வாழ்க்கையின் சிறப்பு அம்சம் பொருள் சேர்ப்பதல்ல. பெரும் புகழ் சம்பாதித்து கீர்த்தியும், பெருமையும் அடையும் இலக்கு அல்ல.
பிறருக்கு - குறிப்பாக நாம் வாழும் சமூகத் திற்கு, நம்மை வாழ வைக்கும் இந்த உலகத்த வர்க்கு நாம் பல நூறு பணிகளை - உதவிகளை - தொண்டறம் செய்து, அன்பும், கருணையும், சமத்துவமும் பேணி, அனைவரும் உறவினர் என்று உணர்ந்து செயல்படும் பரந்த விரிந்த மனப்பான்மையை நாம் நமது முக்கிய பண்பாய்க் கொள்ள வேண்டும்.
கருணை காட்டுவதற்கும், அன்பைப் பொழி வதற்கும் எதிரிகள் மூட்டும் கோபத்தையும் (ஆத்திரமும்), வெறுப்பையும் பொருட்படுத்தாது, பொறுமை கொள்ள வேண்டும். இந்த இரண் டையும் தாண்டினால் மட்டுமே உண்மையான கருணை ஊற்றெடுக்கும் - வற்றாத அன்பு பாய்ந்து நம்மை வளப்படுத்தும்.
நம்மில் பலரும் நம் எதிரிகளைப் பற்றியே எண்ணி அவர்களை எதிர்ப்பதுடன் அழிப்பது, ஒழிப்பது என்பது எப்படி என்று சாதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே அதே வழியில் செயல்பட்டு வருவர்.
ஆனால் நம் எதிரிகளை வெளியே தேடு வதைவிட, நமக்குள்ளே தேட முயலுங்கள். மேற் சொன்ன ஆத்திரம் (வன்மம்), வெறுப்பு என்ற இரு பெரும் எதிரிகள் நம்முள் நண்பர்களைப் போல் புகுந்து இடம் பெற்று நிலைத்து நாளும் நம்மை அலைக்கழித்து வருகின்றனர்.
அதனால்தான் மனிதர்களாகிய நம்மில் பலருக்கு எளிதில் மன்னிக்கும் மனப்பான் மையோ, தவறை உணர்ந்து அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டு திருத்திக் கொள்ளுவதோ எளிதானதாக இல்லாத நிலை!
பவுத்தப் பேரறிஞர் தலாய்லாமா எளிமையாக விளக்குகிறார் மேற்சொன்ன முறையால்!
திபெத்திய பழமொழி ஒன்றை நமக்குச் சுட்டிக் காட்டி அறிவுறுத்துகிறார்!
"எந்தத் துன்ப நிகழ்ச்சியானாலும் (Tragedy) அதை நாம் ஓர் அருமையான பலம் தரும் வாய்ப்பு என்று கருதி (Source of Strength) எதிர்கொண்டு வாழ்க்கையின் பாடங்களாகக் கருதி கற்றுக் கொண்டு ஒழுக வேண்டும். பிறகு நிச்சயம் வெற்றி பெறலாம்.
எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்கவே கூடாது. அந்நிலைமையால் ஏற்படும் இக்கட்டை விட, நம்பிக்கையின்மையால் - அச்சத்தால், ஏற்படுவது தான் உண்மையான பெருங்கேடு (Disaster)" என்று அறிவுறுத்துகிறார்.
லட்சியவாதிகள் பல்வேறு எதிர்ப்புகளையும், அடக்கு முறைகளையும், சோதனைகளையும் வென்றெடுப்பதில் வெற்றி கொள்ளுகிறார்களே, அதன் ரகசியம் இதுதான்!
எந்த சூழலிலும் நம்பிக்கையை தளர்த் தாதீர்கள்,
நம்பிக்கையை இழக்காதீர்கள்!
இரவுகள் இரவுகளாகவே தொடர்ந்தாலும், பகலும், வெளிச்சமும், விடியலும் தொடரச் செய்யும். அந்த நபிக்கைதான் நாம் விடும் மூச்சுக்காற்று, மறவாதீர்கள்!
தனிவாழ்வானாலும்,
குடும்ப வாழ்வானாலும்
பொது வாழ்வானாலும்
எந்த நிலையிலும் நம்பிக்கையோடு நின்று எதனையும் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.
எடுத்துக்காட்டாக, கரோனா தொற்று சில மாதங்கள் முன்பு வரை பெரும் உயிர்ப் பலி களும், மரணங்களும், மறக்க முடியாத இழப்பு களும் ஏற்படுத்தியது என்றாலும், புயல் ஓயத் தானே வேண்டும்? நோய் மாயத்தானே வேண் டும்? முதன்முதலாக புத்தர் சொன்னது போன்று, "மாற்றம் என்பதே மாறாத ஒன்று!" - அதை நாம் நினைவூட்டிக் கொண்டும், நம்பிக்கை விளக்கை ஏந்தி, "இருட்டை" - சோதனைகளைக் கடந்து நமது வாழ்க்கையை லட்சியப் பாதையாக ஆக்கிக் கொண்டு, பக்குவத்தால் பகைமையை விரட்டும் பண்பாட்டை வளர்த்துக் கொண்டால் நம்மை நாமே வென்று விட்டோம் என்றே ஆகும்!
"தம்மை வென்ற மனிதர்களே தரணியில் தன்னேரில்லாத தகைமையாளர்கள்" என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அனுபவம் என்ற ஆசான் நமக்கு நன்கு பாடம் எடுப்பவராவார்.
"தன்னை வெல்வான், தரணியை வெல் வான்!" என்பது அறிஞர் அண்ணாவின் அனுபவ உரை யாகும்!
(நாளையும் சிந்திப்போம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக