பக்கங்கள்

சனி, 5 செப்டம்பர், 2015

நீங்கள் உங்களுக்கு உண்மையாயிருந்தால் போதுமானது



அண்மையில் திராவிடர் கழக வெளியீடாக வெளியான அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேன் குவளை! கோடை யிலே இளைப்பாற்றிக் கொள்ளக் கிடைத்த  ஒரு இலக்கியத் தென்றல். அதில் உள்ள இன்பம் பொங்கும் மொழிகளும், கருத்துரைகளும் அள்ளி அள்ளி அமிழ்துபோல் உண்ணவேண்டும்; பிறகு அதுபற்றி ஆழ்ந்து எண்ணவேண்டும்; மகிழ வேண்டும்.
பகுத்தறிவின் எட்டுத் தொகை என்பதுபோல எட்டு நூற்களின் தொகுப்பு இக்களஞ்சியம் - இந்நூல்!
வாழ்வியல் கூறி, நம் உள்ளத்திற்கு வன்மை சேர்க்கும் நூல் இது!
ஆண், பெண், குழந்தைகள் சுதந்திரம் என்ற தலைப்பில் அமெ ரிக்க அறிஞர் ராபர்ட் கர்னல் இங்கர் சால் அவர்களின் உரை வீச்சினை உள்ளே கொண்ட ஒரு  நூல் இந்நூல்.
அறிவும், ஆய்வும் ஒன்றுக் கொன்று போட்டியிட்டுக்கொண்டு முந்துறும் அற்புத நூலும்கூட! இந்நூல் பக்கம் 229 இல்,
மூளை வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியுமே நாம் இப்பொழுது காணும் (1833-லிருந்து 1899 வரை  66  ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவர் கூறியது இந்த இப்பொழுது என்பது; இன்றோ மனித அறிவின் வளர்ச்சி செவ்வாய்க்கோள் வரை சென்றுவிட்ட பல மடங்கு வளர்ச்சி யடைந்த காலம்) முன்னேற்றத்துக் கெல்லாம் மூலகாரணமாக உள்ளவை.
நம் முன்னோரைவிட நாம் அதிக சுதந்திரங்களைப் பெற்றிருப்பதற்கு அவர்களைவிட நமக்கு அதிக மூளை இருப்பதே காரணம். (பயன்பாடு அதிகம் என்பதை இப்படிக் கூறுகிறார் இங்கர்சால்).
ஆகவே, உண்மையைக் கடைப் பிடித்து ஒழுக வேண்டுமென்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாம் உண்மையென்று நம்புவதையும், நான் ருசுப்படுத்தப் போவதையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டாம்.
நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் போதுமானது.
- இந்தக் கடைசி வாக்கியம்தான் மேலே தலைப்பாகத் தரப்பட்டுள் ளது!
அவரவர் அவரவருக்கு உண் மையாக இருந்துவிட்டால் அதை விட, திருட்டு, புரட்டு, ஏமாற்றல், ஏய்த்தல் ஏதாவது சமூகத்தில் இருக்க இடம் உண்டா?
நெஞ்சில் நினைப்பதை செயலில் நாட்டுதல் நீசமன்று மறக்குல மாட்சி யாம் என்றார் புரட்சிக்கவிஞர்.
உன்னையே நீ உணர்ந்துகொள் என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ்.
அவரவர் அவரது உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதல்தான் அது!
நம்மில் பலர் ஊரை ஏமாற்றலாம்; உலகை ஏமாற்றலாம்; ஆனால், நம்மையே நாம் ஏமாற்றிவிட முடியுமா? ஒருபோதும் முடியாது!
உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுவோர் உறவு கல வாமை வேண்டும் என்றார் வடலூர் வள்ளலார்!
பிறரை வஞ்சிக்கும் எண்ணம் படைத்த எவரும் முதலில் தன்னை வஞ்சித்துத் தாழ்ந்து வீழ்ந்த நிலைக் குப் போகிறான் என்பதைத்தான் கூறாது கூறுகிறார்.
நீங்கள் உங்களுக்கு உண்மை யாக இருக்கவேண்டும் என்ற அறிவுரை  - கருத்துரைமூலம் இங்கர் சால் கூறுகிறார்.
நெஞ்சில் வஞ்சகம்; உதட்டில் கொஞ்
சு மொழிகள் - எஞ்சுவது இறுதியில் நிம்மதியற்ற, துன்பம் துளைத்தெடுக்கும் முடிவைக் கொண்ட வாழ்வுதான்!
இரத்தக் கண்ணீர் நாடகத்திலும், திரைப்படத்திலும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் இறுதியில் தன் நெஞ்சே தன்னைச் சுட்ட உள்ளத்தின் நிலையைக் காட்சிப் படுத்தும்போது,
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?
அற்றது உலகில் அமைதியும், மகிழ்வும்,
அரும்பிட முடியாது
என்பது போன்ற வரிகளில் போதிக்கும் தத்துவம்.
இங்கர்சால் கூறிடும் உங்களுக்கு உண்மையாக நீங்களே வாழாத நிலையின் விபரீத விளைவுதானே!
மரண வாக்குமூலங்களுக்கு சட்ட சாட்சியத்தில் மிகுந்த மரியாதை கொடுக்கப்படுவதின் தத்துவமே தொடக்கத்தில் எப்படியிருந்தாலும், மரணத்தின் நுழைவாயிலுக்குள் செல்லும்போது மனிதர்கள் உண் மையை மட்டும்தான் பேசுவார்கள் என்பதுதானே!
இங்கர்சால் ஒரு நாத்திகர் என்று அலட்சியப்படுத்தப்பட்ட காலம் மாறி, அவரது கருத்துகளை இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற இன்ப மொழிகளை அமெரிக்க மக்கள் 130 ஆண்டுகளுக்கு முன்பே கட்டணம் செலுத்தியல்லவா கேட்டு மகிழ்ந்தனர்!
வாழ்ந்து மகிழ்ந்தவர் பலர் என்பதும் உண்மைதானே!
நவில்தோறும் நூல் நயம் காண ஒரு நூலைத் தேடுவோர் இதனைப் படித்து இன்புறுக! எழுச்சி பெறுக!!
நாளை வாழ்வியலின் மற்றொரு களம்பற்றி அந்த அறிஞரின் அனுபவ ஆய்வுரையைக் கேட்டு மகிழ்வோம்!


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக