பக்கங்கள்

சனி, 29 பிப்ரவரி, 2020

கொள்ளையடிக்கத் தவறிய மூன்று பொக்கிஷங்கள்!

"நியூசெஞ்சுரியின் உங்கள் நூலகம்"  - பிப்ரவரி (2020) இதழில் பல அற்புதமான அறிவு விளக்கக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

அதன் தனிச் சிறப்பு, தமிழ்நாட்டின் தலை சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஆய்வாளர் திரு. ஆ.சிவசுப்பிரமணியம் அவர் களது சிறப்புக் கட்டுரை - ஒரு பழைய நூலை வாசக நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவதே! நான் அந்த ஏட்டின் தொடர் வாசகன்.

'மூன்று பொக்கிஷங்கள்' என்ற தலைப்பில் பாவண்ணன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை, மூத்த சீனத் தத்துவ ஞானிகளில் ஒருவரான லாவோ ட்சு அவர்களைப் பற்றிய சுவையான தகவல்களைத் தருவதோடு, அவரது தத்துவக் கருத்துக்கள் பெரிதும் கவிதைகளாகவே அமைந்துள்ள "தாவோதே ஜிங்" (தாவோயிசத்தின் அடித்தளம் அது) பற்றிய விவரங்களும், அதன் கவித்துவ தத்துவங்களும் மனித குலத் தின் அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கும், அறிவுப் பரப்புரைப் பணி ஆகும்!

லாவோ ட்சு சீனத்தைச் சேர்ந்த தத்துவஞானி; தத்துவஞானி கன்பூசியஸின் சம காலத்தவர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும், அய்ந்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவர்.

வாழ்க்கையைத் துறந்து, உண்மைகளைத் தேடி, அவைகளை 81 பாடல்களாக ஓலைச் சுவடிகளில்  எழுதிக் கொடுத்துவிட்டு (தனது நீதிமன்ற ஆவணக் காப்பாளர் பணியிலிருந்து) வெளியேறிய மாமனிதர்! இப்பாடல் தொகுதி "தாவோ தே ஜிங்" என்று அழைக்கப்படுகிறது.

"தாவோ" என்பது பாதை -  வாழ்வின் பாதை- அன்பின் பாதை - மானுடத்தின் பாதை - மேன்மையின் பாதை.

'தாவோ தே ஜிங்' என்பது அப்பாதையின் விளக்கம்; ஓர்கையேடு!

இதனை தமிழாக்கம் செய்து சந்தியா நடராஜன் அவர்கள் (குறிப்புக்களுடன்) சீனப் பாடல்களை தமிழ்மயமாக்கி நாம் புரிந்து கொள்ள உதவியிருக்கிறார். தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்!

சில தத்துவ கருத்து முத்துக்கள்

ஆழமாக மனதிற் பதிய வைத்தால் மனித வாழ்வு இன்பமயமாகவே எப்போதும் தொடர வாய்ப்புண்டு என்பதால் சுருக்கமாக சிலவற்றைத் தருகிறோம். முழுமை விரும்பின் நூலை வாங்கிப் படியுங்கள்.

சில பாடல் வரிகளில் காணப்படும் உவமை களும், படிமங்களும் ஆழ்ந்த கற்பனைக்குரி யவையாகவும், வசீகரமுள்ளவையாகவும் உள்ளன.

"வைக்கோலில் செய்யப்பட்ட நாய் பொம்மை சடங்கு முடிந்ததும் தூக்கியெறியப்படுவதுபோல, பூவுலகும், விண்ணுலகும் இரக்கமின்றி எல்லா வற்றையும் கையாளும்" என்று தொடங்குகிறது ஒரு பாடல்!

"ஒரு குடும்பத்தில் - ஓர் அமைப்பில் - ஒரு சமூகத்தில் ஒரு தனி மனிதனின் பங்கு என்பது சடங்குக்காக செய்து வைக்கப்பட்ட பொம்மை அளவுக்கே முக்கியத்துவம் வாய்ந்தது. அதை கூடுதலாகவோ, குறைவாகவோ, செய்ய வேண்டியதில்லை"

"வாழ வேண்டிய வாழ்க்கையை வாழாமல் உதறிவிட்டு, தனக்குக் கிட்டாத பெருமையை நினைத்துத் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதிப் பலர் நெஞ்சில் - வன்மத்தை வளர்த்துக் கொள்வது தன்னைத்தானே சிதைத்துக் கொள் ளத்தான் பயன்படுமே தவிர வேறு பயன் தராது!"

2. "நிரம்பி வழியும் பாத்திரம் ததும்பி வழியும்" என்ற மற்றொரு வரியும், "உனது கத்தியைக் கூர்மைப்படுத்திக் கொண்டே இருந்தால் கூர்மை குறைவுபடும்" என்ற ஒரு வரியும் அடுத்தடுத்து ஒரு பாடலில் இடம் பெறுகின்றன.

"வலிமைப்படுத்த எல்லை உண்டு. அதற்கு ஒரு புள்ளி உண்டு. ஆழ் மனதில் தேக்கி வைப்பதில் எல்லைதாண்டினால் சிக்கல்தான்!"

"நுனிக்கொம்பர் ஏறினால் உயிர்க்கு இறுதி யாகி விடும்" என்று எச்சரித்த வள்ளுவத்தினை வேறு வார்த்தைகளால் வார்த்தெடுக்கப்பட்டி ருக்கிறது போலும் இது!

"கருணையால் நிரப்ப வேண்டிய மனத்தை பொறாமையால் நிரப்பி விடக் கூடாது."

"தியாகத்தால் நிரப்பப்பட வேண்டிய உள்ளத்தை பேராசையால் நிரப்பிவிடக் கூடாது."

"என்னிடம் மூன்று பொக்கிஷங்கள் உள்ளன.

முதலாவது : அன்பு அல்லது கருணை எனப்படும்

இரண்டாவது : மிதம் எனப்படும்

மூன்றாவது : போட்டி போடாத மன நிலை.

'கருணை' உனக்குத் துணிவை அளிக்கும்.

'மிதம்' உனக்கு தயாள குணமே அளிக்கும்.

உலகத்தில் முதலிடம் எனக்கென

உரிமை கோராதவன்.

உண்மையில் ஆளப் பிறந்தவன்"

- அடடா! என்னே அழகு, சிறப்பு. இந்தப் பொக்கிஷத்தை ஏனோ பலரும் கொள்ளை யடிக்கத் தவறுகிறார்கள். புரியவில்லையே!

- விடுதலை நாளேடு 14 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக