பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

வயிறு - நாக்கு - நம் போக்கு- நோக்கு!


எனது வீட்டு நூலகத்திலிருந்து பழைய புத்தகங்கள் சிலவற்றை மீண்டும் புரட்டும் வாய்ப்பு பெற்றேன் - சில நாள்களுக்குமுன்.
5.9.1953 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் நாள் கொண் டாட்டத்தையொட்டிய பேச்சுப் போட்டி யில் முதல் பரிசு வாங்கியதற்காக, உதவித் துணைவேந்தர் (திரு.ஓ.இராம நாதன் பிள்ளை) கையொப்பமிட்டு எனக்குப் பரிசாக அளித்த நூல் அந்தக் குறிப்புடன் கண்டேன். அதை மீண்டும் உண்டேன் மகிழ்ச்சியில்.
டாக்டர் மு.வ. என்று தமிழ் மொழி உணர்வாளர்கள், இலக்கியவாதிகளால் பெரிதும் பாராட்டி மதிக்கப்படும் டாக்டர் மு.வரதராசனாரின் தமிழ் நூல்கள் ஒரு காலகட்டத்தில் பல இளை ஞர்கள், தமிழ் வாசிப்பாளர்கள் மத்தி யில் அதிகமான புழக்கத்தில் இருந் தவை.
அவரது சவச் செய்தி பரிசு பெற்ற நூல் கள்ளோ காவியமா முதல் பல புதினங்கள் கரித்துண்டு வரை ஏராள மான பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் பரவி, விரும்பி வாங்கி, படித்துச் சுவைத்து, மு.வ.வின் அன்பர்களாகவே ஆகிவிட்டனர்.
டாக்டர் மு.வ. அவர்களும், நம் இனமானப் பேராசிரியர் க.அன்பழ கனார் அவர்களும், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணி புரிந்த சம காலத்து நண்பர்கள் என்று ஈண்டு குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற டாக்டர் மு.வ.வின் நூல், ஒரு அருமையான, எளிமையான விளக்க நூல். (அவரது திருக்குறள் பொழிப்புரை, சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகத்தவரால் உரிமை பெற்ற பல லட்சம் விற்பனையான முதல் எளிய பொழிப்புரை  பையடக்க நூல் ஆகும்).
இந்த நூலில் அவரது குறளுக்கு அளிக்கும் விளக்கம் முதலில் காமத்துப் பால் தொடங்கி, அடுத்து பொருட்பால், அதற்கடுத்து அறத்துப்பால் என்று செல்லும் ஒரு புதுமையைப் புகுத்திய நூல் அப்போது! தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வின் ஆழமான, அழகிய அணிந்துரையைக் கொண்ட நூல் இது!
காதலும், பொருளும் வாழ்க்கைப் படிகள். அறமே வாழ்க்கையில் உயிர் நிலை என்று விளக்கும் நோக்கத்தால் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப் பால் என்னும் முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் மு.வ.
இதைப் படித்தபோது, நம் உடல் அமைப்பின் உறுப்புகளின் முக்கிய பணிபற்றிய வள்ளுவரின் குறள் எவ் வளவு மருத்துவ நுண்ணறிவுடன் அமைந்துள்ளது என்பதை மிகவும் சிறப்பாக விளக்குகிறார் டாக்டர் மு.வ.
மருந்து என்ற தலைப்பில் (எனது பதிப்பில் பக்கம் 219) விளக்கம் எழுது கிறார் நூலாசிரியர் வள்ளுவர் குறளுக்கு.
பொதுவாழ்விற்குக் கருவியாக உள்ளத்தின் உறுதியும், அறிவின் தெளிவும், கெடாமல் காத்துக் கொள்ள வேண்டும். வரைவின் மகளிர், கள், சூது என்பன போல் உடம்பிற்கு வரும் நோயும், உள்ளத்தின் உறுதியையும் அறிவின் தெளிவையும் கெடுக்கவல்ல தாகும். ஆதலின், பொதுவாழ்வில் ஈடுபட்டோர் நோயற்றவராக வாழ வேண்டும் என்றும், நோய் வந்தாலும் உடனே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் திருவள்ளுவர் இங்குக் கூறு கின்றார். முதல் ஏழு குறளில் நோயில் லாமல் வாழ இயற்கை வழியைக் கூறி, பிறகு மூன்று குறளில் நோய் வந்தபின் மருந்தால் அதைத் தீர்த்துக் கொள்ளும் முறையைக் கூறுகின்றார். அதிகாரத் திற்கு மருந்து என்ற தலைப்பையே கொடுத்திருந்தும், ஏழு குறளில் மருந்து வேண்டாத வாழ்வையே அறிவுறுத்து கின்றார்; ஒரு குறளில் வெளிப்படை யாகவே மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்றும் தெளிவிக்கின்றார். ஆனால், இந்த நெறி மிக அரிய நெறி என்றும், எல்லோராலும் எல்லாக் காலத் திலும் இயலாதது என்றும் உணர்ந்து, தவறி நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்தால் தீர்க்கும் முறையை மூன்று குறளால் அறிவிக்கின்றார்.
பழங்காலத்து மருத்துவ முறைப்படி ஒருவனுடைய கையில் நாடி பார்த்து அவன் உற்ற நோய் இன்னது என்று காண முடியும். அவ்வாறு காணும்போது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்றும் மிகாமலும் குறையா மலும் இயற்கையான அளவில் இருந் தால் நோயற்ற நிலை என்று கூறுவார் கள். இந்த மூன்றில் ஒன்றோ, இரண்டோ மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாக்கும்:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள் 941)
வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் மிகாமலும், குறையாமலும் தம் அளவில் நிற்கவேண்டுமானால், என்ன செய்வது? வாதம் மிகுந்தால் வாயுப் பொருளை உண்ணாமல் விடுதல், பித்தம் மிகுந்தால் பித்தப் பொருளை உண்ணாமல் விடுதல், சிலேத்துமம் மிகுந்தால் கபம் உண்டாக்கும் ஈரப் பொருளை உண்ணாமல் விடுதல், இவ் வாறே ஒன்று குறைந்தால் அதை ஈடு செய்யும் பொருளைத் தேடி உண்ணுதல் ஆகிய இந்த முறையைச் சிலர் கையாள் வது உண்டு. இது அவ்வளவு சிறந்த முறை அன்று. ஏன்? உண்ணுகின்ற உணவுக்கு ஏற்ப வாதம் முதலியவை ஏற்படுகின்றன என்பது மட்டும் முழு உண்மை அன்று; உண்கின்ற உணவைச் செரிக்கச் செய்து ஏற்றுக்கொள்ளும் வயிற்றையும் பொறுத்தே அவை ஏற்படு கின்றன. ஒருவர் உடம்பில் இனிப்பு (சர்க்கரை) மிகுதியாவதாக வைத்துக் கொள்வோம். அவர் இனிப்பற்ற உணவையே தேடி உண்டாலும், எல்லாவற்றையும் இனிப்பாகவே மாற்றிக்கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உள்ளது. ஆகையால், இனிப்புப் பொருளை மட்டும் விட்டுவிடுவதால் பயன் ஏற்படுவதில்லை. அவ்வாறே புளிப்பு உடம்பில் மிகுந்துவிட்டபோது, புளிப்பான பொருள்களை விட்டுவிடு வதால் பயன் விளைவது குறைவே; புளிப்பற்ற பொருள்களையே தேடி உண்டாலும் அவற்றை எல்லாம் புளிக்க வைத்துப் புளிப்பாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உள்ளது. மற்றச் சுவைகளுக்கும் இவ்வாறே காணலாம். சுவைகளை ஒட்டியே வாதம் முதலி யனவும் அமைந்துள்ளன என்று வகுப்பார்கள். அந்த முறைப்படி, சுவைப் பொருள்களை மாற்றி மாற்றி உண்பதால் வாதம் முதலியவற்றின் மாறுபாட்டால் வந்த நோய் தீர்ந்துவிடும் என்று நம்பு வார்கள். அது தவறு. விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே தம் உடலுக்கு ஏற்ற உணவையும், அதன் அளவையும் அறிந்து தின்கின்றன. அவற்றின் நாக்கு அளவறிந்து உண் ணும் கருவியாக அமைந்துள்ளது. மக்கள் நாக்கும் தொடக்கத்தில் அந்த ஆற்றல்  பெற்றிருந்தது. ஆனால், பகுத்தறிவும் எண்ணும் ஆற்றலும் வளர வளர புலன்களின் இயற்கை ஆற்றல் குன்றிவிட்டது. அன்றியும், சமைத்து உண்ணும் செயற்கை முறை வேரூன்றி விட்ட பிறகு, இயற்கை ஆற்றல் அழிவுபட்டது. ஆகையால், இன்று ஏற்ற உணவையும், ஏலாத உணவை யும் உணர்ந்து அறிவிக்கும் ஆற்றல் நாக்கிற்கு இல்லை. இன்றும் குழந்தை களிடத்திலும் சிலவகை நோயாளி களிடத்திலும் அந்த ஆற்றல் ஒருவாறு அமைந்திருத்தலை உய்த்துணரலாம். உடலுக்கு ஏலாத சில பொருள்களை அவர்கள் காரணமில்லாமலே விலக்கு கின்றார்கள். ஆயினும், உடலுக்கு ஏலாத சில பொருள்களை விரும்பவும் விரும்புகின்றார்கள்; உடல் கெடும் என்று பிறர் சொன்னாலும் கேளாமல் விரும்புகின்றார்கள்; அதனால் அந்த இயற்கை ஆற்றல் இன்று நாக்கிற்கு உள்ள அளவு போதாது; நம்பத் தகாததாகவும் உள்ளது.
இன்று நாக்கு இயற்கை உணர்வி னால் ஆளப்படும் தன்மை குறைந்து, மனிதனுடைய விருப்பு, வெறுப்பினால் ஆளப்படும் தன்மை மிகுந்துள்ளது. ஆயினும் இன்றும் உடம்பில் மற்றோர் உறுப்பு அந்த ஆற்றலை இழக்காமல் காத்து வருகின்றது; அது மனிதனுடைய விருப்பு வெறுப்புக்குக் கட்டுப்படாமல் வேலை செய்து வருகின்றது; அதுதான் வயிறு. அது ஒன்றே இன்றும் நம்பத்தக்கதாக உள்ளது. தக்க உணவை நன்கு செரித்து, தகாத உணவை நன்கு செரிக்காமல் தள்ளுகின்றது; மனிதன் ஆசை வயப்பட்டவனாய்த் தகாத உணவையே திணித்து வற்புறுத்து வானானால், அதற்காக அந்த வயிறு மாறி அமைவதில்லை; மனிதனுக்கு அடிமையாவதில்லை; வேலை செய்ய மறுக்கின்றது; திணிப்பும், வற்புறுத்தலும் மேலும் மிகுமானால், (செரிப்புக்கு மருந்து முதலியவை உண்டு வற்புறுத் தினால்) மறுக்கும் நிலைமையும் கடந்து மானமுள்ளவர்போல் தானே கெட்டு அழிகின்றது. ஆகவே, அது நன்றாக வேலை செய்கின்றதா, செரிப்பு வேலை சீராக நடைபெறுகின்றதா என்று ஆராயக் கற்றுக்கொண்டால், உடல் நலத்தைக் காத்துக் கொள்வது எளி தாகும். இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி யில் வாழ்ந்த டாக்டர் லூயி கூன் முதலான அறிஞர்கள் பலர் விளக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளனர். இதையே பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவரும் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன் உண்ட உணவு எவ்வாறு அற்றது (சீரணமானது) என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவைக் கடைப்பிடித்துப் போற்றிப் பிறகு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்; அவ்வாறு உண்டால், உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை. முன் உண்ட உணவு அற்ற பிறகு, உண்ண வேண்டியதை இன்ன அளவு வேண்டும் என்று அறிந்து உண்பதே கடமை. அதுவே உடம்பைப் பெற்றவன் அந்த உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும். முன் உண்டது எவ்வாறு செரித்தது என்று செரித்த தன்மையை ஆராய்ந்து அதனால் அறிந்து உண்மை யைக் கடைப்பிடித்து, மாறுகொள்ளாத (உடம்புக்கு ஒத்துக்கொள்கின்ற) உணவை உண்ணவேண்டும்; அதையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும். இவ்வாறு மாறுபாடு இல்லாத உணவையும், தன் மனம் விரும்பும் அளவு உண்ண மறுத்து உடலுக்குத் தேவையான அளவே உண்ணவேண் டும்; அவ்வாறு உண்டால், உயிர் வாழ்க் கைக்கு நோயால் வரும் இடையூறு இல்லையாகும். உடலுக்குத் தேவை யான உணவை ஆராய்ந்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்கின்றவனிடம் இன்பம் (உடல்நலம்) நிற்கும்; அதுபோல, மனத்தின் விருப் பத்திற்கு இயைந்து அளவு மீறி மிகுதியாக உண்கின்றவனிடம் நோய் நிற்கும். பசித்தீயின் அளவிற்கு ஏற்ற வாறு உண்ணாமல் ஒன்றையும் ஆரா யாமல் அளவு மீறி மிகுதியாக உண்டால், நோயும் அளவு கடந்து வரும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்    (குறள் 942)
அற்றல் அளவறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு    (குறள் 943)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து    (குறள் 944)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு    (குறள் 945)
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்    (குறள் 946)
தீயளவு இன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய்அள வின்றிப் படும்    (குறள் 947)
ஒருகால் நோய் வந்தால், நோயைத் தீர்க்க என்ன செய்யவேண்டும்? அது என்ன நோய் என்று ஆராய்ந்து, அந்த நோய் என்ன காரணத்தால் வந்தது என்று நாடி, அதைத் தணிக்கும் வழி என்ன என்று அறிந்து, பொருத்தமான முறையில் முயற்சி செய்யவேண்டும். மருத்துவன் உதவி செய்வதற்குமுன் நோயாளியின் உடல் நிலைமை, வலிமை, வயது முதலியவைகளையும், நோயின் தன்மையையும், தீர்ப்பதற்கு உரிய காலத்தின் வாய்ப்பையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்    (குறள் 948)
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்    (குறள் 949) இதில் வயிறு எப்படி நமக்குக் கட்டுப்படாமல் நம் நலனைக் கருதி எவ்வளவு அருமையான எச்சரிக்கை களை தன்னகத்தே வைத்து, நம்மை காப்பாற்றி, வாழச் செய்கிறது பார்த்தீர் களா?
அதையும் அடக்கி வைக்கும் நாம் சர்வாதிகாரியாக மாறி கண்டதை யெல்லாம் நாக்கு சுவைக்காக சாப்பிட்டு கெடுத்துக் கொள்ளலாமா?

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
விடுதலை,25.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக