இது விளம்பரயுகம்தான். சந்தே கமே இல்லை. வியாபாரத்திற்கழகு விளம்பரம் செய்தல் என்பது பழமொழி,
இதனைத் தோற்கடிக்கும் வகையில் அளவுக்கு மீறிய விளம்பரங்கள், ஊடகங்களுக்குக் கொள்ளை லாபங்கள்.
லட்சியம் முக்கியமல்ல; லட்சங் களே என்று பிரபல நாளேடுகள், ஊடகங்களில் முதல் மூன்று பக்கங்கள், கடைசி பக்கங்கள் எல்லாம் முழுப்பக்க விளம்பரங்களே!
இன்னும் கொஞ்ச நாளானால் சொற்களும் இடம் பெறும் - என்ற நிலை நாளேட்டுக்கும் வரும் போலிருக்கிறது!
அரசுகளே - விளம்பரத்தினைச் செய்வதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கலையின் உச்சத்தைத் தொடுகிறது!
ஆம் விளம்பரம் மூலம் ஊடகங்களை, ஏடுகளை விலைக்கு வாங்கி அவர்தம் வாயில் பணக் கொழுக்கட்டைகளை திணித்த வண்ணம் அழுத்தித் திணற வைத்து விடுகின்றது!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பது விளம்பரத்தின் தூணாக உயர்ந்து நிற்கிறது!
தமிழ்நாட்டில் இந்த விளம்பர வாசகங் களை கொள்கைப் பிரச்சாரத்திற்காக சுவர்களில் எழுதி மக்களுக்கு அறிவு கொளுத்தும் உத்தியை முதன்முதலாக திராவிடர் கழகம்தான் கற்றுக் கொடுத்தது!
அசாமிலும் மற்ற வட மாநிலங் களிலும் பெட்ரோல், மற்றவைகளுக்கு ராயல்டி உரிமத்தை வழங்கிடும் மத்திய அரசே தமிழ்நாட்டிற்கும் வழங்கு
நரிமணம் பெட்ரோல் நெய்வேலி நிலக்கரி இவைகளுக்கு ராயல்டி தமிழ் நாட்டுக்கு வழங்கு என்று எழுதினோம்.
இன்று அதன் விளைவு .. தமிழ்நாட்டுக் கருவூலத்திற்குப் பணம் ஆண்டுதோறும் - ராயல்டி வருகிறது.
அதுபோல சமூகநீதி - மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்குதல்,
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பற்றிய சுவரெழுத்துகளால் மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த எவ்வளவு கனிந்த பலன்!
இது பிறகு
கட்அவுட் கலாச்சாரமாக மாறியது! எங்கெங்கு காணினும் கட்அவுட்டுகள் அது எல்லை மீறி, எரிச்சலை அனை வருக்கும் உண்டாக்கியது. எனவே, அதனை ரசித்தவர்களே மக்கள் உணர் வைப் புரிந்து பிறகு எடுத்து விட்டார்கள்.
பிறகு இப்போது புதுத்தொழில் பிளக்ஸ் (flex) என்ற கணினி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளினால் ஆன போர்டு, பதாகைகள் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட.
காது குத்தல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் தலைவர்கள் படத்தைப் போட்டு வருக வருக என்ற சாக்கில் தங்கள் அத்தனை பேர்களின் படங் களையும், பிளக்ஸ் பதாகையில் போட்டு பார்த்துப் பார்த்து மகிழ்தல்!
பல தலைவர்களுக்கே தெரியும் இது நமக்காக வைக்கப்படவில்லை. நம் சாக்கில் அவர்கள், தங்களை விளம் பரப்படுத்திக் கொள்ளும் விநோதமான கண்டுபிடிப்பு இது என்று!
எந்தெந்த முறையில் என்ற எல்லையற்று இது இன்று நீதி மன்றங் களாலும்கூட, டிராபிக் ராமசாமி களாலும் கூட தடுக்க முடியாதபடி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாச மாய் தொங்குகின்றன!
வாசகங்களை எழுதும் வசனகர்த்தாக்களும் நம் நாட்டில் மிகப் பெருகி விட்டார்கள்!
தமிழ்நாட்டில் கூலிப்படைகள் கொலையில் மட்டுமே செழிப்பாக தம் பணிகளைச் செய்வதில் மும்முரமாய் இருக்கிறது என்ற உண்மையோடு இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மற்றொன்று
பாராட்டு மழைகளை வசனங் களாகப் பொழியும் கூலி வசன வியாபாரம் ஏராளம் உண்டே!
அந்தோ தாழ்ந்த தமிழகமே!
அந்தோ தாழ்ந்த தமிழகமே!
- கி.வீரமணி
-விடுதலை,31.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக