பக்கங்கள்

புதன், 25 மே, 2016

வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் - உணவு



மக்களின் நல வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடி, மாமருத்துவர்களையும், ஆய்வாளர்களையும், அதனை விளக்கும் அறிஞர்தம் அறிவுப் பொழிவுகளையும், கருத்துக் கோவைகளையும் நாமும் நாளும் நாடுகிறோம்.
என்றாலும், திருக்குறளை எடுத்து ‘மருந்து’ என்ற தலைப்பில் (அதிகாரம் 95) உள்ள 10 குறள்களைப் படித்து அசை போட்டுச் சிந்தித்தால், நம் வாழ்வின் நலம் மிகவும் மேம்படும்.
வள்ளுவர் தம் மருத்துவ அறிவு மிகவும் வியக்கத்தக்க தாகும்.
இதுபோன்ற பகுதிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் குறுகத் தரித்த குறளின் கருந்தாழம் எவ்வளவு என்று அவர்கள் உணர முடியும்.
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது டம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு   (குறள் - 943)
இதன் பொருள்: “ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்துகொண்டு, உண்ண வேண்டும். நல்ல உடம்பினைக் காப்பாற்றி வாழ வைக்கக் கூடிய வழியும் அதுவேயாகும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து           (குறள் - 944)
பொருள்: ஒருவன் தான் உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்!
‘ஒவ்வாமை’ என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருளை உண்ணுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அதுவே உயிர்க் கொல்லியாகவும் சில நேரங்களில் மாறிவிடக் கூடும்.
இதை Allergy என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவரின் அறிவு கண்டறிந்து அதைப் பரப்ப வேண்டும் என்று எண்ணியுள்ளதால் எழுதப்பட்டதே இக்குறள்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு     (குறள்-945)
பொருள்: “உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்திச் செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கைக்கு நோய்களினால் துன்பம் ஏற்படுவது என்பது இல்லை.
‘ஒவ்வாத உணவு வகைகளைக் கண்டறிந்தேன்; ஒதுக்கி விட்டேன். எனவே ஒவ்வும் உணவை ஒரு ‘பிடி’ பிடித்தேன்’ என்று ஏராளம் சாப்பிடலாமா? கூடாது கூடவே கூடாது.
அந்த உணவைக்கூட அளவு மீறாமல் சாப்பிடுக என்கிறார். அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு வந்தால் அதுவே பல்வேறு நோய்களுக்கு அழைப்பு விடுத்ததாகி விடும் என்று நல்ல எச்சரிக்கையை விடுக்கிறார் வள்ளுவர்!
உண்ணுவதில் இன்பம் எது? அனுபவ அறிவை அப்படியே கொட்டி நம்மை ‘குட்டுகிறார்’ வள்ளுவர் என்ற மாமருத்துவர் நாளை பார்ப்போமா!
- கி.வீரமணி
-விடுதலை,31.3.16







வள்ளுவர் கூறும் நல வாழ்வியல் - உணவு (2)



நமது உடல் நலத்திற்கும் பலத்திற்கும் நாம் உண்ணும் உணவே பெரிதும் அடிப்படையாக அமைகிறது!
ஏற்கனவே நாம் இதே பகுதியில் காலை உணவை - சிற்றுண்டியாகக்கூட அல்லாமல் ‘பேருண்டியாக’ எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை நல்லதுதான் என்பது அண்மைக் காலத்தில் மருத்துவர்களின் அறிவுரை (அதற்காக மித மிஞ்சி சாப்பிட்டு காலை வகுப்பிலோ, பணிமனையிலோ தூங்கி விடும் அளவுக்குச் சென்று விடலாமா?) ஒரு கருத்தை வலியுறுத்தும் வகையில் கூறப்படுவதே அது.
காலை உணவினை தவிர்ப்பவர்கள் மூளை பலத்தையும் இழக்கிறார்கள்!
குறிப்பாக நமது குடும்பத்தில் உள்ள இணையர்கள், காலை உணவைச் சாப்பிடாமலேயே பள்ளிக்கோ, கல்லூரிக்கோ ஓடும் நிலை பலவிடங்களில் காணும் ஒன்றேயாகும். அதன் தீமையை நம் பிள்ளைகளுக்கு விளக்கி காலை உணவுதான் மிக முக்கியம் என்பதை வலியுறுத்த வேண்டும்.
உள்ள வளம், உடல் நலம் இரண்டுக்குமே இது இன்றிய மையாத ஒன்றாகும்!
எவ்வகை முக்கிய உணவாயினும் அதனை எப்படி உண்ண வேண்டும்?
இதோ திருவள்ளுவர் தம் குறள் மூலம் நமக்கு அறிவுரை தருகிறார்!
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்”         (குறள் - 946)
பொருள்: “உண்ணும் உணவின் அளவில் சிறிது குறைய உண்பதே நல்லதாகும் என்று அறிந்து உண்பவனிடம், இன்பமானது நீங்காது நிற்பதைப் போலவே, மிகவான உணவை உண்பவனிடம் காணப்படும் நோயும் நீங்காது நின்றுவிடும்.
எவ்வளவு சுவையான விருந்து, உணவு என்றாலும் சிறப்பான உடல் நலம் காக்கும் வகையில் உண்ணுதலில் ஒரு சிறந்த வழிமுறை என்ன தெரியுமா?
‘சுவையாக உள்ளது; இன்னும் கொஞ்சம் உண்ணலாம்‘ என்ற நினைப்பு வரும்போது, உண்மையிலேயே - வயிற்றின் ஒரு பகுதியை முழுவதும் நிரப்பாமலேயே எழுந்து விடுவதைவிட சிறந்த முறை வேறு கிடையாது.
‘அருந்தியது அற்றது போற்றிஉணின்’ என்பதற்கொப்ப, செரிமானம் செய்யும் நிலை உடலில் செரிமானக் கருவிகளுக்கு அதிக கூடுதல் சுமை (Over the work) தராமலேயே நாம் இருந்தால் பல நோய்கள் வராமலேயே பாதுகாத்துக் கொள்ளலாமே!
இது படிப்பதற்கு எழுவதற்கும் எளிது
இதைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவது அரிது. இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்!
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்“ (குறள் 947)
பொருள்: ஒருவன் தன் உடம்பின் தன்மையையும், அதற்கேற்ற உணவையும், அதற்கான காலத்தினையும், வயிற்றில் உணவு செரிக்கும் அளவினையும் ஆராய்ந்து பார்க்காமல், அதிகமான உணவை அவன் உண்பானே யானால், அவனிடத்தே நோய்களானவை அளவு கடந்து வளரவே செய்யும் என்பதே இக்குறளின் பொருளாகும்!
எதையும் அளவுடன் அனுபவிப்பது எப்போதும் நம்மை உயர்த்தும், வாழ்விக்கும்!
இதைத்தான் எளிய மொழியில் நம் மூத்தவர்கள் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று ஒரு வாக்கியத்தில் சொன்னார்கள்!
வந்தபின் தொல்லையான நோய்க்கு மருத்துவரை நாடுமுன், வராமல் தடுப்பது நம் கையில் தானே உள்ளது? இல்லையா?
- கி.வீரமணி
-விடுதலை,1.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக