பக்கங்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

இளைஞர்களே, பாடம் கற்றுக் கொள்ளுங்கள்


கடந்த நான்கு நாள்களுக்கு முன் வெளிவந்த ஒரு செய்தி மிகவும் வேதனையையும் வெட்கத்தையும் தரக் கூடிய செய்தியாக அமைந்தது.
தேனி நகரத்தின் ஒரு பகுதி பழனிசெட்டிப்பட்டி என்பதாகும். அதில் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரிய மூதாட்டி வசித்து வருகிறார்.
அவருக்கு மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் இருவர் எல்லோரும் ஒன்றாகவே வாழுகிறார்கள்.
இந்த இரு பேரப் பிள்ளைகளும் படிக்கிறார்கள். பாட்டியிடம் பாசத் துடன் பழகக் கூடியவர்கள்தான். பாட்டி தரும் பணம் - எடுக்கும்பணம் - இவற்றால் ஆடம்பரமான, வாழ்க் கையை வாழுவது, வெளியில் தங்குவது, கண்டபடி செலவழிப்பது - இப்படி ஒரு உல்லாசப் பொழுது போக்கில் - ஆடம்பர வாழ்வு மோகத் தில் திளைத்திருக்கிறார்கள்.
தற்போதைய இளைஞர்களைத் தவறான முறையில் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கியிருக்கும் சின்னத் திரை விளம்பரங்கள் (இதனால் பல குடும்பங்களில் குடும்ப இல்லத்தரசி களும்கூட சீரழியும்! செய்திகள் ஒரு தனி சோகக் காவியம் படைக்க வேண்டிய தாகும்) போதாக்குறைக்கு நாசப்படுத்தும் குடி - டாஸ்மாக் மதுக் கடைகள் - மதுப் பழக்க வழக்கங்கள் - இதனால் இவர் களுக்குப் பணத் தேவை அதிகமாகி யிருக்கிறது.
அதனைப் பெற இளைஞர்களேகூட  பல தீய வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறார்கள்!
தேனி - பழனி செட்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையின் பரிதாபக் கதைக்கு வருவோம்.
அந்தப் பாட்டியின் பணத்தைக் களவாடி செலவிட இந்த  அண்ணனும் - தம்பியும் (பேரப்பிள்ளைகள்) திட்டம் போட்டனர். பாட்டி தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்று விட்டு, இவர்களும் துக்கத்தில் பூனைகள் போல் கலந்து கொள்கிறார்கள். பிஞ்சு வயதில் ஏறிய நஞ்சு - மனப்பான்மை - வித்தியாசமான நடத்தை மூலம் - விசாரணையில் இவர்கள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள்.
தங்களது கொலைக் குற்றத்தை தாங்களே ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்!
இந்தச் செய்தி கேட்டு தன்னுடைய தாய், தன்னுடைய மாமியார் கொலை செய்யப்பட்டது - தனது இரு பிள்ளை களாலே என்ற வேதனை, குடும்பத்தில் இருந்த மூதாட்டியாரை இழந்ததை விடப் பெருத்த அவமானம் நிறைந்த கொடுமை என்பதால் அவ்விருவரும் தற்கொலை செய்து  மாண்டு விடுகிறார்கள்!
என்னே விபரீதம்! வருந்தத்தக்க முடிவு. வேதனை  இந்த வாழ்ந்த குடும்பத்திற்கு. இச்செய்தியால் இந்த இளை ஞர்கள் இனி, பாடம் பெற்று தான் என்ன பயன்?
இந்த சம்பவம் பலருக்குப் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு ஆகும்!
ஆடம்பர வாழ்க்கை ஒரு மனிதனை கள்ளனாக்கும், குடிகார னாக்கும், சூதாடியாக்கும், சுய கவுரவம்பற்றி மறக்கச் செய்யும்; எந்தக் குற்றத்தையும் செய்யத்  தயங்காத வெறித்தனத்திற்கும் தள்ளி விடும்.
எளிமை வாழ்வும், சிக்கனமும் மனிதர்களை வாழ வைக்கும்; தன் மானம் காக்கும்; தகைசால் மனிதர் களாக உயர்த்தும்!
எனவே இளை ஞர்களே, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,17.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக