பக்கங்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

வெறும் சுற்றுலா அல்ல; அது கற்றுலா - படியுங்கள்!



தருமபுரியின் பிரபல மருத்துவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளருமான டாக்டர் இரா.செந்தில் M.S.,F.R.C.S. (Eng) M.Ch. (Urology)  அவர்கள், தான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு 2020 பிப்ரவரியில் தருமபுரியிலிருந்து கார் மூலம் புறப்பட்டு தென், வட இந்தியாவின் பெரும் பகுதிக்குச் சென்று அது தாண்டி புத்த நாடான பூட்டான் சென்றும் திரும்பிய சுற்றுலா அனுப வங்களையும், இமயமலையில் ஏறி திரும்பிய பரபரப்பு செய்திகளையும் மிக அழகாக ஒரு நூல் வடிவில் சுற்றுலா பாட நூல் என்று சொல்லத்தக்க அளவில் - மருத்துவர்கள் தரும் ‘கேப்சூல்
 மாத்திரை போல 100 பக்கங்களில் எழுதியுள்ளார்!

படிக்கப் படிக்கத் தெவிட்டாது ஒரு புதினம் போல் ஓடுகிறது.

பல்வேறு வரலாற்றுச் செய்திகள் - இதுவரை நாம் அறியாத வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு சுவைமிக்கதாகவும், படிக்கும் வரலாற்றைவிட, படிக்காது விட்டவைகளைச் சுட்டிக் காட்டுவது போல், இந்த நாட்டினை ‘வளப்படுத்திய பிரிட் டிஷ் மானுடநேயர்களையும், மாறானவர்கள் மகத்தானவர்கள் என்று சொல்லிக் கொடுப் பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார் - இடையிடையே இந்த வரலாற்றுத் துணுக்குகள் மின்னல்களாக மின்னி நம் அறியாமை இருட் டைப் புரிய வைக்கின்றன. விரிவான விளக்கம் வேண்டுவோர் மேலே படிக்கத் தூண்டுவதாக வும் அரிய தகவல்கள் அமைந்துள்ளன.

"மனிதர்கள் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். பயணங்களே நாகரிகங்களை வடிவமைத்தன. நாம் வாழும் இந்த இடம் மாபெரும் பூமிப் பந்தின் சிறியதொரு புள்ளி என்பதை பயணங்களே நமக்குப் புரிய வைக்கின்றன.

வாழ்க்கை என்பது ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்திலேயே நின்று விடுகிறார்கள்."

சரியான விளக்கம் இது! சுற்றுலாக்கள் வெறும் இடங்களைப் பார்ப்பது மட்டும்தானா?

நம் அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவ தற்கு ஓர் அருமையான வழிமுறைதான் சுற்றுலாக்கள்!

மனித இனமே பயணங்கள் மூலம்தான் நாடோடி வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்வுக் கான நிலைக்களங்கள் ஆயின!

கரோனா கொடுந்தொற்று பரவத் தொடங்கிய நிலையில் - பல காலம் தள்ளிப்போன சுற்றுப் பயணத் திட்டத்தை - 13 நாட்கள் பயண நாட்களை வெற்றிகரமாக முடித்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அறிவியல், மின்னணுவியல் வாய்ப்புகளை ‘பேரறிஞர் கூகுளாரின்' துணையுடன்(!) சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

13 நாட்கள் பயணம் - 6051 கிலோ மீட்டர் பார்க்க - கற்க வேண்டிய சிறிய, அமைதி தவழும், புத்தம் செழித்து - மக்கள் அனைவரும் மகிழ்வுடனும், நிம்மதியுடனும் வாழும் நாடான பூட்டானில் மூன்று இரவுகள் தங்கியுள்ளார்கள்.

அவர்கள் செலவழித்த கணக்கும் தந் துள்ளார். நான்கு பேர் ஓட்டுநர் திரு.கேசவன் உள்பட மற்ற மூவர் டாக்டர் செந்தில், அவரது உறவும் நட்புமான சம்பத்குமார், உதயகுமார் ஆகியோர்.

எரிபொருளுக்கான ரூபாய் 31,865 சுங்கக் கட்டணம் ரூ. 5,567, தங்குவதற்கு ரூ.46,380, வாங்கி வந்த நினைவுப் பொருட்கள் ரூ.17,000, உணவு மற்றும் பிற செலவுகள் சுமார் ரூ.30,000.

நான்கு பேருக்கும் 13 நாட்கள் பயணத்திற்கான மொத்தச் செலவு சுமார் 1,40,000 ரூபாய்!

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2500 ரூபாய் தான் செலவாகி இருக்கிறது!!

"இந்தச் செலவுக்கு நாங்கள் பெற்ற அனுபவங்கள் விலைமதிக்க முடியாதவை'' என்கிறார் டாக்டர் செந்தில் அவர்கள்.

சொந்த சமையல், ஆங்காங்கே நிறுத்தி, ஓய்வுடனும் இளைப்பாறுதலுமாக!

அது ஓர் அனுபவம். எல்லாம் ஆண்களே “நளன்கள்.

நம் மகளிருக்கு விடுதலை, வீட்டில் கிடைப்ப தில்லையே இப்படி!



"இந்திய நாட்டின் வளர்ச்சிக்கான குறியீடாக நாட்டின் மொத்த உற்பத்தியைக் காட்டுவதை ஏமாற்று வேலை என்றே கருத வேண்டும். எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கல் வியை அளிக்க முடியாத ஒரு நாட்டில், நுழைவுத் தேர்வுகளின் மூலம் கல்வியில் சமநிலையை ஏற்படுத்த முயலும் அரசை என்னவென்று அழைப்பது?"

பூட்டானில் பெரிய தொழிற்சாலைகள் இன்மை என்றாலும், எளிமை, அமைதி, சுற்றுச்சூழல், தூய்மை இவை அம்மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்துக் கொண்டிருப்பதை அருமையாக விளக்குகிறார்!

பல அறிய வேண்டிய அரிய தகவல்களும், கற்று நிற்க வேண்டிய பல வாழ்க்கை முறைக ளும், ஒவ்வொரு பகுதிகளுக்கிடையே எப்படி ‘மானுடம் வென்றதம்மா என்று மகிழ்ந்து கூறும் வண்ணம் உள்ளது என்பதை பாடம் எடுக்கிறார்.

"நவில் தரும் நூல் நயம் காண்பீர்; அவரே பயில் தொறும் பண்புடையார்" என்பதால் அருமை ‘சொடுக்குகள்' ஆங்காங்கே!

இரண்டரை மணி நேரத்தில் படித்தேன் - மகிழ்ந்தேன் - உங்களோடு பகிர்கிறேன்.

"உணவு முறையும் அன்றாட உடற்பயிற்சியும் எங்களை சோர்வில்லாமல் வைத்தது!" அரிய பகுத்தறிவுப் பாடம் - பலருக்கும் இது!

இந்நூலில் இவர் தரும் முக்கிய செய்தி:

"உழையுங்கள், சேமியுங்கள், பயணியுங்கள், மீண்டும் முதலில் இருந்து தொடங்குங்கள் என்ற படிப்பினை கற்போம்'' என்கிறார்.

எனவே வெறும் சுற்றுலா மட்டுமல்ல; கற்றுலாவும்கூட - ஏன் புத்தகம் மூலம் பயணித்த நமக்கும் கூடத்தான்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக