பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!


மரணம்  - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.
தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.
மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!
இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.
கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.
காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும்  இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!
மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.
குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!
தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.
சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.
மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா?  10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.
கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி


விடுதலை,30.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக