பக்கங்கள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

அன்பிற்கும்கூட வேண்டும் அடைக்கும் கதவு!


‘அன்பிற்கும், உண்டோ அடைக் கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். வற்றாதது அன்பு என்பதை வலியுறுத் தவே அவ்வாறு ஆழமாகச் சொல்லி யிருக்கிறார் - வள்ளுவர் என்ற அரிய நம் சிந்தனையாளர். உண்மைதான்.
ஆனால், அந்த ‘அன்பே’கூட பற்பல நேரங்கள் வெளியில் கூற முடியாத - அன்பால் ஏற்படும் அவதி யாகக்கூட மாறி விடுகிறதே - நமது அன்றாட வாழ்க்கையில். இல்லையா?
நமது நண்பர்கள் - அன்பர்கள் பலர் நம்மீதுள்ள அன்பால் நம்மை சில சின்னச்சின்ன நெருக்கடிக்கும்கூட ஆளாக்கும்போது, ‘அய்யய்யோ இந்த அன்புக்கு சற்று நேரக் கதவடைப்பு செய்யக் கூடாதா?’ என்றுகூட தோன்றவே செய்கிறது!
வேகமாகச் சுழலும் அன்றாட வாழ்க்கையில், காலைப் பொழுதில் கடமையாற்றி நாம் அவசர அவசர மாக, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நமது நலம் விசாரிக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து, வந்தவர்கள் நிதானமாகப் பேசிக்  கொண்டிருக்கும்போது, நமது மனநிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இறுக்கத்தை அடைகிறது. அலுவலகப் பணிக்கு நேரமாகிக் கொண்டுள்ளது; வீட்டில் உள்ளோர் குடும்பக் கடமைகளில் அவசர அவசரமாக, பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புதல், மற்றவர்களுக்கு உணவுப் பரிமாற்றம் - இப்படி எத் தனையோ அவசரப் பணிகள்!
நலம் விசாரிக்க வந்தவர்களிடம் நாம் நம்முடைய அவசரத்தின் காரணமாக, நிதானமாகப் பேச முடியாதவாறு நிற்க வைத்தேகூட சில நேரங்களில் அவர் களிடம் பேசி, வேகமாக, அவர்களை அனுப்ப முயற்சித்தால், பற்பல நேரங்களில் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது!
நல்ல நட்புறவில்கூட ‘கீறல்’ விழுகிறது. நாம் வெளியே கிளம்பிக் கொண்டே இருப்போம்; அப்போது எங்கே போகி றோம் என்பதைக்கூட பகிரங்கப்படுத்த முடியாத நிலையும்கூட இருக்கும்; அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்ன நாம் அவரை வீடு தேடி ‘மெனக்கெட்டு’ போயிருக்கிறோம்; இந்த மனுஷன் நம்மை அலட்சியப்படுத்திவிட்டு இப்படி வெளியே கிளம்புகிறாரே என்று நம்மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்க முற்படுவார்களே தவிர, தவறு தங்கள்மீது உள்ளதே! நாம் என்ன அவரிடம் முன் கூட்டியே சொல்லியா வந்துள்ளோம்? தவறு நம்மீதுதானே என்று யோசிப்பதே கிடையாது!
ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான்!
எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களது வசதியை யும் அறிந்து சந்திப்பதே சாலச் சிறந்தது! இரண்டு சாராரையும் சங்கட நெருக்கடியி லிருந்து காப்பாற்றக் கூடியதும் ஆகும்!
அதுபோல உணவு பரிமாறிடும் போதுகூட அளவற்ற அதிக அன்பால் உணவு வகைகளைத் திணித்து அன்பால் கொல்ல முயற்சிக்கக் கூடாது.
சில பேருக்கு வெளியில் சொல்ல இயலாத உடல் உபாதைகளும் இருக்கலாம். அளவான உணவு எடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கு அறி வுரையும்கூட கூறியிருக்கலாம்; அதனால் அவர்கள் ‘மீதூண் விரும் பாத’வர்களாக இருப்பார்கள். அவர் களை நாம் அதிக உபசாரத்தினால் திணற அடிக்கிறோம் சிற்சில நேரங் களில்
அப்போதெல்லாம் நம் மனம் கூறுவது இதுதான்; அன்பிற்கும் வேண்டும் அடைக்கும் கதவு - பற்பல நேரங்களில்.
அது மனித உறவுகளை சீராக வைத்திருக்க சிறப்பான உதவியாக அமையக் கூடும் - சரிதானே?
- கி.வீரமணி
-விடுதலை,26.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக