பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2019

உரைத்துப் பார்க்க வேண்டிய உண்மை நட்பு!

அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆட்சியிலிருந்த முதல் தேர்தல் தோல்விக்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சியின் போது (கலைஞர் முதல் அமைச்சர்) சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டார்; அச்செய்தி வரும்போது நான் டில்லியில் - டில்லி பெரியார் மய்யப் பணிகள் காரணமாக இருந்தேன். அடுத்த நாள் சென்னை மத்திய சிறையில் அவர் ரிமாண்ட் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சென்னை திரும்பியதும் பெரியார்திடலுக்கு அடிக்கடி வந்து என்னுடன் உரையாடும் நண்பரும், மனித உரிமைப் போராளியுமான நண்பர் (மூத்த வழக்குரைஞர்) பாளை. சண்முகம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, "சிறையில் அடைக்கப்பட்ட செல்வி. ஜெய லலிதாவை நாம் இருவரும் சென்று சந்தித்து நலம் விசாரித்து வரலாம். 69 சதவிகித இட ஒதுக்கீடு செய்தவரைப் பாராட்டினோம். அவருக்கு அனுபவமில்லாத சிறை வாழ்க்கை மிகவும் துன்பத்தைத் தரக் கூடும். அவரைப் பொறுத்தவரை அது புது அனுபவம். மன இறுக்கம் ஏற்பட்டு உழலும் நிலை இருக்கும். எனவே நாம் சென்று பார்த்துத் திரும்புவது சற்று ஆறுதல் தரக்கூடும்" என்று பேசி முடிவு செய்தோம்.

அங்கே ஏகப்பட்ட கெடுபிடி! "யாரையும் எளிதில் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்பது மேலிடத்து உத்தரவு!" என்று சிறை அதிகாரிகள் முதலில் சொன்னார்கள்.

பாளை சண்முகமும், நானும் இருவருமே வழக்குரைஞர்கள். ஆதலால் அனுமதி மறுக்கக் கூடாது. மறுத்தால் சட்டப் பரிகாரம் தேட வேண்டிவரும் என்று சிறைக் கண்காணிப்பாள ரிடம் விவாதம் செய்தபிறகு சந்திக்க அனுமதி தந்தார்கள்.

மிகவும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் இருந்த அவரிடம் சற்று ஆறுதலான வார்த்தை களைக் கூறி, "சிறை விதிகளின்படி நீங்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்; வழக்குகளை உங்கள் ஜாமீன் - பிணைக்குப் பிறகு நடத்திக் கொள்ள வாய்ப்புண்டு" என்பதுபோன்று சில கருத்துரைகளைக்கூறி, சுமார் 20 நிமிடங்கள் பேசி விட்டு வெளியே வந்தோம்! அவரும் சற்று அமைதியானார்.

அது பெரிய பரபரப்புச் செய்தியாகி விட்டது. பலரும் அரசியல் மற்றும் கட்சிக் கண்ணோட்டத் திலேயே "இவர் எப்படி சந்திக்கலாம்?" என்பது போன்ற கேள்வி எழுப்பினார்கள் - விமர் சனங்கள் வெடித்துக் கிளம்பின. நாங்கள் பொருட்படுத்தவே இல்லை.

ஒரு செய்தியாளர் என்னிடம் வந்து "நீங்கள் சிறையில் அவரை (ஜெயலலிதாவை) சந்தித்த தால் உங்கள் இமேஜ் போயிற்று" என்று கூறினார்!

அதற்கு என்ன பதில் என்று கேட்டார்.

அதற்கு, நான் பதில் கூறினேன். "நம்மோடு பழகிய - சமுக நீதி சட்டத்தை எங்கள் அறிவுரை, வேண்டுகோளை ஏற்று செய்து முடித்தபோது பாராட்டினோம். அவர் ஒரு கஷ்டத்தில் சிக்கியுள்ளபோது ஆறுதலாக சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தது அரசியல் ஏதுமற்ற முழுக்க முழுக்க மனிதாபிமானம் அவ்வளவுதான்.

மனிதாபிமானமா? எனது இமேஜா? என்றால் என்னைப் பொறுத்தவரை எனக்கு இமேஜ் முக்கியமல்ல; நான் ஒரு பகுத்தறிவுவாதி. துன்பத்தில் உள்ள ஒருவருக்கு ஆறுதல் தரும் மனிதாபிமான அடிப்படையில் பார்த்தது எனக்கு மனநிறைவைத் தந்தது, அதுபோதும். மற்றபடி  எந்த விமர்சனமும் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்" என்றேன்.

அதுபோல 'மிசா' காலத்தில் பெரியார் திடலுக்கு யாரும் வர பயப்பட்ட போது, கவிஞர் கலி. பூங்குன்றன், போட்டோ கிராபர் குருசாமி ஆகிய இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தும் துணிந்து தினமும் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாருக்கு உதவியும், விடுதலை ஏடு வெளி வருவதற்கும் ஒத்துழைப்புக் கொடுக்கவும் அஞ்சவில்லை. அதுதான் கொள்கை உறவு, நட்புறவு, துணிவு!

அதுபோல எனது வீட்டில் எனது வாழ் விணையர் திருமதி. மோகனா தனியே, 'ஒரு ஈ, காகம், குருவிகூட' எட்டிப் பார்க்க முடியாத நிலையில்  தனிமைப்படுத்தப்பட்ட நிலை! காரணம் நெருக்கடி கால 'மிசா' சட்ட பயம். ஆனால் அரசு பாலிடெக்னிக் முதல்வராக இருந்த எங்கள் குடும்ப நண்பர் பொறியாளர் திருமதி. சுந்தரி வெள்ளைய்யன் அவர்கள் தவறாது வந்து எனது துணைவியாருக்கு உதவிட வழமை போல எந்த மாறுதலும் இல்லாது நட்புறவைத் தொடர்ந்தார்!

பலன் அனுபவித்தவர்கள் 'பறவைகளாகப் பறந்து' விட்டனர்; நட்பைத் துறந்து விட்டார்கள்; ஓடி ஒளிந்து கொண்டார்கள் என்றுகூட சொல்ல வேண்டும்.

அதற்காகக் கவலைப்படவில்லை. இது தான் உலகியல்! - வாழ்க்கையின் யதார்த்தம் என்று அவரும் துணிந்து குடும்பத்தை நடத்தி நல்ல பக்குவம் பெறவும், மனிதர்களை - நண்பர் பாத்திரங்களை ஏற்றவர்களைப் புரிந்து கொள் ளவும் அது உதவியது!

இதுபோல பலரது வாழ்விலும் சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடும். எனவே நட்பை எடை போட்டுப் பார்க்க என்றும் தவறாதீர்கள்!

- விடுதலை நாளேடு, 3.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக