பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திருமண ஆடம்பரம் தேவையா?


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - என்பது விவிலியத்தின் (பைபிளில்) பழமொழி, ஆனால், நடைமுறை உண்மை என்ன வெனில் திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!
அது மட்டுமா?
நகர்ப்புறங்களில் நடைபெறும் திருமணங்களின் அருவருக்கத்தக்க ஆடம்பரங்கள்; கருப்புப் பணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க சுவிஸ் வங்கி களைத் தேடி நமது மத்திய அரசு ஓடிக் கொண்டிருக்கிறதே - இந்த ஆடம்பரத் திருமணங்களை நடத்துவோர் பட்டியலைத் தேடினால் கறுப்புப் பணம் எங்கே புதைந்துள்ளது என்பது புரியுமே! (திருப்பதி உண்டியல் முதல் பல இடங்களிலும் ரொக்கத்திற்குப் பதிலாக காசோலையாக (செக்)  மட்டுமே போட வேண்டும் என்ற ஒரு சிறு திருத்த அறிவிப்பை வெளியிட்டுப் பார்க்கலாமே - உடனே ஏழுமலை யானின் உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து விடுமே!)
திருமண அழைப்பிதழ்களே பற்பல திருமணங்களில் 100, 200 ரூபாய் (ஒரு அழைப்பிதழ்) ஆகும் அளவுக்கு புதுப்புது முறையில்...! சற்று நிதானமாக எண்ணிப் பாருங்கள். அந்த திருமண அழைப்பை - அந்த வீட்டாரைத் தவிர - வேறு யாராவது பாதுகாத்து வைக்கப் போகிறார்களா? இல்லையே! - குப்பைக் கூடைக்குத்தானே போகிறது? - இதன் பயன் என்ன? காதொடிந்த ஊசியளவுகூடக் கிடையாதே!
சில மண்டபங்களின் வாடகை மட்டும் 8 லட்ச ரூபாய் ஒரு நாள்  - இரு நாளுக்கு.
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ் வொரு வகையான நிபந்தனைகள் வேறு!
அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுக்கும் திருமணம் நடத்துவோர் - உணவு தயாரித்தல், புரோகிதரை அமர்த் தல், மண்டப அலங்காரக்காரர், நாதசுர (நாயனம்) வாசிப்போர் அனைத்துமே மண்டபக்காரர் மூலமே ஏற்பாடு செய்யப் பட வேண்டுமாம்!
என்னே நெருங்கிய பாச உறவு பார்த்தீர்களா? அதன் ரகசியம் விளக்க வேண்டியதே இல்லை.
விருந்துகளின் ஆடம்பரங்களில் காலைச் சிற்றுண்டி - எத்தனை இனிப்பு வகைகள்! எவ்வளவு உணவு வகை யறாக்கள்!  சிற்றுண்டிக்கென அவ்வளவும் அணி வகுத்து இலையில் வந்து குந்திக் கொள்ளுகின்றன!
பாதி பாதியாக இலைகளில் மிச்சம்! அப்படியே எடுத்து குப்பையில் கொட்டும் அழகுதான் என்னே!
உடனே ஒரு சில மணித்துளிகளில் மதிய தடபுடல் விருந்து - சுமார் 29 காய்கறி வகையறா!
இதற்கிடையில் சில்லறைக் கடைகள் போல் தனித்தனி வகைகள் பீடா வரையில்.
மாலையில் வரவேற்பு என்ற பெய ரால் மற்றொரு ஆடம்பர வெளிச்சம்! பிரபல பாடகர் பாடிடுவார்;  ஒரு சிலர் உட்கார்ந்து கேட்பவர்கள் தவிர, மற்றவர் வருவார் - போவார்! பாட்டு பாடுபவர் இயந்திரம்போல் பாடி, கடைசியில் பேசிய தொகையை வாங்குவதற்குப் பதிலாக முன்கூட்டியே மொத்த தொகையை வாங்கிய பின்னரே குழுவினரோடு வருவார்!
பழைய பஜனை மடங்களில் பாடு வோர் தேங்காய் மூடிக் கச்சேரிக் காரர்கள் என்று கேலி செய்வோர் உண்டு, இப்போது பணம் அதிகம்  - வருவாய் பெருகிடும். ஆனால், சுவைத்தோர் வெகு குறைவு - இதிலும் சலிக்காமல் பாடும் அவரது சகிப்புத் தன்மைக்காகத்தான் அவ்வளவு பணம் - பொறுமையின் சின்னமாயிற்றே! மாலை 6 மணி முதல் வரவேற்பு மண்டபத்தில் என்று அழைப்பிதழில் போட்டதை வைத்து உடனடியாக மணமக்கள் வரவேற்பில் கலந்து வாழ்த்தி விட்டு விடை பெறலாம் என்று திட்ட மிட்டு வந்த வருகையாளர்களுக்கு,  மிஞ்சுவது ஏமாற்றமே!
காரணம் பெண் பியூட்டி பார்லரி லிருந்து (Beauty Parlour) அழகு நிலையம் என்று நம்ம மொழியில் சொன்னால் அவ்வளவு அழகாக இருக் காது என்பதால் அப்படி  அழைக் கின்றனர் போலும்! மணமக்கள் சிங்காரித்து அலங்கார பொம்மையாக வருவதற்கு ஒரு மணி நேர கால தாமதம் ஆகும்! (இயற்கை அழகைக் கெடுத்து ஒப்பனை அலங்காரம்  என்ற அலங்கோலம்)
அழைப்பாளர்களில் அவசர கதியில் விடை பெறுவோர்- பெற்றோர் களையே வாழ்த்தி விட்டு திரும்பும் சந்தர்ப்பங்களும் பற்பல நேரங்களில் தவிர்க்க முடியாதவையே!
பசியேப்பக்காரர்களைக் காணாது; புளியேப்பக்காரர்கள் கூட்டத்தையே பார்க்கும் வண்ணம் அந்நாள் முழு வதும் அமையும்!
இது தேவையா?
வரதட்சணை என்ற பெயரால் மணமகனை விலைக்கு வாங்கும் விலை உயர்ந்த நிலை வேறு! - அந்த கணக்கு இதில் வராது.
ஒரு நாள் சில மணி நேரத்திற்கு இப்படியா? இந்த ஆடம்பரத் திருமணங்களைத் தடை செய்தால் அது ஒரு வகையான சமூக நீதிதான்!
இதற்காகவே மற்றொரு முறை இந்திரா காந்தியின் நெருக்கடி கால நிலை திரும்பவேண்டும் போலிருக்கிறது! எங்கள் நாட்டுக்கெந்தநாடு ஈடு?  - பாடுவோம்.
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,2.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக