பக்கங்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

இளைஞர்களே, பாடம் கற்றுக் கொள்ளுங்கள்


கடந்த நான்கு நாள்களுக்கு முன் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் வேதனையையும் வெட்கத்தையும் தரக் கூடிய செய்தியாக அமைந்தது.
தேனி நகரத்தின் ஒரு பகுதி பழனிசெட்டிப்பட்டி என்பதாகும். அதில் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரிய மூதாட்டி வசித்து வருகிறார்.
அவருக்கு மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் இருவர் எல்லோரும் ஒன்றாகவே வாழுகிறார்கள்.
இந்த இரு பேரப் பிள்ளைகளும் படிக்கிறார்கள். பாட்டியிடம் பாசத் துடன் பழகக் கூடியவர்கள்தான். பாட்டி தரும் பணம் - எடுக்கும்பணம் - இவற்றால் ஆடம்பரமான, வாழ்க் கையை வாழுவது, வெளியில் தங்குவது, கண்டபடி செலவழிப்பது - இப்படி ஒரு உல்லாசப் பொழுது போக்கில் - ஆடம்பர வாழ்வு மோகத் தில் திளைத்திருக்கிறார்கள்.
தற்போதைய இளைஞர்களைத் தவறான முறையில் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கியிருக்கும் சின்னத் திரை விளம்பரங்கள் (இதனால் பல குடும்பங்களில் குடும்ப இல்லத்தரசி களும்கூட சீரழியும்! செய்திகள் ஒரு தனி சோகக் காவியம் படைக்க வேண்டிய தாகும்) போதாக்குறைக்கு நாசப்படுத்தும் குடி - டாஸ்மாக் மதுக் கடைகள் - மதுப் பழக்க வழக்கங்கள் - இதனால் இவர் களுக்குப் பணத் தேவை அதிகமாகி யிருக்கிறது.
அதனைப் பெற இளைஞர்களேகூட  பல தீய வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார்கள்!
தேனி - பழனி செட்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையின் பரிதாபக் கதைக்கு வருவோம்.
அந்தப் பாட்டியின் பணத்தைக் களவாடி செலவிட இந்த  அண்ணனும் - தம்பியும் (பேரப்பிள்ளைகள்) திட்டம் போட்டனர். பாட்டி தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, இவர்களும் துக்கத்தில் பூனைகள் போல் கலந்து கொள்கிறார்கள். பிஞ்சு வயதில் ஏறிய நஞ்சு - மனப்பான்மை - வித்தியாசமான நடத்தை மூலம் - விசாரணையில் இவர்கள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள்.
தங்களது கொலைக் குற்றத்தை தாங்களே ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்!
இந்தச் செய்தி கேட்டு தன்னுடைய தாய், தன்னுடைய மாமியார் கொலை செய்யப்பட்டது - தனது இரு பிள்ளை களாலே என்ற வேதனை, குடும்பத்தில் இருந்த மூதாட்டியாரை இழந்ததை விடப் பெருத்த அவமானம் நிறைந்த கொடுமை என்பதால் அவ்விருவரும் தற்கொலை செய்து  மாண்டு விடுகிறார்கள்!
என்னே விபரீதம்! வருந்தத்தக்க முடிவு. வேதனை  இந்த வாழ்ந்த குடும்பத்திற்கு. இச்செய்தியால் இந்த இளை ஞர்கள் இனி, பாடம் பெற்று தான் என்ன பயன்?
இந்த சம்பவம் பலருக்குப் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு ஆகும்!
ஆடம்பர வாழ்க்கை ஒரு மனிதனை கள்ளனாக்கும், குடிகார னாக்கும், சூதாடியாக்கும், சுய கவுரவம்பற்றி மறக்கச் செய்யும்; எந்தக் குற்றத்தையும் செய்யத்  தயங்காத வெறித்தனத்திற்கும் தள்ளி விடும்.
எளிமை வாழ்வும், சிக்கனமும் மனிதர்களை வாழ வைக்கும்; தன் மானம் காக்கும்; தகைசால் மனிதர் களாக உயர்த்தும்!
எனவே இளை ஞர்களே, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,17.3.15

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

விருப்பம் வேறு; தேவை வேறு!புத்தாண்டில் பல - பலவித உறுதிமொழிகளை ஏற்பது வழமை; ஏற்ற உறுதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்களும் உண்டு. பாதியிலேயே விட்டுவிட்டு பழையபடி நடந்துகொள்ளுவதும் உண்டு.
நாம் வாழ்வில் முன்னேற கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது; வருகின்ற வருவாய்க்குட்பட்டு வாழவும் கற்றுக்கொண்டு, அந்த வாழ்க்கையில் மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து காட்டவும் தெரியவேண்டும்.
தந்தை பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோரில் பெரும்பாலோர் சிறப்பான வாழ்க்கையை - நிம்மதியான வாழ்க்கையை - அமைதியாக, ஆரவாரமின்றி நடத்தி வருவதற்குக் காரணம் அய்யா தத்துவம் கற்றுக் கொடுத்த எளிமையும் சிக்கனமுமே ஆகும்!

தனது தொண்டர்களுக்கு மட்டுமல்ல, பொதுவான பயனுறு வாழ்வு வாழ விரும்பும் பலருக்கும் அவை பொருந்தும்.
தகுதிக்குமேல், தேவைக்குமேல் வாழ்ந்து, கடனில் மூழ்கி, திருப்பித் தர முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் பரிதாபச் செய்திகள் அன்றாட அவலங்களாகி வருகின்றனவே -அந்தத் தொல்லைகளின் வேர் எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்களது ஆடம்பர, ஊதாரித்தன வாழ்க்கைக்காக மித மிஞ்சிய கடனை வாங்குவது, விதை நெல்லையே எடுத்து விருந்து வைக்கும் விவசாயியின் முட்டாள்தனம் போன்று தொழில் மூலதனத்தை தனது ஆடம்பர ஆசைக்குப் பலியாக்கிக் கொண்டதன் விளைவு என்பது நன்கு புரியும்.
நமது இன்றியமையாத தேவை என்னவென்று பார்த்தே கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோம்; பார்த்தவுடன் கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காகவோ, தொலைக்காட்சிகளில் விளம்பரத்தில் இது வருகிறது என்கிற நுகர்வோர் கலாச்சார மனப்பான்மை அடிப்படையிலோ, மற்ற பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், அல்லது வசதி படைத்த நண்பர் வீட்டு உறவுகள் மூலம் ஏற்பட்ட நட்பின் தாக்கம் - இவற்றால் ஆடம்பரப் பொருளை விற்பது, கடன் அட்டை என்ற மயக்கத்தினால் கண்டபடி கணக்கு வழக்கின்றி செலவழித்தல் இவற்றைத் தவிர்த்து வாழ உறுதி ஏற்றுக்கொள்ளவேண்டும்.
விருப்பம் வேறு; தேவை வேறு. விரும்பியதெல்லாம் வாங்கிடவேண்டும் என்றால், அதற்கு ஓர் எல்லை உண்டா?

சைக்கிளில் செல்லும்போது, அது உடலுக்குப் பயிற்சி; பெட்ரோல், டீசல் போடும் செலவில்லா நிலை. ஆனால், இரண்டு சக்கர வண்டிகள் வந்து, முன் பணமின்றி வங்கிக் கடனுடன் கிடைக்கிறது - நமது நண்பர்கள் வாங்கிவிட்டனரே என்று விரும்பி அதைப் பெற்று, பிறகு கார்கள் வாங்குகிறோம்.

உரிய வளர்ச்சியும், வேகமாகப் போய்ச் சேரவேண்டிய பணியும் இருந்து, அதற்குரிய செலவினத்தை ஈடுகட்ட போதிய வருவாயும் இருந்து, கார் வாங்கினால் நலம். அதைவிடுத்து வெறும் போலி கவுரவத்திற்காக அதிக வட்டி கொடுத்து வாங்கி, கட்ட முடியாது - கடைசியில் அவதிப்பட்டால், அது சுகமா? சுமையா? மகிழ்ச்சியா? தண்டனையா? என்பதை யோசித்துப் பாருங்கள்!

தேவைக்குள் செலவழித்து, சேமிப்பு என்ற ஒன்றினையும் வருவாய்க்குள் அடக்கிட பழகிவிட்டால், அவரை விட பெரிய சுயமரியாதை வீரர் எவரும் கிடையாது.
தந்தை பெரியார் அவர்கள் எவரிடமும் கடன் வாங்கவும் மாட்டார்; எவருக்கும் எளிதில் கடன் கொடுக்கவும் மாட்டார்; கட்சியினர் சிலரைக் காப்பாற்ற கருணை காட்டும் வகையில் கடன் கொடுத்தார், அதைத் திருப்பி (அது நிறுவனப் பணம் என்பதால்), வசூலிக்க நாங்கள் பட்ட பாடு நாங்கள் அறிவோம்.

அதில் பல பேர் யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று பெரியார் அடிக்கடி சொல்லும் பழமொழிக்கேற்ப நடந்து கொண்டு இன்று சுய புராணப் புளுகினை மலைபோல் வர்ணிக்கும் வக்கணையாளர்களாகவும் உள்ளனர்!
என்ன செய்வது, சில நேரங்களில் சில மனிதர்கள்! கடன் பெறாத வாழ்க்கை சிறந்த சுயமரியாதை வாழ்க்கை என்று வாழ, தேவை வேறு; விருப்பம் வேறு. விருப்பப்படியெல்லாம் வாழ பொருள்களை வாங்காது, தேவைக்கேற்ப வாங்கினால் போதும் என்று அமைத்துக் கொள்ளும் வாழ்வு, நேர்கோட்டில் என்றும் செல்லும்; எவருக்கு முன்னும் தலைகுனிய வைக்காது.

நம்மைச் சார்ந்தோருக்கு எதை விட்டுவிட்டுச் செல்லுகிறோமோ இல்லையோ, கடனை, அவமானத்தை விட்டுவிட்டுச் சென்று நாம் தலைகுனிந்து தலைமறைவு வாசஞ்செய்தது போதாது என்று, நம் சந்ததிகளையும் அப்படி தண்டனைக்குள்ளாக்குவது மிகப்பெரிய அவலம் அல்லவா?
எனவே, அளவான வாழ்வை, தெளிவான தேவை பூர்த்திகளோடு வாழ உறுதி மேற்கொள்வோம் - வரும் ஆண்டிலாவது!
-விடுதலை,31.12.10

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

இலக்கியத்தில் சக்களத்திகளின் சமயச் சண்டை!சிங்கப்பூரில் உள்ள பகுத்தறிவாளர் தோழர் மா. அன்பழகன் அவர்கள் கவிமாலை என்ற சிறந்த இலக்கிய வட்டத்தை உருவாக்கி, நல்ல தமிழ்க் கவிஞர்கள், பகுத்தறிவாளர்கள், பொது வான கலைஞர்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்தும் அரிய இலக்கிய மொழி உணர்வுப் பணியை அந் நாட்டில் சில ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறார்.
நேற்று (19.7.2015) காலை என்னை நலம் விசாரிக்க நண்பர்களுடன் வந்து சந்தித்தார்.
முதுபெரும் சிங்கப்பூர் எழுத்தாளர் பெரியவர் ஏ.பி. இராமன் 83 வயதிலும் நல்ல இளமைச் சிந் தனையுள்ள நடுநிலை எழுத்தாளர் ஆவர்) அவருடன் கவிஞர் ந.வீ. விசய பாரதி என்ற பண்பான இலக்கிய படைப் பாளியையும் அறிமுகப்படுத்தினர்.
அண்மையில் அவருடைய கவிதை நூலுக்கு ஆயிரம் வெள்ளி (சிங்கப்பூர்) பரிசு கிடைத்தது என்றும் கூறினார்.
தமிழர்கள் பெருமை அடை கிறார்கள் என்றால் அது நம் இனத்தின் பெருமை அல்லவா! மகிழ்ந்து சிறிது நேரம் உரையாடினோம்.
கவிஞர் விசயபாரதி தமிழ்நாட்டின் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் (மா. அன்பழகனின் சம்பந்தியார் என்பதும் இரட்டை மகிழ்வுக்குரியது).
அவர் எழுதிய கவிதை மற்றும் இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டும் ஆறு நூல்களை எனக்கு அளித்தார்.
எதையும் உடனே படிக்கத் துவங்கும் எனக்கு - நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால். தோழர்கள் பலரும் தொடர்ந்து வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.
இரவு பல நூல்களைப் புரட்டினேன். வேக வேகமாக சில நூல்களைப் படித்தேன்.
புலமைக்கு மரியாதை என்ற தலைப்பில், சிங்கப்பூரின் தமிழ் வானொலியான ஒலி 96.8இல் உள்ளூர் இலக்கியவாதிகளால் படைக்கப்பட்ட இனிக்கும் இலக்கியம் என்ற தொடர் நிகழ்வில், இவர் ஆற்றிய பொழிவுகள் பல இந்த நூலில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன!
தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை நளினம் என்ற தலைப்பில் உள்ள ஓர் பொழிவு, 16ஆம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய மருதநிலம் சார்ந்த படைப்பிலக்கியமான முக்கூடற்பள்ளு என்ற பள்ளு இலக்கியம் மருதநிலம் சார்ந்த படைப்பிலக்கியமாகும்.
நகைச்சுவையையும், நையாண்டித் தனத்தையும் சமய உட்பிரிவுகளுக் கிடையே வாயளவில் நடக்கிற சண்டை களும், செல்வவளம் படைத்தவர்களுக்கு ஆயுள் அடிமைகளாக சாமானிய மக்கள் வாழ்ந்திருந்த தகவல்களும் இந்த இலக்கியம் முழுவதும் இரைந்து கிடப்ப தால், படிக்கச் சுவையாக இலக்கிய இன்ப மும் இரண்டறக் கலந்து தருவதோடு, நமக்குள் ஒரு சமுதாயத்தாக்கத்தையும் உண்டாக்குகின்றன.
வடிவழகக் குடும்பனுக்கு இரண்டு மனைவியர் - இந்த இரண்டு மனைவி யருக்கும் நடக்கும் சக்களத்திச் சண்டை தான் இந்தப் பகுதி.
இரண்டு மனைவியரும் வேறுபட்ட சமயப் பிரிவுகளான சைவ வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்களானதால் அவ்வப் போது நடக்கிற சண்டையில் இந்த சமயப் பிரிவினைச் சண்டையும் இப்படைப்பில் நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது.
(மதச் சண்டைகள் எப்படி காலந் தோறும் வரலாற்றின் பதிவுகளாகவும், இலக்கியங்களாகவும் நடைபெற்றுள்ளன வென்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுவது பொருத்தமாகும்).
சக்களத்திகள் போடும் சண்டையில் சைவக் கடவுள்களும், வைணவக் கடவுள்களும் நடத்தும் கவிதைப் போர் காண்க. நூல் ஆசிரியர் மிக அருமையாக அதனைச் சுட்டுகிறார்.
அக்காலத்தில் சமய உட்பிரிவுச் சண்டையாக இருந்த சைவ - வைணவப் போராட்டம் இவர்களது சக்களத்திச் சண்டையில் வெளிப்படுகிறது.
சாதிப்பது உனக்கு வரும்
மருதூர்பள்ளி - நரிதான்
பரிபாயச்சா தித்தானுங்கள்
சம்புவல்லோடி
என்று சிவபெருமான் மாணிக்கவாசக ருக்காக நரியைப் பரியாக்கிய கதையைக் கூறி இப்படிச் சாதிப்பது உங்கள் புத்தி என்று சிவனைப் பழிக்க,
இளையவள் சமயச் சண்டையிலும் சளைக்காதவளாக,
பேதிக்கச்சா திக்கவராய்
முக்கூடற்பள்ளி - கல்லைப்
பெண்ணாகச்சாதித்தானுங்கள்
கண்ணனல்லோடி
என்று தவமுனிவரின் சாபம் பட்டுக் கல்லாய்ச் சமைந்து கிடந்த அகலிகையை மீண்டும் பெண்ணாக்கிய இராமனின் கதையைக் கூறி இராமனைப் பழிக்கிறாள்.
மறுபடியும் மூத்தவள்,
சுற்றிக்கட்ட நாலுமுழத்
துணியுமில்லாமல் - புலித்
தோலை உடுத்தானுங்கள்
சோதியல்லோடி
என்று பாடி நாலு முழத் துணிகூட உடுத்த வழியில்லாமல் புலித்தோலை உடுத்தியவன்தானே உன் கடவுள் என்று சிவனைப் பழிக்க,
கற்றைப் சடைகட்டிமர
உரியுஞ் சேலைதான் - பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள்சங்குக்
கையனல்லோடி
என்று திரும்பவும் இளையவள் திரு மாலைப் பழிக்கிறாள். முடிவு தெரியாத இந்தச் சண்டையில் மூத்தவள் மறுபடியும்,
ஏறவொரு வாகனமும்
இல்லாமையினால் - மாட்டில்
ஏறியே திரிந்தானுங்கள்
ஈசனல்லோடி
என்று வாயாட,
வீறுசொன்ன தென்ன மாடு
தானுமில்லாமல் - பட்சி
மீதிலேறிக் கொண்டானுங்கள்
கீதனல்லோடி
என்று இளையவளின் வாயாடித் தனமும் வளர்கிறது.
நகைச்சுவையும் நிறைந்த இப் பகுதி முழுவதும் தொடர்கிற அவர்களது சண்டை, உச்சகட்டத்தை அடைந்ததோ அல்லது களைத்துப் போனார்களோ அல்லது நல்லதொரு முடிவைச் சொல்ல வேண்டுமென்று படைத்தவர் நினைத்தாரோ முடிவாக இரண்டு மனைவியரும் தங்கள் மோதலுக்கு முடிவு கண்டு கடைசி யில் சமாதானமாகப் போய்,
பன்னகத்தி லாடியமுக்
கூடலழகர் -திருப்
பாதமலர் வாழ்த்தி யாடிப்
பாடு வோமே
என்று மதப் பிரிவுச் சண்டைகள் கூடாதென இருவரும் ஒருவருக் கொருவர் உணர்ந்து திருந்துவதாக இப்பகுதி நிறைவுறுகிறது. 16ஆம் நூற்றாண்டில் படைக்கப் பட்ட இப்பள்ளு இலக்கியம் இந்த 21ஆம் நூற்றாண்டின் இளைஞனும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும்; சுவையும், சுகமும் கூடிய இலக்கியமாகவும் இருந்து நம் மனத்தை வருடி வசப்படுத்து கிறதல்லவா!
சிங்கப்பூரில் தமிழ் படைப் பாளிகள் நல்ல எழுத்தாளர் களாக வும், கருத்தாளர்களாகவும், கவிஞர் களாகவும் திகழ்வது எம்மொழி, செம்மொழி என்பதை உலகுக்கு காட்டுவதன்றோ!
கவிஞர் விசயபாரதியின் ஆற்றல் வளர்க! வாழ்க!
-viduthalai,20.7.15

இன்றைய உலகப் புத்தக நாள் சிந்தனை


இன்று உலகப் புத்தக நாள்! (23 ஏப்ரல், 2015).
ஆண்டுதோறும் இது உலகெங்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு உலக அமைப்புகளின் முடிவுக்கேற்ப, கொண் டாடப்படுகிறது!
அண்மைக்காலத்தில் இளைஞர்கள், முதியோர்கள், மகளிர் அனைவரிடமும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், வழக்கமாக மாறி வருகிறது. இது ஒரு விரும்பத்தக்க ஆரோக்கியமான வளர்ச்சி!
நம் மக்களில் பலர், கண்ட உணவை எல்லாம் குறிப்பாக, வேக உணவுகள் (Fast Foods)
என்ற பெயரால் கூறப்படும், உடல்நலத்திற்குக் கேடு செய்யும் உணவுகளையெல்லாம், சுவை கருதி - சுகாதாரத்தைப் புறக்கணித்தும் கூட, உண்ணும் கேடான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதைப்போல,
மலிவான, உணர்ச்சிகளைத் தூண் டும், தரமற்ற, அறிவுக்குக் கேடு விளை விக்கக்கூடிய பல நூல்களை - அவை களுக்கான அபார விளம்பரங்களால் மயங்கி - காசு கொடுத்து வாங்கிப் படித்து, தங்கள் அறிவைப் பாழ்படுத்திக் கொள்ளும் அவலமும், மற்றொரு புறம் இருக்கவே செய்கின்றது என்பது வேதனைக்குரியதாகும்!
ஒரு காலத்தில் புத்தகங்கள் என் பவைகூட மிகப்பெரிய நிலையில் உள்ள அரசர்கள், செல்வந்தர்கள், மேட்டுக்குடியினர் - (இந்தியாவில்) உயர்ஜாதியினர் - இப்படிப்பட்ட பல தரப்பட்டவர்களின் ஏகபோக உரிமை யாக இருந்தவையே! புத்தக வாசிப்பு - பிறகுதான், கல்வி அறிவு பரவ, பரவ, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொது உரிமையாக ஆகியது!
இன்று உலகெங்கும் புத்தகங்கள் அறிவு பரப்பும் பண்ணைகளாகவும், சமுதாயப் புரட்சிக்கான அடிநாதமாக வும் அமைந்துவிட்டன!
பிற்காலத்தில் பல நாடுகளில் வாழ்ந்த சர்வாதிகாரிகள்- ஆட்சியாளர் கள் நூலகங்களைத் தங்களின் கடும் எதிரிகளாகக் கருதி எரித்து அழிக்கத் தொடங்கினார்கள்!
அதுமட்டுமா?
நம் நாட்டிலேயே தங்களுக்குப் பிடிக்காத, தங்கள் கொள்கைகளை எதிர்க்கக்கூடியவர்களின் புத்தகங் களை முழுமையாக அழித்து - அக் கருத்துகளே வெளியே தெரிய விடாமல், வரவிடாமல் ஆக்கினார்கள். காரணம், அப்போது அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படவே இல்லை. வெறும் ஓலைச் சுவடிகள்தானே கருத்தாக்கங் களின் தொகுப்புகளாக இருந்தன.
எடுத்துக்காட்டாக, வேத மதத்தை எதிர்த்த சார்வாகர்கள் (Charwakars) என்பவர்களின் கருத்தாக்கப் புத்தகங் கள்பற்றி எந்தச் செய்தியும் அறிய முடியாதபடி அழிக்கப்பட்டு விட்டன!
அதுமட்டுமா?
தந்தை பெரியார் அவர்கள் கூட்டங் களில் பேசும்போது ஒன்றைக் கூறு வார்கள்.
இந்த நாட்டில், பல வீடுகளில் இருந்த பழைய புத்தகங்களைக்கூட ஆடிப்பெருக்கு - பதினெட்டாம் பெருக்கு என்ற ஆற்று வெள்ளத்தில்  அது அடித்துச் சென்றால், புண்ணியம் என்ற மூடநம்பிக்கை பழக்கவழக்கம் - நமக்குரிய அரிய பல நூல்களைக்கூட அழித்தன என்று கூறுவார்கள்.
அச்சு இயந்திரம் கண்டுபிடித்த ஜெர்மன் தொழில்நுட்ப அறிஞர் ஜான் னஸ் கூட்டன்பர்க் (Johannes Guten berg) அவர்களுக்கு உலகமும், கால மும் என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது.
புத்தகங்கள் இன்றைய காலகட்டத் தில் அறிவியல், மின்னணுவியல் தொழில்நுட்பத்தினால், கற்பனைக்கெட் டாத அளவு வளர்ந்தோங்கி, ஒரு சிலேட் அளவுக்குள் பல லட்சக்கணக் கில் புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டு படிக்கும் கிண்டில் (Kindle) போன்ற சாதனங்கள் பெருகிவிட்டதால், படிப் போர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
-விடுதலை,23.4.15

சனி, 5 செப்டம்பர், 2015

இங்கர்சாலின் இன்ப வாழ்வியல் - இதோ! (2)

அறிவுலக மேதை இங்கர்சால் ஒரு தலைசிறந்த மனிதநேயர் - காரணம் அவர் சுதந்திர சிந்தனையாளர் - பகுத்தறிவுவாதி. உண்மையான பகுத்தறிவுவாதியின் அடையாளம் மனிதநேயமே!
பகுத்தறிவுள்ளவர்கள் அதைத் தங்கு தடையின்றிப் பயன்படுத்தி னால் அவர்களைவிட மாமனிதர்கள் வேறு எவரும் இல்லை!
மனித சமூகத்தில் இருபாலரும் (ஆண் - பெண்) சமமானவர்கள் என்று கருதுவதே- நடப்பதே - மனித நேயத்தின் முதல் அடையாளம்.
எங்கே மனித சமத்துவம் பேணப் படுகிறதோ எங்கே மற்றவருக்கும் சுயமரியாதை உணர்வு உண்டு என்று கருதுகிறார்களோ அங்கேதான் மாமனிதம் பளிச்சிடுகிறது.
இதோ இங்கர்சால் பேசுகிறார், கேட்போம்:
எனது கருத்தில் பெண் புருஷ னுக்குச் சமமானவள். ஆணுக்குள்ள உரிமைகள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டு என்பது மட்டுமன்றி, பெண் ணுக்கு அதிகப்படியாக ஓர் உரிமை யுண்டு. அதாவது பெண்களைக் காப் பாற்ற வேண்டியது புருஷன் கடமை. இது எனது உறுதியான கருத்து.
நீ திருமணம் செய்திருந்தால், உன் காதலுக்கு மனைவியைக் காப்பாற்ற உன்னாலான முயற்சிகள் எல்லாம் செய். அவள் எப்பொழுதும் சந் தோஷமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள். சுயநன்மைக்காக விவாகம் செய்கிறவன் பெரிய தவறு செய்கி றான். என் மனைவியின் மகிழ்ச் சியே என் மகிழ்ச்சி என்று சொல் கிறவன் வீரன்; யோக்கியன். அது போலவே, என் கணவன் இன்பமே, என் இன்பம் என்று கூறுபவளே உத்தமி. இன்பத்துக்கு ஒரே ஒரு வழிதானுண்டு. அதாவது இருவரும் இன்பம் அனுபவிக்கும்படி நடந்து கொள்வதே. மற்றவருக்குத் துன்பம் செய்து உன்னால் இன்பம் அனுப விக்க முடியாது.
நானே குடும்பத்துக்குத் தலை வன்; வீட்டுக்கு முதலாளி என்று கூறுபவனை நான் அறவே வெறுக் கிறேன். நானே தலைவன்; நானே அதிகாரி எனக் கூற ஒருவனுக்கு என்ன உரிமை?
சிடுமூஞ்சியையும் நான் அறவே வெறுக்கிறேன். கடுகடுப்பாகப் பேசி வாழ்க்கை இன்பத்தைக் கொலை செய்ய எவருக்கும் உரிமையில்லை.
வீட்டுக்குச் செல்லும்போது, மலர்ந்த முகத்துடன் போ, உன் முகமலர்ச்சியினால், இரவும் பகலாக வேண்டும்; இருட்டறையும் ஒளிமய மாக வேண்டும்.
சிலர் தாமே மேதாவிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார் களாம். தேர்தலில் அவனை ஆதரிப்பதா, இவனை ஆதரிப்பதா என்று யோசித்துக் கொண்டிருந்தார் களாம். பெரிய பெரிய அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும், வியா பார விஷயங்களைப்பற்றியும் வாதா டிக் கொண்டிருந்தார்களாம். ஆகவே, அவர்களது மூளை குழம்பிப் போயிற்றாம்; களைத்துப் போயிற்றாம். எனவே, அவர்கள் வீடு சென்றதும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதும், மகிழ்ச்சியூட்ட வேண் டியதும் மனைவியர் கடமையாம். நாலைந்து குழந்தைகளுக்குத் தாயாகி, நோயுற்ற குழந்தைகளுக்கு மருந்தூட்டிப் பராமரித்து, குடும்பக் காரியங்களைக் கவனித்துச் சதா உழன்று கொண்டிருக்கும் மனைவி அலுத்து வீட்டுக்கு வரும் கண வனுக்கு ஆறுதல் கூற வேண்டுமாம்! மகிழ்ச்சியூட்ட வேண்டுமாம்! அவ ளுக்குக் களைப்பில்லையா? சோர் வில்லையா? அவளுக்கு ஆறுதல் கூறுவது யார்? மகிழ்ச்சியூட்டுவது யார்?
வேறொரு விஷயம். கஞ்சனையும் நான் வெறுக்கிறேன். உலகத்திலே கோடி கோடிப்பேர் பட்டினிக் கிடக் கையில் - உடுக்கத் துணியும் இருக்க இடமும் இன்றித் தவிக்கையில், கோடிக்கணக்காகச் சம்பாதிக்கவும், சேமித்து வைக்கவும் ஒருவனுக்கு என்ன உரிமை? தேவைக்கு அதிக மாகச் சம்பாதிக்கவும் சேர்த்து வைக் கவும் ஒருவருக்கும் உரிமை கிடை யாது.
மனைவிமாரையும் நம்பாத பல கஞ்சன்களை நான் பார்த்திருக் கிறேன். அவர்களுக்கு மனைவியை விடப் பணமே முக்கியம். தினந் தோறும் ஒரு ரூபாய் வேண்டும், இரண்டு ரூபாய் வேண்டும் என்று மனைவி பிச்சை கேட்பதை நீ விரும்புகிறாயா? உலோபிகளான கணவன்மாரைப் பார்க்கவும் மனைவிமார் அஞ்சுகிறார்கள். குடும்பச் செலவுக்குப் பணங்கேட்க நடுங்குகிறார்கள். இது எவ்வளவு கேவலமானது! பயங்கரமானது! வெறுக்கத்தக்கது!
கணவன்மாருக்கு உபதேசம்
உன் கையில் ஒரு ரூபாயிருந் தால், இராஜா மாதிரி அதைச் செலவுசெய். ரூபாயை மண்ணென, சருகென மதி; அலட்சியமாகச் செலவு செய். இதுவே செலவு செய்ய வேண்டிய முறை. அரசானயிருந்து பிச்சைக்காரனைப்போல் செலவு செய்வதை விட, பிச்சைக்காரனா யிருந்து அரசனைப் போலச் செலவு செய்வதையே நான் விரும்புவேன்.
செலவு செய்ய வேண்டியதைத் தயங்காமல் செலவு செய்துவிடு.
முடிந்தவரையில் நல்ல சாமான் களையே உன் குடும்பத்துக்கு வாங்கு. இயன்றவரை அழகாகவும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும் உடுத்திக் கொள். மணம் பேசிச் சென்றபோது, நீ எவ்வளவு அழகாக - நேர்த்தியாக - சுத்தமாக உடுத்திக் கொண்டு சென்றாய்! கண்கள் பிர காசித்தனவே!
முகம் மலர்ந்திருந் ததே! ஒரு இராஜகுமாரனைப்போல் விளங்கினாயே! அவ்வண்ணம் காதலியைச் சந்தித்த நீ - அவளது காதலைப் பெற்ற நீ-அலங்கோல மாக - அசிரத்தையாக - மோசமாக உடுத்திக் கொண்டால், உன் காதலி உன்னைச் சந்தோஷமாக வரவேற் பாள் என்று நீ நினைக்கிறாயா? இது சாத்தியமா? சாத்தியமானவரை, நேர்மையாகவும், யோக்கியப் பொறுப்பாகவும் நீ நடந்துகொண்டால், எந்த நல்ல பெண்ணும் உன்னை மதியாமல் - நேசியாமல் இருக்கவே மாட்டாள்.
காதல், மணம், மனைவி, குடும்பம் முதலியவைகளைப்பற்றி நீர் கூறும் கருத்துகள் பணக்காரருக்குத்தான் பொருந்தும்; ஏழைகளுக்குப் பொருந் தவே செய்யாது என்று சிலர் என்னிடம் கூறுகிறார்கள்.
ஆனால், உண்மை நிலை என்ன? பணக்காரர் மாளிகையைவிட ஏழை கள் குடிசையிலே உண்மைக் காதல் நிலவுகிறது.
உண்மைக்காதல் நிறைந்த குடிசை பெரிய மாளிகையினும் புனிதமானது; பிரபுக்கள், மன்னர்கள், தேவர்கள் வசிப்பதற்கு உகந்தது. இதுவே எனது கொள்கை. பிறருக்குச் சிறு உதவியும் செய்ய முடியாத அளவுக்கு நீ அவ் வளவு வறியவனாயிருக்க முடியாது. உலகத்திலே நற்குணத்தைப்போல் மிகவும் மலிவான சரக்கு வேறில் லவே இல்லை. கொடுப்பவனுக்கும், வாங்குபவனுக்கும் 100-க்கு 10 வட்டி கொடுக்கக்கூடியது அன்பு ஒன்றே. சீமானாக விரும்புவதாய் என்னிடம் சொல்லாதே. செல்வம் பெருமைக்குக் காரணமென மக்கள் தப்பாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
உலகத்தில் பிறந்தால் ஒன்று பணக்காரனாக இருக்கவேண்டும்; அல்லது நல்ல வழியிலோ தீய வழி யிலோ பெயரெடுத்தவனாக இருக்க வேண்டும்; உலக மக்கள் எல்லாம் பாராட்டவேண்டும்; அவனே பெரிய வன் என்று சாதாரண ஜனங்கள் நம்புகிறார்கள். இது தவறானது. மனச்சாந்திக்குப் பணக்காரனாக இருக்கவோ, அதிகாரமுடையவ னாக இருக்கவோ, பெரியவனாக இருக்கவோ தேவையில்லை. வாழ்க் கையில் வெற்றியடைந்தவனே பெரியவன்; மனச்சாந்தி பெற்றவன்.
இன்ப வாழ்வுக்கு இங்கர்சால் கூறும் இவை போதுமே - இல்லையா?

நீங்கள் உங்களுக்கு உண்மையாயிருந்தால் போதுமானதுஅண்மையில் திராவிடர் கழக வெளியீடாக வெளியான அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேன் குவளை! கோடை யிலே இளைப்பாற்றிக் கொள்ளக் கிடைத்த  ஒரு இலக்கியத் தென்றல். அதில் உள்ள இன்பம் பொங்கும் மொழிகளும், கருத்துரைகளும் அள்ளி அள்ளி அமிழ்துபோல் உண்ணவேண்டும்; பிறகு அதுபற்றி ஆழ்ந்து எண்ணவேண்டும்; மகிழ வேண்டும்.
பகுத்தறிவின் எட்டுத் தொகை என்பதுபோல எட்டு நூற்களின் தொகுப்பு இக்களஞ்சியம் - இந்நூல்!
வாழ்வியல் கூறி, நம் உள்ளத்திற்கு வன்மை சேர்க்கும் நூல் இது!
ஆண், பெண், குழந்தைகள் சுதந்திரம் என்ற தலைப்பில் அமெ ரிக்க அறிஞர் ராபர்ட் கர்னல் இங்கர் சால் அவர்களின் உரை வீச்சினை உள்ளே கொண்ட ஒரு  நூல் இந்நூல்.
அறிவும், ஆய்வும் ஒன்றுக் கொன்று போட்டியிட்டுக்கொண்டு முந்துறும் அற்புத நூலும்கூட! இந்நூல் பக்கம் 229 இல்,
மூளை வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியுமே நாம் இப்பொழுது காணும் (1833-லிருந்து 1899 வரை  66  ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவர் கூறியது இந்த இப்பொழுது என்பது; இன்றோ மனித அறிவின் வளர்ச்சி செவ்வாய்க்கோள் வரை சென்றுவிட்ட பல மடங்கு வளர்ச்சி யடைந்த காலம்) முன்னேற்றத்துக் கெல்லாம் மூலகாரணமாக உள்ளவை.
நம் முன்னோரைவிட நாம் அதிக சுதந்திரங்களைப் பெற்றிருப்பதற்கு அவர்களைவிட நமக்கு அதிக மூளை இருப்பதே காரணம். (பயன்பாடு அதிகம் என்பதை இப்படிக் கூறுகிறார் இங்கர்சால்).
ஆகவே, உண்மையைக் கடைப் பிடித்து ஒழுக வேண்டுமென்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாம் உண்மையென்று நம்புவதையும், நான் ருசுப்படுத்தப் போவதையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டாம்.
நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் போதுமானது.
- இந்தக் கடைசி வாக்கியம்தான் மேலே தலைப்பாகத் தரப்பட்டுள் ளது!
அவரவர் அவரவருக்கு உண் மையாக இருந்துவிட்டால் அதை விட, திருட்டு, புரட்டு, ஏமாற்றல், ஏய்த்தல் ஏதாவது சமூகத்தில் இருக்க இடம் உண்டா?
நெஞ்சில் நினைப்பதை செயலில் நாட்டுதல் நீசமன்று மறக்குல மாட்சி யாம் என்றார் புரட்சிக்கவிஞர்.
உன்னையே நீ உணர்ந்துகொள் என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ்.
அவரவர் அவரது உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதல்தான் அது!
நம்மில் பலர் ஊரை ஏமாற்றலாம்; உலகை ஏமாற்றலாம்; ஆனால், நம்மையே நாம் ஏமாற்றிவிட முடியுமா? ஒருபோதும் முடியாது!
உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுவோர் உறவு கல வாமை வேண்டும் என்றார் வடலூர் வள்ளலார்!
பிறரை வஞ்சிக்கும் எண்ணம் படைத்த எவரும் முதலில் தன்னை வஞ்சித்துத் தாழ்ந்து வீழ்ந்த நிலைக் குப் போகிறான் என்பதைத்தான் கூறாது கூறுகிறார்.
நீங்கள் உங்களுக்கு உண்மை யாக இருக்கவேண்டும் என்ற அறிவுரை  - கருத்துரைமூலம் இங்கர் சால் கூறுகிறார்.
நெஞ்சில் வஞ்சகம்; உதட்டில் கொஞ்
சு மொழிகள் - எஞ்சுவது இறுதியில் நிம்மதியற்ற, துன்பம் துளைத்தெடுக்கும் முடிவைக் கொண்ட வாழ்வுதான்!
இரத்தக் கண்ணீர் நாடகத்திலும், திரைப்படத்திலும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் இறுதியில் தன் நெஞ்சே தன்னைச் சுட்ட உள்ளத்தின் நிலையைக் காட்சிப் படுத்தும்போது,
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?
அற்றது உலகில் அமைதியும், மகிழ்வும்,
அரும்பிட முடியாது
என்பது போன்ற வரிகளில் போதிக்கும் தத்துவம்.
இங்கர்சால் கூறிடும் உங்களுக்கு உண்மையாக நீங்களே வாழாத நிலையின் விபரீத விளைவுதானே!
மரண வாக்குமூலங்களுக்கு சட்ட சாட்சியத்தில் மிகுந்த மரியாதை கொடுக்கப்படுவதின் தத்துவமே தொடக்கத்தில் எப்படியிருந்தாலும், மரணத்தின் நுழைவாயிலுக்குள் செல்லும்போது மனிதர்கள் உண் மையை மட்டும்தான் பேசுவார்கள் என்பதுதானே!
இங்கர்சால் ஒரு நாத்திகர் என்று அலட்சியப்படுத்தப்பட்ட காலம் மாறி, அவரது கருத்துகளை இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற இன்ப மொழிகளை அமெரிக்க மக்கள் 130 ஆண்டுகளுக்கு முன்பே கட்டணம் செலுத்தியல்லவா கேட்டு மகிழ்ந்தனர்!
வாழ்ந்து மகிழ்ந்தவர் பலர் என்பதும் உண்மைதானே!
நவில்தோறும் நூல் நயம் காண ஒரு நூலைத் தேடுவோர் இதனைப் படித்து இன்புறுக! எழுச்சி பெறுக!!
நாளை வாழ்வியலின் மற்றொரு களம்பற்றி அந்த அறிஞரின் அனுபவ ஆய்வுரையைக் கேட்டு மகிழ்வோம்!


.