பக்கங்கள்

புதன், 4 செப்டம்பர், 2019

இதோ, ஒரு நன்றியால் உயரும் நாயகர்!



வள்ளுவரின் குறளில் அடிக்கடி நான் பயன்படுத்தும் ஒரு குறள்;
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
(குறள் 783)
சிறந்த நண்பர்களும், அரிய கருத்துக்களைக் கூறி நம் சிந்தனையைக் கிளறிவிடும் புதுமை நூல்களும் எப்போதும் மகிழ்வையும், மன நிறைவையும் தரும்.
எத்தனை முறை பழகினாலும் சிறந்த நண்பர்கள் கசப்பாகி விட மாட்டார்கள்; அதுபோல் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பைத் தராமல், புத்துணர்வையே தரும் பல புத்தகங்கள்.
அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற பச்சைத் தமிழரான டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன் - ARL(J) என்று சிலரால் அழைக்கப்படும் நல்ல இலக்கியவாதியும் கூட, நீதித்துறையில் சட்ட நிபுணர் என்பதையும் தாண்டி.
எல்லாவற்றையும்விட அவரது தனிச் சிறப்பு, அவர் ஒரு மாமனிதர். அவர் அண்மையில் அனுப்பிய மூன்று புத்தகங்களும் படிப்பவருக்கு புத்தாக்கத்தைத் தரும் அறிவுத் தூண்டல் கருவிகளாகும்!
பல்வேறு வரலாற்றுச் செய்திகளும், மற்ற நூல்களில் மறைக்கப்பட்ட செய்திகளும், இந்த நன்றி காட்டும் நற்பண்பின் உறைவிடமான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களின் உரையில் ஆழ்கடலிலிருந்து  வெளி வந்த முத்துக்களானவையாகும். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்ன செய்தது நாட்டுக் கும், மக்களுக்கும் என்போருக்குச் சரியான பதில் தரும் கட்டுரை ஒன்று இதோ:
நாங்கள் நீதிபதியானது திராவிட இயக்கத்தால் தான்!

[சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை, 'விடுதலை' நாளிதழில் வெளிவந்த செய்தி]

"சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம். ஆர். ராதா மன்றத்தில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு நிறைவு விழா வரலாற்றுச் சிறப்புடன் - அது தோற்றுவிக்கப்பட்ட அதே தேதியில் (20.11.2016) நடைபெற்றது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் (20.11.2016) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பெருமைப்படுத்திய மேனாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்பாளர் டாக்டர் ஏ. ஆர். லெட்சு மணன் அவர்கள் "நாங்கள் நீதிபதியானது திராவிட இயக்கத்தால் தான்" என்று பெரு மிதமாக சொன்னார்.
ஏதோ அழைத்தார்கள் பங்கு கொண்டோம் என்பதற்காக பேசப்பட்ட கருத்தோ - தகவலோ அல்ல. நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் சென்னை மாநிலத்தின் நிலை என்ன?
அய்.சி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கு இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஏக காலத்தில் தேர்வுகள் நடத்த வேண்டுமென்று கிளர்ச்சி செய்தபோது 1916ஆம் ஆண்டில் சென்னை நிருவாக சபை உறுப்பினராக இருந்த சர் அலெக்சாண்டர் கார்ட்யூ பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் அளித்தபோது, அவ் வாறு ஏகக் காலத்தில் நடத்தப்பட்டால், ஒரு சிறு சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களே அப்பரீட் சையில் அதிகமாக வெற்றி பெறுவார்கள். சிவில் சர்வீஸ் பிராமணமயமாகி விடும். மற்றும் மாகாண சிவில் சர்வீசுக்கு 1892 - 1904 வரை நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 16 பேர் களில் 15 பேர் பார்ப்பனர்கள் என்று கூறினார். அதே காலத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 21 பேர்களில் 17 பேர் பிராமணர்கள். 140 துணை ஆட்சியாளர்களில் (Deputy Collectors) 77 பேர் பிராமணர்கள், 30 பேர் பிராமணரல்லாதார், பாக்கிப் பேர் முகமதியர்கள், இந்தியக் கிறித்தவர், அய்ரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர். நீதி இலாகாவிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்தது. 1913இல் பணியில் இருந்த 128 முன்சீப்புகளில் 93 பேர் பிராமணர், 25 பேர் பிராமணரல்லாதார், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்தவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் என்று சென்னை நிருவாக சபை உறுப்பினர் அலெக்சாண்டர் கார்ட்யூ அதிகாரப் பூர்வமாக எடுத்து வைத்த புள்ளி விவரங்களைக் கருத்தூன்றிக் கவனித்தால், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி டாக்டர் ஏ.ஆர்.எல். அவர்கள் தெரிவித்த கருத்தில் தெறித்த உண்மையின் கனபரிமாணம் எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே! (நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் நீதிக் கட்சியின் தாக்கத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியானவர் - மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ் கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையை நீக்கியவர் அன்றைய சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் பனகல் அரசர் என்பதையும் நினைவூட்டினார். இந்து அற நிலைய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட் டதும் பனகல் (ராமராயநிங்கர்) ஆட்சியில்தானே!
அன்றைக்கு நீதிக்கட்சி இன்றைக்குத் திராவிடர் கழகம் இவற்றின் செயல்பாட்டால் தான் நாம் நாமாக இருக்கிறோம்.
ஒரு கால கட்டம் இருந்தது, குறிப்பிட்ட பிரிவினர்தான். எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினர்.
'இந்த இயக்கம் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் நீதிபதிகளாக ஆகி இருக்க முடியுமா?' என்று உணர்வு பூர்வமாக மாண்பமை நீதிபதி அவர்கள் குறிப்பிட்டபோது அரங்கமே அதிரும் வகையில் கரஒலி எழுந்தது. (நன்றி உள்ளவன் தான் மனிதன்; நன்றி இல்லாதவன் புழுப் பூச்சிக்குச் சமம் என்றவர் தந்தை பெரியார்' குடி அரசு 23.10.1943)
அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டினார். "திராவிடர் கழகத் தோழர்கள் டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்கள் - அவர்கள் ராஜஸ்தானில் நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது எனது அலுவலகத்துக்கு வந்தார்கள்.
எனது உதவியாளருக்கு ஒன்றும் புரியவில்லை . கருப்புச் சட்டை அணிந்தவர்கள் பெருந் திரளாக கூடியிருக்கிறார்களே என்ற பயம் ஒரு பக்கம். என்னிடம் ஓடி வந்து சொன்னார் என் உதவியாளர்.
நான் புரிந்து கொண்டேன் வந்தவர்களில் ஒரு சிலரை வரவழைத்துப் பேசினேன். வேண்டிய உதவிகளைச் செய்யச் சொன்னேன்.
தனி ரயிலில் அவர்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலையில் ரயிலில் தண்ணீர் நிரப்பப்படவில்லை என்ற தகவலை என்னோடு தொடர்பு கொண்டு தெரிவித்தபோது, எனது உதவியாளர் மூலம் ரயில்வே பொது மேலாளருடன் தொடர்பு கொண்டு, உடனே தண்ணீரை நிரப்பச் செய்தேன் என்றார். ஊர் திரும்பியதும் அவர்கள் மறக்காமல் எனக்கு நன்றியும் தெரிவித்தார்கள்." கடைசியாக முத்தாய்ப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப்பற்றி அவரின் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.
"84 வயதிலும் ஓயாது உழைத்துக் கொண்டு இருக்கிறார். நான் மிகவும் மதிக்கும் தலைவர் நமது தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்.
ஒரு முறை தஞ்சாவூர் வல்லம் பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். அப்பொழுது பெரியார் சிலையைத் திறக்கக் கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன்."
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ. ஆர். எல். அவர்கள் தொடக்கத்திலேயே இதுபற்றிக் குறிப்பிட்டார்கள்.
நீதிக்கட்சியின் குறிக்கோளை நீதிபதி அவர்கள் மிக நேர்த்தியாகக் குறிப்பிட்டார். "எல்லோருக்குமான நீதி - எவருக்கும் இழைக் கப்படாத அநீதி" (Justice for all and injustice to none)  நீதிபதி அல்லவா - செறிவான கருத்தினை சரியாகப் பொறுக்கி எடுக்கப்பட்ட சொற்களாம் தேன் குப்பியில் குழைத்துக் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
அக்கட்சி நடத்திய ஏடுகள் எல்லாம் பட்டியலிட்ட நீதிபதி அவர்கள், அக்கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் அதன் விளைவுகளையும் எடுத்துக் கூறினார். பஞ்சமர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கும் உரிமை, பொதுக் கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை, பேருந்துகளில் பயணம் செய்யும் உரிமை, கல்விக் கூடங்களுக் குச் சென்று கல்வி கற்கும் உரிமைகள் எல்லாம் நீதிக்கட்சி ஆட்சியால் கிடைக்கப் பெற்ற அரும் பலன்கள் என்று பட்டியலிட்டுக் காட்டினார்.
தான் இந்த நிலைக்கு உயர்ந்தது குறித்தும் ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்தார். "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வீராசாமி அவர்களின் தந்தையார் ஒரு நாட்டு வைத்தியர். தேவகோட்டையில் நாங்கள் இருந்த தெருவில்தான் வசித்து வந்தார். அவர் மகனான வீராசாமி அவர்கள் நான் படித்த பள்ளியில் தான் படித்தார். அப்பள்ளியின் பழைய மாணவர் சங்க செயலாளர் என்ற முறையில் நீதிபதி வீராசாமி அவர்களை நான் அழைத்திருந்தேன். அப்பொழுது எங்கள் வீட்டில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அப்பொழுது என் தந்தையாரிடம் நீதிபதி கேட்டார்? "உங்கள் மகன் லெட்சுமணன் பி. ஏ, பி. எல். என்று போடப்பட்டுள்ளதே அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?" என்று கேட்டார். "அவன் எங்களின் மூத்த பையன், 16 ஊர்களில் எங்களுக்கு வியாபாரம் இருக்கிறது. அதைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான்" என்று என் தந்தையார் கூறியபோது சென்னைக்கு அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன் பேரில் சென்னை சென்றேன். இதுவே என் வாழ்வில் திருப்பம்!
நீதிபதி அவர்களின் வழிகாட்டுதல்படி வழக் குரைஞர் ராமானுஜம் அவர்களிடம் ஜூனியராக பணியாற்றினேன். தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்குரைஞரானேன். 1990இல் உயர்நீதிமன்ற நீதிபதியானேன். எட்டரை ஆண்டுகள் தமிழ் நாட்டிலும் பின்னர் கேரளம், ராஜஸ்தான், ஆந்திரம் முதலிய மாநிலங்களில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பிறகு உச்சநீதிமன்றத் திலும் நீதிபதியாக இருந்து. ஓய்வுக்குப் பிறகு சட்ட ஆணை யத்தின் தலைவராகவும் பணி யாற்றியுள்ளேன். பெரும்பாலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்; ஆனால் தலைமை நீதிபதியாக இல்லாதிருந்த நிலையில் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டேன்.
சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்து 32 பரிந்துரைகளை சமர்ப்பித்தேன்" என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
தனது பணியில் மன நிறைவு அடைந்த ஒன்றைக் குறிப்பிட்டார். முல்லைப் பெரியாறு அணை பற்றியது அது. "அந்தக் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் நான் அங்கம் வகித்தேன். அந்தக் குழுவில் அய்வர் இடம் பெற்றிருந்தனர். பல முறை அணையைப் பார்வையிட்டு அணை பலமாகவே உள்ளது. 132 யிலிருந்து 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற எங்களின் பரிந்துரை ஏற்கப்பட்டது. 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் எட்டு மாவட்ட மக்களுக்குத் தண்ணீர் வழங்கிய திருப்தியுடன் இன்று வரை இருக்கிறேன்" என்று குறிப்பிட்ட நீதிபதியவர்கள் 1,36,000 தீர்ப்புகளை வழங்கி இருக்கிறேன். எனது பல தீர்ப்புகள் சட்ட நூல்களில் பதிவாகி இருக்கிறது என்று பெருமைப் பொங்க குறிப்பிட்டது நமக்கும் பெருமை தானே!
ஒரு தமிழனின் பெருமை மற்ற தமிழனுக்கும் பெருமை என்ற உணர்வை ஊட்டியவர் அல்லவா நமது தந்தை பெரியார்.
"ராஜஸ்தானில் தலைமை நீதிபதியாக இருந்தபோது அவர் என்னை அழைத்திருந்தார். அப்பொழுது பெரியார் சிலையைத் திறக்கக் கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன்.
என்னிடம் சிலர்கூட அப்பொழுது கேட் டார்கள். "பெரிய பதவியில் இருக்கக் கூடிய நீங்கள் பெரியார் சிலையைத் திறக்கச் செல்லு கின்றீர்களே" என்று கேட்டனர். 'அட போங் கய்யா அவர் இல்லை என்றால் நாம் இல்லை' என்று அவர்களிடம் சொன்னேன்" என்று மேனாள் நீதிபதி அவர்கள் சொன்ன பொழுது கூடியிருந்த ஒவ்வொரு பார்வையாளரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.
நான்காம் வகுப்பைக்கூட சரியாகப் படித்து முடிக்காத ஒருவர் கடைகோடி மனிதர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை உள்ளங்களில் நீக்கமற நன்றி மலராக மணந்தார் என்றால், இந்தச் சாதனைக்கும் பெருமைக்கும் உரிய உலகத் தலைவர் தந்தை பெரியார் அன்றோ ! அந்தத் தலைவர் மறைந்த 43 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் நாள்தோறும் நினைக்கப்படுகிறார் - போற்றப்படுகிறார். ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்றால் நம் அய்யாவுக்கு நிகர் அய்யாவே!"
டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன் திராவிடர் இயக்க முன்னாள் உறுப்பினரோ, மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தவரோ அல்ல; என்றாலும் அவர்கள் உயர்வதற்கு எப்படி பொது நலன் - சமூகநீதி கருதி பெரியார் இயக்கம் ஏணியாய், தோணியாய் உதவியது என்பதைப் புரிந்து கொள்ள தக்க சாட்சியம் உச்சநீதிமன்ற (ஓய்வு) நீதிபதியே என்பதைப் புரிந்து கொள்ள அரிய வாய்ப்பு - நூலாசிரியருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
-  விடுதலை நாளேடு, 4.9.19

திங்கள், 2 செப்டம்பர், 2019

இதோ ஒரு மறதி நோய்க்கு மாமருந்து!

கி.வீரமணி
முதுமையில், வயதானவர்கள் பாதிக்கப் படுவது பெரிதும் ஒரு வகை மறதி நோயால்தான்! அதில் இரண்டு அல்லது மூன்று வகை உண்டு என்று மருத்துவர்களும், மருத்துவ ஆய்வாளர் களும் விளக்குகிறார்கள்.
Dementia என்ற மறதி நோய்பற்றி பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு ஏடான  'PLOS  Medicine' என்ற ஏட்டில், சில அரிய தகவல்கள், ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்டுள்ளன.
பிரிட்டனில் யாரெல்லாம் தங்களது முதுமை தொடங்கும் 50 முதல் 60 வயதுள்ள கால கட்டத்தில்  வெறும் தனிமையில், அதிகம் பிற ருடன் கலகலப்பாக நண்பர்களோடு இணைந்து பழகாமல் இருக்கிறார்களோ, அவர்களை இந்த மறதி நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு என்று கண்டறிந்து கூறுகின்றனர்!
இதுபற்றி 35 வயதுள்ள வாலிபர்கள் தொடங்கி 55 வயதுள்ள இளம் முதியவர்கள் ஆகியவர்களில் 10, 228 பேர்களை கடந்த 28 ஆண்டு காலம் தொடர்ந்து ஆய்வு செய்து - அவர்களது உடல் நலம் - மனநலம் பற்றி ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவு அடிப்படையில்  சமூக உறவுகளோடு, நல்ல நட்புறவு வட்டத்தை - தங்கள் ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட - கொண்ட நண்பர்களுடன் கலகலப்புடன் பழகி வாழ்ந்து வந்தால் நிச்சயம் அவர்களுக்கு மறதி நோய் மட்டும் வராது - ஏன் மாரடைப்பு போன்ற நோய்களும்கூட வர வாய்ப்புக் குறைவு.
மன அழுத்தம் இல்லாமல் மனம் விட்டுப் பேசி, எப்போதும் கலகலப்புடன் வாழும் முதியோர்களுக்கு ரத்த அழுத்தம் கூட  (B.P.) ஏற்படும் வாய்ப்புக் குறைவுதானே!
மேலே காட்டியுள்ள 10 ஆயிரத்திற்கு மேற் பட்ட நண்பர்களின் 28 ஆண்டு கால தொடர் வாழ்க்கை எப்படி அமைந்தது; மகிழ்ச்சியும் கலகலப்பும் அவர்களை எப்போதும் உற்சாக மாக வைத்திருக்கிறது. ஓய்வு, முதுமை என்ற பெயரில் தனிமைச் சிறையில் தங்களை அடைத்து, வாழ்வைக் குறைத்துக் கொள்ளுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
தங்களுடைய நெருங்கிய நண்பர்களைத் தினமும் சந்தித்து உரையாடி மகிழும் பழக்கமும் வழக்கும் வைத்துள்ளவர்களாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அத்தகையவர்களுக்கு 12 சதவிகிதம் பேர் களுக்கு மறதி நோய் தாக்குதல் எளிதில் நெருங்குவதில்லை என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்!
எனவே 'உம்முணாமூஞ்சிகளாக' எதற் கெடுத்தாலும் எரிந்து விழுந்து மற்றவர்கள் நெருங்கவே, பழகவே, அஞ்சி அஞ்சி, ஓடிப் போகும் நபர்களாக இல்லாமல் அன்பும், நட்பும், நகைச் சுவை உணர்வுடன் வாழ்ந்து பழகிட முயற்சியுங்கள்.
இதைவிட மகத்தான மாமருந்து மறதி நோய்க்கு வேறு இல்லை. இதை மறவாதீர்!
- விடுதலை நாளேடு, 2.9.19