பக்கங்கள்

சனி, 15 ஆகஸ்ட், 2015

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.பற்றிய நினைவலைகள்


நடிப்பிசைப் புலவர் என்று நாடு அறிந்தவர், நல்லோரால் பாராட்டப் பெற்ற நண்பர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் ஆவார். அவர்களது நினைவு நாளான இன்று (5.8.2015) அவர் பற்றிய நினைவலைகளில் நீந்தினேன்.
குடந்தை அருகில் உள்ள அம்மாசத் திரம் என்ற சிற்றூரில் எளிய குடும் பத்தில் பிறந்து, கலை ஆர்வம் காரண மாக இளம் வயதிலேயே நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி, நாடகக் கம்பெனிகளில் நடிகராக நடித்து உயர்ந்தார். நடிப்பு மட்டுமல்ல; வெண் கல நாதக் குரல் ஒலி கொண்ட இவர், நன்றாகப் பாடும் ஆற்றலாளர்.
நடிப்பு + இசை  இத்துறைகளில் புலமை பெற்றவரான இவருக்குப் பொருத்தமானதுதான் அப்பட்டம்! (நாவலர் இரா.நெடுஞ்செழியன் இந்தப் பட்டத்தை அளித்தார்).
சென்னையில் நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பொய்யாக ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சென்னை சிறையில் இருந்த காலத்தில், சென்னை யில் என்.எஸ்.கே. நாடக மன்றம் என்ற பெயரில் டி.ஏ.மதுரம் அம்மையார், என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது கார் ஓட்டுநர் - நடிகர்  எஸ்.வி.சகஸ்வர நாமம் ஆகியோர் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
அதில் நடிப்பிசைப் புலவர்  கே.ஆர்.ஆர். அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார், பின்னர் கருத்து மாறுபாடு காரணமாக தஞ்சையில் தனியே என்.எஸ்.கிருஷ்ணன் நாடக சபா என்ற தனி கம்பெனி ஒன்றைத் தொடங்கினார்.
திராவிட இயக்கத்தில் குறிப்பாக அறிஞர் அண்ணா அவர்களிடம் தனிப் பற்று - பாசம் - நட்பு கொண்ட கே.ஆர்.ஆர். அவர்கள், கேட்டுக் கொண்டதற்கிணங்க, அண்ணா அவர்கள் ஓர் இரவு என்ற ஒரு அற்புத நாடகம் ஒன்றை  இவரைப் பிரதான நடிகராகக் கொண்டு நடித்திட எழுதித் தந்தார்.
தஞ்சை இராமநாதன் செட்டியார் நாடக மன்றத்தில், அந்நாடகம் மிகச் சிறப்புடன் நடைபெற்று மிகப்பெரும் வசூலை வாரிக் கொடுத்தது! வெளியூர் களிலிருந்தெல்லாம் அந்நாடகத்தைப் பார்க்கவே திரளாக வந்து பார்த்துத் திரும்பிச் சென்றனர்.
(கடலூரிலிருந்து நாங்கள்கூட சென்று, நாடகத்தினைக் கண்டு சுவைத்துத் திரும்பிய மகாஜனங்களின் பட்டியலில் இருந்தோம்).
பண்ருட்டியைச் சார்ந்தவரும், தந்தை பெரியாரிடத்திலும், திராவிடர் கழகத் திடமும் நீங்காப்பற்று கொண்டவருமான எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் மிக அரிய நாடக உத்திகளை - வியக் கத்தக்க அளவில் செய்யும் தனி ஆற்றல் படைத்தவர். அருமையான காட்சி, புதுடெக்னிக்கை  (அக்காலம் கணினி யுகம் அல்லவே) கையாண்டு வியக்கத் தக்க அளவில் செய்தார்.
உடுமலை நாராயணகவியின் பார் முழுதும் ஏர் முனையிலே என்று உழவர்கள் வயலிலிருந்து வீடு திரும்பும் காட்சியுடன், மாலை நேரம் காட்டப் படுகின்றது.
ஓர் இரவு நாடகம் தொடங்கும்;  அதற்கு முன்பாக, ஒன்று நன்றி காணிக்கை சீன் போல, அந்தி சாய்ந்து விட்டவுடன் உழவர்கள் வீடு திரும்பும் காட்சிக்கு முன்னரே - கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் என்ற இரண்டு சிறைக் கைதிகளை மாலை சிறைவார்டர்கள் லாக்-அப் அறைக் குள் அடைத்துப் பூட்டுவது போன்ற நெஞ்சை நெக்குருக்கும் காட்சியும் உண்டு.
இந்த ஓர் இரவு நாடகத்திற்குப் பற்பல தலைவர்கள் தலைமை தாங்கி பாராட்டினார்கள். அதில், கல்கி ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர் பேசியபோது, அறிஞர் அண்ணாவை தமிழ்நாட்டுப் பெர் னாட்ஷா என்று குறிப்பிட்டதோடு, சுயமரியாதை இயக்கத்தின் சொடுக்கு சாட்டை எழுத்தாளர் - எவரும் எளிதில் காப்பியடித்துவிட முடியாத பாணியில் - முறுக்குடன் எதையும் எழுதித் தாக்கும் நகர தூதன் ஆசிரியர் மணவை ரெ.திருமலைசாமியின் பேனா நர்த்தனம் பகுதியில் கேசரி என்ற புனைப் பெயரில் எழுதிய எழுத்துக் களையும் குறிப்பிட்டு, மோதிரக் கையால் குட்டு வாங்கினேன் என்ற பழமொழி போல், தாக்கப்பட்டாலும் திருமலைசாமியின் பேனாவினால் - எழுத்தினால் - தாக்கப்பட்டால் அதை விட தாக்கப்பட்டவர்களுக்கு ஏது பெருமை என்று உண்மையை ஒப்பனை யின்றி எழுதினார் கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள்.
ஓர் ஆண்டுக்கும்மேலாக இந்த ஓர் இரவு பிறகு வேலைக்காரி (அறிஞர் அண்ணா எழுதியதுதான் அதுவும் இவருக்காகவே) நடிப்பிசைப் புலவர் பிறகு தமிழக சட்ட மேலவை உறுப்பி னராகவும் ஆனவர்.
அண்ணாவின் நிழல்போல் தொடர்ந் தவர் எப்போதும்; பற்பல திரைப்படங் களிலும் நடித்தவர். அவரது பாடல்கள் வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், பூம்பாவை, எதையும் தாங்கும் இதயம் போன்ற பல திரைப்படங்களில் மிகவும் பிரமாதமாக இருக்கும் (இன்னும் பட்டியல் நீளும்).
எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க் கம்? என்று ஆரம்பித்துப் பாடுவதும்,
ஆத்திகம் எது; நாத்திகம் எது என்று தொடங்கி பாடும் பாடலும் மறக்க முடியாதவை. (திரைப்படத் தணிக்கை இதனை ஆட்சேபித்தபோது, அறிஞர் அண்ணா இரண்டு சொற்களை மட்டும் மாற்றிப் பதிவு செய்யச் சொல்லி - பிரச்சினையைத் தீர்த்தார். ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? என்று முறையே, நாத்திகம் ஆகும் நெறி - ஆத்திகம் ஆகா நெறி என்றும் பாட வைத்தார்).
இசைத் தட்டு மூலப் பாட்டு ஆத் திகம் - நாத்திகம் என்ற தொடக்கச் சொற்களோடுதான் வெளிவந்தது.
இப்படிப் பல பெருமைகளை, சிறப்புகளைக் கொண்ட நடிப்பிசைப் புலவரின் ஆற்றல், திறமை, கொள்கை உணர்வுகள் எல்லாம் உறுதியான திராவிடர் இயக்கச் செல்வம் - அவரது செல்வத்தின் பெரும்பகுதி, திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்குப் பயன்பட்டது.
இவை தாண்டிய அவரது மனிதம் எப்படிப்பட்டது!
நாளை பார்ப்போம்!!
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.பற்றிய நினைவலைகள்-2
நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அவ ருடன் எப்போதும் இருக்கும் ஆஸ் தான நண்பர்களில் ஒருவர். மற்றொரு வர் காஞ்சி சி.வி. இராஜகோபால் என்ற சுயமரியாதைக்காரர் - நகைச் சுவைக்கு அண்ணா அவர்கள் அவரைத்தான் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தி இளைப்பாறுவார்!
எப்போதும் நடிப்பிசைப் புலவர் அண்ணாவுடன் இருப்பார்; தலைமைச் செயலகம் செல்லும்போது தனியே வேறு ஓர் இடத்தில் அமர்ந்து கொள் வார்.
நிகழ்ச்சிகளிலும் காரில் பெரிதும் பயணம் செய்யும் வழக்கம் உடையவர்.
(வேலூர்) திருப்பத்தூரில் நகரசபை 80 ஆண்டு நிறைவு விழா 13.12.1967 அன்று நடைபெறுகிறது.  அதற்குத் தலைமை தாங்கிய நகராட்சி தலைவர் சி.கே. சின்னராசு அவர்கள் (அவரது தந்தையார் குள்ளப்பக் கவுண்டரும் நகராட்சியில் இருந்தவர்)அறிஞர் அண்ணாவை  முதல் அமைச்சர் என்ற முறையிலும், தந்தை பெரி யாரையும் அழைத்து விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்து நடத்தினார்.
தனது வேனில் இரவில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார் தந்தை பெரியார் அவர்கள் தம் குழுவினரோடு. இடையில் ஆம்பூர் அருகில் வேன் பழுதாகி, ஓட்டுநர் அதைச் சரிப்படுத்த இரவு 11.30 மணிக்கு - முயன்று கொண்டிருந்தார். பின்னால் நிகழ்ச்சி முடிந்து அண்ணாவை அனுப்பி விட்டு, சென்னைக்குச் செல்ல வந்த நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர். அவர்கள் தனது காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து, வேனில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் இருக்கக் கண்டு, மிகவும் சங்கடப்பட்டு, அய்யா நடு ரோட்டில் இப்படி இரவு நேரத்தில் இருக்கலாமா? இதோ எனது கார்; இதில் சென்னைக்கு  சென்று விடுங்கள் என்று பிடிவாதம் பிடித்தார். தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை.
அய்யா பெரியார் தாட்சண்யத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராயிற்றே. உடன் ஏறி வந்தார். அப்போதெல்லாம் சென்னை வந்தால் (அடையாறு  கஸ்தூரிபாய் நகர்) எனது இல்லத்தில் தான் தங்கும் பழக்கமுடையவர் தந்தை பெரியார். இரவு வந்து தங்கினார்கள். காலை அய்யா எழுந்தவுடன் எங்களிடம் இந்த சம்ப வத்தைச் சொல்லி விட்டு, கே.ஆர்.ஆர். அவர்களை நான் நேரில் பார்த்து நன்றிசொல்ல வேண்டும். உடனே அவர் வீடு எங்கே என்று விசாரித்துச் சொல் என்றார். அதுவரை எனக்கும் அவர் வசிக்கும் வீடு தெரியாது. எதிரில் உள்ள காந்தி நகரில் மூன்றாவது  தெருவில் அவர் இருந்த முகவரி அறிந்து, சொல்லியதும் உடனே புறப்படு என்றார். அய்யா, அம்மா, புலவர் இமயவரம்பன், நான் - புறப்பட்டுச் சென்றோம். கே.ஆர். இராமசாமி அவர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி!  காலும் ஓடவில்லை; கையும் ஓடவில்லை (இது அவரே எங்களிடம் கூறிய சொற்கள்) கே.ஆர்.ஆர். அவர்களது வாழ்விணையர் திருமதி கல்யாணி இராமசாமி அவர்களும் (அவர் நாடகத்தில் நடித்தவர். காதல் கலப்பு மணம் நிகழ்ந்தது) மிகுந்த அன்பு டனும் பாசத்துடனும் அய்யா, அம்மா அவர்களுடன் எங்களை உபசரித்தனர்.
எதற்காக எனக்கு என்ன நன்றி அய்யா? நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு ஏதய்யா இந்த வாழ்வு? இதற்குமேல் நாங்கள் உங்கள் பிள் ளைகள் எங்களுக்கு நன்றி சொல்ல லாமா? என்றார்!
அவரது வாழ்விணையர் திருமதி கல்யாணி அம்மாள் முன்னிலையில், எனது தலைமையில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் அவர்களும் பங்கேற்ற அம்மா சத்திரத்தில் அவரது உருவச் சிலை திறப்பு விழாவிலும் இதனை நினைவு கூர்ந்து உரையாற்றி னேன். இயக்கத் தந்தை - தனயர்கள் பாசமும், பண்பும் எப்படிப் பட்டது பார்த்தீர்களா? நமக்கும் அவை பாடம் அல்லவா!
-விடுதலை,5,6.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக