பக்கங்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

தா(ழ்)ப்பாள் இல்லாத தா.பா.வின் நூல் இதோ!


சில நூல்களை சற்று காலந்தாழ்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்படும்போது, எனக்குள் ஒருவகை வருத்தம் ஏற்படும். ‘எப்படி இவ்வளவு சிறந்த நூலை நாம் இதுவரை படிக்கத் தவறினோம். சிறந்த நூல்களை தேடித் தேடிப் படித்துப் பயன்பெறும் பழக்கமுள்ள நம் பார்வையில் படாமல் எப்படி இந்த ‘நவில்தொறும் நூல் நயம் மணக்கும், பயில் தொறும்' பண்பாளர் தோழர் தா.பாண்டியனின் நூல் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் தப்பியது என்பது எனக்கே புரியாத புதிராக இருந்தது!'

ஆங்கிலப் பழமொழிபோல், பரவாயில்லை காலந்தாழ்ந்தாவது, படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்ததே என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டேன்.

‘நினைத்துப் பார்க்கிறேன்' என்ற தலைப்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிய சொத்து - அறிவுச் செல்வமாகத் திகழும் தோழர் தா.பாண்டியன் அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார்.

எளிமை - இனிமை - உறுதி - கொள்கைத் தெளிவு - வாதத் திறமை, இலக்கியச் செறிவு, வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மைகளை வீம்புக்காகவோ, தன் முனைப்புக் காகவோ - தயங்காத வெள்ளை மனம் - இவற் றின் உருவம்தான் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இந்த சுயமரியாதைச் சொக்கத் தங்கம்!

எழுத்து, பேச்சு, செயல் எல்லா திறமைகளை யும் உள்ளடக்கியவர் தோழர் தா.பாண்டியன்.

இன்றைய உலகியல் நடையில் சொல்ல வேண்டுமானால் வாழத் தெரியாத - அறிவு வள்ளல், கொள்கைக் கோமான்.

தான் எடுத்த முடிவுக்கு இறுதி வரை வருந் தாது - அதே நேரத்தில் திருத்தப்பட வேண்டி யவை என்ற எந்த நிலைப்பாடு பற்றி அவர் எண்ணினாலும், அதை அப்படியே போட்டு பொத்தென்று உடைத்தாவது, புதியதோர் விழிப் புணர்வும், போர் முறையும் நமதாக வேண்டும் என்று நினைக்கத் தெரிந்த பக்குவத்தில் பழுத்தவர்!

அவரது ‘தன் வரலாறு' என்று கூற முடியாது, வாழ்வின் பல உருக்கமான நிகழ்வுகளை மிக சுருக்கமாக குறள்போல் நறுக்குகளாக்கி ‘நினைத்துப் பார்க்கிறேன்' என்ற தலைப்பில் தோழர் தா.பா. அவர்கள் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு நிகழ்வுக்குமே ஒரு நூல் எழுதலாம்; என்றாலும் "கேப்சூல்" (Capsule) வடிவில் தேனை இனிக்க, சில நேரங்களில் நம் விழிகளில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி,

இன்பம் பயக்கும் வினை” (குறள் 669),

என்ற குறளுக்குகேற்ப, இந்த மண்ணை மார்க்சீய மண்ணாக்கிடத் துவக்கி, பெரியார் என்ற புல்டோசரால் இந்த சமூக மேடு, பள்ளம் சம தளப்படுத்தப்பட்டால்தான் அதாவது ஜாதி, தீண்டாமை அதற்கு முட்டுக் கொடுத்தவற்றை ஒழித்துக் கட்டி, வருண பேதத்தை ஒழித்தால்தான் வர்க்க பேதத்தை பிறகு ஒழிக்க முடியும்; காரணம் முந்தியது பிறவி பேதம் - பிந்தியது பிறந்த பின் ஏற்பட்ட பேதம் - என்ற கருத்தை ஏற்று போற்றித்தான் சமூக விஞ்ஞானி பெரியார் என்று 41 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோட்டில் அவர் பெரியார் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய ஆகுத்துச் செறிவுமிக்க ஆழமான ஆய்வுரை நூல் 40 பதிப்புகளுக்கு மேல் செலவாகியிருக்கக் கூடும்.

அவருடைய வாழ்க்கையில் - எத்தனை எத்தனை துன்ப நிகழ்வுகள், சோகத்தினால் அவர் சோர்ந்து, சாய்ந்து விடாமல், கொண்ட கொள்கை உறுதியை மேலும் வலுவாக்கிக் கொண்டே, உடல் நிலை தளர்ந்த இன்றைய காலகட்டத்திலும் அவர் தனது லட்சியப் பயணத்தை நிறுத்தாது, மேடைப் பேச்சில் அதே கம்பீர முழக்கம் - ஆணித்தரமான வாதங்களின் அணிவகுப்புடன், கேட்போரை மனதால் கட்டிப்போட்டு; கைகளை மட்டும் தட்டுவதற்கு தட்டினின்றி முழங்குபவர் - அவர்!

160 பக்கங்கள் கொண்ட இந்த நூல், வாழ்வின் பல பருவங்களும், படுகொலை முயற்சிகளும் தாண்டி இன்றும் எப்படி நெஞ்சுரத்தோடு இலட் சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடருகின் றார் என்பதை சுவைபடக்கூறும் ஒரு பொது வாழ்க்கைப் பாட நூல் இந்நூல்!

"வயது வளர, வளர, பழைய நினைவுகள் என்ன காரணத்தாலோ வந்த வண்ணம் இருக் கின்றன" என்ற முன்னுரையோடு துவங்குகின்ற இந்நூலைப் படித்தால், தமிழ்நாட்டின் பல தலை வர்கள், உலகின் பல விஞ்ஞானிகள், வரலாறு, தத்துவம், அறிவியல் எல்லாம் கலந்த ஒரு பல் சுவை விருந்தை ‘உண்ணும்' வாய்ப்பும் அதுபற்றி மறக்காமல் ‘எண்ணும்' பழக்கமும் தானே வரும்!

2005 ஆகஸ்ட் இதன் முதல் பதிப்பு. எப் படியோ இப்போதாவது படிக்கும் நல்வாய்ப்பு கிடைத்ததே என மகிழ்ந்து உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இரண்டொரு தொடர் வாழ்வியல் கட்டுரை களாக இந்த வரிசையில் வரும்.

யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டாமா?

சந்திப்போம் - நாளையும், நாளை மறுநாளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக