பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மருந்து வேண்டாம் - எப்போது?


இன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.
உலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்!
சூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்!
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்!
இவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து)  வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்!
பலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது!
வேதனைப்பட வேண்டிய செய்தி இது!
மருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.
பக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்!
சிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது!
இதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்!
அத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளிவான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது!
முதல் விதி:
1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது?
நீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே!
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  அருந்தியது அற்றது போற்றி யுணின்    (குறள் 942)
தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.
அதுபோலவே, அடுத்து ஒரு குறள்:
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு  (குறள் 943)
இதன் கருத்து
ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.
எனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும், எப்படிப் பட்ட துன்பமும் தொல்லையும் நோயும் மனிதர்களை வருத்தும் என்பதை அறிந்து, ஆராய்ந்து, அவற்றை நீக்கத் தேவையான அறிவுரைகளை அறவுரைகளாக வழங்கும் வள்ளுவரின் மருந்து, மருத்துவம் பற்றிய நுண்மாணுழைபுலம் மிகவும் வியக்கத்தக்கது அல்லவா?
மருத்துவ முறையையே நான்கு வகைப்படுத்தி வள்ளுவர் தனது குறளில் கூறும் கருத்துக்கள் அவர் எத்தகைய தலைசிறந்த பகுத்தறிவுக் கண்ணோட்ட முடையவர் என்பதை நன்கு விளக்கக் கூடியதாக இருக்கிறது என்பதற்கு இக்குறள் ஒரு அருமையான சான்று அல்லவா?
உற்றவன் தீர்ப்பான், மருந்துழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து               (குறள் (950)
இதன் பொருள்: 1.  நோயாளி, 2. நோய் தீர்க்கும் மருத்துவன், 3. மருந்து, 4. நோயாளிக்கு அருகில் இருந்து உதவி புரிபவன் என்று நான்கு வகைப் பாடுகளை உடையதே மருத்துவ முறையாகும்.
என்னே அருமையான ஆய்வு! மருத்துவத்தையே அறுத்து நான்கு கூறுகள் முக்கியம் என்கிறாரே!
இன்று நமது மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நோய்க்கு மூலமான ஒன்று ஒவ்வாமை (Allergy) என்பதாகும்.
வெளிப்புறத் தூசியினால், மருந்தினால், உணவி னால் இத்தகைய ஒவ்வாமை பலருக்கு ஏற்படுகிறது!
ஆனால், அதன் காரணம் இதுதான் என்று புரிந்து கொள்ளாமல், வேறு எந்தெந்த மருந்துகள் - மருத் துவப் பரிசோதனைகள் - மருத்துவ சிகிச்சைகளை நாம் மேற்கொண்டு அவதியுறுகிறோம் பற்பல நேரங்களில் (எனக்குக்கூட பல ஆண்டுகளுக்குமுன்பு இத்தகைய கசப்பான, வேதனையான அனுபவம் ஏற்பட்டு, இறுதியில்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் இடம் பெற்ற தலை சிறந்த தொண்டற டாக்டர் தம்பையா அவர்கள் கண்டுபிடித்து, எளிய மருத்துவத் தைக் கூறி என்னை உபாதையிலிருந்து விடுவித்தார்!)
திருவள்ளுவர் இந்த ஒவ்வாமை நோயை அறிந்து, புரிந்து, மிகவும் துல்லியமாக இரண்டு குறள்களில் கூறுவது நம்மை வியப்புக் கடலில் தள்ளுகிறது!
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து                     (குறள் 944)
இக்குறளின் பொருள் இதோ: ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்து உள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.
உணவு உடம்பில் மாறுபாட்டினை உண்டாக்குவது தான். ஒவ்வாமை - அதனை அவாமையே நம்மைக் காப்பாற்றும் இல்லையா?
சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாதனவாக இருக்கக் கூடும். இதை அறியாமல் அதை உண்டு, உயிர்க்கு இறுதியாகி விடும் பேராபத்தும்கூட அதனால் ஏற்படுவது உண்டு.
காய்கறிகளை விரும்பிச் சாப்பிடும் ஒருவர், முருங்கைக் காயை உணவில் எடுத்துக் கொண்ட பிறகு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீண்ட நிகழ்வுகள் அறிவேன்.
அதுபோலவே, மீன், இறைச்சி, இறால் உணவு களை உண்ணுவோரில் சிலருக்கு இறால் வகை, அல்லது குறிப்பிட்ட இறைச்சி வகை உண்ட சில மணித்துளிகளுக்குப் பிறகு - உடம்பெல்லாம் தடித்து, முகம் வீங்கி - மூச்சு விடுவதற்கேகூட ஆபத்து என்று ஆகும் நிலையும் ஏற்படுவது உண்டு.
இதைத்தான் வள்ளுவர் - உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு - உண்ணுக - அதுவும் நன்கு பசி வந்த பிறகே உண்ணுக என்று அறிவுறுத்துகின்றார்!
இன்னும் தெளிவாக, அடுத்த குறளில் ஒவ்வாமை பற்றி விளக்குகிறார்!
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.             (குறள் 945)
கருத்து:
உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்தி, செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கை நோய்களினால் துன்பம் ஏற்படுவது இல்லை.
எனவே, செரித்தபின் உண்ணுங்கள்.
நமது உடல் அமைப்பில் முக்கிய பணிகள் - செரிமானக் கருவிகளால் தத்தம் கடமையைத் தவறாது செய்து நம்மை வாழ வைக்க உதவுகையில், நாம் அவற்றின் பணிக்கு உதவிட வேண்டாமா?
அதுதான் அளவறிந்து உண்ணுதல்,
செரித்தபின் உண்ணுதல்
ஒவ்வாதனவற்றை நீக்கி உண்ணுதல்
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற ஆசை உங்களைத் தூண்டும்போது, அந்த ஆசைக்குப் பலியாகாமல் உடனே இலையை விட்டு எழுந்து விடுங்கள். அந்த கொஞ்ச நேரம் - வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் நீண்ட காலம் கொஞ்சி வாழ வகை செய்யுமே! புரிந்து செயல்படுக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
விடுதலை,,29,30,1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக