பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

நெல்சன் மண்டேலா மறையவில்லை - நிறைந்து விட்டார்!



இன்று (5.12.2014) மாபெரும் மனிதகுலப் போராளி நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!
அண்மையில் பாலி - (இந்தோ னேஷியாவின் பகுதி) - சென்று சிங்கப் பூருக்குத் திரும்பினோம். விமான நிலையப் புத்தகக் கடையில், நெல்சன் மண்டேலா பற்றிய  அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அரிய மாயா ஆங்கேலூ (Maya Angelou) என்ற பிரபலமான பெண் கவிஞர் - எழுத் தாளர் இயக்குநர், ஆசிரியர், செயல் வீராங்கனை என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட அம்மையார் இவர் - எழுதிய அமெரிக்க அரசின் வேண்டு கோளுக்கிணங்க எழுதி அஞ்சலி வீர வணக்கம் செலுத்திய ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங் கினேன்.
விமான நிலையத்திலேயே - நேரம் இருந்ததால் படித்து முடித்தேன். சுவைத்தேன்.
நெல்சன் மண்டேலாவின் அரிய கருத்தாக அவ்வெளியீட்டில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்ட கருத்து - அறிவுரை இதுதான்.
“Education is the most powerful weapon you can use to change the World”
-  Nelson Mandela
உலகை  நீங்கள் மாற்றிடுவதற்கு கல்வி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை - நெல்சன் மண்டேலா  என்பதே அதன் கருத்து.
இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் ஆன தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்கு கல்விதான் சிறந்த ஆயுதம் ஆகும் என்றார்.
பெரிய சிந்தனையாளர்கள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா!
நெல்சன் மண்டேலா (1918-2013) ஒரு யுகப் புரட்சியாளர்.
உறுதிகொண்ட நெஞ்சத்தவர். 27 ஆண்டுகள் ரோபன் தனிமைத் தீவு அறை சிறை - அவரது உறுதியை மேலும் பலமாக்கியதே தவிர, தன் விடுதலைபற்றி எண்ணாது, தன் சமுதாய மக்களின் அடிமை வாழ்வுக்கு எப்போது விடுதலை என்றே ஏங்கினார்; சிந்தித்தார்; செயல் பட்டார்! வென்றார்!
அடக்குமுறைகள் அவரை மேலும் மேலும் தலை நிமிரச் செய்தனவே தவிர கூனிக்குறுகி, மண்டியிடும் மனோ நிலைக்குத் தள்ளவே இல்லை.
தணலில் இட்ட தங்கம் கரைந்தா விடும்?
தகத்தகாய ஒளியுடன் அல்லவா பிரகாசிக்கும்!
உணர்ச்சியூட்டும் அவரை
வழியனுப்பி இறுதி மரியாதை
செய்தஅவ் வீரமும்
உணர்வும் கொப்பளித்த
ஆங்கிலக் கவிதை வரிகளில் சில.
(முழுவதும்கூட பிறகு வெளிவரும்)
“We will not forget you
We will not dishonor you
We will remember and be glad
That you lived among us.’’
உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்
உங்களை என்றும் நினைவில் நிறுத்தி மகிழ்வோம் (மறவோம்)
நீங்கள் எங்களுடன் வாழ்ந்தவர்!
“That you  taught us
And
That you loved us
All!”
நீங்கள் எங்களின் ஆசானாக இருந்து போதித்தீர்!
மேலும்
நீங்கள் எங்களை எல்லாம் நேசித்தீர்!
நமது உணர்வுகள்:
(எங்களுக்காகவே நீங்கள் வாழ்ந்தீர் - விடுதலை துறந்தீர்) என்பதே அவர்தம் உள்ள விழைவு அல்லவா!
நெல்சன் மண்டேலா மறைய வில்லை! மறையவில்லை!!
நிறைந்து விட்டீர், நிறைந்து விட்டீர்! உலக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வில் உறைந்து கிடக்கிறீர்! என்றும் நின் பணி தொடர்வோம்.  - நம் உணர்வு இது.
-விடுதலை,5.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக