பக்கங்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

இலக்கியத்தில் சக்களத்திகளின் சமயச் சண்டை!



சிங்கப்பூரில் உள்ள பகுத்தறிவாளர் தோழர் மா. அன்பழகன் அவர்கள் கவிமாலை என்ற சிறந்த இலக்கிய வட்டத்தை உருவாக்கி, நல்ல தமிழ்க் கவிஞர்கள், பகுத்தறிவாளர்கள், பொது வான கலைஞர்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்தும் அரிய இலக்கிய மொழி உணர்வுப் பணியை அந் நாட்டில் சில ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறார்.
நேற்று (19.7.2015) காலை என்னை நலம் விசாரிக்க நண்பர்களுடன் வந்து சந்தித்தார்.
முதுபெரும் சிங்கப்பூர் எழுத்தாளர் பெரியவர் ஏ.பி. இராமன் 83 வயதிலும் நல்ல இளமைச் சிந் தனையுள்ள நடுநிலை எழுத்தாளர் ஆவர்) அவருடன் கவிஞர் ந.வீ. விசய பாரதி என்ற பண்பான இலக்கிய படைப் பாளியையும் அறிமுகப்படுத்தினர்.
அண்மையில் அவருடைய கவிதை நூலுக்கு ஆயிரம் வெள்ளி (சிங்கப்பூர்) பரிசு கிடைத்தது என்றும் கூறினார்.
தமிழர்கள் பெருமை அடை கிறார்கள் என்றால் அது நம் இனத்தின் பெருமை அல்லவா! மகிழ்ந்து சிறிது நேரம் உரையாடினோம்.
கவிஞர் விசயபாரதி தமிழ்நாட்டின் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் (மா. அன்பழகனின் சம்பந்தியார் என்பதும் இரட்டை மகிழ்வுக்குரியது).
அவர் எழுதிய கவிதை மற்றும் இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டும் ஆறு நூல்களை எனக்கு அளித்தார்.
எதையும் உடனே படிக்கத் துவங்கும் எனக்கு - நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால். தோழர்கள் பலரும் தொடர்ந்து வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.
இரவு பல நூல்களைப் புரட்டினேன். வேக வேகமாக சில நூல்களைப் படித்தேன்.
புலமைக்கு மரியாதை என்ற தலைப்பில், சிங்கப்பூரின் தமிழ் வானொலியான ஒலி 96.8இல் உள்ளூர் இலக்கியவாதிகளால் படைக்கப்பட்ட இனிக்கும் இலக்கியம் என்ற தொடர் நிகழ்வில், இவர் ஆற்றிய பொழிவுகள் பல இந்த நூலில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன!
தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை நளினம் என்ற தலைப்பில் உள்ள ஓர் பொழிவு, 16ஆம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய மருதநிலம் சார்ந்த படைப்பிலக்கியமான முக்கூடற்பள்ளு என்ற பள்ளு இலக்கியம் மருதநிலம் சார்ந்த படைப்பிலக்கியமாகும்.
நகைச்சுவையையும், நையாண்டித் தனத்தையும் சமய உட்பிரிவுகளுக் கிடையே வாயளவில் நடக்கிற சண்டை களும், செல்வவளம் படைத்தவர்களுக்கு ஆயுள் அடிமைகளாக சாமானிய மக்கள் வாழ்ந்திருந்த தகவல்களும் இந்த இலக்கியம் முழுவதும் இரைந்து கிடப்ப தால், படிக்கச் சுவையாக இலக்கிய இன்ப மும் இரண்டறக் கலந்து தருவதோடு, நமக்குள் ஒரு சமுதாயத்தாக்கத்தையும் உண்டாக்குகின்றன.
வடிவழகக் குடும்பனுக்கு இரண்டு மனைவியர் - இந்த இரண்டு மனைவி யருக்கும் நடக்கும் சக்களத்திச் சண்டை தான் இந்தப் பகுதி.
இரண்டு மனைவியரும் வேறுபட்ட சமயப் பிரிவுகளான சைவ வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்களானதால் அவ்வப் போது நடக்கிற சண்டையில் இந்த சமயப் பிரிவினைச் சண்டையும் இப்படைப்பில் நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது.
(மதச் சண்டைகள் எப்படி காலந் தோறும் வரலாற்றின் பதிவுகளாகவும், இலக்கியங்களாகவும் நடைபெற்றுள்ளன வென்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுவது பொருத்தமாகும்).
சக்களத்திகள் போடும் சண்டையில் சைவக் கடவுள்களும், வைணவக் கடவுள்களும் நடத்தும் கவிதைப் போர் காண்க. நூல் ஆசிரியர் மிக அருமையாக அதனைச் சுட்டுகிறார்.
அக்காலத்தில் சமய உட்பிரிவுச் சண்டையாக இருந்த சைவ - வைணவப் போராட்டம் இவர்களது சக்களத்திச் சண்டையில் வெளிப்படுகிறது.
சாதிப்பது உனக்கு வரும்
மருதூர்பள்ளி - நரிதான்
பரிபாயச்சா தித்தானுங்கள்
சம்புவல்லோடி
என்று சிவபெருமான் மாணிக்கவாசக ருக்காக நரியைப் பரியாக்கிய கதையைக் கூறி இப்படிச் சாதிப்பது உங்கள் புத்தி என்று சிவனைப் பழிக்க,
இளையவள் சமயச் சண்டையிலும் சளைக்காதவளாக,
பேதிக்கச்சா திக்கவராய்
முக்கூடற்பள்ளி - கல்லைப்
பெண்ணாகச்சாதித்தானுங்கள்
கண்ணனல்லோடி
என்று தவமுனிவரின் சாபம் பட்டுக் கல்லாய்ச் சமைந்து கிடந்த அகலிகையை மீண்டும் பெண்ணாக்கிய இராமனின் கதையைக் கூறி இராமனைப் பழிக்கிறாள்.
மறுபடியும் மூத்தவள்,
சுற்றிக்கட்ட நாலுமுழத்
துணியுமில்லாமல் - புலித்
தோலை உடுத்தானுங்கள்
சோதியல்லோடி
என்று பாடி நாலு முழத் துணிகூட உடுத்த வழியில்லாமல் புலித்தோலை உடுத்தியவன்தானே உன் கடவுள் என்று சிவனைப் பழிக்க,
கற்றைப் சடைகட்டிமர
உரியுஞ் சேலைதான் - பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள்சங்குக்
கையனல்லோடி
என்று திரும்பவும் இளையவள் திரு மாலைப் பழிக்கிறாள். முடிவு தெரியாத இந்தச் சண்டையில் மூத்தவள் மறுபடியும்,
ஏறவொரு வாகனமும்
இல்லாமையினால் - மாட்டில்
ஏறியே திரிந்தானுங்கள்
ஈசனல்லோடி
என்று வாயாட,
வீறுசொன்ன தென்ன மாடு
தானுமில்லாமல் - பட்சி
மீதிலேறிக் கொண்டானுங்கள்
கீதனல்லோடி
என்று இளையவளின் வாயாடித் தனமும் வளர்கிறது.
நகைச்சுவையும் நிறைந்த இப் பகுதி முழுவதும் தொடர்கிற அவர்களது சண்டை, உச்சகட்டத்தை அடைந்ததோ அல்லது களைத்துப் போனார்களோ அல்லது நல்லதொரு முடிவைச் சொல்ல வேண்டுமென்று படைத்தவர் நினைத்தாரோ முடிவாக இரண்டு மனைவியரும் தங்கள் மோதலுக்கு முடிவு கண்டு கடைசி யில் சமாதானமாகப் போய்,
பன்னகத்தி லாடியமுக்
கூடலழகர் -திருப்
பாதமலர் வாழ்த்தி யாடிப்
பாடு வோமே
என்று மதப் பிரிவுச் சண்டைகள் கூடாதென இருவரும் ஒருவருக் கொருவர் உணர்ந்து திருந்துவதாக இப்பகுதி நிறைவுறுகிறது. 16ஆம் நூற்றாண்டில் படைக்கப் பட்ட இப்பள்ளு இலக்கியம் இந்த 21ஆம் நூற்றாண்டின் இளைஞனும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும்; சுவையும், சுகமும் கூடிய இலக்கியமாகவும் இருந்து நம் மனத்தை வருடி வசப்படுத்து கிறதல்லவா!
சிங்கப்பூரில் தமிழ் படைப் பாளிகள் நல்ல எழுத்தாளர் களாக வும், கருத்தாளர்களாகவும், கவிஞர் களாகவும் திகழ்வது எம்மொழி, செம்மொழி என்பதை உலகுக்கு காட்டுவதன்றோ!
கவிஞர் விசயபாரதியின் ஆற்றல் வளர்க! வாழ்க!
-viduthalai,20.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக