மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள 'மஞ்சுள் வெளியீட்டகம்' (Manjul Publishing House Private Ltd.) மிக அருமையாக அண்மைக் காலத்தில் வெளி வந்து உலகம் முழுவதும் பரவலாகப் படிக்கப் படுகின்ற அரிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் அரிய 'அறிவுத் திருப்பணியை' மேற்கொண்டு வருகிறது.
எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதற்கு வாய்ப்பாக மும்பையில் வாழும் திருமதி. நாகலட்சுமி சண்முகம் - நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யும் ஆற்றலாளர், அவர்களுக்குக் கிடைத்துள்ளது ஒரு அரிய நல்வாய்ப்பாகும்.
மும்பைக்கு முன்பு சென்றபோது அந்த சிறந்த மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், ஊக்கமூட்டும் சொற்பொழிவாளர் என்னை வந்து சந்தித்தார்; 'தமிழ் லெமுரியா'வின் ஆசிரியர் - திராவிட இயல் கருத்தாளர் - பகுத்தறிவாளர் தோழர் குமணராசன் இந்த சந்திப்பினை ஏற்படுத்தினார். தோழர் ரவிச் சந்திரன், கணேசன் போன்ற கழகக் குடும்பத்தினரும் இருந்தனர்!
உலகத்தின் முன்னணி எழுத்தாளர்களின் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் தரும் அரும் பணியை திருமதி. நாகலட்சுமி சண்முகம் ஆற்றி வருகிறார். அயராமல் உழைக்கும் தளராதத் தமிழ்த் தொண்டு - சிறப்புக்குரியது அவரும், அவருக்குப் பெரும் ஊக்கத் தூண்டுதலாக உள்ள அவரது வாழ்விணையரும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் பாராட்டுதலுக்குரியவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டு நாடகத் தமிழ்ப் பணியில் முத்திரை பதித்த - அக்காலத்து 'முத்தமிழ் கலா வித்துவ ரத்தினங்கள்' என்ற பட்டத்தோடு உலா வந்த டி.கே. சண்முகம் ("அவ்வை சண்முகம்") சகோதரர்களின் குடும்பத் தினர் சேர்ந்த உறவுக்காரர் திருமதி. நாகலட்சுமி சண்முகம்.
மஞ்சுள் பதிப்பகம் அவ்வப்போது வெளியிடும் தமிழ் மொழியாக்க அரிய நூல்களை அனுப்பு கின்றனர், படிக்கின்றோம். மதிப்புரையும் அளிப்ப தோடு, புத்தக நண்பர்களுடன் நூற்களின் சிறப்புப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுகின்றோம்.
அதன் தமிழ்ப் பிரிவு ஆசிரியர் திரு. பி.எஸ்.வி. குமாரசாமி அவர்களின் இந்த சீரிய தமிழ்த் தொண்டும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
தந்தை பெரியார் அவர்கள் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்துப் பேசி, எழுதி, போராடிய துறையில் முக்கியமானது பெண்ணடிமை ஒழிப்பு - பெண்களின் சமத்துவமும், பெண்களுக்கு அதிகார வாய்ப்புக்களைத் தந்து சமுகம் பயனடைதலும் ஆகும். அவர் 1925ஆம் ஆண்டின் இறுதியில் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியங்களில் ஒன்று இது!
இக்கருத்துபற்றி, பிரபல கணினி மென் பொருள் உற்பத்தி நிறுவனமான உலகப் புகழ் பெற்ற மைக்ரோ சாஃப்ட் (Microsoft) நிறுவனர் - பில்கேட்ஸின் வாழ்விணையர் திருமதி. மெலின்டா கேட்ஸ் (Melinda Gates) எழுதியுள்ள "The Moment of Life: How Empowering Women Changes the World" என்ற அருமையான ஆங்கில நூலை திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள் -
"பெண்களை உயர்த்துவோம்!
சமுதாயத்தை உயர்த்துவோம்!"
என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழாக்கம் செய்து தந்துள்ளார்!
'நவில்தொறும் நூல் நயம்' என்ற வள்ளுவர் கூறும் நூல் வரிசை இது!
அதில் அந்நூலாசிரியர் மெலின்டா கேட்ஸ் கூறுகிறார்:
"என்னுடைய இருபதாண்டுகால சமுகப் பணியின் ஊடாக நான் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்; நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்தவிரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்!"
குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மை வரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கேட்ஸ் கொடுத்துள்ள அரிய தகவல்களையும், அதிர்ச்சியூட்டக் கூடிய உண்மைகளையும் அலசி ஆராய்ந்து சிந்தனை விருந்தளிக்கிறார்!
- விடுதலை நாளேடு, 17. 8 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக