பக்கங்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2019

மிக ஆபத்தான போதை மருந்து - புகழ்!

கி.வீரமணி
போதைப் பொருள்களை அரசு தடை செய்துள்ள போதும், இன்னமும் போதை தரும் பொருள்களான கஞ்சா, குட்கா, அபின் போன்றவைகளை விற்றுக் கொண்டும், லாபமடைந்து கொண்டும்தான் இருக் கிறார்கள்!
'சட்டத்தின் கைகள் நீளம்; சட்டத்தை மீறும் கைகள் அதைவிட நீளம்' என்கிறது ஆங்கிலப் பழமொழி ஒன்று!
பன்னாட்டுப் போதைப் பொருள் கடத்தல், பெரிய கார்ப்பரேட்டுகளையெல்லாம் மிஞ்சிடும் பெரும் கொள்ளைக் கூட்டமாகும். 'மாஃபியா' (Mafia)  என்றும் கூறுவார்கள்!
இளைஞர்கள் - பள்ளி மாணவர்களிடையே 'குட்கா' போன்றவை, 'பான்பராக்' போன்றவைகளை விற்பதற்குத் தடை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழக மாநாடுகளில் எல்லாம் பல தீர்மானங்கள் இயற்றி கிளர்ச்சிகளையும் கூடச் செய்யத் தவறியதில்லை!
இந்தப் போதை மருந்து அதனை எடுப்பவர்களை 'மிதக்கச் செய்தல்', மயங்கிக் கிடக்கச் செய்தல் போன்ற விளைவுகளை உருவாக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதானே!
ஆனால் இந்தப் போதைப் பொருள்களை விட மிகவும் ஆபத்தான போதைப் பொருள் எது தெரியுமா தோழர்களே?
அதுதான் புகழ் போதை!
இந்தப் போதை மிகச் சிறந்த ஆளுமையுள்ள வர்களை, ஆற்றல்மிகு தலைவர்களை எல்லாம் பிடித்துக் கொண்டால் எளிதில் அதிலிருந்து அவர்கள் வர முடியாத "வாழ்நாள் சிறைக் கைதியாக" தங்களைத் தாங்களே அடைத்துக் கொள் கிறார்கள்!
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், அப்போதைப் பொருள் கிட்டாவிட்டால் எந்த கீழிறக்கத்தையும்கூட சந்திக்க வேண்டிய அவலத்தைச் சந்திக்க அவர்கள் முன்பின் யோசிப்பதே இல்லை.
போதை ஏறியவனுக்கு எப்படி சரியாகப் பாதை தெரியாதோ அதே போன்ற நிலைதான் இதுவும்!
ஆசை வெட்கமறியாது; புகழ் போதையோ "இழத்தொறும் காதலிக்கும் சூது" போன்றது. மீண்டும் மீண்டும் தேடி, நாடி, ஒடிச் செல்லத் தூண்டிக் கொண்டே இருக்கும்!
மற்றவரைப் பாராட்டக் கூடாது என்பதல்ல இதன் பொருள் - தத்துவம்.
"பாராட்டும், பெருமையும் நம்மை வந்து அழுத்தும் போதுஅதைப் பாரமாகத் தூக்கிச் சுமக்கக் கூடாது; மாறாக பறப்பதற்கான இறக்கைகளாக - சிறகுகளாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து பறந்து கொண்டே இலக்குக்கு செல்லவே முயற்சிக்க வேண்டும்" என்றார் புத்தர் - அது நல்ல பாடம்.
படகுசவாரிக்குக் கிடைத்த பாதுகாப்பான கூடுதல் துடுப்புகள் மேலும் தயார்நிலை துடுப்புகள் என்றே கருதி அதை வைத்திருக்க வேண்டும். மேலும் தலையில் சுமந்து வெளியே காட்டிப் பெருமைப்பட வேண்டும் என்றால் பாரத்தினால் படகேகூட கவிழவும் கூடுமே!
கடமையைச் செய்ய இது ஒரு தூண்டுகோல் அவ்வளவுதான்! அடக்கத்தின் பயன் அப்போது தான் அதிகம் உணரப்பட வேண்டும்;  காட்டவும் வேண்டும்!
வேட்டையாடியும் புகழ் வரக் கூடாது, தேட்டை போட்டும் திருடப்பட்டச் சொத்தாக 'புகழ்' குவிக்கப் படக் கூடாது!
"மூட்டை தூக்கும்போது நான் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் துயரப்பட்டதில்லை" என்றார் தத்துவஞானி தந்தை பெரியார் அவர்கள்!
கடலில் குளித்து மகிழச் செல்லும் பல இளை ஞர்களை அலைகள் அடித்துச் சென்று உயிர் பறித்துவிடும் சோகச் செய்திகள் நம்மை வருத்து கின்றனவல்லவா?
அதுபோல 'புகழ்', கடல் போல் பொங்கி வந் தாலும், தற்பெருமை, தானடித்த மூப்பு, தலைக்கனம் - பாரம் என்ற அலைகளால் அடித்துச் செல்லப் படாமல் கரையேறி கடமையாற்ற கண்ணுங் கருத்துமாய் இருங்கள்!
அளவற்ற புகழ் தேடி அலையாதீர்கள்!
அவதிகளை விலை கொடுக்காமலே பெறாதீர்!!
- விடுதலை நாளேடு,31.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக