மகாவீரரும் புத்தரும் தலை சிறந்த பகுத்தறிவாளர்கள். மூடநம்பிக்கை களை அவ்விரு பெரியார்களும் மிகவும் கண்டித்துள்ளனர்.
அறிவின்படி சிந்தித்து செயல்படுங்கள் என்பதே அவ்விரு பெரும் புரட்சியாளர் களின் கருத்துக்களாகும்!
வாழ்வின் யதார்த்த நிகழ்வுகள் மூலமே அவர்கள் மற்றவர்களுக்கு தக்க பாடம் எடுத்து, அறிவு புகட்டியுள்ளார்கள் என்பதற்கு, அவ்விரு பெரியார்களின் சில நிகழ்வுகளைக் கூறலாம்.
மகாவீரர் தன்னருகில் வாழ்ந்த மண் பாண்டத் தொழிலாளி ஒருவர், எல்லாம் தலைவிதிப்படிதான் நடைபெறும் என்று எப்போதும் எண்ணிச் செயல்பட்டவர் என்பதை அறிந்தார்.
ஒரு நாள் அத்தொழிலாளி வீட்டு வழியே செல்லும்போது, வெயிலில் அந்த மண்பாண்டத் தொழிலாளி அந்த மண் ஜாடிகளை காய வைத்துக் கொண்டே, “எப்படி வெயிலில் கிடந்து கஷ்டப்படுகிறேன் பாருங்கள் சுவாமி, எல்லாம் என் தலையெழுத்து, விதி” என்று சலித்துக் கொண்டே கூறினான்.
ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்து “மகனே, இந்த ஜாடிகள் பார்க்க மிக அழகாக இருக்கின்றனவே, இவற்றை யாராவது உடைத்து விட்டால், அதை விதி, தலை யெழுத்து என்று எண்ணி சும்மா விட்டு விடுவாய் அல்லவா?” என்றார்!
“அதெப்படி முடியும்? பட்ட பாடு வீணாகும் போது, கோபம் வரத்தானே செய்யும்? தண்டித்து அனுப்புவேன்; தேவைப்பட்டால் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டேன்” என்றான் மிக ஆவேசமாக!
“எல்லாம் விதிப் பயன் என்று நீ தானே சற்று முன் கூறினாய். இப்போது நீயே அதை ஏற்க மறுக்கிறாயே. ஒன்றைப் புரிந்து கொள், வாழ்க்கை என்பது அவரவர் உழைப்பு, சிந்தனையால் அமைந்தது! அவரே அதை ஆக்கவும் அழிக்கவும் முடியும்!” என்றார்.
உடனே, பொறி தட்டியதுபோல அத்தோழனுக்குப் புரிந்து, “அய்யனே, என் அறிவுக்கண்ணை நீங்கள் திறந்து விட்டீர்கள்; இனி மேல், இந்த விதி, தலையெழுத்து என்ற மூடத்தனத்தில் உழலும் மூடநம்பிக்கைகளில் ஈடுபடாமல், அறிவு வழியே வாழ்க்கையை நடத் துவேன்” என்று கூறினார்.
தந்தை பெரியார் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர். (தத்துவமாக அவர்கள் என்றும் வாழுபவர்கள்).
அவர் சிறுபிள்ளையாக இருந்த காலந்தொட்டு எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று துருவித் துருவி கேள்வி கேட்டு பாடம் படித்தவர்; பிறருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்பது அவரது வரலாறு.
இதே போன்று ஒரு சம்பவம்.
தட்டிக் கடை ஒன்றை வைத்து கல்லிடைக்குறிச்சிக்காரரான ராமனாத அய்யர் என்பவர் வருவோர் போவோர்கள் எல்லோரிடத்திலும் ‘எல்லாம் அவரவர் தலை விதிப்படி தான் நடக்கும்? தலை யெழுத்தை -இன்னாருக்கு இப்படி நடக்க வேண்டும் என்று அன்று எழுதப்பட்ட தலையெழுத்தை எவரே மாற்ற முடியும்?’ என்று எதற்கெடுத்தாலும் கூறக் கூடியவர்!
சிறு மாணவப் பருவத்தில் இருந்த ஈ.வெ. ராமசாமி என்ற அந்த இளைஞன், தட்டிக் கடை முன் இருந்த குச்சியை (அதன் பிடிபுலத்தை) தட்டி விட்டு விட்டு ஓடினார்.
அத்தட்டி திடீரென்று விழுந்து கடையைமூடி, கடை முதலாளி அய்யருக்கு தலையில் அடிபடும்படிச் செய்துவிட்டது.
‘பிடியுங்கள் பிடியுங்கள்! குறும்புக்கார பையனை’ என்றார். பிடித்து வந்து இவரிடம் நிறுத்தினர். அதற்கு அந்த மாணவர் (ஈ.வெ.ரா.) ‘சாமி நீங்கள்தானே எல்லோரிடத்திலும் தலைவிதிப்படிதான் எதுவும் நடக்கும் என்று சொல்லுவீங்க; நான் தட்டி விட வேண்டும் என்று என் தலையில் எழுதப்பட்ட விதி; அது உங்கள் தலையில் பட்டு வீக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பது உங்கள் தலைவிதி? கோபப்படலாமா!’ என்றவுடன் அவர் பிறகு அப்படிக் கூறுவதையே நிறுத்திக் கொண்டார்!
இந்த இரு நிகழ்வுகளும் மிகுந்த கால இடைவெளி நீடித்த நிகழ்வுகள் என்றாலும் சிந்தனையாளர்கள் - அறிவாளிகள் சிந்தித்தால் ஒரே மாதிரிதானே சிந்திப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரிய உண்மையாகும்!
- கி.வீரமணி
-விடுதலை,28.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக