கி.வீரமணி
நேற்று (14.8.2019) என்னை சந்தித்த அருமை ஆய்வாளர் தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், ஓர் அற்புதமான நூலை - 'நவில் தொறும் நூல் நயம்' மிக்க ஒரு நூலை அன்பளிப்பாகத் தந்தார். ஏற்கெனவே பலமுறை நான் தேடிக் கொண்டிருந்த நூல் அது.
1893-19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கே உத்தரப்பிர தேசத்தின் ஆசாம்கார் மாவட்டத் தில் பாந்தகா என்னும் பாட்டன்மார் கிராமத்தில் பிறந்த கேதார் நாத் பாண்டே - பிறகு ராகுல் சாங்கிருத் யாயன் என்று பன்மொழிப் புலவராகி, சுதந்தரப் போராட்ட வீரராகி, பவுத்தராகி, மார்க்சிஸ்ட் சிந்தனை யாளராகி மறைந்தும் மறையாமல் வாழும் ராகுல் சாங்கிருத்யாயன் என்று உலகம் அறிந்த இந்த இலக்கிய முற்போக்குச் சிந்தனையாளரின் வாழ்க்கை வரலாற்று நூல் பிரபாகர் மாச்வே என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, அதை, எளிய, இனிய தமிழில் தமிழ்நாட்டின் தலைசிறந்த புரட்சி எழுத் தாளரான தோழர் வல்லிக்கண்ணன் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
இதன் முதல் பதிப்பு 1986இல் வெளிவந்தது. பிறகு கிடைக்கவில்லை. இப்போது சாகித்திய அகாதமி இதை இரண்டாம் பதிப்பாக 2019இல் வெளி யிட்டுள்ளது.
ராகுல் சாங்கிருத்யாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலைப் படித்தால் - மனிதகுல வளர்ச்சியின் வரலாறு காந்தி சகாப்தம் வரைகூட தெரிந்துகொள்ள அது பெரிதும் உதவும்.
பலமொழிகளில் (ஆங்கிலம் உட்பட) வெளி வந்துள்ளது. எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாது - நவில்தொறும் இன்பம் தரும் இனிய சமுக வரலாற்று மனிதகுல வளர்ச்சிஆவணம் அது!
35 மொழிகள் கற்றுத் துறை போகிய நல்லறிஞர் - கடைசி காலத்தில் முதுமையால் நினைவு இழப்பு - ஞாபக மறதி நோயால் ஓராண்டுக்கு மேல் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து உயிர் நீத்த, புதுமை இலக்கிய சிற்பி இவர்!
அவரது ஆராய்ச்சி நுழையாத துறையே இல்லை எனலாம்! சோவியத் ரஷ்யாவில் பல ஆண்டு காலம் இருந்து , மணம் புரிந்து, குழந்தையும் பெற்ற குடும்பத் தினராக இருந்தவர்.
இவரது வாழ்க்கை வரலாறு 'மேனி ஜீவன்' அல்லது 'மேரி ஜீவன்' என (இரண்டு இடங்கள் இப்படி வேறுபட்ட சொற்கள் உள்ள இந்நூலில்) இரண்டு பாகங்களாகி வந்துள்ளன!
இவரது 'ஊர் சுற்றி புராணம்' நூலை எனக்கு திராவிடர் கழக மகளிரணித் தோழர் பார்வதி கணேசன் வாங்கி வந்து தந்தார் - சில ஆண்டுகளுக்கு முன்பு!
பல மதங்கள் பற்றிய ஆய்வுகளும் அவர் எழுதியவற்றுள் அடங்கும்!
1963ல் டார்ஜிலிங்கில் உயிர் துறந்து அவர் எரியூட்டப் பட்டவிடத்தில் ஒரு சிறு நினைவுச் சின்னம் உள்ளது.
அவரது அழியாப் புகழ் பெற்ற நூற்களை விடவா வேறு நினைவுச்சின்னம் 'ராகுல் ஜி' என்று அழைக்கப்பட்ட அந்த ஈடு இணையற்ற இலக்கிய மேதைக்குத் தேவை?
ராகுல் சாங்கிருத்யாயன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் இப்படி இந்நூலில் சுருக்கமாக, அழகாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன!
வாங்கி, படித்துப் பயன் பெறுங்கள்.
அந்நூலின் ஒரு பகுதி இதோ!
"அவர் தனது ஓய்வு நேரத்தைப் பெரும்பாலும் எழுதுவதிலும், படிப்பதிலும் ஈடுபடுத்தினார். எழுத்தில் அவர் வேகமும் கோபமும் காட்டியபோதிலும், தனிப்பட்ட முறையில் மென்மையாகவும், வார்த்தைகளை நிதானமாகவும் பேசுகிறவராகவே இருந்தார். அவர் பெரிய மேடைப் பேச்சாளர் அல்லர். முப்பத்துநான்கு, அல்லது அதற்கும் அதிகமான மொழிகளை அறிந்திருந்த போதிலும், அவர் அநேகமாக சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தான் எழுதவும் பேசவும் பயன்படுத்தினார். பேச்சிலும் புத்தகங் களிலும் அவர் உபயோகித்த மொழி மிக எளியதாக இருந்தது. அவர் எப்போதும் சாதாரண வாசகனை தன் நினைவில் கொண்டிருந்தார். சில சமயம் அவர் எழுத்தில் ஒரு தீவிர உற்சாகியின் அல்லது ஒரு மதப்பிரசாரகனின் ஒருபக்கச் சார்பு காணப்படும்; ஆனால் அவருக்குக் கொள்கைவெறி என்பது இருந்ததில்லை. மிகத் தாழ்ந்த நிலைகளிலிருந்து மேனிலை அடைந்த ஒருவருக்கு, பெரும்பாலும் தானாகவே கற்றுத் தேர்ந்தவருக்கு, இத்தகைய முற்போக்கான, பகுத்தறிவுரீதியான, மதச்சார்பற்ற, மனிதாபிமான நிலையைப் பெறுவதும், போற்றி வளர்ப்பது என்பதும் உண்மையிலேயே விசேஷ மான ஒரு சாதனைதான். மறைபொருள் வாதிகள், மாயாவாதிகள், போலி ஆன்மீகவாதிகள் சம்பந்த மான குறிப்புகளில் அங்கும் இங்குமாக அவர் கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருக் கிறாரே தவிர, ராகுல் எவரையும் வெறுப்பவர் இல்லை . விஷயங்களின் மறுபக்கத்தைப் பார்க்கவும், ஒவ்வொன்றிலும் ஏதாவது நல்லதைக் கண்டு பிடிக்கவும், விழுங்கமுடியாததாகவும் விநோக மானதாகவும் தோன்றியதைக்கூடப் புரிந்து கொள் ளவும் அவர் முயன்றார். புத்தரின் கொள்கையான கருணையைக் கற்றுத் தேர்ந்ததின் விளை வாகப்பிறந்த அனுதாப உணர்வு உள்ளார்ந்து இருப்பதனால், அவருடைய வாழ்வும் இலக்கியமும் வாசகரிடம் ஒரு ஆழ்ந்த, நிலையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் கலப்பான நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள ராகுல் முயன்றார். இச்செயல் முறையில், சமநிலையும், ஒருங்கிணைப்பும் கொண்ட ஒரு புதிய சுய மனிதனைத் தேடினார்."
இப்படிப்பட்டவரின் இத்தகைய கருத்துக் கருவூலகங்களைப் படித்துப் பயன் பெற்று, பகுத்தறிவாளர்களாகுங்கள், இளைஞர்களே! தோழர்களே!!
- விடுதலை நாளேடு, 15.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக