புத்திமான் ஆன ஒருவன் எப்படி வில்லையும், அம்பையும் எடுத்து வில் வித்தையால் இலக்கை மட்டுமே பார்த்துத் தனது வில்லினால் நாணேற்றி  அம்பை எய்துகிறோனோ அதுபோல உங்கள் வாழ்வில் இலக்கை நோக்கி மட்டுமே எண்ணங்கள் பாயப்படும்; மற்ற திசைகளில்  உங்கள் கவனத்தைத் திருப்பினால் இலக்குப் பார்வை தடுமாறும்; திசைமாறும்!

இலக்கு நோக்கிய வில்லாளனுக்கு அது மட்டும்தான் தெரிய வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பு இவனுக்கு வர முடியும்.

ஒரே நேரத்தில் பற்பல விடங்களில் நமது சிந்தனைகள்  - எண்ணங்கள் - பாயத் தொடங்கு மானால் - சிதறுமானால் அதிலும் வெற்றி அடைய முடியாது!

தீய சிந்தனைகள் - எதிர்மறை எண்ண வோட்டங்கள் புக முடியாத எஃகு கோட்டையாக உங்கள் மனங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்!

சபலங்கள் இடைஇடையே குறுக்கிடும்; உறுதியற்ற மனம் - ஊசலாடும் உள்ளம் - நம் வைராக்கியத்தினை உரசிப் பார்த்தால் அது பொசுக்கப்பட்ட குப்பையாக்கப்படவேண்டும்.

தெளிவும், அச்சமற்றத் துணிவும் ஒருபோதும் மனங்களை ஊசலாட வைக்க முடியாது.

எனவே சரியான இலக்கைத் தேர்வு செய்து அம்பை ஏவுங்கள். அம்புகள் வளைந்து செல்லாது (புராணங்களின் புளுகுகளில்தான் அப்படி ஒரு கற்பனை) உண்மை வாழ்வில் எந்த அம்பும் நேர்கோட்டில் தான் செல்லும் - அது போல மனம் செல்லட்டும்!

-  விடுதலை நாளேடு, 9.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக