பக்கங்கள்

சனி, 21 மே, 2016

மண விலக்கும், மன விலக்கும்!


கிறித்துவ மதவாதிகள் சொல்வ துண்டு, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று; அதன் காரணமாக அம்மதத்தில் (அண்மைக் காலம் வரைகூட) மண விலக்கு (Divorce) அனுமதிப்பதில்லை.
ஹிந்து மதம் என்ற ‘சனாதன’ வேத மதத்தில், திருமணம் என்பது பிரிக்கப்பட முடியாத ஒரு ‘புனிதக் கட்டு’ (Sacrement) என்று கூறி, மண விலக்குகளை அனுமதிக்காமல் இருந்து பிறகு 19,20-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து  ஹிந்து மத முறைப்படி நடைபெற்ற திருமணங்களுக்கு மணவிலக்கு, சட்டப் படி அனுமதிக்கப்பட்டது.
முன்பெல்லாம் குறைவாக இருந்த மணவிலக்கு வழக்குகள் இப்போது மூன்று நான்கு மடங்கு அதிகமாகி உள்ளன என்று புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன.
சென்னையில் மட்டும் 8 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மேலும் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்களை தொடங்கும் முயற்சியில் நீதித்துறை இறங்கியுள்ளது.
இதில் முதல் இடம் (மணவிலக்கு வழக்கு) அய்.டி. என்ற கணினி வேலை யில் ஈடுபட்டவர்களேயாவர் என்பது மற்றொரு செய்தி.
இதன் காரணமாக அண்மையில் ‘மணமகள் தேடிய ஒரு அன்பர் நம்மிடம் கூறியது என்ன தெரியுமா?
“என்ன சார், எம்பெண்ணை எந்த மாப்பிள்ளைக்கும் கட்டித் தர தயாராக இருக்கிறேன்; ஆனால், கம்ப்யூட்டரில் பணி புரியும் மாப்பிள்ளை மட்டும் வேண் டாங்க” என்றார் - மிகுந்த கனிவுடனும், பணிவுடனும் (என்னே வேடிக்கை).
ஒரு காலத்தில் அய்.டி. வேலையில் உள்ள ‘கொழுத்த சம்பளம் வாங்கும்‘ மணமகளையோ, மணமகனையோ விரும்பித் தேடிய காலம், அந்தக் காலமாகி விட்டது!
காரணம் கம்ப்யூட்டர் அய்.டி. பணியில் வேலை செய்வோரிடம், அந்த முதலாளிகள் தங்கள் துறையினரை கசக்கி பிழிந்து வேலை வாங்கி விடுகின்றனர். கொடுமையிலும் கொடுமை இது!
மணவிலக்குக்கு காரணங்கள் எவை என்று ஆராயும்போது,
1. விட்டுக் கொடுக்கும் மனப்பான் மையின்மை, தன்னையே முன்னிலைப் படுத்தும் (Ego) பிரச்சினை!
2. சகிப்புத்தன்மை இன்மை - காதல் திருமணங்களில்கூட ஏன் இப்படி?
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஏன் தயக்கம்? புற அழகு, வாங்கும் சம்பளத்தின்மீதுள்ள கவர்ச்சி - ஆடம்பர வாழ்க்கையின்மீதுள்ள மோகம் - எல்லாவற்றையும்விட, இளமையின் பால் கவர்ச்சி, உடல் இன்ப ஆவேசம்!
திருமணம் ஆகி வாழ்க்கை துவங்கும் நிலையில் இவை சிறுக சிறுக பனிக்கட்டி உருகுவதுபோல உருகி ஓடும்போது, சறுக்கல், வழுக்கல் தவிர்க்க முடியாததுதானே!
‘ஒருமனதாயினர் தோழி,
திருமண மக்கள் வாழி!’
என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிகளால் காதல் உறுதியான கான்கிரீட் டானால் அது கரையாது; உடையாது!
ஆனால் வெவ்வேறு உள்நோக் கங்களுடன், புறக் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, அகத்தை அறியாமல் “தலையைக் கொடுத்து”விட்டால் (உலகியல் மொழி இது!) பிறகு அவதியை அனுபவிக்கத்தானே வேண்டும்?
இதில் நீதிமன்றங்களைவிட தன்னார் வத் தொண்டமைப்புகளை அதிகம் ஈடுபடுத்தி, இருவருள்ளங்களிலும் உள்ள தேக்க நிலையினை சற்று ‘எக்ஸ்ரே’ கண் கொண்டு பார்த்து இதயத்தால் முடிவு - மூளையால் அல்ல - செய்தால் பற்பலநேரங்களில் மனிதம் பிழைக்கும்.
முடியாவிட்டால், முடிவுப்படி விலகிக் கொண்டு விடுதலை பெறுவதே விவேகம். பல நாள் நண்பர்கள்கூட (பழகியவர்கள்) பிரிந்து விடுகின்றனரே! அதில் என்ன தவறு?
மன அமைதிதான் - நிம்மதிதான் முக்கிய கண்ணோட்டமாக இருக்க வேண்டும் - வீண் வீம்புக்கு இருவர் நிம்மதி ஏன் பலியாக வேண்டும்?
- கி.வீரமணி
-விடுதலை,22.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக