பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல; துயரம், துன்பம் என்பதும் நிரந்தர மல்ல. நிரந்தரமாக அவை இருந்திடின், இரண்டின் தனித் தன்மை நமக்குத் தரும் அனுபவங்கள் காணாமற் போய்விடும்.
மகிழ்ச்சியின்மை - ஒவ்வொரு வரது வாழ்விலும் ஏற்படுவது இயற் கையே - தவிர்க்க முடியாததும்கூட.
சில நேரங்களில் மகிழ்ச்சிக்கு விலை கிடைக்காமலே அது நமக்குக் கிடைக்கிறது.
பல நேரங்களில் அதிக விலை கொடுத்துத்தான் அதைப் பெற்றாக வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை என்று ஒரு தீர்ப்பு வந்து அவர்களது சிறைக் கதவுகள் திறக்கும்போதும், 10 மாதம்  சுமந்து பெற்று, தனக்காக இல்லா விடினும் தனது கருவினுள் உள்ள குழந்தைகளுக்காக எல்லாவித பத் தியங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பிரசவ வேதனை - அறுவை சிகிச்சை வரை சென்றும், குழந்தையின் நலன் காக்கும்  தியாகம் - துன்பத்தைத் துடைத் தெறிந்து, மகிழ்ச்சியை, பிறந்த குழந்தையின் உச்சி மோந்து முத்தம் தருகின்ற போது, விலை கொடுத் தாலும் நல்லதைப் பெற்றோம் என்ற தாயின் மகிழ்ச்சியையும் அளவிட அளவுகோல்தான் உண்டா?
மகிழ்ச்சி ஏற்பட்டாலும், துன்பம் துயரம் நம்மைத் தாக்கினாலும்கூட, அதை நம்மில் சிலர் மறைத்து வைத்துக் கொள்ள முயலுகிறார்கள்; அது தேவையற்ற ஒரு தவறான அணுகு முறையாகும். எதையும் வெளிப்படையாக்கிக் கொண்டால் தான் கனத்த இதயம் லேசாகி நமக்கு நிம் மதியைத் தரும்! விரைந்து அது அகல வாய்ப்பு ஏற்படும்.
மகிழ்ச்சியைக் கண்டபோது சிலர் அளவு கடந்த துள்ளல், ஆட்டம், பாட்டம் போட்டு ஊரையே துவம்சம் செய்து விடுவார்கள். அதுபோலவே ஒரு சிறு அளவுக்குத் துன்பமோ, துயரமோ வந்தால் அதைத் தாங்கும் மன வலிமை இல்லாது மனந்தளர்ந்து, மூலையில் ஒடுங்கிக் கிடப்பர்.
இரண்டு எல்லை தாண்டிய நிலைப் பாடும் மகிழ்ச்சியான சராசரி பக்குவம் கொண்ட மனிதருக்குத் தேவையில்லை.
மகிழ்ச்சியை, எப்படிப் பெறுவது என்று ஏராளமான ஹிதோபதேசங்களும் - அறிவுரைகளும் - ஒலி நாடாக்களும், புத்தகங்களும் வியாபாரப் பொருள்களாகி சந்தையில் மலிந்து கிடக்கின்றன.
விற்றவருக்கு மகிழ்ச்சி - அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு. மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் சரக்கல்ல. நம் மனதில் நமக்குள்ள பக்குவத்தின் முதிர்ச்சி,  முனைப்பு. அவ்வளவுதான்.
மகிழ்ச்சி என்பது தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்றதாக அமைய வேண்டும். அதை நாமே நமது ஏகபோகச் சொத்தாக்கி மகிழ்வதில் உண்மை இன்பம் இல்லை. மகிழ்ச்சியை நாம் மற்றவர் களுக்கு - அது  தேவைப்படும் நிலையில் நமது உற்றார், நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கும்போதுதான் நமக்கு அது ஊற்றாக சுரக்கிறது! வற்றாத ஜீவ நதியாக என்றும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
அடுத்தவருக்குப் பயன்படாது அணை கட்டிக் கொண்டு இயற்கையைப் பங்கு போடும் ஈன புத்தியாளர்களைப் போல, பலர் மகிழ்ச்சியைக்கூட அணை கட்டித் தேக்கினால், அது அதன் இயல்பை இழந்து விடுவது உறுதி. மகிழ்ச்சிக்கும் நம் உடல் நலத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவு உண்டு. மறந்து விடாதீர்!
எதற்காகவும் கவலைப்படாமல், ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதை, விருப்பு, வெறுப்பற்ற முழுப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும்போது விடையும் கிடைக் கும், தடையும் நீங்கும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளே இல்லை. அறிவால், அனுபவத்தால் - பிறரின் உதவியால் தீர்க்கப்படலாம். துணி வுடன் அணுகுங்கள் - மீறி தோல்வி ஏற்பட்டாலும் அதையும் ஏற்று சுவைத்து அனுப விக்கப் பழகுங்கள் - பரங்கிக் காய் இனிப்புடன் உள்ள  கறி ; எனவே இனிக்கிறது.
பாகற்காய் கசப்புடன் உள்ளது. பலருக்கு உட்கொள்ளவே தயக்கம் - ஆனால் அது தரும் சுக கசப்பு  போல் பரங்கியின் இனிப்பு தருவ தில்லையே!
இனிப்பின் பெருமை - அருமை கூட கசப்பு என்று ஒன்று ஒன்பான் சுவையில் ஒன்றாக இருப்பதால் தானே! எண்ணுவீர்!
எனவே மகிழ்ச்சியை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் - நமது மூச்சை நாமே (சுவாசித்து) உள்ளே இழுத்து வெளியே தள்ளுகிறோமே அதுபோல; மகிழ்ச்சியை உள்ளே இழுத்து, துன்பத்தை வெளியே தள்ளுங்கள். இரண்டும் வாழ்வின் இரு இன்றியமையாக் கூறுகள் - தேவைகள் - மறவாதீர்!
-விடுதலை,11.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக