• Viduthalai
இன்று காலை வந்த தமிழ் நாளேடு - ('இந்து தமிழ் திசை' 5.8.2021) 5ஆம் பக்கத்தில் அதிர்ச்சி தரும் செய்தி!
"முதல்வர்கள், ஆளுநர் உள்பட பலரையும் காவல்துறை உதவி ஆணையர் என்று கூறி தொடர்ந்து நம்ப வைத்து ஏமாற்றியவரைப் பற்றிய செய்தி இப்போது வெளிவாகியுள்ளது.
(இச்செய்தி அப்படியே படங்களுடன்!) கீழே:
முதல்வர்கள், ஆளுநரை நம்ப வைத்த போலி போலீஸ் அதிகாரி :
3 மாநிலங்களில் வலம் வந்தவர் பிடிபட்ட பின்னணி
"உதவி ஆணையர் என்ற பெயரில்வலம் வந்து தமிழ்நாடு போலீஸாரை மட்டுமின்றி கேரளா, ஆந்திரா முதல்வர்களையும், புதுச்சேரி ஆளுநரையும் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (42). இவர் சுழல்விளக்கு (சைரன்) பொருத்தப்பட்ட காரில் வலம் வந்து, தான் ஒரு காவல் உதவி ஆணையர் என கூறி, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பலரை ஏமாற்றியுள்ளார்.
குறிப்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆகியோரை சந்தித்து தான் ஒரு காவல் உதவி ஆணையர் என பொய் சொல்லி அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளையும் ஏமாற்றி சந்தித்து வந்துள்ளார்.
அதேபோல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள போலீஸ் அதிகாரி களை சந்தித்து பழகி, அவர்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந் துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு குமுளி வழியாக தேனி மாவட்டத்துக்கு தனது சைரன் பொருத்தப்பட்ட காரில் வந்துள்ளார். குமுளி சோதனைச்சாவடியில் போலீஸார் விசாரித்த போது, தான் கியூ பிரிவில் உதவி ஆணையராக பணிபுரிவதாகக் கூறியுள்ளார். தேனி மாவட்டத் துக்குள் வந்த பிறகு தான் உளவுத்துறை உதவி ஆணையர் என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேனி போலீஸார், விஜயனை கண்காணிக்கத் தொடங்கினர். பின்னர் அவர் திண்டுக்கல் மாவட்டத்துக்குள் சென்றதை அறிந்து, அந்த மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் கார் வந்தபோது சோதனைச்சாவடியில் இருந்த திண்டுக்கல் போலீஸார் விஜயனின் காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அவர் காண்பித்த அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது, அது போலி என தெரிய வந்தது. இதையடுத்து அவரை பட்டிவீரன்பட்டி காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். இதில், அவர் தான் ஒரு போலி போலீஸ் என்பதை ஒத்துக்கொண்டார். அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து டம்மி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
உதவி ஆணையர் என்ற பெயரில் யாரை யாவது மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தலைவர்களுக்கு அளிக்கப்படும் தீவிர பாதுகாப்பையும் மீறி,ஒரு போலி நபர் எளிதாக சந்தித்திருப்பது, பாதுகாப்பில் உள்ள குறை பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிடிபட்டது எப்படி?
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் பல தொழில்களில் ஈடுபட்டு கடும் நஷ்டமடைந் துள்ளார். ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல் லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனைவியை ஏமாற்றதான் குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று காவல் உதவி ஆணை யராகிவிட்டதாகக் கூறியுள்ளார். மனைவியை நம்ப வைக்க நண்பர்ஒருவர் உதவியுடன் கார் ஒன்றை வாங்கி அதை போலீஸ் வாகனம் போல் மாற்றியுள்ளார். உதவி ஆணையர் சீருடையில் காரை ஓட்டிச்சென்று மனைவியிடம் காண்பித்து நம்ப வைத்துள்ளார். அதன் பின், பணிக்குச் செல்வதாகக் கூறி காரை எடுத்துக்கொண்டு கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந் துள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பரப்பியுள்ளார். தனது மனைவியை ஏமாற்ற தொடங்கிய இந்நாடகத்தை, பின்னர் நிரந்தரமாகவே மாற்றிவிட்டார்.
தமிழகத்தில் சோதனைச் சாவடிகளில் சந்தேகப்பட்டு இவரை விசாரிக்கும் போலீஸாரி டம், இந்த படங்களை காட்டி நம்பவைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய போலீஸார், அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக எங்கும் சிக்காமல் வலம் வந்துள்ளார்.
சமீபத்தில் தேனியிலும், திண்டுக்கல்லிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் தனது பதவி குறித்து முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் சிக்கிக் கொண்டார் என்று கூறினர்."
வீட்டிலிருந்து நாட்டு தலைவர்கள், முதல்வர்களை எல்லாம் ஏமாற்றிய 'பக்கா' பேர் வழி சைரன்கள்!
சில வீடுகளில் கொள்ளையடிக்க செல்கையில் வருமான வரித் துறை அதிகாரி வேடமிட்டுச் சென்றதாக இதற்குமுன் செய்தி!
இவருடைய 'டெக்னிக்கே' தனியானது. மிக சுலபமாக மனைவியை ஏமாற்றிய பிறகு முதல்வர், ஆளுநர், காவலர் எல்லோரையும் ஏமாற்றியுள்ளார்!
இதற்கு செலவழித்த மூளையை இவர் கொஞ்சம் நேர்வழியில் செலவழித்திருந்தால் இப்படி "பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்" என்ற பழமொழி உண்மையாகாமல், மானமுள்ள வாழ்வு வாழலாமே!
எனவே, காவல்துறை அதிகாரிகளைக்கூட காவல்துறையே ஆய்வு செய்ய வேண்டியதும் அவசர அவசியம் போலும்!
'ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்ட' இவர்கள் இராஜ்யம் தற்காலிகம்தான் என்றாலும் எவ்வளவு கேவலமானது என்று அவர்கள் உணர வேண்டாமா?
ஏமாறுபவர்களும், தொடர்ந்து ஏமாறாது சற்றே நிதானித்தால் சங்கதி வெளியாகிவிடும் என்பதே உண்மை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக