கி.வீரமணி
முதுமையில், வயதானவர்கள் பாதிக்கப் படுவது பெரிதும் ஒரு வகை மறதி நோயால்தான்! அதில் இரண்டு அல்லது மூன்று வகை உண்டு என்று மருத்துவர்களும், மருத்துவ ஆய்வாளர் களும் விளக்குகிறார்கள்.
Dementia என்ற மறதி நோய்பற்றி பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு ஏடான 'PLOS Medicine' என்ற ஏட்டில், சில அரிய தகவல்கள், ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்டுள்ளன.
பிரிட்டனில் யாரெல்லாம் தங்களது முதுமை தொடங்கும் 50 முதல் 60 வயதுள்ள கால கட்டத்தில் வெறும் தனிமையில், அதிகம் பிற ருடன் கலகலப்பாக நண்பர்களோடு இணைந்து பழகாமல் இருக்கிறார்களோ, அவர்களை இந்த மறதி நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு என்று கண்டறிந்து கூறுகின்றனர்!
இதுபற்றி 35 வயதுள்ள வாலிபர்கள் தொடங்கி 55 வயதுள்ள இளம் முதியவர்கள் ஆகியவர்களில் 10, 228 பேர்களை கடந்த 28 ஆண்டு காலம் தொடர்ந்து ஆய்வு செய்து - அவர்களது உடல் நலம் - மனநலம் பற்றி ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவு அடிப்படையில் சமூக உறவுகளோடு, நல்ல நட்புறவு வட்டத்தை - தங்கள் ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட - கொண்ட நண்பர்களுடன் கலகலப்புடன் பழகி வாழ்ந்து வந்தால் நிச்சயம் அவர்களுக்கு மறதி நோய் மட்டும் வராது - ஏன் மாரடைப்பு போன்ற நோய்களும்கூட வர வாய்ப்புக் குறைவு.
மன அழுத்தம் இல்லாமல் மனம் விட்டுப் பேசி, எப்போதும் கலகலப்புடன் வாழும் முதியோர்களுக்கு ரத்த அழுத்தம் கூட (B.P.) ஏற்படும் வாய்ப்புக் குறைவுதானே!
மேலே காட்டியுள்ள 10 ஆயிரத்திற்கு மேற் பட்ட நண்பர்களின் 28 ஆண்டு கால தொடர் வாழ்க்கை எப்படி அமைந்தது; மகிழ்ச்சியும் கலகலப்பும் அவர்களை எப்போதும் உற்சாக மாக வைத்திருக்கிறது. ஓய்வு, முதுமை என்ற பெயரில் தனிமைச் சிறையில் தங்களை அடைத்து, வாழ்வைக் குறைத்துக் கொள்ளுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
தங்களுடைய நெருங்கிய நண்பர்களைத் தினமும் சந்தித்து உரையாடி மகிழும் பழக்கமும் வழக்கும் வைத்துள்ளவர்களாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அத்தகையவர்களுக்கு 12 சதவிகிதம் பேர் களுக்கு மறதி நோய் தாக்குதல் எளிதில் நெருங்குவதில்லை என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்!
எனவே 'உம்முணாமூஞ்சிகளாக' எதற் கெடுத்தாலும் எரிந்து விழுந்து மற்றவர்கள் நெருங்கவே, பழகவே, அஞ்சி அஞ்சி, ஓடிப் போகும் நபர்களாக இல்லாமல் அன்பும், நட்பும், நகைச் சுவை உணர்வுடன் வாழ்ந்து பழகிட முயற்சியுங்கள்.
இதைவிட மகத்தான மாமருந்து மறதி நோய்க்கு வேறு இல்லை. இதை மறவாதீர்!
- விடுதலை நாளேடு, 2.9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக