பக்கங்கள்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

அன்பு விளைச்சல் குடும்பத்தில் - எப்போது?


நேற்று முதல் நாள்  விடுதலையில் (27.8.2015) வெளிவந்த இங்கர்சாலின் இன்பவாழ்வியல் இதோ? என்பதில் நான் அவரது கருத்துகளில் உள்ள ஒரு நீண்ட சுவையான, பயனுறு அறிவுரை - கருத்துரையை எடுத்துக் கூறினேன்.
அதை அசை போட்டு எண்ணிப் பாருங்கள் - எவ்வளவு அழகான வாழ்க்கையின், இருட்டை விரட்டி வெளிச்சத்தை அழைத்து வந்து ஒளிவீச்சு தரும் பகுதி அது.
அதில் ஒரு மிக முக்கிய கருத்து
நானே குடும்பத்துத் தலைவன், வீட்டுக்கு  முதலாளி என்று கூறு பவனை நான் அறவே வெறுக்கிறேன்,
நானே தலைவன் நானே அதிகாரி என்று கூற ஒருவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? -  கேட்கிறார் இங்கர்சால்
குடும்பங்களைப் பொறுத்தவரை, அதற்கு ஆண்கள் தலைமை தாங்கும் முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு பெண்களே  தலைவர்களாக முதல் உரிமையும் வழிகாட்டிகளாகவும் அமைந் தால் அதைவிட வளர்ச்சிக்கு - முன் னேற்றத்திற்கு - சிறந்த வாய்ப்பு வேறு இருக்க முடியாது!
வீண் ஜம்பம் - ஆதிக்கத்தின் வெளிப் பாடு, உத்தரவு போடும் அதிகாரிகளாக ஆண்களாகிய நாம் மிகப்பெரும்பாலோர் இருக்கிறோம்.
நடைமுறையில் மிக அதிகமான அளவில்  பொறுப்பு பெண்களிடம்தான் இருக்கிறது - பெரும்பாலான குடும்பங்களில்!
பெரும் வசதி படைத்த செல்வச் சீமான்கள் குடும்பத்திற்கும் சரி, அன் றாடங் காய்ச்சிகளான அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்கும் அல்லாடி, உழைத்து வறுமையில் உழலும் வாழ்க்கையை முறையாகவே மாற்றிக் கொண்ட  - வாழ்வின் மலம் அள்ளும் தொழிலாளித் தோழன், தோழி எப்படி மூக்கைப்பிடிக் காமல் சர்வ சாதாரணமாக அத்தொழி லுக்கு பழகி விடுகிறார்களே - அந்தக் குடும்பங்களிலும் சரி, ஆளுமை உண்மை யாக பெண்களிடமே உள்ளது!
சாராயம் குடிக்க காசுக்கு கையேந் துவதும் பல வீடுகளில், அன்றாடம் உழைத்து. கூலி பெற்றுவரும் எனதருமை தாய்மார்களிடம் அவர்களது குடிகாரக் கணவன்மார்கள் எப்படியெல்லாம் கெஞ்சுகிறார்கள் என்பது காணாத காட்சியா? அப்படியிருந்தாலும் கணவன் என்று உரிமை கொண்டாடி உதைத்தும், அடித் தும் காசு கேட்கும் கவுரவப் பிச்சைக் கனவான்களாக கணவன்மார்கள் அப் படிப்பட்ட நிலையிலும் - எஜமானத் தலைவர்களே என்றால் இதை விட பெருங்கேடான சமூக அநீதி வேறு உண்டா?
இல்லாள் அகத் திருக்க இல்லாதது ஒன்றுமில்லை
என்ற ஒரு சொலவடை உண்டு!
இதற்கு நேரடியான பொருள் வாழ்விணையரான மனைவி வீட்டில் இருந்தால் அவரே எல்லாவற்றையும் நீக்குப் போக்குக்கருதி சமாளித்துச் சரி செய்வார். அத்திறமை அந்தப் பெண் ணிற்கு உண்டு என்பதைச் சொல்லும் கருத்தியல் தானே!
இதில் அகத்திருக்க என்பதோடு வீட்டில் என்று பொருள் கொண்டால் அது குறுகிய வட்டத்திற்குள் நினைத்து துணைவியை அடைத்துவிடும் சிந் தனையே!
மாறாக அகத்திருக்க என்பதற்கு ஒரு விரிந்த பரந்த விளக்கப் பொருள் தரலாமே!
இல்லாள் - வாழ்விணையர் - உள்ளத்தில் - எல்லோர் உள்ளத்தில் அன்பு ஆட்சி செய்தால் - கணவன் - துணைவன் உள்ளம் உட்பட அனை வரின் உள்ளங்களையும் ஆள்பவராக மாறுகின்ற அன்பின் ஊற்றாக ஆனால் குடும்ப மகிழ்ச்சி சோலையாகத் தானே திகழும்!
முரட்டுக் கணவன்மார்களே, அதி காரக் குரலில் மிரட்டும் எஜமானர்களே!
கொஞ்சம் அன்பு வழியை - அர வணைப்பு - இதமானச் சொற்களைக் கூறி நடந்து பாருங்கள், அமோக அன்பு விளைச்சலைப் பெறுவீர் - இது! நிச்சயம்!
-விடுதலை,29.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக